எனது நிழல் தரும் விருட்சம் வேரோடு சாய்க்கப்பட்டது
சிங்களப்படையின் கண்மூடித்தனமான எறிகணை வீச்சுக்களால் தங்களது உறவுகளை இழந்து அல்லலுறும் ஆயிரக்கணக்கான தமிழீழக் குடும்பங்களின் குடும்பத்தலைவனை, தந்தையை இழந்து அல்லலுறும் ஒரு குடும்பத்தின் உணர்வுக் குமுறலை, அவல வெளிப்பாடாக மகனின் வாக்கு மூலமாக இங்கே பதிவாகின்றது. அன்னியக்கரங்களில் நசியுண்ட மனிதங்களைப் பிரிந்து அவர்களது உறவுகள் படும் பாடு சொல்லி மாளாது.
சம்பவம் நடைபெற்ற காலம்:- 18.09.1992 நடைபெற்ற பிரதேசம், யாழ் குடாநாடு.
“தந்தை மகற்கு ஆற்றும் நன்றி அவையத்து முந்தி இருப்பச் செயல்.”
என்ற வள்ளுவன் வாய்மொழிக்கமைய எனது தந்தை தனது மகன் கற்றிருந்தார் முன்னிலையில் நிமிர்ந்து நடக்கத் தக்கவனாக கல்வி கேள்விகளில் வல்லவனாக வரவேண்டும் எனக் கனவு கண்டார். நாளும் பொழுதும் அவரது கனவுகளும் இலட்சியங்களுமாக நான் அமைந்திருந்தேன்.
தமிழீழத்தின் ஒவ்வொரு சாதாரண குடும்பங்களிலும் உள்ள தந்தையாக்களைப் போன்று எனது தந்தையார் வெறுமனே ஒரு மகனுக்கு பிதா ஆற்றவேண்டிய கடமைகளை மாத்திரம் செய்யவில்லை. அதனிலும் மேலாக தாயக, நண்பனாக, சகோதரனாக, ஆசிரியனாக மொத்தத்தில் நான் பிறந்திதிலிருந்து 14 வயது வரைக்கும் எனக்கு எல்லாமாக எனது தந்தையார் இருந்தார். அதாவது நான் 14 வயதில் எனது அப்பாவைச் சிங்களப்படை ஏவிய ஆட்லறி எறிகணையால் கணப்பொழுதில் இழந்தேன்.
தான் உயிரோடு இருக்கும் வரைக்கும் மகன் கிணற்றில் தண்ணி அள்ளக்கூடாது என்று ஒவ்வொரு நாளும் அதிகாலையில் தான் கிணற்றில் அள்ளி என்னக்கு குளிக் அவார்த்த அப்பா. ஞாயிற்றுக்கிழமைகளில், மகனும் சம்போ வைத்து தோய்ந்தால் தீங்காகும் என்று தானே செல்வரத்தம் இலை அரைத்து எனக்கு கண்கள் எரிய எரிய முழுக்காட்டும் அப்பா. தமது ஒரேயொரு மகனை தான் பெற்ற செல்வம் என எப்பொழுதும் தமது துவிச்சக்கரவண்டியில் முன்னிருத்தி எனக் கு ஊரெல்லாம் சுற்றிக்காட்டிய தந்தையாரை சிங்களப் படைகள் ஒரு நிமிட நேரத்தில் என்னிடம் இருந்து பறித்தெடுத்துவிட்டனர். எனக்கு அன்பையும் பாசத்தையும் அபிசேகம் செய்து வளர்த்த அப்பா இறுதியில் இரத்தம் சிந்தியவாறு இந்த மண்ணில் இருந்து மறைக்கப்பட்டார்.
தம்மபதம் போதித்த புத்த பெருமானின் படைகளின் புண்ணியத்தால் எனக்கு 14 வயதிலே மனித இரத்தம் இன்னதென்று அறியவைக்கப்பட்டது. அதுவும் என்னக்கும் எனது தாய்க்கும் எல்லாமாக இருந்த எனது தந்தையாரின் இரத்தமே என்மீது முழுகவார்க்கப்பட்டது.
