சிட்டண்ணாவின் நினைவே நினைவாகி…….
|| போர்க்குயிலின் மறைவு….!
தமிழீழப் போராட்டத்தில் எழுச்சிப் பாடல்களின் பங்கும் தாக்கமும் மிகப்பெரியது. “புலிகள் பாடல்கள்” என்ற முதலாவது வெளியீட்டிலிருந்து இன்றுவரை நூற்றுக்கணக்கான பாடல்கள் இயற்றி இசையமைக்கப்பட்டு மக்களிடம் போய்ச் சேர்ந்துள்ளன. எண்பதுகளில் பெரும்பாலும் தமிழகக் கலைஞர்களைக் கொண்டு உருவான பாடல்களே அதிகம். டி.எம்.சௌந்தரராஜன், மலேசியா வாசுதேவன், ஜெயச்சந்திரன், மனோ, பி.சுசீலா, சொர்ணலதா, வாணி ஜெயராம் என்று திரையிசையிற் பிரபலமான பல பின்னணிப் பாடகர்களின் குரல்களில் அப்போதைய தமிழீழ எழுச்சிப் பாடல்கள் பாடப்பட்டன.
இந்திய இராணுவ வெளியேற்றத்தின் பின் தொன்னூறுகளில் யாழ்ப்பாணத்திலேயே பாடல்கள் ஒலிப்பதிவு செய்யப்பட்டதுடன் முழுக்க முழுக்க உள்நாட்டுக் கலைஞர்களைக் கொண்டே அனைத்தும் ஒலிப்பதிவு செய்யப்பட்டன. அந்நேரத்தில் சிறந்தவொரு பாடகன் எங்களுக்குக் கிடைத்தான். மேஜர் செங்கதிர் என்ற போராளிக் கவிஞனின் வரிகள் பாடலாக உருப்பெற்றபோது இப்போராளிப் பாடகன் அறிமுகமானான். “கண்ணீரில் காவியங்கள் செந்நீரில் ஓவியங்கள்” என்ற பாடலே இப்போர்ப்பாடகனின் முதலாவது அரங்கேற்றம். அதன்பின் களத்தில் சாகும்வரை சுமார் 75 பாடல்கள் வரை பாடியுள்ளான் சிட்டு எனும் இப்போராளிப் பாடகன்.
விடுதலைப் புலிகளின் கலைபண்பாட்டுக் கழகத்தின் பொறுப்புக்களிலும் அரசியல்துறையின் பொறுப்புக்களிலும் தனது போராட்டப் பணியைச் செய்து வந்தான். கேணல் கிட்டு அவர்களுக்காக ‘சிட்டு’ பாடிய “கடலம்மா” பாடல் மிகுந்த பிரபலம். சிட்டுவின் குரல் யாரையும் கட்டிப்போட வல்லது. பின் ‘உயிர்ப்பூ’ திரைப்படத்தில் சிட்டு பாடிய ‘சின்னச் சின்னக் கண்ணில் வந்து மின்னல் விளையாடிடும்’ என்ற பாடலைக் கேட்டு உருகாதவர்கள் இருக்க முடியாது. வெளியிடப்படும் எந்த ஒலிநாடாக்களை எடுத்தாலும் அதில் சிட்டுவின் பாடல் இருக்கும்.
ஜெயசிக்குறு தொடங்கியபின் வன்னியில் கடும் சண்டை மூண்டது. வெற்றி தோல்வி எதுவும் தெரியாமல், எப்போது முடியுமென யாராலும் சொல்ல முடியாமல் நீண்டது சண்டை. அச்சமர் தொடங்கியதிலிருந்து சமர்க்களத்திற் பணியாற்றினான் சிட்டு. இறுதியில் ஆவணி முதலாம் திகதி ஓமந்தை இராணுவத்தளத்தின் மீது புலிகளின் திட்டமிட்ட அதிரடித் தாக்குதலின்போது களத்தில் வீரச்சாவைத் தழுவிக்கொண்டான் எங்கள் பாடகன் மேஜர் சிட்டு.
|| பாட்டு தந்து…எம்மை விட்டு….பறந்த சிட்டு….!
