கடற்கரும்புலி கப்டன் மாலிகா
கடற்கரும்புலி கப்டன் விக்கியும் கடற்கரும்புலி கப்டன் மாலிகாவும் இணைபியாத தோழிகள். இருவரும் ஒன்றாகவே இயக்கத்தில் இணைந்து ஒன்றாகப் பயிற்சி எடுத்து, எப்போதும் இணைபிரியாமல் பாசறையில் உலா வந்தார்கள்.
இருவரும் தோழிகள் என்றாலும், பயிற்சிப்பாசறையில் இருவருக்கும் போட்டி. நீந்துவது, படகு ஓட்டுவது, ஏனைய பயிற்சிகள் எல்லாவற்றிலும் ஒருவருக்கு மற்றவர் சளைத்தவர் இல்லை என்ற ரீதியில் வேகம் இருக்கும். கடற்கரும்புலி கப்டன் விக்கி கொழும்புத் துறைமுகத்தினுள் கரும்புலியாய் சென்று அவளைவிட்டுப் பிரிந்ததில், மாலிகாவுக்கு மிகுந்த கவலை. ‘நீ முன்னால் போ. நான் வருகிறேன்’ என்று தனக்குள் உறுதியெடுத்துக் கொண்டாளோ!
அதன்பிறகு அவளிடம் நீண்ட எதிர்பார்ப்பு. தனக்கு இலக்கு விரைவாகக் கிடைக்க வேண்டும் என்று அவளிடம் இருந்த துடிப்பு, அதுவே அவளது கனவும் நினைவுமாக இருந்தது.
மாலிகா, சிறந்த நீச்சற்காரியாக ஆரம்ப நீச்சற் பயிற்சியின்போதே இனங்காணப்பட்டவள். ஆரம்பப் பயிற்சியின் பின் சிறிதுகாலம் தொலைத்தொடர்பு வேலையில் நின்றபோது, தான் ஒரு கரும்புலியாக வேண்டும் என்ற நீண்ட கனவு அவளிடம் இருந்தது. சுலோஜன் நீரடிநீச்சற் பிரிவுக்குச் சென்றவள், அங்கு தனது திறமைகளாலும் பண்புகளாலும் எல்லோரையும் கவர்ந்தாள். வேகமாக நீந்துவாள். அதிகவலுவுள்ள எந்தப் படகையும் ஒட்டக்கூடிய திறமையை அவள் பெற்றிருந்தாள். மைல் கணக்காக நீந்தி, திறமையாகச் சுழியோடி, தன் குழுவிலுள்ள அனைத்துப் போராளிகளுக்கும் நீச்சல் பழக்கி, படகு ஓட்டக் கற்றுக்கொடுத்து அவள் செய்தவைகளைச் சொல்லிக்கொண்டே போகலாம்.
உயரக்கிளம்பும் இராட்சத அலைகளுக்குக் கீழால் நீந்துவது கடினம்தான். அந்த அலைகளை ஊடுருவி நீந்துவதற்குச் சிரமப்படும் பிள்ளைகளையும் நீந்திக்கொண்டே இழுத்து நீந்தப் பழக்கி………… அலைகள் அவளிடம் பணிந்துவிடும். எல்லோருக்கும் எல்லாமும் தெரிந்திருக்க வேண்டும். அவளது குழு எல்லாவற்றுக்கும் முன் நிற்கும்.
எந்தக் கடுமையான பயிற்சியையும் இலகுவாக்கி சிரித்தபடி செய்து முடிப்பதில் மாலிகா கெட்டிக்காரி. பெரிய பழுவுள்ள இயந்திரங்களையும், வலுவுள்ள பொருட்களையும், தூக்கி தோளில் அடித்து, அவளது உடல் வலுவானதில் வியப்பில்லை. தசைகள் இறுகித் தெரியும். அவளது கம்பீரத் தோற்றத்தால் தோழிகள் அவளைச் செல்லமாகக் ‘கட்ஸ்’ என்று அழைப்பதுண்டு.