இரத்தினத்தார், எனது தந்தையாரை சுற்றமும் நட்பும் இவ்வாறுதான் அழைப்பார்கள் நான்கூட சில நேரம் விளையாட்டாக இவ்வாறுதான் அழைப்பேன். 6அடி உயரம், கம்பீரமான தோற்றம், மண்வெட்டி பிடித்தும், கலப்பை பிடித்தும் முறுக்கேறிப்போன உடம்பு, நான் அறியத்தக்கதாக எனது தந்தையாரின் கரங்கள் என்றுமே மென்மையானதாக இருந்ததில்லை. எப்பொழுதும் காய்ந்து என்றுமே மென்மையானதாக இருந்ததில்லை. எப்பொழுதும் காய்ந்து உரமேறிப்போயிருக்கும். வாய் என்றும் திருநாவுக்கரசரின் கூற்றினவாறுப் பதிகத்தை முணுமுணுக்கும் அல்ல்லது மணிவாசகரின் திருவாசகத்தை தழுவும். இருதான் எனது தந்தையார் இரத்தினத்தார் பற்றிய வர்ணனை. மிதிச்ச இடத்தில் புல் கூடச் சாகாது என்று எனது தந்தையாரின் குணாம்சத்தை அவரின் நண்பர்கள் கூறுவார்கள்.
அவர் பலி போனதோ கோரமான முறையில். மனைவி பார்த்திருக்க மகன் அவரருகே ஒதுங்கியிருக்க சிங்களவன் ஏவிய எறிகணை அவரது இடது மார்பைத் துளைத்துச் சென்றது. இந்நிகழ்ச்சி நடந்தபோது நான் 14 வயதுச் சிறுவன் நிழல் தரும் வயதல்ல நிழலுக்குக் கீழ் வாழும் வயது. ஆனால் இனவெறி அரசின் பயங்கரவாதப் படைகளால் எனது நிழல் தரு விருட்சம் வேரோடு சாய்க்கபப்ட்டது என்றுமே வெளியுலகம் பற்றி அதிகம் அறிந்திராத எனது நோயாளித் தாயாரும் நானும் அநாதைகளானோம் புத்தரின் சீடன் மகிந்தனின் வழித்தோன்றல்களால், சிங்களம் அழித்த 65000ற்கும் மேற்பட்ட தமிழர்களின் பட்டியலில் எனது தந்தையின் பெயரும் இணைந்து கொண்டது.
ஆனால் இதன் பின்னால் சிதைந்துபோன சிறிய குடும்பத்தின் அவலத்தைச் சொல்வதற்கு வார்த்தைகள் கிடையாது.
எனக்கு ஐந்து வயதிலிருந்தே, வெறுமனே பள்ளிப் படிப்பு மாத்திதிரம் ஒருவனைப் பூரணமாக்காது என்பதனை அனுபவ வாயிலாக ஆய்ந்துணர்ந்ததனால் அன்றே பொதுஅறிவை ஊட்டவல்ல நூல்களையும் சஞ்சிகைகளையும் தேடித் தேடி வாங்கி வருவார். அன்றைய கால கட்டத்தில் நாங்கள் கிளிநொச்சியில் இருந்தோம். இங்குதான் எனது தந்தையாரின் வயல்களும் தோட்டங்களும் இருந்தன. ஒவ்வொரு புதன்கிழமையும் கிளிநொச்சிச் சந்தைக்குத் தமது விளைபொருட்களை எடுத்துச் சென்று விற்றுவிட்டு வரும்போது எனது தந்தையாரின் வயல்களும் தோட்டங்களும் இருந்தன. ஒவ்வொரு புதன்கிழமையும் கிளிநொச்சிச் சந்தைக்குத் தமது விளைபொருட்களை எடுத்துச் சென்று விற்றுவிட்டு வரும்போது எனது தந்தையின் பையில் அம்புலிமாமா, கோகுலம், ரத்தன்பாலா, அர்ச்சுனா என ஏதாவது சிறுவர் சஞ்சிகைகள் இருக்கும். வேறு யாராவது மகனுக்கு வேறு ஏதாவது பண்டங்கள், விளையாட்டுப் பொருட்கள் வாங்கிக் கொடுக்கவில்லையா என்று கேட்டால் இந்தக் கமக்காரரோ தமது மகனுக்கு தாம் கொடுக்க விரும்புவது பரந்த அறிவித்தான் ஆகையால் எப்பொழுதும் எனது மகனுக்கு நூல்களை மாத்திரம்தான் நான் வாங்கிப் கொடுப்பேன் என்று கூறுவார்.
கிளிநொச்சியின் இரணைமடுக்குளத்தின் வாய்க்கால் கரையோரம் என்னை தோள்மேல் ஏற்றிக் கொண்டு கல்கியின் பார்த்தீபன் கனவு நாவலை தனக்கேயுரியபாணியில் அந்தக்கதையை சுருக்கிக் கூறுவார். நான் வளர்ந்த பின்னும் அதாவது கல்விக்காக யாழ்ப்பாணத்திற்கு வந்த பின்னும் அந்தக்கதையை அடிக்கடி கூறுவார். ஆனால் இன்று எனக்கு மிஞ்சியது அப்பாவின் பார்த்தீபன் கனவுக் கதையும் அப்பாவின் கோரமரணத்தின் இறுதிக் கட்டமும்தான், இதை என்னால் என்றுமே மறக்கமுடியாது.
