வெற்றிக்காக உழைப்போம்
தமிழீழத்தில் போராளிகளின் ஆக்கத்தில் 1998ம் ஆண்டு கறுப்பு ஜூலை வரலாற்று ஆய்வாக மலர்ந்த ஓர் படைப்பை தேசக்காற்று இந்நாட்களில் மீள்பதிவாக காலத்தின் நிஜதிக்கு ஏற்றவண்ணம் பதிவு செய்கின்றோம்.
கறுப்பு ஜூலை – 15 வருடங்களுக்குமுன் (1998ம் ஆண்டு வரையப்பட்டது) சிங்கள தேசத்தினால் நடாத்தி முடிக்கப்பட்ட பாரிய இனப் படுகொலை ஒன்றை பதிவு செய்து வரலாறு பூராகவும் அதனை காவிச் செல்லும் தமிழர்களின் தீர்மானத்தை வெளிக்காட்டும் நாட்கள் இவை.
இந்த 15 வருட காலத்துள் தமிழர் சேதியம் பல்வேறு மாற்றங்களை எதிர்கொண்டு போராடியது; பல்வேறு மாற்றங்களை உருவாக்கப் போராடியது. தமிழர்கள் என்ற அடையாளத்தை பாதுகாக்கும் உட்கட்டுமானத்துடன் தமிழீழ தேச அமைப்பு ஒன்று இன்று தோற்றம் பெற்றுள்ளது. (2015 மீள்பதிவாக தேசக்காற்று) தனித்துவமான சட்ட அமைப்புக்களையும் பொருளாதார சமூக கோட்பாடுகளையும் பிரதிபலிக்கும் செழுமையான கட்டமைப்புக்கள் தோற்றம் கண்டுள்ளன. இவை அனைத்தையும் பாதுகாத்து வெற்றிக்கு அழைத்துச் செல்லும் பலம் மிக்க தேசிய விடுதலை இராணுவம் ஒன்று உருவாக்கியுள்ளது.
இந்த சாதனைகளின் பின்னால் இழப்புக்களும், இறப்புக்களும் பட்டியலிடப்பட்டுள்ளன. பலலயிரம் போராளிகளின் உயிர்த் தியாகம், மக்களின் இழப்புக்கள் என்பன தமிழர்கள் தம் விடுதலைக்கு இதுவரை கொடுத்துள்ள விலையாகும்.
1983ல் சிங்கள அரசும் அதனது இனவாத இயந்திரங்களும் இணைந்து நடாத்திய கோர வெறியாட்டம் அந்தத் தீவில் இருவேறு தேசியங்கள் முரண்பாடுகளுடன் வாழுகின்றன என்பதை உலகிற்கு எடுத்துச் சொல்லியது. அன்று முதல் ஐ. நா. மனித உரிமைகள் உப ஆணைக்குழு உட்பட பல்வேறு சர்வதேச மன்றங்களுக்கும் தமிழர் வேண்டுதல் எட்டியது. (1998ம் ஆண்டு வரைந்தது 2015 மீள்பதிவாக தேசக்காற்று) தமிழீழத்தின் சர்வதேச இயக்கப் போக்கு அந்த 1983 ஜூலையின் பின்னர் வீரியம் கொண்டது.
தமிழீழ விடுதலைக்கான போராட்டத்தில் புலம்பெயர்ந்து வாழும் தமிழர்களின் பங்களிப்பு அன்றுமுதல் இன்றுவரை தொடர்ச்சியாக அதிகரித்து வருகின்றது. தமிழீழத்தின் விடுதலையே முழுத் தமிழ் மக்களினதும் சுபீட்சமான எதிர்காலத்திற்கான அத்திவாரம் என்ற தீர்மானத்துடன் புலம்பெயர் வாழ் தமிழர்கள் செயற்பாடானது இப் 15 வருட காலத்து பதிவுகளில் அடங்குகின்றது.
ஆயினும், எமது தேசத்தின் வெற்றிக்கு முன்னையதிலும் கடுமையாக உழைக்கவேண்டிய கடமைப்பாடு எம்முன் இன்றுள்ளது. இன்று எம் தேசம் வெற்றிக்கு அருகில் நிற்கிறது. (1998ம் ஆண்டு வரைந்தது 2015 மீள்பதிவாக தேசக்காற்று) இக்கால நகர்வில் இடைப்படும் தடைகளை உடைத்தெறியும் பலத்தை எம் தேசத்து போராளிகளுக்கு வழங்கவேண்டிய வரலாற்று முக்கியம் வாய்ந்த நாட்கள் இவை. இதனை உணர்ந்து கொள்வதே கறுப்பு ஜூலை 1998ல் நாம் பிரகடனப்படுத்த வேண்டிய செய்தியாகும்.
இன்றைய காலத்திற்கும் ஏற்றவையாகும்.
“புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்”