ஒரு அழகிய பகற்பொழுது. அது யாழ்ப்பாணம் இந்துக்கல்லூரி குமாரசுவாமி மண்டபம். சமகாலக் கருத்தரங்கு ஒன்று நடைபெற்றுக்கொண்டிருந்தது. இரண்டு போராளிகள் எமக்கு நிலைமைகளை விளக்கிக் கொண்டிருந்தனர். இருவரையும் பற்றி எனக்கு எதுவும் தெரியாது. கருத்துக்களை பகிர்ந்து கொண்ட பின்னர் ஒரு போராளி கேட்டார் உங்களுக்கு ஏதாவது சந்தேகங்கள் இருப்பின் எம்மிடம் கேளுங்கள். தயக்கம் இருந்தால் ஒரு சிறிய கடதாசியில் எழுதி முன்னாலே அனுப்புங்கள். நிறைய கேள்விகள் கேட்டனர். எல்லாவற்றிற்கும் பதில்கள் கிடைத்தன.ஒரு மாணவன் கேட்டிருந்தான் அண்ணா ஒரு பாடல் பாடிக்காட்டுங்கள்? நான் நினைத்தேன் ஏன் இவன் இப்படி கேட்கிறான் என்று. அப்ப அந்த போராளி அண்ணா சொன்னார் கருத்தரங்கு முடியும் போது பாடுகிறேன். நான் எதையும் நினைக்கவில்லை. பின்னர் முடியும் தறுவாயில் புன்முறுவல் பூத்த முகத்துடன் “சின்ன சின்ன கண்ணில் வந்து மின்னல் விளையாடிடும்….” என்ற “உயிர்ப்பூ” படப்பாடலை பாடினார். அப்போதுதான் தெரிந்தது இவர்தான் போராளிப்பாடகர் சிட்டு என்று.
“ஜெயசிக்குறு” என்று புறப்பட்டு தமிழரின் தலை கொய்வேன் என்ற சிங்களத்துச்சேனை அடிவாங்கி அடிவாங்கி ஆமையாய் நகர்ந்து வன்னியின் கழுத்தை நெரிக்க முற்பட்டது. பிஞ்சும் பழமும் களமுனையில் வெஞ்சமராடிய காலம். எம் விடுதலை சேனையோ தடுத்து நிறுத்த முழுப்பலத்தையும் பிரயோகித்த நேரம். காலம் அவனையும் களமுனைக்கு தள்ளியது. குரலால் போராட்டத்துக்கு வலுச்சேர்த்த போராளி, இப்போது குண்டுகளால் எதிரியை திணறடிக்கிறான். மண்ணை காக்கும் பணியில் மாவீரனாகிறான். மாவீரன் சிட்டு வித்தாக விழுந்த தினம் இன்றுதான்(01.08.1997). பதினொரு வருடங்கள் பறந்துவிட்டன. மனதை விட்டு பறக்காமல் எம்முள் வாழ்கிறான் சிட்டு.
செங்கதிரின் “கண்ணீர்ரில் காவியங்கள் செந்நீரில் ஓவியங்கள்….” என்ற பாடலுக்கான மெட்டுத்தான் எமக்கு சிட்டுவை ஒரு பாடகனாக தமிழீழ மண்ணிற்கு தந்தது. ஒரு போராளிப்பாடகன். இவன்தான் நிறைய போராளிகளுக்கு வழிகாட்டியாய் அமைந்தான். இப்போதெல்லாம் நிறைய போராளிக் கலைஞர்கள் உருவாகிவிட்டார்கள். இவற்றிற்கெல்லாம் அடிநாதம் எங்கள் சிட்டு.
