சுனாமியின் அரசியல் மீதான அதிரடித் தாக்குதல்
(2004 – 2005ம் ஆண்டு அரசியல் சூழ்நிலையை வைத்து விடுதலைப் புலிகளின் முக்கிய உறுப்பினர் க.வே.பாலகுமாரன் அவர்களால் எழுதப்பட்ட்டது. வருங்காலத்தின் கவனத்திற்கும் எம் மண்ணில் சிங்களவன் விளைத்த பல அடக்குமுறைகளும் உள்ளடக்கப்பட்டதினால் இணைக்கின்றோம் காலம் கடப்பினும்…)
இயற்கையன்னையின் வலுவும் சீற்றமும் எத்தகையதென்பது இன்னொருமுறை உணர்த்தப்பட்டுவிட்டது. மனிதர் அறிந்தது எவ்வளவு? அறியாதது எவ்வளவு? அல்லது அறியவேண்டியது எவ்வளவென்பதும் உணர்த்தப்பட்டாகிவிட்டது. “எமனாய் வந்த கடலை எதிர்கொண்டபிறகு எவனைப் புகழ்வது கருணைக் கடலென்று” என்று மனிதரின் இழப்பின் வலியும் இயலாமையும் கடலன்னை மீதான கடும் சீற்றமாக பல்லாயிரக்கணக்கான கவிதை, கட்டுரைகளில் வடித்தாகிவிட்டது. எனினும் இறுதியில் கடலன்னை மடிமீதே வருவோம் மீண்டும் எழுவோம் என உண்மையும் உரைத்தாகிவிட்டது.
இத்தகையதொரு சூழலிலேதான் இயற்கையன்னையின் முன்னே நாம் எளியவர்கள், சமமானவர்கள் எனவே இவ்வனர்த்தத்திற்கு வேறுபாடுகளை புறம் தள்ளிவிட்டு இணைந்து பணிசெய்வோம் என வேண்டுகை விடுக்கப்பட்டுள்ள நிலையில் சிங்களத்தரப்பு செய்வதென்ன? சருவதேச உதவிகளை தடங்கலின்றிப் பெறுவதற்காக தொடக்கத்தில் ஒத்துழைப்புக் குரலெழுப்பிய அம்மையார் இப்போது என்ன செய்கின்றார்? எப்போதும் போலவே சிங்களப் பேரினவாதத்தின் இரு மாறா நிலைப்பாடுகளை எமது இணக்கக்குரலை பலவீனமாகக் கருதுவதும் தமக்கு எத்தகைய அழிவு நிலையேற்பட்டாலும் எவ்வழிகளைப் பயன்படுத்தியாவது தமிழ்மக்களைப் புறம் தள்ளுவதுமே தமது முதன்மை முன்னுரிமைச் செயற்பாடென்பதை அவர் உணர்த்திய வன்னமேயுள்ளார். போரால் அழிந்த பொருண்மியத்தை கட்டியெழுப்ப சுனாமி நிதியுதவிகளைப் பயன்படுத்தவும் சுனாமிக்குதவ வந்த படைகளை பாதுகாப்பற்ற நாட்டின் பாதுகாப்பினை பாதுகாக்கப் பயன்படுத்தவும், அவர் முனைகிறார். சண்டே ஐலண்டின் 16/01ம் திகதிய முற்பக்கச் செய்தி இவ்வாறுள்ளது. “திருமலை கடற்படையைக் கட்டியெழுப்ப இந்தியக் கடற்படை உதவி. திருமலை மாவட்டத்தின் ஏறத்தாழ 42 கிலோமீற்றர் தூரத்திற்கு துடைத்தழிக்கப்பட்ட கடற்படைத் தளங்களை சீரமைக்க இந்தியக் கடற்படை உதவுகின்றது. குறிப்பாக நிலாவெளியில் சிறிலங்கா கடற்படையின் தலைமையகத்தினைக் கட்டியெழுப்ப இந்தியப்படை உதவிவகின்றது. இந்தியக் கடற்படை பெருமளவு பொருட்களை இதற்காக வழங்கி வருகின்றது.” ரோம் பற்றியெரியும்போது நீரோ மன்னன் இசைக்கருவி வாசித்த கதைதானிது. சிறிலங்காவின் நிதியமைச்சர் மகிழ்ச்சியோடு பின் வருமாறு கூறினார். “பெருமளவிலான ரூபாயின் பெறுமதி தளம்பலின்றி உறுதியாகவுள்ளது. எனவே பொருட்களின் விலைகள் விரைவில் குறையும்” நிதியமைச்சரொருவருக்கு இதைவிட மகிழ்ச்சியான செய்தி எதுவிருக்க முடியும்? இதற்கு என்ன காரணம?;
சுனாமியின் பேரழிவை தொலைக்காட்சிகளில் கண்ணுற்ற மேற்குலகம் கதிகலங்கி கண்ணீர் விட்டதன் விளைவாக பெருமளவு நிதியுதவிகளை வாரிவழங்க முன்வந்தது. அடுத்து என்ன செய்வதென்று தெரியாமல் வாய்க்கு வந்தபடி பேசிக்கொண்டு அலைபாய்ந்து கொண்டுமிருந்த அம்மையாரின் குறுக்கு மூளை விபாதீமாக வேலை செய்தது. முதல்வேலையாக புலிகளை நோக்கி நேசக்கரம் நீட்டுவதாகப் பாவனை செய்தார், தனக்கு மிக நெருங்கியோரை நியமித்து மூன்று புனர்வாழ்வு புனரமைப்புக் குழுக்களை உருவாக்கி வேகமாக
சுனாமியின் அழிவிற்கு முகம் கொடுகக் ஆயத்தமாவதாகக் காட்டிக்கொண்டார். மக்கள் கருத்தினை கணக்கெடுக்காமலும், கிடைத்த விபரங்கள் பூரணமாகாத நிலையிலும் மதிப்பீட்டறிக்கையை வெளியிட்டும், அம்பாந்தோட்டையில் அடிக்கல் நாட்டியும் தன்னையொரு திறமையான வேகமான நிருவாகியாக உலகின் முன் காட்ட அவர் படும்பாடு சொல்லத் தரமன்று.
