படைநடத்தும் திறனும் அரசியல் ஆளுமையும்கொண்ட சிலம்பரசன்
படைநடத்தும் திறனும் அரசியல் ஆளுமையும்கொண்ட கடற்கரும்புலி லெப். கேணல் சிலம்பரசன் (றஞ்சன்)
தமிழீழவிடுதலைப்போராட்டவரலாற்றில் பல அற்புதமான சாதனைகளும் உயரியதியாகங்களும் நிகழ்ந்திருக்கின்றன. அப்படிப்பட்ட ஒரு வரலாற்றுப்பதிவாகவே கடற்கரும்புலி லெப் கேணல் சிலம்பரசன் அவர்களின் வீரவரலாறும் பதிவாகியுள்ளது. வடதமிழீழத்தின் யாழ்மாவட்டத்தில் நெய்தல்நிலமான வடமராட்சிக்கிழக்குப் பிரதேசத்தில் ஆழியவளை எனும் எழில்மிகுந்தகிராமத்தில் திரு திருமதி வேலாயுதம்பிள்ளை தம்பததியினருக்கு 1972-ம்ஆண்டின் மார்கழித்திங்களில் மகனாகப்பிறந்தவன்தான் ஜெயறஞ்சன் என்ற இயற்பெயரைக்கொண்ட லெப் கேணல் சிலம்பரசன்.
தமிழீழவிடுதலைப்போராட்டவரலாற்றில் பல அற்புதமான சாதனைகளும் உயரியதியாகங்களும் நிகழ்ந்திருக்கின்றன. அப்படிப்பட்ட ஒரு வரலாற்றுப்பதிவாகவே கடற்கரும்புலி லெப் கேணல் சிலம்பரசன் அவர்களின் வீரவரலாறும் பதிவாகியுள்ளது. வடதமிழீழத்தின் யாழ்மாவட்டத்தில் நெய்தல்நிலமான வடமராட்சிக்கிழக்குப் பிரதேசத்தில் ஆழியவளை எனும் எழில்மிகுந்தகிராமத்தில் திரு திருமதி வேலாயுதம்பிள்ளை தம்பததியினருக்கு 1972-ம்ஆண்டின் மார்கழித்திங்களில் மகனாகப்பிறந்தவன்தான் ஜெயறஞ்சன் என்ற இயற்பெயரைக்கொண்ட லெப் கேணல் சிலம்பரசன்.
நிலையுடன் பெயர்;: லெப் கேணல் சிலம்பரசன். (றஞ்சன்)
முழுப்பெயர்: வேலாயுதம்பிள்ளை ஜெயறஞ்சன்.
நிலையான முகவரி: ஆழியவளை – தாளையடி (யாழ்)
பிறந்த திகதி: 30-12-1972.
வீரச்சாவுத்திகதி: 10-03-2003.
வீரச்சாவுச்சம்பவம்: சர்வதேசக்கடற்பரப்பில் சிறிலங்கா கடற்படையினரால் விடுதலைப்புலிகளின் எம்.ரி கொய் என்ற கப்பல் தாக்கியழிக்கப்பட்டபோது.
ஜெயறஞ்சன் தனது இளமைக்காலக்கல்வியினை ஆழியவளை தமிழ்வித்தியாலயத்திலும் வெற்றிலைக்கேணி பரமேஸ்வரா வித்தியாலயத்திலும் முன்னெடுத்திருந்தவன் உயர்வகுப்புக்களை வடமராட்சி காட்லிக்கல்லூரியிலும் தொடர்ந்தான். பள்ளிக்காலங்களில் கல்வியிலும் விளையாட்டிலும் நன்நடத்தைகளிலும் முன்னுதாரணமாகத்திகழ்ந்த ஜெயறஞ்சன் அதிபர்கள் மற்றும் ஆசிரியர்களின் நன்மதிப்பையும்பெற்றிருந்தான். கல்விப்பொதுத்தராதர உயர்வகுப்புக்கள் கற்றுக்கொண்டிருந்த காலப்பகுதிகளில் குறிப்பாக 1992-ம்1993-ம்ஆண்டுகளில் கடற்புலிகளின் அரசியல்த்துறையினருடன் இணைந்து விடுதலைப் போராட்டத்தின் தீவிர ஆதரவாளராகச்செயற்பட்டுக்கொண்டிருந்தான். இதனால் அன்றையநாட்களிலேயே கடற்புலிகளின் பொறுப்பாளர்கள் மத்தியில் றஞ்சன் நன்கு அறிமுகமாகியிருந்தான்.