அந்தச் சம்பவம் அவளது உறுதியை நினைக்கத் தோன்றும். அவள் பயிற்சி முடித்தவுடன் இருபது கடல்மைல் நீந்துவதற்காக அவளின் குழு கடலில் இறக்கியது. இரவு பன்னிரண்டு மணிக்கு ஆரம்பித்த பயிற்சி காலை எட்டு மணிக்கு மேலாகியும் முடிந்தபாடில்லை. மாலிகாவின் வாயிலிருந்து இரத்தம் வரத்தொடங்கியது. அவளை கரையேறுமாறு பணிக்கப்பட்டது. மாலிகாதான் நீந்தி முடிக்க வேண்டும் என்பதிலேயே குறியாக இருந்தாள். முழுவதும் நீந்தி முடித்த பின்னரே அவள் கரை ஏறினாள். எந்த நோய்வந்தாலும், தனக்குக் கொடுக்கப்பட்ட வேலையைச் செய்துமுடித்த பின்னரே ஓய்வாள்.
அவளது கடற்சண்டைக் களங்களைக் கூறிக்கொண்டே போகலாம். கிளாலியில் மக்கள் பாதுகாப்புப் பணியிலும், இன்னும் பூநகரி மீதான தவளைத் தாக்குதலிலும் அவளது படகு கடலில் இறங்கியது. கரும்புலியாய் இருளில் அவள் இலக்குத்தேடி அலைந்த நாட்கள் மெய்சிலிர்க்க வைப்பாள்.
இறுதியாக அங்கையற்கண்ணி நீராடி நீச்சற் பிரிவிலிருந்துதான் திருமலைத் துறைமுகத்துக்குப் போனாள். அவள் தனது இலக்கை அண்மிப்பதற்கு நீண்ட தூரம் நடக்க வேண்டியிருந்தது. பாதை முழுவதும் சேறு. காலடிகளை ஒழுங்காக எடுத்து வைக்க முடியாதபடி முழங்காலளவு சேறு இருந்தது. அட்டைக் கடிக்குள்ளால் சிலிண்டரையும் தோளில் சுமந்தபடி செல்வது சாதரணமாக நினைத்துப்பார்க்க முடியாதது. கரும்புலிக்கேயுரிய அசத்திய துணிவும், தன்னம்பிக்கையும்தான் எல்லாவற்றையும் செய்யக்கூடிய வலுவை நிறையவே தந்தன. கூட வழியனுப்பச் சென்ற தோழிகள் அந்த அனுபவத்தை நெகிழ்ச்சியுடன் நினைவு கூர்ந்தார்கள்.
“கடைசியா எங்களுக்கெல்லாம் சாப்பாடு குழைச்சுத் தந்தாள். அடிபட்டுச் சந்தோசமாய்ச் சாப்பிட்டம்.”
இறுதியாக வழியனுப்பிய அந்தத்தோழியின் கன்னத்தில் தட்டி, “நான் போய் வெடிக்கிறபோதுதான் இந்த நோ மாறும்” என்று கூறிவிட்டுச் சென்றாள்.
கூடவே வந்த வேவு எடுத்துக்கொடுத்த கடற்புலித் தோழர்களிடம் இருநூறு மீற்றரிலேயே விடைபெற்றுப் போனாள். இலக்குப் பெரியது. சாதனையும் பெரியதுதான். நகர்ந்து கொண்டிருந்த கடற்படையினரின் டோறா அவளது இலக்கானது.
1996.12.08 அன்று அந்த இலக்கினோடு, துறைமுகத்தினுள் புகுந்து மாலிகாவும் இல்லாமற்போனாள். அவளுக்குப் பணிந்த அந்த அசுர அலைகள் அவளை அள்ளிச் சென்றிருக்கக் கூடும். நாங்கள் இக்கரையில் நின்றிருந்தோம். அலைகள் மட்டும் திரும்பி வந்தன.
நெஞ்சில் பூத்த மலர்கள் (04.06.1997) தொகுப்பில் இருந்து தேசக்காற்று….
“புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்”