அக்கினிக் குழந்தைகளின் எரிமலைக் குழம்புகள்
அக்கினிக் குழந்தைகளின் எரிமலைக் குழம்புகள் பூஜைக்கு மட்டுமே
பூக்கள் என்பது
பிடுங்கப்பட்டு
விருட்சங்களாய்
விளைவதும்
மலர்களே என்பது
புகட்டப்பட்டது
பரதமிடும்
பாதங்களிற்குள்ளும்
படை நடத்தும்
பலம்
பதுங்கிக் கிடப்பது
பறையடிக்கப்பட்டது.
மழலைகள் வளர்ப்பதே
மரபெனும் சரித்திரம்
மனதினுள் களைந்து
நெருப்பும் உள்ளே
இருக்கிறதென்பது
நிரூபிக்கப்பட்டது.
செருப்புக்களாய்
மிதிக்கப்பட்டவர்கள்
சிகரங்களில் ஏறி
மணிமுடி
தரித்தார்கள்.
வீட்டின் படிகளை
தாண்டத்
தயங்கியவர்கள்
தேசத்
திசையெங்கும்
வாசம் புரிந்தார்கள்.
தாய்மைக்காய்
தன்மை கொள்பவர்
வாய்மைக்காய்
வன்மம் கொள்தலும்
வரலாறாக்கப்பட்டது.
தலைவன்
சிந்தனைப் பொறியில்
கருவான
அக்கினிக் குழந்தைகளின்
எரிமலைக் குழம்புகள்
எதிரியையும் மடமையையும்
எரித்துக் கொண்டிருக்கிறது.
மாலதி!
தென்றல் ஒன்றை
உருவாக்கப்
புலியாகி வீழ்ந்த
உனது
மூச்சுத் தழுவிய
பல தென்றல்கள்
புயல்களாய் அணிவகுத்த
இந்தத் தேசத்தை
எந்தப் புயலும்
அணுகாது காக்கும்
அணைக்கட்டின்
அத்திவாரம் நீ
மாலதி!
நீ வீழ்ந்தாய்
உன்
நினைவுகளை நிமிர்த்திப்
பலர்
எழுந்தனர்.
விடுதலைப்புலிகள் இதழ் (புரட்டாதி, ஐப்பசி 2005) இதழிலிருந்து…….
“புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்”