இந்தக்காலப்பகுதிகளில் கல்விப்பொதுத் தராதரப்பத்திர உயர்தரப்பரீட்சைக்குத்தோற்றிய றஞ்சன் அந்தத்தேர்வில் விசேடசித்தியெய்தி பல்கலைக்கழகத்திற்கு தெரிவாகின்றான். விடுதலைப்போராட்டத்தில் ஆழமான பற்றுணர்வும் தமிழீழ இலட்சியத்தில் அசையாத நம்பிக்கையும்கொண்ட றஞ்சன் தனது உயர்கல்விகளை முழுமையாகத் துறந்து எல்லாவற்றிற்கும்மேலாக தமிழீழ தேசத்தின் விடுதலையை தனது வாழ்நாளின் இலட்சியமாக வரித்துக்கொண்டு 1994-ம்ஆண்டுகாலப்பகுதியில் றஞ்சன் தன்னை முழுமையாக தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கத்தில் இணைத்துக்கொண்டான். அடிப்படைப்பயிற்சிகளைப் பெறுவதற்காக பயிற்சிப்பாசறைக்குச்சென்றிருந்த றஞ்சன் அங்குதான் சிலம்பரசன் என்ற பெயரைப் பெறுகின்றான். சிலம்பரசன் விடுதலைப்போராட்டத்தில் இணைவதற்கு முன்னரான காலப்பகுதிகளிலேயே கடற்புலிகளின் பொறுப்பாளர்கள் மற்றும் தளபதிகள் மத்தியில் அறிமுகமாகியிருந்ததால் அவனது இயற்பெயரான றஞ்சன் என்ற பெயர்தான் வழக்கத்தில் இருந்துவந்தது. பயிற்சிப்பாசறையில் இராணுவப்பயிற்சிகளையும் அதுசார்ந்த கல்வியினையும் மிகநேர்த்தியாக நிறைவுசெய்துகொண்ட சிலம்பரசன் பயிற்சிநிறைவில் ஒரு சிறந்த ஆற்றல்மிக்க போராளியாக புடம்போடப்பட்டிருந்தான்.
சிலம்பரசனிடம் காணப்பட்ட தலைமைப்பண்புகளையும் அரசியல்விழிப்புணர்வையும் நீண்டநாட்களாகவே இனங்கண்டுகொண்ட கடற்புலிகளின் சிறப்புத்தளபதி சூசைஅவர்கள் சிலம்பரசன் அவர்களை 1995-ம்ஆண்டில் கடற்புலிகளின் யாழ்மாவட்ட அரசியல்த்துறைப்பொறுப்பாளராக நியமித்திருந்தார். இவ்வாறு கடற்புலிகளின் யாழ்மாவட்ட அரசியல்த்துறைப் பொறுப்பாளராக பொறுப்பையேற்றுக்கொண்ட சிலம்பரசன்அவர்கள் 1995-ம்ஆண்டில் குறிப்பாக சந்திரிகா அரசுடனான மோதல்தவிர்ப்புகாலத்திலும் அதன்பின்னரான மூன்றாம்கட்ட ஈழப்போரின் தொடக்ககாலப்பகுதிகளிலும் யாழ்குடாநாட்டின் கடற்புலிகளின்பிரதேசங்களில் பொதுமக்கள்மத்தியிலும் பாடசாலைகளில் கல்விச்சமூகத்தினர்மத்தியிலும் விடுதலைப்போராட்டம்தொடர்பான தொடரான கருத்தரங்குகளை நடாத்தியதுடன் அவ்வவ்போது வீதிநாடகங்களுக்கு ஊடாகவும் விடுதலைப்போராட்டத்தின் முக்கியத்துவத்தையும் அதன் நிமிர்த்தனமான காலத்தின் தேவையையும் சமூகத்தில் மிகத்தெளிவாக உணர்த்தியிருந்தான்.
