மறக்கவில்லை உன்நினைவை
தாவி வந்தொரு தாய் நிலத்தின்
சேயாகி, வாஞ்சையோடு முத்தமிட்டு
பெண்ணின் விலங்குடைக்க புறப்பட்ட
தமிழீழத்தின் வீர மறத்தியே
வெள்ளை வெளீர் பள்ளி உடை துறந்து
உள்ளம் சிலிர்த்திட வீர வரிக்குள் நீ புகுந்து
தானை தலைமகன் தங்கையாய்
செருக்களம் புகுந்த அரியாத்தை பேத்தியே
நெஞ்சில் நஞ்சை மஞ்சமென கொண்டு
தீராத தாகத்தை மண்ணில் வைத்து
பெண்ணிலும் உள்ளது வீரம் என்றதை
உன் சாவினால் உணர்த்திய பெண் புலியே
மாலதி என்பதே உன் திருநாமம்
காலனாய் வந்தாய் நீ எதிரியர்க்கு
வீணரல்ல ஈழ தமிழ் பெண்கள்
உணர்த்த காத்திருந்தாய் ஈழ கள மடியில்
சொல்ல வார்த்தைகள் உண்டோ என்னிடத்தில்
தேடுகிறேன் இன்று என் நினைவகத்தில்
கோப்பாய் மண்ணிலே நீ ஆடிய
தில்லை நடராயர் தாண்டவத்தை
விக்கித்து போனது அன்று இந்தியம்
பார்த்தீபன் காட்டிய அகிம்சை துறந்து
காந்தள் மலராய் களமது புகுந்தவள் கரத்தினில்
இருந்து எழுந்த அனலை பார்த்து
வஞ்சக இந்தியம் வீசிய குண்டுமழை
உன் வீரவுடல் மீதிலேறி குருதி குடித்து
செஞ்சோற்று கடன் தீர்த்து சென்ற போது
அஞ்சாது ஒலித்த குரல் சாய்ந்து போனதுவோ
அண்ணனுக்கு வேண்டும் நீ அணைத்த
துப்பாக்கியின் இருப்பு என்றாய்
தோழி கரங்களில் தந்து காத்திடு என்றாய்
விழிகள் கலங்கிட வீழ்ந்த முதல் பெண் வித்தே
உயிரது பிரியும் வேளையிலும் கருவி
உயிரது காத்த உத்தமியே
கனவது தொலைத்து வாழ்ந்த பெண்கள்
வாழ்வில் கலங்கரை விளக்காயானவளே
உன் நாமம் சுமந்து நினைவில் நனைந்து
உன் தங்கைகள் கண்ட களங்கள் கணக்கில்லை
உன் உறுதி தரித்து உறக்கம் தொலைத்து
ஈழ உயிலது எழுத கொடுத்த உயிர்கள் விலையில்லை
ஆயிரம் தீபங்கள் ஏற்றி உந்தன் பாதம்
பணிந்து வணங்கிடவே தேசம்
எங்கும் அலைகிறோம் அன்பே
தேம்பி நாங்கள் விழி கலக்கத்துடனே…
மண்ணுக்காய் மண்ணுக்குள் விதையான
மங்கை உன்னை வணங்க ஈழ
மண்ணினில் எங்கும் இடமில்லை ஆனால்
மனங்கள் இன்னும் மறக்கவில்லை உன்னை.
கவியாக்கம்:- கவிமகன்.இ
“தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்”