உறக்கத்தைத் தொலைத்த தமிழனின் இறக்க முடியாத சிலுவை
வன்னியின் வான் பரப்பில்
வல்லூறுகளின் எச்சங்கள் – அன்று
ஆனந்தக் குயிலின் இசைகேட்டு
கண்விழித்தோம் – இன்று
பல்குழல் ஒலி கேட்டு தேடினோம் பதுங்குழியை
கண்சிமிட்டும் நச்சத்திரத்தை
கண்சிமிட்டாமல் பார்த்து ரசித்தோம்
கண்ணிமைக்கும் நேரத்தில்
வான் அரக்கனின் வக்கிரத்தை கண்டு பயந்தோம்
துண்டு துண்டாகிய பள்ளிச் சிறார்கள்
கோரமாய் இறந்த கொடுமையைக் கண்டு கொதித்தோம்
தொழுது நாங்கள் வாழ்ந்த கோவில் -அங்கே
குண்டுகள் வீழ்ந்த செய்தி
துண்டுகளாய்த் தமிழன் செத்துமடிந்தான் நாளும்
படைநடத்தி வந்தது சிங்களம்
பல நாடுகள் உதவியுடன்
வடமிழந்த தேர் போல தமிழனின் அவலம்
தறிகெட்டுப் போனதே தமிழர் வாழ்வு
எறிகணை வீச்சிலே இடப்பெயர்வுகள் நாளும்
விளக்கேற்றும் நேரம் வீடிழந்தோம்
ஊரறங்கும் நேரம் ஊர் பிரிந்தோம்
ஊர்க்குருவி பாடும் நேரம் சாக்குருவி பாடியதே
போர்க்கருவி கொண்டு புதைக்கப் பட்டோம்
மாவிலாறில் தொடங்கினோம் மாத்தளன் வரை நடந்தோம்
மழையும் வெய்யிலும் ஒன்றாகியது எமக்கு
மரங்களின் அடிவாரத்தில் நம்மவர்கள் வாழ்வு
இன்னும் நீளுகின்றதே இறக்க முடியாத சிலுவை
உடையார்கட்டு வந்தோம்
உறவுகளைத் தொலைத்து நின்றோம்
சுதந்திரபுரத்தில் சொந்தங்களை இழந்து தவித்தோம்
சுடுவதற்கு மறுக்கப்பட்ட பகுதியாம்
இரணைப்பாலை இராணுவம் அறிவித்தது
நம்பி வந்த எம்மை அங்கேயே நரபலியாக்கியது
ஆனந்தபுரத்தில் எம் ஆவியடங்கியது
ஏனிந்த வாழ்வு ஏக்கங்கள் தொடர்ந்ததே
மறுபடி மாத்தளன் பாதுகாப்பு வலையமாம்
மகிந்த அரசாங்கத்திற்கு – அங்கேயும்
மறத்தமிழன் மண்ணிலே புதைக்கப்பட்டான்
வலைஞர் மடம் வல்லூறுகளின் வசமாகியது
தலையில்லா உடலங்களைத் தின்று பசிதீர்த்தது
எம்.ஐ-24 உலங்குவானூர்தி நம்மை அழித்து நரமாமிசம் புசித்தது
முள்ளிவாய்க்காலில் தமிழன் முடக்கப்பட்டான்
தடுக்கப்பட்ட ஆயுதங்களால் அவன் நசுக்கப்பட்டான்
பசித்தோர்க்குப் பசி தீர்த்த தமிழன்
பட்டினியாய்க் கிடந்தான்
வந்தோர்க்கு வாழ்வழித்த தமிழன்
வாழ்விழந்து நின்றான்
சொத்து சுகங்களை இழந்த சோகத்தில்
வெந்து உயிர் துடித்தான்
நிலாச் சோறுண்ட எம் முற்றம்- அங்கே
வீசுகின்ற காற்றில் இரத்தத்தின் நாற்றம்
மெல்ல வருடிய தென்றலில் – நாளும்
அவலமாய்ச் செத்தவனின் கூக்குரல்
இன்பமாய்ப் புலர்ந்த காலை
இனிமேலும் புலராத என்ற ஏக்கம்
பல்குழல் எறிகணையில் பல உயிர்களும்
கொத்துக் குண்டிலே கொத்தாய்த் தமிழனும்
வெள்ளைப் பொஸ்பரசில் பஸ்பமாய்ப் பறந்தவர்களும்
ஆட்லறியில் அடுக்கடுக்காய்ச் செத்தவர்களும்
கனரக ஆயுதத்தில் கண்ணிமைக்கும் பொழுதில்
காணாமல்ப் போனவர்களும்
எத்தனை எத்தனை உயிர்களை
நித்தம் நாம் இழந்தோம்
இன்னும் நீளுகிறதே இறக்க முடியாத சிலுவை
பிஞ்சுக் குழந்தையின் முன்னே
இரத்த வெள்ளத்தில் தந்தை