கேணல்.கிட்டு வீரச்சாவு அடைந்த உடன் செய்தி மட்டுமல்ல உருவாகிய பாடலும் உள்ளத்தை பிசைந்தது. முதலில் வந்த “தளராத துணிவோடு களமாடினாய்……” என்ற பாடலை பாடியவர் மேஜர் சிட்டு. அற்புதமான பாட்டு. பின்னர் நெய்தல் ஒலிப்பேழையில் எஸ்.ஜி.சாந்தனுடன் இணைந்து “வெள்ளி நிலா விளக்கேற்றும் பாடல்….” கரும்புலிகள் ஒலிப்பேழையில் “ஊர் அறியாமலே உண்மைகள் உறங்கும்…” என்ற தொகையறாவுடன் தொடங்கும் “சாவினைத்தோள் மீது தாங்கிய ….” என்ற பாடல்கள் மூலம் மக்கள் மனதில் நீங்கா இடம் பெற்றார்.
பூநகரி வெற்றிப்பாடல் “சங்கு முழங்கடா தமிழா இந்த சாதனை பாடடா கவிஞா..” என்ற பாடலை மீண்டும் சாந்தனுடன் பாடி புகழ் அடைந்தார். இவரது நிறைய பாடல்கள் நெஞ்சை விட்டு அகலாதவை.
இசைபாடும் திரிகோணம் ஒலிப்பேழையில் இடம்பெற்ற “கடலின் அலை வந்து தரையில் விளையாடும்…” என்ற பாடலும் அதே தொகுப்பில் ‘ரணசுரு’,’சூர்யா’,உட்பட 3கப்பல்களை தாக்கியளித்த கரும்புலிகள் நினைவாக வந்த “விழியில் சொரியும் அருவிகள்….” என்ற பாடலும் மிக உருக்கமானவை. இந்த கரும்புலித் தாக்குதலுடன்தான் மூன்றாம் கட்ட ஈழப்போர் ஆரம்பமானது.
பாட்டுகள் தந்த எங்கள் சிட்டுக்கு என உருவாக்கப்பட்ட ஒரு நினைவுப்பாடல்….
ஒருமுறை உங்களின் திருமுகம் காட்டியே மறுபடி உறங்குங்கள் என் எல்லோரும் வேண்டுகின்ற “தாயக கனவுடன் சாவினைத் தழுவிய சந்தன்ப்பேழைகளே………” என்ற துயிலும் இல்ல பாடலுக்கும் சிட்டு குரல் கொடுத்துள்ளார். முன்னர் இப்பாடலின் சரணத்தில் “..நள்ளிராவேளையில் நெய்விளக்கேற்றியே நாம் உம்மை பணிகின்றோம்…” என்ற வரி பின்னர் காலச்சூழ்நிலைக்கேற்ப மாற்றப்பட்டு விட்டது.
நெஞ்சைப்பிழியும் நினைவு ஒன்று. சிட்டு களத்திற்கு போக தயாராகிறான். அவனது போராளி நண்பர்கள் கேட்டிருக்கிறார்கள் உனக்கு பிடித்த பாடல் ஒன்றை எமக்காக பாடு என்று. எல்லாம் நினைத்து நடப்பதில்லை. ஏன் அப்படி கேட்டார்களோ தெரியாது. ஆனால் சிட்டு இதே துயிலுமில்ல பாடலையே நண்பர்களுக்காக இறுதியாக பாடினானாம். எல்லோரும் அழுது விட்டார்களாம். இப்போது அந்நண்பர்கள் செங்களம் மீதிலே உன்னுடைய கனவை நனவாக்கிக் கொண்டிருக்கிறார்கள். இதனை ஒரு போராளி நண்பர் பகிர்ந்து கொண்டார். மனதைப்பிழியும் நினைவு ஒன்று. அந்தப்பாடல் துயிலும் இல்லத்துக்கு மட்டுமே உரியது என்பதால் இங்கே தரமுடியவில்லை.
காலம் முழுவதும் வாழ்வான் சிட்டு எங்கள் நெஞ்சைப்பிழியும் பாட்டுக்கள் மூலம்.
|| சிட்டண்ணையைச் சந்தித்த சம்பவமொன்று….
“கூப்பிடு தூரம்” என்ற தலைப்பில் ஒரு பதிவு எழுதியிருந்தேன். அதில் ஜெயசிக்குறு தொடங்கிய பின் சண்டை நடக்கப்போகும் இடங்களைப் பார்க்கச் சென்றிருந்த நிகழ்வைப் பதிந்திருந்தேன். அன்று தான் நான் இறுதியாகச் சிட்டண்ணையைச் சந்தித்தேன்.