‘எனது மகனின் நல்வாழ்விற்காக இனி எனக்கு குழந்தைகள் வேண்டாம் இவன் ஒருவனே போதும் முருகண்டியான் தந்தது. இவனை வடிவாய் வளர்ப்பதுதான் இனி எங்கடை கடமை’ என எனது நல்வாழ்விற்காக தனது இன்பங்களை நலன்களை ஒறுத்துக்கொண்டார். ஆரம்பகாலங்களில் நான் குழப்படி செய்கின்ற வேளைகளில் அம்மா இதைச் சொல்லி வெருட்டுவாள் உணர கொப்பரால் இன்னொரு தம்பி தங்கைச்சி இல்லை அதுகள் இருந்தால் இப்படிச் செய்வியேடா என்பாள். இன்றோ இதை நினைத்து நினைத்துப் புலம்புகிறாள் தாயகத்தில் இருந்து. நானோ ஏதிலியாய் முகவரி இழந்து புலம்பெயர் நாடொன்றில்.
இதற்கெல்லாம் நாங்கள் செய்த குற்றம்தான் என்ன. எனது தந்தையும் நாங்களும் தமிழர்களாய் இருந்ததுவே அதுவும் தமிழீழத் தமிழர்களாய் இருந்ததுவே.
எனது தந்தையின் மரணம் நான் உறங்கும் நடக்கும் போதும் என்றுமே எனது கண்களை உறுத்தும். சிங்களத்தின் ஆட்லறிகள் ஒவ்வொன்றும் தாயகத்தில் அழிக்கப்படுகின்றனவாம் அல்லது கைப்பற்றுபடுகின்றனவாம் எனும் செய்திகள் கேள்விப்படும்போது மனம் சொல்லவொண்ணா புளகாங்கிதம் அடையும். ஆனால் ஆட்லறிகளால் எனது முகந்தெரியா உறவுகள் பலியாகின்றன எனும் செய்திகள் வரும்போது புரிந்து கொள்ள முடியாத கொதிப்பலைகள் எழும், எனக்கே எதிரே இருப்பவற்றை உடைக்கத் தோன்றும். 18.09.1992ல் குபுக் குபுக் என்று என்மேல் பாய்ந்த எனது தந்தையின் இரத்தத்தின் வாதனை நாசியில் அடிக்கும். உடலில் பிசு பிசு என ஓட்டுவது போல இருக்கும்.
18.09.1992ல் எனது வாழ்வின் திசையை மாற்றிய எனது தந்தையின் மரணம் வெறுமனே என்னை ஐடமான மனிதனாக நடமாட வைத்தது. ஆனால் எனது தாயரையோ, தற்காலிக நோயாளியாக அப்பாவின் பராமரிப்பில் வாழ்ந்தவள், இன்று நிரந்தர நோயாளியாக வாழ்கிறாள்.
மனித வாழ்விலேயே இறப்பு என்பது நியதிதான். ஆனால் ஒரு பாவமும் அறியாது, தந்து மகனிற்கு, மனைவிக்குமான நல்வாழ்வைத் தவிர வேறு ஒருவருக்கும் தீங்கெதனையும் புரியாது வாழ்ந்த மனிதனை சிங்கள அரசபயங்கரவாதம் வேட்டையாடியதற்கு ஒரு காரணமும் கூறமுடியாது. இதேபோல சிங்களப் பயங்கரவாதம் தனது இனவாத இரத்தப்பசிக்கு பலிவாங்கிய ஆயிரக்கணக்கான தமிழர்களின் சந்ததிகள் வெளிப்படுத்தும் உணர்வுப் பிழம்புகளுக்கு பதில் சொல்ல வேண்டிய காலம் விரைவில் வருவது திண்ணம்.
ஆனால், சிங்களம் அழித்தவர்களின் குடும்பங்களுக்கு ஏற்பட்ட இழப்பை எந்தவொரு நஸ்டஈட்டாலும் ஈடுசெய்ய முடியாது.
துயரும் வலிகளுடன்:- இரததினத்தாரின் மகன்.
களத்தில் (28.12.2000) இதழிலிருந்து தேசக்காற்று.
“தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்”