பெற்ற தாய்க்கு முன்னே
துப்பாக்கிக் குண்டேந்தித் தனயன்
கணவனைப் பறிகொடுத்த
விதைவைப் பெண்ணின் ஏக்கம்
கஞ்சிக் கலசம் ஏந்திய பிஞ்சுகளின்
சிதறிய எச்சங்கள்
தன்முலை ஊட்டிய மகவு – தாய்
இறந்த பின்னும் பால் குடித்த பரிதாபம்
கன்னியர்கள் வாழ்வில் கரைபடிந்த சோகம்
கற்பனையில் சொல்லமுடியாதே
இவர்களின் அவலம்
இன்னும் நீளுகிறதே இறக்கமுடியாத சிலுவை
சர்வதேசமே
உணவின்றி உறக்கமின்றி
நீரின்றி இருந்தோமே நீரதைப் பார்த்திருந்தீரோ
சோறின்றி இருந்தவர்களை சுவைத்துச் சாப்பிட்டதே சிங்களம்
போர் அதுவென்று புறந்தள்ளினீரோ
மரணப்படுக்கையில் மருந்தின்றி இருந்தானே தமிழன்
மனிதநேயம் செத்துப் போனதோ
ஏனென்று கேக்க நாதியற்றவனா தமிழன்
ஏனிந்த நிலைமை அவனுக்கு
வாழ்வழிக்கின்றோம் வாருங்கள் என்றீர்களே
யு.என் இருக்கத் தயக்கமேன்
வினா நீங்கள் தொடுத்தீர்கள்
வந்தவர்களுக்கு நடந்தது என்ன
நாம் இன்று கேட்கின்றோம்
நிராயுத பாணிகளாய் நின்றவர்களை
நிர்வாணமாக்கிச் சுட்டார்களே
கன்னிமை கழியாத பெண்களை
கற்பழித்துக் கொன்றார்களே – பிணங்களின்
கச்சைகளைக் கழைந்து இச்சை கொண்டார்களே
பால்மணம் மாறாத பிஞ்சுகளைப்
பயங்கரவாதம் என்றார்களே
இயந்திரத் துப்பாக்கியால் இவர்கள் உயிர் போனதே
சமரசம் பேசியவர்களே – உங்கள்
சாணக்கியம் எங்கே
போர் அறங்களை மீறியதே சிங்களம்
பார்த்துச் சிரித்ததே பாரதம்
தோழ் கொடுப்பான் தோழன் – நீர்
வாள் கொடுத்து விட்டீரோ
நோய் நொடியில் சாகாத தமிழன்
தன் பாய் மடியில் சாகாமல்
போர்மடியில் அல்லவா செத்தான்
தலைவர் தலையெடுக்க நினைத்தீரோ
தவறு செய்து விட்டீர்கள் ஐயா
நோர்வேயின் நடுநிலைமை எங்கே
வேர்வை சிந்திய தமிழனை
வேரறுக்க நினைத்தீரோ
நீதி கேட்ட எமக்கு நீங்கள் செய்த
அறம் எதுவோ – இது
இயற்கையின் விதி அல்லவே – நாம்
வேதனையின்றி இருக்க
சதி செய்து சாய்த்தீரே எம்மை
பழிவிட்டுப் போகாதே உம்மை
வட்டுவாகல் கடந்து வந்தோம்
வவுனியாவில் சிறை வைக்கப்பட்டோம்
முட்கம்பி வேலிக்குள் முடக்கப்பட்டு
சித்திரவதை செய்யப்பட்டோம்
செல்லடியில் செத்தவர்கள் போக – மற்றவர்கள்
சிங்களச் சொல்லடியில் செத்தார்களே
எத்தனை அவலங்கள் எமக்கு
அத்தனையும் புரியாதோ உமக்கு
இன்னும் நீளுகின்றது இறக்க முடியாத சிலுவை
இறுதி யுத்தத்தில் நடந்தது என்ன – இதை
இணையத்தளங்கள் காட்டியதே
இதுகாரும் முடிவில்லையே எமக்கு
விரைவில் விடிவு வேணும் நமக்கு
ஐ நா நிபுணர் குழுவின் அறிக்கை – அதை
நடைமுறைப் படுத்தக் கோரிக்கை
வேண்டும் பகிரங்க விசாரணை
ஜெனிவாவுக்குப் பணிவாகக் கூறுகின்றோம்
இனியாவது தெளிவான பதில் கூறுங்கள்
உடைந்து போன எங்களின் வாழ்வைச்
சடைந்து விடாதீர்கள் இது சரித்திரத் தவறாகும்
இறந்தவர்களுக்கும் இருப்பவர்களுக்கும்
நீதி சொல்லுங்கள் கொலையாளிகளைக்
கூண்டில் ஏத்துங்கள்.
– ஈழத்திலிருந்து அகத்தீ –