புளியங்குளச் சந்தியிலிருந்து கிழக்குப் பக்கமாக, புளிங்குளத்தின் அணைக்கட்டால் நானும் நண்பர்களும் நடந்து சென்று கொண்டிருக்கிறோம். அணைக்கட்டை மையமாக வைத்து பதுங்குகுழிகளும் காவலரண்களும் போராளிகளால் அமைக்கப்பட்டுக்கொண்டிருக்கின்றன. சற்றுத் தொலைவில் புளியமரத்தின் கீழ் கும்பலாக முப்பது பேர் வரையில் இருந்தார்கள். மரத்தை நெருங்க, அவர்கள் பாட்டுப்பாடி கலகலப்பாக இருப்பது புரிந்தது. போராளிகள் வழமையாக ஆபத்தற்ற இடங்களில் கும்பலாக இருந்து பாடல்கள் பாடிப் பொழுதைக் கழிப்பது வழமை. அதுவும் போர்க்களம் சார்ந்த இடங்களில் ஆபத்தில்லாத பட்சத்தில் இது நிச்சயம் நடக்கும். நாமும் அதை ரசித்தவாறு கடந்துசெல்ல முற்பட்ட போதுதான் பாடிக்கொண்டிருந்த அந்தக் குரல் சாதாரணமானதில்லையென்பது புரிந்தது.
“சின்னச் சின்னக் கண்ணில் வந்து மின்னல் விளையாடிடும். அண்ணன் என்ற நெஞ்சில் நூறு அர்த்தங்களை தூவிடும்”
இந்தப் பாட்டை யாரால் அவ்வளவு உருக்கமாகப் பாட முடியும்?அதே சிட்டண்ணை தான் பாடிக்கொண்டிருந்தார். கையில் ஒரு தண்ணீர்க் கான். தானே தாளம்போட்டுப் பாடிக்கொண்டிருந்தார். மரத்தடிக்குச் சென்றோம். அந்தப் பாட்டு முடியுமட்டும் நின்று கேட்டு ரசித்தோம். புதிய போராளிகளைக் கொண்ட அணியொன்றுக்குப் பொறுப்பாளனாய் கடமையாற்றிக்கொண்டிருந்தார். எம்மைக் கண்டதும் நலம் விசாரித்தார். சனம் என்ன கதைக்குது எண்டு வினாவினார். சனங்களின் இடப்பெயர்வுகள் பற்றியும் வெளியே பரப்புரைகள் பற்றியும் விசாரித்தார்.
நாங்கள் இடங்கள் பார்த்து மதியமளவில் மீண்டும் அவ்வழியால்தான் புளியங்குளச் சந்திக்கு வந்தோம். அப்போது காவலரண் அமைத்துக்கொண்டிருந்தது அவரது அணி. வேலை முடிந்து மதிய உணவுக்காக மீண்டும் மரத்தடிக்கு வந்துகொண்டிருந்தார்கள். எம்மைக்கண்ட சிட்டண்ணை,
“வாங்கடாப்பா வந்து எங்கட சாப்பாட்டையும் ஒருக்காச் சாப்பிடுங்கோ” எண்டு கூப்பிட்டார். எவ்வளவு மறுத்தும், வெருட்டி, கூட்டிக்கொண்டு போய் இருத்தி, சாப்பாடு தந்து தான் விட்டவர். எல்லாம் முடிந்து சந்தி நோக்கி வரும்போது தான் முதற்பதிவில் குறிப்பிட்ட எறிகணை வீச்சும் மற்றதுகளும் நடந்தன.
அருமையான ஒரு பாடகன், போராளி. எழுச்சிப்பாடல்களைப் பாடிக்கொண்டிருந்த அந்தப் போர்க்குயில் ஒருநாள் ஊமையாகிவிட்டது.
மேஜர் சிட்டு அவரின் எட்டாம் ஆண்ட நினைவுதின பதிவிலிருந்து…
நினைவுப் பகிர்வுகள்:- சாந்தி ரமேஸ்
“தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்”