இவன் நினைவாய்..….
இவன் நினைவாய்..….
எங்கள் கண்களுக்குள் இன்னமும்
தரிசனம் தந்துகொண்டிருக்கும் கந்தர்வன்!
பொன்னீழ மண்டலத்தின் புண்ணிய புதல்வன்!
புதுச் சரிதம் தீட்டவந்த அரசியல் ஆலோசகன்!
காலன் நெருங்கு முன்பாகவே, எங்கள் கௌசல்யனைக்
காடையனின் கோரக் கரங்கள் கொள்ளை கொண்டுவிட்டன.
செங்குருதி வெறிபிடித்து அலைகின்ற
சிங்களக் கழுகுகளின் அலகுகளில்
மீண்டும் தமிழனின் ரத்தச் சாயம்…
இனக்கேடு தலைக்கேறிய குணக்கேடர்தம் கூடாரங்களில்
இதோ! இன்னும் ஓர் பிணக்காட்டின் தொடக்க அத்தியாயம்…
என்ன செய்வதடா?
எதுவரை பொறுப்பதடா?
ஆசையே அழிவுக்குக் காரணம் என்றுதானே
அந்தப் போதிமரத்தான் போதித்தான்?..
அழிவின் மீதே ஆசைகொள்ளும் இந்த ஆலகாலப் பட்சிகள்,
அவனுக்கு எப்படியடா பின்காமிகள்?
“இனியொரு விதி செய்வோம்!” என்ற உணர்வோடு
இறங்கி வந்த ஈழத் தமிழனுக்குக் கிடைத்த பரிசு,
“இனியொரு சதி செய்வோம்!” என்பதுதானா?
என்ன செய்வதடா?
எதுவரை பொறுப்பதடா?
உலக நாடுகளே!
உதவாத காரணத்திற் கெல்லாம் ஒப்பாரி வைக்கின்ற நீங்கள்,
ஒன்றும் பேசாமலிருப்பதேன்?
தவறு நிகழ்ந்திடின் தட்டிக் கேட்பதாகத்
தம்பட்டம் அடிக்கின்ற “சட்டாம்பிள்ளை” தேசங்களே!
எங்கே போயிற்று உங்கள் எட்டப் பார்வை?
ஈழத் தமிழனே!
என்னருமைச் சோதரனே! – நீ
கீழே வைத்துவிட்டாய் ஆயுதத்தை என்றறிந்து
கிட்டே வந்துவிட்டான் பார்த்தாயா,
சிங்களத்துச் செந்நாய்ச் சேய்?
வீழத்தான் வேண்டுமோ? – உனக்கு
விழுப்புண்தான் மீண்டுமோ?
ஈழத்தான் வாழத்தான் வேண்டுமென்னும் வேட்கையுடன்
எத்தனைநாட் காலந்தான் காத்திருக்க வேண்டுமோ?
என்ன செய்வதடா?
எதுவரை பொறுப்பதடா?
கவியாக்கம்:- தொ. சூசைமிக்கேல்.
“தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்”