திலீபன் அண்ணா… எழுந்து வா!!!
வஞ்சம் சூழ்ந்த வையகத்திலே
சாவுக்கு மஞ்சம் போட்டு
அமர்ந்தவனே!
உன் நெஞ்சத் துணிவு
கண்டு காந்தீயம் மிரண்டதடா..!
துஞ்சும் விழி மறந்து
அன்னம் தண்னீர் துறந்து,
உண்ணா நோன்பினை ஏற்று,
ஈழத்தமிழனுக்காய்
அன்று நல்லூர் வீதியினிலே
தவம் இருந்தாயடா..!
பார்த்தீபனே பார்த்தாயா………….
இந்த மண்ணில் மனித நேயம்
மரணித்து நெடுங்காலம்.!!
பன்னிரண்டு நாள்
பச்சைத் தண்ணீர் கூட அருந்தாமல்
பல்லாயிரம் பேர் பதறி அழ….
அவர்கள் முன் சிறுகச் சிறுக
கருகி மாண்டாயடா
“மக்கள் புரட்சி வெடிக்கட்டும்
சுதந்திரத் தமிழீழம் மலரட்டும்” என
நாள் வெகு தூரமில்லையென
நீ உரைத்தது போலவே
ஈழம் நிமிர – தமிழன்
உரம் கொண்டு எழுந்தானடா.!!
வீட்டுக்கு ஒரு பிள்ளை
நாட்டுக்காகவென வீறு
கொண்டு விரைந்தானடா.!!
உன் கனவு பலிக்கும்
நன்னாள் நெருங்கி
வரும் வேளையிலே…
வல்லரசு கூட்டாகி – ஒற்றைத்
தமிழைச் சுற்றி வளைத்து…
முற்றுகைப் போர் தொடுத்து…
முள்ளிவாய்க்காலில்
முடிவு கட்டினாரய்யா!
முடிவில்லாப் பயணம் அது!
முள்ளிவாய்க்கால் முடிவல்ல…
ஆரம்பம் என்பதை
நாம் அறிவோம். – எங்கள்
மாவீரர் கனவுகள் வீண்போகாது.!!
வானம் வழி சமைத்தால்
வந்து போக மாட்டீரோ…
மானத்தமிழன் ஒன்று சேர
உங்கள் எழுச்சிக் குரலாம்
இனிய குரலால்…
உரிமையின் உண்மை விளக்கம்
உரைத்து எழிச்சிக்கு விதை
தூவிச் செல்வீரோ.!!
ஆண்டுகள் பல துவண்டாலும்
அண்டவெளிகளில் உங்கள்
குரல் ஒலித்தபடி இருக்குதய்யா…
ஞாலம் போடும் திருகுதாளத்தில்
எங்கள் கோலம் மாறுதய்யா.!!
காலம்… இனிக் காத்திருக்காது
தலைவன் ஆணை தவறாது.
சேனை மீண்டும் உருவாகும் – அது
சுதந்திரத் தமிழீழத்தை பிரசவிக்கும்.!!
கவியாக்கம்:- வல்வை சபீதா ஞானேந்திரன்
“தமிழரின் தாகம்’ ‘தமிழீழ தாயகம்”