அத்துடன் கிராமங்கள் மற்றும் பிரதேசங்கள் மட்டத்திலான மக்கள்அவைக் கட்டமைப்புக்களுடன் நெருக்கமான தொடர்புகளைப்பேணி விடுதலைப்போராட்டம் மக்கள்மயப்படுவுதிலும் அயராது உழைத்தவன். இவ்வாறு விடுதலைப்போராட்டத்திற்கான ஆட்பலத்தை வலுப்படுத்தும் பாரிய கொள்கைப்பரப்புரைத்திட்டத்தில் கூடுதலான இளைஞர்களும் யுவதிகளும் தம்மை முழமையாக விடுதலைப் போராட்டத்தில் இணைத்துக்கொண்டனர். இதன்விளைவாக விடுதலைப் போராட்டத்திற்கு ஆட்பலம் சேர்க்கும் கொள்கைப்பரப்புரைத் திட்டத்தில் வெற்றியும் கண்டான்.
1995ம்ஆண்டு டிசம்பர்மாதம் சூரியக்கதிர்-01 இராணுவ நடவடிக்கை மூலமாக யாழ்குடாநாட்டின் வலிகாமத்தை ஆக்கிரமித்துக்கொண்ட அரசபடையினர் 1996-ம் ஆண்டு ஏப்ரல்மாதம் நடுப்பகுதியில் சூரியக்கதிர்-02 இராணுவ நடவடிக்கையை தென்மராட்சியைநோக்கி முன்னெடுத்தனர். அப்போது தொளாயிரம் போராளிகள் குடாநாட்டில் நிலைகொண்டிருந்தனர். இந்தவிடயத்தை அரசாங்கமும் அறிந்திருந்தது. அந்தச்சூழ்நிலையில் அப்போது பிரதிப்பாதுகாப்பு அமைச்சராகவிருந்த அனுருத்த ரத்வத்தஅவர்கள் ஒரு அறிக்கையொன்றை வெளியிட்டிருந்தார். அதாவது “கிளாலிக்கடல்நீரேரி அரசபடைகளின்வசம் வீழப்போகின்றது. ஆகையால் குடாநாட்டில் நிலைகொண்டுள்ள தொளாயிரம் புலிப்போராளிகளும் எவ்வகையிலும் தப்பித்துக்கொண்ளமுடியாது. அவர்கள் சயனைட்வில்லைகளைக்கடித்துச்சாகவேண்டும் அல்லது குரநகர்கடலுக்குள்விழுந்து சாகவேண்டும்.” இதுவே அவரது அறிக்கையாகும்.
இந்தச்சூழ்நிலையிலேயே கடற்புலிகளின் சிறப்புத்தளபதி சூசைஅவர்கள் சிலம்பரசனிடம் “நீதான் எப்படியாவது இந்த தொளாயிரம் போராளிகளையும் கிளாலிக் கடல் நீரேரியூடாக வன்னிப் பெருநிலப்பரப்பிற்கு நகர்த்தவேண்டும்” என்றுகூறி அந்தப் பாரியபணியை அவனிடம் ஒப்படைத்துவிட்டு அவர் வன்னிக்குச்சென்றுவிட்டார்.
சிறப்புத்தளபதியால் கொடுக்கப்பட்ட பணியை சிரமேற்கொண்ட சிலம்பரசன் குருநகர் தொடர்மாடிக்கட்டிடத்தை தனது தளமாகவைத்துக்கொண்டு அந்தப்பணியை நெறிப்படுத்தினான். பல சவால்களுக்கு மத்தியிலும் குறித்த தொளாயிரம் போராளிகளையும் வன்னிக்கு நகர்த்தியபின்னர் கிளாலிக்கடல்நீரேரிப்பாதை தடைப்படுவதற்கு சொற்பநேரத்திற்கு முன்னதாக அதுவும் கடைசியாகப்புறப்பட்ட படகிலேயே வன்னியை வந்துசேர்ந்திருந்தான் சிலம்பரசன். இச்செயற்பாடு அவனது பொறுப்புணர்வையும் அர்ப்பணிபபையும் வெளிக்காட்டிநிற்கின்றது.
