தூது
அன்பின் அண்ணா!
உங்களின் கடிதத்தைப் பார்த்ததும் கவலை ஏற்பட்டது. வெளிநாடுகளில் வாழும் ஒவ்வொரு தமிழரும் தாம் படுகின்ற துன்ப துயரங்களை மீறி இயந்திரம் போல ஓய்வின்றி உழைக்கின்றார்கள். இந்த உழைப்பு வசதியான ஒரு வாழ்வைத் தந்திருந்தாலும் அந்நாடுகளில் நீங்கள் படும் அந்நிய உணர்வும், தாயக நினைவுகளும் மகிழ்வையும் நிறைவையும் தராமல் தத்தளிப்பில் உங்களைத் தள்ளிவிடுகின்றன. பிறந்த மண்ணைவிட்டு ஒரு மனிதன் எத்தகைய மேலான வாழ்வையும் நிம்மதியுடன் வாழமுடியாது. உங்களின் கடிதங்களின் அடிநாதம் இதுதான். “என்று தமிழினம் தமிழீழத்தில் நிம்மதியாகவும் சுதந்திரமாகவும் வாழ்கின்றதோ அன்றேல் தமிழர் உலகத்தில் தலை நிமிர்வார்கள்” என்று நீங்கள் எழுதியதை நண்பர்களுக்குக் காட்டினேன். மகிழ்ந்தார்கள்.
மேலும் இங்கே இராணுவ நடவடிக்கைகளும் அரசின் தமிழ் மக்கள் மீதான ஒடுக்குமுறையும் மிக மோசமாகத் தொடர்கிறது. எவ்வளவுக்கு சமாதானத்தைப் பற்றி அரசு பெரும் பிரகடனங்கள் செய்கிறதோ அவ்வளவுக்கு அதற்கெதிராக அது செயற்படுகிறது. கடந்த மாதம் 51வது சுதந்திர தினத்தை அரசு கொண்டாடியது. சுதந்திரமற்ற நிலையில் பெரும்பீதியுடனே அது நடந்தது. மட்டக்களப்பில் விபுலானந்தர் கல்லூரி மாணவிகள் இலங்கையின் தேசிய கீதத்தை இசைப்பதற்கு மறுத்துவிட்டனர். இது பாராட்ட வேண்டியதல்லவா? இது தவிர இங்கே பல இளைஞரும் யுவதிகளும் போராட்ட உணர்வுடன் இயக்கத்தில் சேருகிறார்கள். இங்கு நடக்கும் ஒவ்வொரு நிகழ்விலும் மக்கள் உணர்வுடன் பங்கேற்கிறார்கள். இராணுவத் தாக்குதல்களால் காயப்படும் மக்களுக்கும் போராளிகளுக்கும் குருதித்தானமும் செய்கிறனர்.
அண்ணா! அருளம்மா அக்காவின் மூத்தமகன் ‘கொலரா’ தாக்கி இறந்துவிட்டான். தமிழீழ சுகாதார சேவையினர் கொலரா தடுப்பில் ஈடுபட்டு அதை கட்டுப்பாட்டில் கொண்டுவந்துள்ளனர். உங்களின் நண்பர் குமாரண்ணா அவர்களிடைய வீட்டைப் பார்க்கச் சென்று மிதிவெடியில் சிக்கி இடது காலை இழந்து விட்டார். உங்களது நண்பர்கள் உங்களை விசாரித்தனர். இப்பொழுது கடும் வெயிலும், இரவில் பனிக்குளிரும் வாட்டுகிறது. இடம்பெயர்ந்தவர்கள், குழந்தைகள் படும் அவதி கொஞ்சமல்ல, நெல் அறுவடையும் தொடங்கிவிட்டது. மாரிமழையின் ஒழுங்கின்மையால் சரியான விளைச்சலில்லை, முட்டிஹ்தையன் கட்டுப்பகுதியில் அறுவடை செய்ய முடியாமல் வயல்களுக்குள் ஷெல்கல் வீழ்ந்து வெடிக்கின்றன. அங்கே செல்ல மக்கள் அஞ்சுகின்றனர்.
யாழ்ப்பாணத்தில் தலை வெட்டப்பட்ட உடல் ஒன்று தெருவில் கிடந்ததாகத் தகவல். வடமராட்சியில் தமிழ்க் குழுவொன்றின் முகாமினுள் மக்கள் புகுந்து தாக்கி அங்கிருந்த உடைமைகளுக்குத் தீமூட்டிக் கொழுத்தியுள்ளார்கள். ‘ரணகோஷ’ என்ற புதிய இராணுவ நடவடிக்கையால் மீண்டும் அகதியாகியுள்ளனர் நம் மக்கள். செழிப்பான வன்னியின் கிராமங்கள் சில மேலும் படையினரால் சிதைக்கப்படுகின்றன. மல்லாவியில் இடம்பெயர்ந்து தங்க இடமின்றி குடும்பமொன்றின் 3 மாதக் குழந்தை மரத்தின் கீழ் படுத்ததால் கடுங்குளிரில் விறைத்து இறந்துவிட்டது.
காந்தரூபன் அறிவுச்சோலையில் விளையாட்டுப் போட்டியும் இசைமாலையும் நடைபெற்றது. செஞ்சோலையிலும் இதே போல் நடந்தது. கரும்புலிகள் நினைவாக ‘தேசத்தின் புயல்கள்’ இரண்டாவது ஒலிநாடாவும் வெளியிடப்பட்டுள்ளது. இப்படி இன்னும் பல நிகழ்வுகள் போரினுள்ளும் நடக்கின்றன. எந்த நிலை வந்தாலும் உறுதி தளராது போரிட்டு வாழ்வோம் என்று கூறி முடிக்கின்றேன்.
(1999ம் ஆண்டு வரையப்பட்ட மடல்….)
இப்படிக்கு அன்புடன் தம்பி
க. சங்கீதன்.
“தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்”