” எழுதாத கவிதை… “
எழுதுங்களேன்
நான்
எழுதாது செல்லும்
என் கவிதையை
எழுதுங்களேன்!
ஏராளம்……….
ஏராளம்…. எண்ணங்களை
எழுத
எழுந்துவர முடியவில்லை
எல்லையில்
என் துப்பாக்கி
எழுந்து நிற்பதால்.
எழுந்து வர என்னால் முடியவில்லை!
எனவே
எழுதாத என் கவிதையை
எழுதுங்களேன்! சீறும்
துப்பாக்கியின் பின்னால்
என் உடல்
சின்னா பின்னப்பட்டு போகலாம்
ஆனால்
என் உணர்வுகள் சிதையாது
உங்களை சிந்திக்க வைக்கும்.
அப்போது
எழுதாத என் கவிதையை
எழுதுங்களேன்!
மீட்கப்பட்ட – எம் மண்ணில்
எங்கள்
கல்லறைகள்
கட்டப்பட்டால்
அவை
உங்கள்
கண்ணீர் அஞ்சலிக்காகவோ
அன்றேல் மலர் வளைய
மரியாதைக்காகவோ அல்ல!
எம் மண்ணின்
மறுவாழ்விற்கு
உங்கள் மன உறுதி
மகுடம் சூட்ட வேண்டும்
என்பதற்காகவே.
எனவே
எழுதாத என் கவிதையை
எழுதுங்களேன்!
அர்த்தமுள்ள
என் மரணத்தின் பின்
அங்கீகரிக்கப்பட்ட
தமிழீழத்தில்
நிச்சயம் நீங்கள்
உலாவருவீர்கள்!
அப்போ
எழுதாத
என் கவிதை
உங்கள் முன்
எழுந்து நிற்கும்!
என்னை
தெரிந்தவர்கள்
புரிந்தவர்கள்
அரவணைத்தவர்கள்
அன்பு காட்டியவர்கள்
அத்தனை பேரும்
எழுதாது
எழுந்து நிற்கும்
என்
கவிதைக்குள்
பாருங்கள்!
அங்கே நான் மட்டுமல்ல
என்னுடன்
அத்தனை
மாவீரர்களும்
சந்தோஷமாய்
உங்களைப் பார்த்து
புன்னகை பூப்போம்!
(ஆனையிறவு முகாம் தாக்குதலில் 15-07௧991 இல் வீரமரணமடைந்த கப்டன் வானதி பத்மசோதி சண்முகநாதபிள்ளைஸ எழுதிய இறுதிக் கவிதை இது)