வன்னிப் பெருநிலப்பரப்பிற்கு வந்த சிலம்பரசன் தமிழீழ தேசியத்தலைவரைச்சந்தித்தான். இந்தச்சந்திப்புக்கள் தேசியத்தலைவருக்கும் சிலம்பரசனுக்கும் மத்தியிலான உறவுநிலையை வலுப்படுத்தியது. 1996-ம்ஆண்டு யூலைமாதத்தில் விடுதலைப்புலிகளால் மேற்கொள்ளப்பட்ட ஓயாதஅலைகள் -01 நடவடிக்கையான முல்லைத்தீவுப்படைத்தளத்தின் வெற்றிச்சமரிலும் பங்கெடுத்திருந்தான்.
அதையடுத்து ஆழ்கடல் விநியோகநடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்த சிலம்பரசன் குறிப்பாக 1997-ம்ஆண்டில் அரசபடையினரால் வன்னியில் பெருமெடுப்பில் முன்னெடுக்கப்பட்ட ஜெய்சிக்குறு படைநடவடிக்கையை எதிர்கொண்வதற்காக கடல்கடந்ததேசங்களிலிருந்து தருவிக்கப்பட்ட ஆட்லறிப்பீரங்கிகள் மற்றும் மோட்டார்ப்பீரங்கிகள் அதற்கான எறிகனைகள் உள்ளிட்ட இன்னும்பலபோர்த்தளபாடங்களையும் இந்தியா மற்றும் சிறீலங்காகடற்படைகளுக்கு சவால்கட்டி இயற்கையின்சீற்றத்திற்கு முகம்கொடுத்து முல்லைத்தீவு-சாலைத்தளம்வரையிலும் கொண்டுவந்துசேர்த்த அளப்பரிய பணிகளில் பிரதானபாத்திரம் வகித்தவன்.
படகுக்கட்டளை அதிகாரியாகவும் தொகுதிக்கட்டளை அதிகாரியாகவும் செயற்பட்டு பல கடற்சமர்களிலும் பங்கெடுத்திருந்தவன். தொடர்ந்துவந்தநாட்களில் தேசியத்தலைவரதும் சிறப்புத்தளபதியினதும் ஆலோசனைகளுக்கு அமைவாக வெளிநாடுகளுக்குச்சென்று கப்பல்பொறியியல்கற்கைநெறிகளைக்கற்று அதில் தேர்ச்சிபெற்றதையடுத்து 1998-ம்ஆண்டுகாலப்பகுதியில் விடுதலைப்புலிகளுக்குச்சொந்தமான கப்பல் ஒன்றின் கப்டனாகப்பொறுப்பேற்றிருந்தான் சிலம்பரசன். அந்தப்பணியை மிகவும் நம்பிக்கையாகவும் விசுவாசமாகவும் செய்திருந்தவன்.
1999-ம்ஆண்டின் பிற்பகுதியில் மீண்டும் வன்னிக்குத்திரும்பியிருந்த சிலம்பரசன் அதேகாலப்பகுதியான 1999-டிசம்பர்-10-ம் 11-ம் நாட்களில் ஓயாதஅலைகள் – 03 நடவடிக்கைமூலமாக வெற்றிலைக்கேணி – கட்டைக்காடு படைத்தளங்களை வெற்றிகொள்ளும் தாக்குதல் விடுதலைப்புலிகளால் முன்னெடுக்கப்பட்டது. தாக்குதல் தொடங்கியதும் குறித்த தளங்களிலிருந்த படையினர்களுக்கு கடல்மார்க்கமாக உதவிவழங்குவதற்கு சிறிலங்காகடற்படையினர் கடும்பிரயத்தனம் மேற்கொண்டனர்.
எனவே படைத்தளங்களை வெற்றிகொள்ளும் சமநேரத்தில் வெற்றிலைக்கேணி-கட்டைக்காடு கடற்பரப்பிலும் பாரிய சமர்க்களத்தைதிறந்தனர் கடற்புலிகள். இதில் சிலம்பரசன் தலைமையிலான படகுத்தொகுதியும் இராவணன் தலைமையிலான படகுத்தொகுதியும் சமரில் இறங்கின. குறித்த படைத்தளங்கள் வெற்றிகொள்ளப்படும்வரையிலும் கடற்படையினரின் கடற்கலங்கள் கரையை நெருங்காதவாறு சிலம்பரசனது படகுத்தொகுதி கடும்சமர்புரிந்து கடற்படையினரின் நடவடிக்கைகளைத் தடுத்துநிறுத்தியதன் விளைவாகவே குறித்த படைத்தளங்களை புலிகளால் வெற்றிகொள்ளமுடிந்தது. இந்த வெற்றிச்சமரில் சிலம்பரசன் தலையில்காயமடைந்தான்.
