விடுதலையின் சமன்பாடு…..
~~~~~~~விடுதலையின் சமன்பாடு…..!~~~~~~~~
ஒரு செங்காந்தள் பூவாம்,
இன்றொன் சொல் மலர்கிறது…..!
ஒரு செண்பகக் குயிலாய்
இன்றொன் சொல் கூவுகிறது….!
துப்பாக்கிகள் மௌனித்த துயர நாட்களில்,
எல்லாம் மௌனித்தன………….
ஓலங்களையும்,ஒப்பாரிகளையும்,தவிர,
நாற்புறமும் சூழ்ந்த நீர்ச் சுவர்களைக் கடந்து,
உண்மை கசியாது என்று,எதிரி நினைத்தான்..!
விடுதலை…….
துப்பாக்கியால் உச்சரிக்கப்படும்
சொல்லாய் இருந்ததில்லை…..
அது விழிகளால் பேசுகிறது …..
உடல் மொழியால் பேசுகிறது…..
பேனா முனையில் முழங்குகிறது……!
அதிகாரத்தால் விடுதலை புதைக்கப் பட்டாலும் ,
மண்ணுக்கடியில் அது நீரோட்டமாகிறது….!
கார்த்திகை மலரும்,
செங்காந்தள் பூக்களில்
தனிக் கூடு கட்டும் செண்பகக் குயிலின் கூவலில் விடுதலையின் செவியமும் பாடலும்,அரங்கேறுகின்றன….!
தலைவருடன்
நான் ஒளிப்படத்துக்கு நின்ற தருணத்தில்சொன்னார்,
“வாளும்,பேனையும்”…….
அது அவர் வாளுயர்த்தி நின்ற நாட்கள் அவர் குறிப்பாய்ச் சொன்னது இதைத்தான்;
‘வாள் உறைபுகினும்,பேனாவை மூடிவிடாதே ‘
‘துப்பாக்கி மௌனித்தாலும் சொல்லை மௌனிக்க விடாதே’
தலைவா!
இக்கரையில் நிகழ்ந்த எம் எழுத்தும்,பேச்சும்,
கரை கடந்து உங்கள் காதில் ஒலித்தன…!
எழுதுவதும், பேசுவதும் கூட
இங்கே எளிதாய் நிகழவில்லை
ஒவ்வொரு மேடைக்கும் அதிகாரம் தடை போட்டது…
உறங்கும் என்னைத் தட்டி எழுப்பி,
ஒவ்வொரு எழுத்துக்கும் விசாரணை செய்தது…
உங்கள் காயங்களை காட்டிலும்,
தடைகள் பெரிதானவை அல்ல…
மாவீரர் தம் களச் சாவுகளுக்கு முன்,
விசாரணைகள் அற்பமானவை…
போதியின் கிளை,
காந்தியின் ராட்டினம்,
உங்கள் துப்பாக்கி,
எல்லாவற்றுக்கும் சமன்பாடு ஒன்று தான்…
“விடுதலை”
உங்கள் குருதிச்சூடு,
எம் பேனாவில் கனன்றால்…
உங்கள் விடுதலை உணர்வு,
எம் சொல்லில் வசப்பட்டால்…
உங்கள் துப்பாக்கியின் சமன்படாய் இருக்கலாம்,
எம் எழுத்தும் சொல்லும்….
கார்த்திகை திங்களில் சென்பகக்குயில் கானம் இராசபாளையத்தில்…
இன்று சுடரும் தீபங்களோடு,
உலகெங்கும் சுடரும் தீபங்களை இணைத்து,
விடுதலை விடியலை மண்ணில் எழுதுவோம்…
விதைக்கப்பட்ட மாவீரர் எல்லாம்,
செங்காந்தள் முகங்களில் ஒளி வீசுவார்கள்…
வாகை உச்சியில்,
மயில் கொண்டை போலச்
செம்பூக்கள் விரியும் காலம் வருகிறது…
கனல் வெறியூட்டும் சென்பகக்குயிலே…
கானகம் உனது பாடலால் நிறைக…
கார்த்திகை இரவின் குளிர்ந்த போர்வையுள்,
பாதி முகம் காட்டும் பசுமை நிலா முன்,
உள்ளிறங்கும் மழையில், வெயிலில் உயிர்த்து
மண்ணின் கனவை வேர்களில் வரித்து,
எழுந்து நின்று எரிசுடர் விரிக்கும்…
“காந்தளம் பூவிற்க்கொரு பூபாளம் பாடு”
கனல் வெறியூட்டும் சென்பகக்குயிலே…
“காந்தளம் பூவிற்கொரு பூபாளம் பாடு”
*கவிஞர்*
~இன்குலாப்~
“தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்”