கிட்டண்ணா எங்கள் ஆச்சரியம்!
கிட்டண்ணா எங்கள் ஆச்சரியம் – சிறப்புக் கவிதை…..
கிட்டண்ணா
அந்தப் பெயர்
வானம் தொட்ட நாமம் – ஈழ
பட்டி தொட்டியெல்லாம்
பரவி விட்ட வேதம்
பட்டவர்த்தனமான வீரத்தின்
பட்டையம் – விடுதலைக்
கட்டியம் கூறிய
காப்பியம்
காலமறிந்து செயற்பட்ட
அலாரம் – சமர்க்
களங்களில் சுழன்ற
கலிபர்த் துப்பாக்கி – பகையை
அடக்கி ஆண்ட
அடங்காப் புலி – மக்கள்
அரவணைப்பில் நெகிழ்ந்த
மகன்
அன்பால் அனைவரையும்
வென்ற தமிழன்.
எண்பதுகளில் யாழ் மண்ணில்
எழுந்து நின்ற புயல் – முகாம்களில்
பகை ஒடுங்கி நடுங்க
பாடம் புகட்டிய திறல்
ஆழ்ந்த அறிவியல் கொண்ட
ஞானியன்
ஆற்றல்கள் பலவாய் ஒளிரும்
வேதியன்
அண்ணன் மனம் படித்த
அகத்தியன் – அவர்
தம்பியாய் வளர்த்தெடுத்த
நேர்த்தியன் – அவரே
போர்க்கலை பயிற்றுவித்த
போராளி
புலிப் படையணியை
வழிநடத்திச் சென்ற
முதற் தளபதி – அரசின்
கைக்கூலிகள் தாக்குதலில் – இடது
காலை இழந்தபோதும்
இடைவிடாது பணிகண்ட
இலட்சிய வேங்கை
இயல், இசை, நாடகம், ஓவியம்
எல்லாம் கைவரப்பெற்ற கலைஞன்.
சிறிய சிட்டுக்களால்
கிட்டு மாமா என்று
செல்லமாய்ப் போற்றப்பட்ட
சிறந்தவன்
“நிதர்சனம்” ஒளிபரப்பாலே – ஈழ
நிதர்சனங்களை வெளிக்கொணர்ந்த
நிதர்சனன்
“களத்தில்” எனும் சஞ்சிகையை
களத்திடை தொடக்கி வைத்த
காவலன்
இலங்கை அரசை
இறங்கி வந்து பேச வைத்த
இறுமாப்புக்காரன்
இந்திய வல்லரசு அச்சங்கொண்டு
சிறைபிடித்த சீறும்புலி – இந்தியச்
சிறையில் இருந்தவாறே தமிழர்
கறை படிந்த வாழ்வை மீட்க – பேனா
கைபிடித்த இலக்கியன்
என்பத்தியொன்பதில் தமிழீழ
எல்லை கடந்து
ஐரோப்பாவில் காலடி வைத்த
அஞ்சனன்
தலைவர் பெயரையே
தாரக மந்திரமாய்
தரணியெல்லாம் முழங்கிய
தமிழ் வீரன்
தமிழீழம் வென்றெடுக்க
புலம்பெயர்ந்த எம் உறவுகளை
பலம் கொண்டு ஒன்று சேர்த்த
பாலம் கிட்டண்ணா
விடுதலையின் வீச்சதனை
அனைத்துலகக் காதுகளில்
அறைந்து கூவிய
விடுதலைக் குயில்.
வெடவெடக்கும் குளிரிலும் – அவர்
படபடக்கும் இதயம் – புலிக்
கொடிபறக்க உழைத்தது
வேகம் விவேகம் விடா முயற்சி – இவை மூன்றும்
தாகமாய்க் கொண்டு
தனைச் செதுக்கி
தமிழீழம் ஒன்றே குறியாக
தளராது நடைபோட்டவர்
துணிச்சல் இவரிடம்
துணிந்திடப் பயந்தது.
தனியொரு வீரனாய்
பொங்கிப் பிரவாகித்த
அம்புராசி அவர்
சர்வதேச அழுத்தங்கள் நடுவிலும்
சத்திய நெறி வழுவாது
உலகத் தமிழ் உள்ளங்களில்
விடுதலைத் தீயேற்றி
புரட்சியை மீளப் புரட்சித்தவர்.
பல்வேறு மாற்றங்களை
பதட்டமின்றிச் செயற்படுத்தி
பகட்டான வாழ்வைப் புறந்தள்ளச்செய்து
இளைஞர்களை ஈழத்தின்பால் ஈர்த்தவர்
இரவு பகலாய் கடிகாரமாய் ஓடிய
அவருக்குக் கிட்டியது
சமாதான யோசனையொன்று
தொன்னூற்றிமூன்றாமாண்டின் தொடக்கம்
தாயகத்தைத் தரிசிக்கத்
தக்க சமயம் கிடைத்ததென்று
புறப்பட்டார் கிட்டண்ணா
பத்து நண்பர்களுடன் கப்பலில்
சர்வதேசக் கடற்காற்று
வரவேற்று நின்றது
சர்வாதிகார இந்தியாவுக்கோ
மூக்கில் வேர்த்தது
வஞ்சச் சூழ்ச்சியினால் – சுற்றி
வளைத்துத் தடுத்தது
சரணடையக் கோரி
சண்டித்தனம் போட்டது.
கொண்ட கொள்கையில் குன்றிடாது
நின்றனர் தோழர்கள்
சாவே ஒரு கணம் மௌனித்து நிற்க
தீ கொண்டு வெடித்தனர்
ஆழியில் அணைந்தனர்.
கிட்டண்ணா எங்கள்
ஆணிமுத்து
ஆழக்கடலெங்கும் ஒளிரும்
வழிகாட்டி
கிட்டண்ணா எங்கள்
ஆச்சரியம்
ஈழ வரலாற்றில் மிளிரும்
வலுவூட்டி
கிட்டண்ணா ஒரு பெரும்
அகராதி
போரியல் விளக்கங்களில்ப்
புரியாப் புதிர்
கிட்டுப் பீரங்கிப்படையின்
சாதனையாய் நிமிர்வானவர்
ஒப்பாரும் மிக்காரும் இல்லா
ஒரு பெரும் மலையானவர்.
இப்பாரில் அவர் பெயர் வாழும்
ஈழ விடுதலைக் காவியம் – அவர்
எண்ணங்களாகி விரியும்
அண்ணனின் சிந்தனையோடு – அவை
ஒன்றானது புரியும்
கிட்டண்ணா, நாங்கள் நடக்கிறோம்
உங்கள் வழியைத்
தொட்டண்ணா.
கவியாக்கம்:- கலைமகள். (16.01.2015)
“தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்”