பின்னர் மருத்துவச்சிகீச்சைகளினால் குணமடைந்த சிலம்பரசன் மீண்டும் தனது களப்பணிகளை முன்னெடுக்கலானான். 2000-ம்ஆண்டு மார்ச்மாதம் 26-ம்நாளன்று கடற்புலிகளால் மேற்கொள்ளப்பட்ட வரலாற்று முக்கியத்துவம்வாய்ந்த குடாரப்பு தரையிறக்கத்தின்போது கட்டளைமையத்தில் சிறப்புத்தளபதி சூசைஅவர்களுக்கு உதவியாகச்செயற்பட்டிருந்தான் சிலம்பரசன். இதன்பின்னரானநாட்களில் அதாவது 2000-ம்2001-ம்ஆண்டுகளில் சிலம்பரசன் கடற்புலிகளின் முதன்மைப்படையணியான சாள்ஸ்படையணியின் பொறுப்பாளராக அமர்த்தப்பட்டிருந்தான்.
இவ்வாறு சாள்ஸ்படையணிப்பொறுப்பையேற்றுக்கொண்ட சிலம்பரசன் விடுதலைப்போருக்கு பலமும் வளமும் சேர்க்கின்ற ஆழ்கடல் விநியோகநடவடிக்கைகளையும் அவ்வவ்போது விரிகின்ற கடற்சமர்களையுமம் மிக நேர்த்தியாக நெறிப்படுத்திய சிலம்பரசன் அவை வெற்றி இலக்கை அடைவதற்கும் அவனது அர்ப்பணிப்பான உழைப்பு அழப்பரியதாக அமைந்தன. இத்தகைய தனது செயற்பாடுகளால் தேசியத்தலைவரதும் சிறப்புத்தளபதி அவர்களதும் பாராட்டுதல்களை பலதடவைகள் பெற்றிருந்ததோடு அவர்களின் நன்மதிப்பையும் பெற்றிருந்தான்.
தொடர்ந்துவந்தநாட்களில் அதாவது 2002-ம்ஆண்டில் நோர்வேநாட்டின் அனுசரணையுடன் விடுதலைப்புலிகளுக்கும் ரணில்விக்கிரமசிங்கவின் அரசாங்கத்திற்கும மத்தியில் செய்துகொள்ளப்பட்ட சமாதான ஒப்பந்தம் நடைமுறைக்கு வந்ததையடுத்து தமிழீழத்தில் இராணுவக்கட்டுப்பாட்டுப் பிரதேசங்களிலும விடுதலைப்புலிகளின் அரசியல்செயலகங்கள் நிறுவப்பட்டு அரசியல் நடவடிக்கைகள் விரிவாக்கம் செய்யப்பட்டன.
இதனடிப்படையில் கடற்புலிகளின் அரசியல்த்துறையையும் விரிவாக்கம் செய்யும் நோக்குடன் சிறப்புத்தளபதி சூசைஅவர்கள் சிலம்பரசன் அவர்களை கடற்புலிகளின் அரசியல்த்துறைப்பொறுப்பாளராக நியமித்திருந்தார்.
கடற்புலிகளின் அரசியல்த்துறைப்பொறுப்பையேற்றுக்கொண்ட சிலம்பரசன் சம்பந்தப்பட்ட அரசஅதிகாரிகளுடன் தொடரான சந்திப்புக்களை நடாத்தி யுத்தத்தால் பாதிக்கப்பட்ட கரையோரப்பிரதேசங்களை மீள்கட்டுமானம் செய்வதிலும் குறிப்பாக முல்லைத்தீவு மற்றும் வடமராட்சிக்கிழக்குப்பிரதேசங்களில் யுத்தகாலங்களில் இடம்பெயர்ந்த மக்களை மீண்டும் அவர்களது சொந்த இடங்களில் மீள்குடியேற்றம் செய்வதிலும் முன்னோடியாகத்திகழ்ந்தான்.
