தேசத்தின் குரல் அண்ணன் நினைவாக
கடுநோய் கொண்டும் காற்றாய்ப் பறந்து
கனலாய் தெறிக்கும் விதமாய் பேசி
இடுமோர் வெற்றிக்கிணையே இல்லை
எதிரிக்கிவரோ பெருமோர் தொல்லை
எதானால் இவரை அழைத்தாய் எங்கள்
இறைவாஉனக்கேன் இரக்கம் இல்லை
பதமாய் பொங்கிப் படைக்கும்வேளை
பானைஉடைத்தாய் பார்த்துக்கெடுத்தாய்
மனதில் உரமும் செழிக்கும்வேளை
மரணம்தந்தே மயங்கச்செய்தாய்
கனவில்மட்டும் நிம்மதி என்று
காலமெல்லாம் கலங்கச் செய்தாய்
உரையைக்கேட்க இதயம் மகிழும்
உண்மைப் பேச்சில் உணர்வும் கசியும்
வரமாய் தமிழர்க் கொளியாய் வைத்து
வழியில் செல்ல இருளைத் தந்தாய்
இருந்தால் எங்கள் ஈழம் வெல்லும்
என்றா இவரை கொண்டாய் சதியை
பெரிதாய்போட்டே பிரிவைச்செய்தாய்
பிழையை செய்தாய் பேசற்கரிய
தமிழாம் ஈழத்தலைவர் எல்லாம்
தரணிகின்றிச் செய்தாய் எங்கள்
அமிழ்தாம் தேசக்குரலின் தலைவன்
அழியா தெங்கள் நினவில் நிலைப்பார்
வருமாம் ஈழம் வந்தேதீரும்
வழியும் தோன்றும், வளரும் ஜோதி
பெருமா ஒளியாய் விரியும், ஈழம்
பிறந்தோர் நாளில் பெருமைகொள்ளும்
உயிரில் உணர்வில் ஊறிக்கொண்டார்
உலகில் எவரும் பாசத்தோடு
அருகில் சென்று அன்பாய் பேசும்
அண்ணன் தேசக்குரலோன் எங்கள்
தமிழீழத்தின் கொள்கைதன்னை
தாயகம் தேசியம் தன்னாட்சி யென்
றழகாய் வகுத்து அளித்தார் அவரை
அகிலம் உள்ளோர் வரையும் மறவோம்.
ஆக்கம்: கிரிஷாசன்.
“தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்”