பெருமை சேர்த்தனள் பெண்ணினத் திற்கே!
பெருமை சேர்த்தனள் பெண்ணினத் திற்கே !
மன்னார் ஆட்காட்டி வெளிதனிற் பிறந்து
மாலதி யென்னும் பெயர்’தனைத் தாங்கித்
தன்னிக ரில்லாத் தமிழிச்சி தானெனத்
தனையே ஈந்தாள்! தமிழீழத் தாயவள்
இன்னல் களைந்திட எடுத்தடி வைத்தாள்!
ஈடிலா மகளிர் அமைப்பினில் இணைந்து
பன்னுதற் கரியபல தாக்குதல் புரிந்தே
பெருமை சேர்த்தனள் பெண்ணினத் திற்கே!
குறும்புத் தனங்கள் குறைவின்றி ஆற்றும்
கொஞ்சும் கிளியாய்க் குலவி நின்றவள்
நிறுவிடத் துடித்தனள் தமிழீழம் தனையே
நெஞ்சினில் நெருப்பினை ஏந்தி நின்றனள்!
இறக்கும் போதிலும் ஆயுதங்கள் தம்மை
இன்னுயிர் அமைப்பிடம் கொடுத்து மறைந்தனள்!
மறக்க வியலா முதற்பெண் புலியாய்
மாவீரர் பெயர்களில் மாண்புற இணைந்தவள்!
அண்ணன் தன்னிடம் ஐயமறக் கற்ற
ஆயுதப் பயிற்சியில் உயரத் திளைத்து
எண்பத் தேழில் ஐப்பசித் திங்கள்
இந்திய இராணுவம் முற்றுகை யிடவே
கண்ணெனத் துமுக்கியைக் கைதனில் ஏந்திக்
களத்தினில் இறங்கிக் கயவர் தம்மைப்
பெண்ணெனும் தெய்வம் புலியாய்ப் பாய்ந்து
பெரிதாய் வீழ்த்தினள் பெரும்படை தனையே!
தமிழீழத் தேசிய விடுதலைப்போ ராட்டத்தின்
தக்கவே முதுகெலும் பெனவே விளங்கும்
அமிழ்தெனத் திகழும் ஆன்றநல் அரிவையர்
அவர்தம் தியாகமும் வீரமும் ஒருங்கே
இமயமென நாமடைந்த வெற்றிக்கு என்றும்
உறுதுணையாய் நின்றதை உலகே அறியும்!
சமயத்திற் தன்னுயிர் போக்கியே சகாயசீலி
தமிழ்ப்பெண் போர்ப்பணி தொடர வைத்தனள்!
அடுப்பங் கரைதனில் அகப்பை பிடித்தே
உறங்கிய பெண்தனை உசுப்பி அழைத்து
எடுப்பாய் நிமிர்ந்து ஆயுதம் ஏந்தியே
ஆணுக்கு நிகராய் அவனியிற் றிகழத்
துடிப்புடன் அமைப்பினைத் தொடக்கிய தலைவன்
தூய நெஞ்சினைப் போற்றுதல் முறையே!
அடிப்படை உரிமைகள் மறுத்தோரை எதிர்த்து
அணங்குகள் படையின்று விரட்டுதல் காணீர்!
‘தாயாய்த் தங்கையாய் தாரமாய் தாதியாய்
தரணியிற் சேவைகள் செய்திடப் பிறந்தவள்’
வாயாரப் பேசிய வரட்டு வார்த்தைகளை
வர்ணங்கள் பேசியோர் வஞ்சனைக் குரல்களைத்
தீயார இட்டுமே தீய்ந்திடச் செய்தார்!
தேன்தமிழ்ப் பெண்கள் சிறுமையை எதிர்த்தார்’!
ஓயாத அலைகளில் அவர்தம் ஆற்றலை
உலகம் வியந்தது! எதிரியும் திகைத்தான்.!
பட்டுச் சேலைகள் பலவகை நகைகள்
பகட்டு வாழ்வுகள் பயனற்ற வையெனக்
கட்டுப் பாடுடை வாழ்வுதனைக் கடைப்பிடித்து
‘காண்போம் தமிழீழம்’ என்கின்ற கொள்கையில்
கட்டான மனிதகுல வாழ்வின் விடிவிற்காய்க்
கன்னியராய்த் தனிமனித வாழ்வினை அர்ப்பணித்துச்
சிட்டெனும் சொல்தவிர்’த்துச் சிறுத்தையாய்ச் செயற்படும்
செந்தமிழ்ப் பெண்களின் சிறப்பினைச் செப்பிடுவோம்!
அடிமட்டத் திலிருந்து எழுப்பிய அமைப்பின்று
ஆணித் தரமாய் அகலப் பரந்து
கொடியெனெப் படர்ந்து உயர்’ அரசியலில்
குற்றமில் நீதித் துறையில் நிர்வாகத்தில்
இடியென முழங்கும் ஊடகத் துறையில்
இரக்கம் மிகுநல் மருத்துவப் பிரிவில்
குடிகளின் நலந்தனைக் கருத்திற் கொண்டுமே
கண்ணுறக்க மின்றிக் கடமை செய்கிறதே!
இத்தகை வளர்ச்சிக்கு ஈடிலா வித்திட்டு
இறப்பெனும் முடிவினை வாழ்வினில் ஏற்றுப்
பத்தரை மாற்றுத் தங்கமெனத் திகழ்ந்து
பவ்வியமாய் விடுதலைக்கு உரம்தனைக் கொடுத்து
மொத்தத் தமிழினத்தின் மனத்திலும் நிறைந்து
முதலாம் மாவீரப் பெண்ணென அறிந்து
நித்தமும் நெஞ்சினில் நிறை தாமரையாய்
நிறுத்தியே வணங்குவோம் நாளும் வாழ்வில்!
கவியாக்கம்:- கனடாவிலிருந்து பவித்திரா.