சத்திய சோதனை
போராட்டம், அதுவும் விடுதலைப் போராட்டம் எப்போதும் எளிதாக நடந்து முடிந்ததாக வரலாறு இல்லை. கொந்தளிப்புக்கள், சோதனைகள், சாதனைகள், ஏற்ற இறக்கங்களின் முடிவிலேயே விடிவின் ரேகைகள், சுதந்திர வானில் படர ஆரம்பிக்கின்றன. கொடூர அடக்குமுறை எனும் பூகம்பக்கடலை எதிர்த்தே விடுதலைப் படகு வீரத்துடனும், தாங்கொணா வேதனையின் விம்மல் வெடிப்புகளுடனும் முன்னேறுகின்றது. காலைப் பொழுதில், ஒளிவீசும் மனிப்பள்ளவத்தைக் கண்ணிலே காண்பதற்கும், சுதந்திரமாய் மைந்த அப்பசுந்திடலத் தீவில் எமது கால்களை உறுதியாகப் பதிப்பதற்கும் நாம் கடக்கவேண்டிய அக்னிக் கடல்; உலோக ஆர்ப்பரிப்போடு,உடல்கள் வேகும் போராழி. சொர்க்கத்தின் மீட்பு, போராளிகளின் இரத்தம் சிந்தும் போராட்டத்தினூடே நிர்ணயம் ஆகின்றது.
ஆனையிறவுப் போரில் நானூறு போராளிகள் வரை வீரமரணத்தை வரித்துக் கொண்டார்கள் (1991ம் ஆண்டு வரையப்பட்டது 2015ம் ஆண்டு மீள் பதிவாக தேசக்காற்று) என்பது தமிழ்த் தேசத்தை உலுக்கும் சோக நிகழ்ச்சிதான். ஒவ்வொரு தமிழ் நெஞ்சமும், இறந்த வீரர்களுக்காக நெஞ்சுருகி, எஃகின் உறுதி பெற வேண்டியது அவசியம். அழகிய விடுதலைக் கனவைச் சுமந்து திரிந்த எமது இளம் வீரர்களின், வீராங்கனைகளின் தியாகம் வீண்போகாது.
அவர்கள் தம் தோளில் தாங்கி நடந்த இலட்சியச் சுமையானது, தேசம் முழுமையாலும் சுமக்கப்பட வேண்டும். ஆனையிறவுக் கடலேரியில், கொட்டப்பட்ட எமது போராளிகளின் குருதி, நீரில் கரையாது, திரண்டு, கிழக்குக் கரையில், செஞ்சூரியனாக உதயமாகும்.
இந்தியாவில், குறிப்பாகத் தமிழ் நாட்டில் ஈழத் தமிழர்களுக்கும், விடுதலைப் புலிகளுக்கும் எதிராக மத்திய – மாநில அரசுகள் எடுத்துவரும் நடவடிக்கைகள், நிச்சயமாக தமிழீழத் தேச பக்தர்களுக்கு மனக்கிலேசத்தை அளிப்பதாக இருக்கும். இந்தியா, எமது பூரண விடுதலைக்கு தடையாக உயர்ந்து நிற்கும் இமயம் என்பது அறிவு பூர்வமாக நிறுவப்பட்டு நிதர்சனமாக வெளிப்படும் போது, அது குறித்து அகவயப்பட்ட நிலையில், சோர்ந்து போதல் ஆகாது. புறநிலை உண்மைகளை, ஆன்மீக பலத்துடன், மக்கள் எழுச்சியுடன், தார்மீக உணர்வுடன், விடுதலைச் சத்தியின் ஆளுமையுடன் எதிர்கொள்ளாலே, சுதந்திர வீரர்களினதும், தேச பக்தர்களினதும் கடனாகும்.
தமிழ்நாட்டு மக்கள் வெள்ளம், இமயத்தை மூழ்கடிக்கும் குமரிக் கடலாக மாற வேண்டும்; மாற்றப்பட வேண்டும். சர்வதேச அரங்கில், நடைபெற்றுவரும் தன்னாட்சிப் போராட்டங்கள், தமிழீழ விடுதலைத் தீயை மூட்டிவிடும். எங்கள் ஏக்கங்களை விரட்டி, இதயத்தைத் தடவிவிடும் தென்றலாக வீசுகின்றன. விடுதலைப் போராட்டம் வேகமாக முன்னேறி வருகின்றது. அவ்வோலையில், சோதனைகளும், தடைகளும், சிக்கல்களும் தலைக்கு மேலே எழுகின்றன. விடுதலை வீரர்கள் தலையை நிமிர்த்தி அவற்றை வென்று முன்னேறும்போது, அத்தடைகள், பாலமாக அமைந்து விடுகின்றன; போராட்டம் வேகம் பெறுகின்றது; விடுதலையும் அண்மித்து விடுகின்றது. இச் சத்திய சோதனையினூடே விடுதலைப் போராட்டம் நடந்து நிறைவுறும் என்பது தவிர்க்கமுடியாத வரலாற்று நியதியாகும்.
1991ம் ஆண்டு சமகால ஆய்விலிருந்து தேசக்காற்று.
“புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்”