கடல் தன் நிலை உரைத்தல்
சுனாமி என்றும்
சீரழிவின்
பினாமி என்றும்
என்மேல் முத்திரை குத்தினீர்!
உயிர்களைக்
குடித்தவன் என்றும்
பிணங்களைத்
தின்றவன் என்றும்
என்மேல் காறி உமிழ்ந்தீர்!
கடல் என்றாலே
“கருணை” என்று
கூறியவர்கள் – இன்று
“கொலை” என்று
கூசாமல் கூறுகிறீர்!
அது-
நிலமகள் கொஞ்சம்
நிலைகுலைந்து போனதால்
கடல் அன்னை செய்த
தவிர்க்க முடியாத கொலையென்று
எப்போது புரிந்து கொள்வீர்?
நடந்தவை முடிந்து
நாட்கள் நகர்ந்த பின்னும்
என்னை நெருங்க அஞ்சுகிறீர்!
“… எங்களுக்குத்
தீமை செய்பவர்களை
நாங்கள் பொறுப்பதுபோல …”
இயேசு போதித்ததையும்
சிலுவையில் அறைந்துவிட்டீர்!
“நடந்தவை நடந்தவையாயிருக்கட்டும்
இனி நடப்பவை
நல்லவையாக இருக்கட்டும்”
கீதை தெரிந்தவரும்
பாதை மாற மறுக்கிறீர்!
“……..”
நபிகள் கூறியதை
என்னவென்றே மறந்துவிட்டீர்!
மனமுடைந்த மனிதர்கள்
தற்கொலைக்கு முனைந்தால்
எனக்குள் வந்து குதிக்கலாம்
மனமுடைந்த நான்
எங்கே சென்று குதிப்பது?
என்னில்
வலைவீசி வாழ்பவரும்
என்னையே
பிழைப்பாகக் கொண்டவரும்
இன்று பாராமுகம் காட்டுகிறீர்!
இயற்கைச் சீரழிவுகள்
ஒவ்வொன்றும்
மனிதம் வலுப்பெறச் செய்யும்
முயற்சிகளேயன்றி
அறவே அழிப்பதற்கில்லை
அன்று-
கடலும்
கடல் சார்ந்த இடமும்
என வகைப் படுத்தியவர்கள்
இன்று-
கடலும்
கடல் அழித்த இடமும்
என வசை பாடுகிறீர்கள்!
நேற்று வரை
“நெய்தலாய்” இருந்த
நான்-
இன்று மனிதர்
வர மறுத்ததால்
“பாலையாய்” மாறிவிட்டேன்
கடல் நீர் உவர்ப்பிற்கு
அறிவியல் காரணங்கள்
வேறாய் இருக்கலாம்
உண்மையான காரணம்-
நான் அழுத கண்ணீர்தான்!
அன்று
கடலைக் கருணைக்கும்
பரந்த மனப்பான்மைக்கும்
ஒப்பிட்டுப் புகழ்ந்தவர்கள்
என் கொந்தளிப்பின்
பிரதிபலிப்பாய் …
ஓராயிரம் கவிதை
எழுதி இகழ்ந்தீர்கள்!
பின்னொரு நாளில்
நீங்கள் ஒவ்வொருவரும்
வந்து கடலாடினால் …
என் அலைகளில் வந்து
கால் நனைத்தால் …
என் கண்ணீர் மறையும்
என்னைத் தூற்றி
எழுதிய கவிதைகள் மறையுமா?
தூற்றி எழுதிய
கவிதைகளை-
என்னைப் போல்
உங்கள் உள்ளமும்
கொந்தளித்ததாக …
சில கணங்கள்
தன்னிலை மறந்ததாக …
நினைத்துக் கொள்கிறேன்
கருணையும்
பரந்த மனப்பான்மையும்
கடலுக்கு உவமை மட்டுமல்ல …
இயல்பும்தான்!
மறுபடி எப்போது
கடலாட வருவீர்?
உங்கள்
அன்னையின் கண்ணீரை
எப்போது துடைப்பீர்?
– கார்த்திகேய ராஜன்.