அத்துடன் முல்லைத்தீவு கடற்தொழிலாளர் கூட்டுறவுச்சமாசத்தின் மேலாளராகவும் செயற்பட்டு சமாசத்தின் வளர்ச்சிக்கும் அரும்பணியாற்றினான். மேலும் கடற்புலிகளின் அரசியல்ப்போராளிகளை ஒன்றுகூட்டி அன்றையகால அரசியல்சூழ்நிலையை கருத்துரைகள் மூலமாக தெளிவாக விளக்கி போராளிகளுக்கு சிறந்த பொறுப்பாளராகவும் வழிகாட்டியாகவும் செயற்பட்டிருந்தான். எல்லாவற்றிற்கும்மேலாக அவன் ஒரு கடற்கரும்புலி அணியைச்சேர்ந்தவன் என்பதுவும் குறிப்பிடத்தக்கது.
இந்தச்சூழ்நிலையில் அவனது பணி மீண்டும் சர்வதேசக்கடல் நடவடிக்கைகளுக்கு இன்றியமையாததாகவிருந்ததால் 2002-ம்ஆண்டு ஒக்டோபர்மாதத்தில் சர்வதேசக்கடல் நடவடிக்கைகளுக்காக அனுப்பிவைக்கப்படுகின்றான். அங்குசென்ற சிலம்பரசன் விடுதலைப்புலிகளுக்குச்சொந்தமான எம்-ரி கொய் என்ற பெயர்கொண்ட கப்பலின் கப்டனாகப்பொறுப்பேற்றான்.
மீண்டும் கப்பல் கப்டனாகப்போறுப்பேற்ற சிலம்பரசன் விடுதலைப்போருக்கு வளம் சேர்க்கின்ற சர்வதேசக்கடல் நடவடிக்கைகளை மிக நேர்த்தியாகவும் விசுவாசத்துடனும் செயற்படுத்தலானான்.
இவ்வாறு சர்வதேசக்கடற்பரப்பில் விடுதலைப்போருக்கான வளங்களைச்சுமந்துவந்த குறித்த கப்பல் 2003-ம்ஆண்டு மார்ச்மாதம் 10-ம்நாளன்று சிறிலங்கா கடற்படையினரால் வழிமறிக்கப்படுகிறது. உடனேயே சிலம்பரசன் தொலைத்தொடர்பு சாதனத்தின் ஊடாக சிறப்புத்தளபதி சூசைஅவர்களைத் தொடர்புகொண்டு விடயத்தை அறிவித்தான்.
அப்போது தேசத்தின்குரல் அன்ரன்பாலசிங்கம் அவர்களும் வன்னியில் தேசியத்தலைவருடன் உடனிருந்தார். கப்பல் வழிமறிக்கப்பட்ட விடயத்தை சிறப்ப்புத்தளபதி சூசைஅவர்கள் தேசியத்தலைவருக்கு தெரியப்படுத்தினார். தேசியத்தலைவரும் இவ்விடயத்தை உடனடியாக நோர்வே அனுசரணையாளருக்கு அறிவிக்கும்படி தேசத்தின்குரல் அன்ரன்பாலசிங்கம் அவர்களை பணித்தார். அன்ரன்பாலசிங்கம் அவர்களும் நோர்வே அனுசரணையாளர்களை தொடர்புகொண்டு விடயத்தை அறிவித்தார். “கப்பல் சர்வதேசக்கடலில் சென்றுகொண்டிருப்பதால் பதட்டப்படவேண்டாம” என்று அனுசரணையாளர்கள் அறிவுறுத்தினார்கள்.
ஆனாலும் சிறிதுநேரத்தில் சிறிலங்கா கடற்படையினர் சிலம்பரசனின்கப்பல்மீது சரமாரியான பீரங்கித்தாக்குதல்களை மேற்கொண்டனர். தாக்குதலையடுத்து கப்பல் தீப்பற்றிக்கொண்டது. இதன்போது கடற்கரும்புலி லெப் கேணல் சிலம்பரசன் அவர்களும் உடனிருந்த பத்து தோழர்களும் வீரச்சாவைத்தழுவிக்கொண்டார்கள். தமிழீழ விடுதலைப்போராட்டவரலாற்றில் ஓயாத புயலாக வீசிய கடற்கரும்புலி லெப் கேணல் சிலம்பரசன் தாயகவிடுதலைக்கனவுடன் சர்வதேசக்கடலன்னையின் மடியில் வீரவரலாறாகிப்போனான்.
நினைவுப் பகிர்வு:- கொற்றவன்.
“புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்”