இப்போது சிறிலங்காவிற்குதவ முன்வரும் நாடுகளினதும் சருவதேச நிதி நிறுவனங்களினதும், அரசசார்பற்ற நிறுவனங்களினதும் கையில் 1500 மில்லியன் டொலர் (1.5பில்லியன் டொலர்) பணத்திற்கான கோரிக்கையுள்ளது. இப்போது அடுத்த கோரிக்கை 3.5பில்லியன் டொலருக்கானது வெளியிடப்பட்டுவிட்டது. சுனாமியால் அழிவுற்ற கரையோரப் பகுதியை அபிவிருத்திக்கான பகுதியாக பிரகடனப்படுத்தி இப்பகுதியின் புனர்வாழ்வு, புனரமைப்பிற்கான திட்டங்களை 13 துறைகளில் முறையாக மேற்கொளள் தாம் ஆயதத்மென உதவிகோரும் அறிக்கை உரைக்கின்றது. இத்தனை வேகமாக சிறிலங்கா அரசு இயங்கியதற்கான காரணமென்ன?
2004ஆம் ஆண்டு முடிவில் சிறிலங்காவின் சென்மதி நிலுவை குறிப்பாக எரிபொருள் இறக்குமதியின் மேலதிக செலவின் காரணத்தால் மிகப் பாதகமான நிலையிலிருந்த வெளிநாட்டு சொத்தொதுக்கின் பெறுமதி 2.3 பில்லியன் டொலரிலிருந்து 1.7பில்லியன் டொலராக குறைந்தது. வெளிநாட்டுக் கடன் 9பில்லியன் டொலருக்கான பெருமளவு கடன் தவணைப்பணம் செலுத்தவேண்டியிருந்தது. இவ்வாறாக மூச்சுவிட முடியாத நிலையிலிருந்த அம்மையாருக்கு இப்போது மூச்சுவிட நேரம் கிடைத்துள்ளது. முப்பதுனாயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் மூச்சையிழந்ததால் இது நேர்ந்தது. ஏனெனில் கடன் தவணைப்பணம் செலுத்தவேண்டிய காலவெல்லை காலம் குறிக்காமல் நீட்டப்பட்டுள்ளது. இக்கட்டுரை எழுதப்படும் வேளையிலே இலங்கையின் இனச் சிக்கலின் தீர்வினைக் காண தலைப்பட்டிருக்கும் இணைத் தலைமை நாடுகளான ஐரோப்பிய ஒன்றியம், யப்பான், அமெரிக்கா, நோர்வே போன்றவை பிரசல்ஸ்சில் கூடி உதவி வழங்குவது பற்றி முடிவெடுக்கின்றன. உலகின் செல்வந்த பு7நாடுகள் வரும் பெப்ரவரி மாதத்தின் முதல் வாரத்தில் கூடி சுனாமியால் பாதிப்புற்ற நாடுகளுக்கு உதவுவது பற்றி முடிவெடுக்கப்போகின்றன. இதுவரை நிதியுதவி வழங்கப்போவதாக கூறப்பட்ட வாக்குறுதிகளின் தொகை ஏறத்தாழ 1.5பில்லியன் டொலராகவுள்ளது. இவற்றினை உலகவங்கி, ஆசிய அபிவிருத்திவங்கி, யப்பான், சருவதேச நாணய நிறுவனம் போன்றவற்றின் வாக்குறுதிகள், இவற்றினைவிடவும் இருதரப்பு உதவிகளெனப்படும் தனித்தனி நாடுகள் உதவிகள், தொடர்பாகவும் பெருத்த நம்பிக்கையோடு சிறிலங்காவுள்ளது.
இக்கட்டத்திலேதான் தமிழ் மக்கள் சருவதேசம் நோக்கி விடுதலைப்புலிகளின் வழி தட்டிக் கழிக்க முடியாத, தார்மீக நியாயங்கள் நிரம்பிய பாரிய வினாவொன்றினை எழுப்புகின்றார்கள். உலகின் மனச்சாட்சியினை உலுக்கும் வண்ணம் மரபு சாராத முடிவொன்றினை உலகம் எடுக்க தூண்டலகா இவ்வினாவமைகின்றது. சுனாமியால் தமிழர் தாயகத்திலேற்படட் அழிவினையே தகக் முறையில் வெளிப்படுத்த விரும்பாத, புனர்வாழ்வு புனரமைப்பு திட்டங்களில் உரிய இடம் கொடுக்காத ஒரு பெரும்பான்மையின பாராபட்சமான அரசாங்கத்திற்கு எநத் அடிபப்டையில் உலகம் உதவப்போகின்றது? சருவதேச சமூகத்தின் ஒருங்கமைப்பின் முன்னே புலிகள் சவால் ஒன்றினை எழுப்பியுள்ளார்கள். இராணுவ களத்தில் ஆயுதங்கள் வழி உயிர்
விலைகொடுத்துப் போராடி தடைகள் தாண்டி புலிகள் முன்னேறியபோது சருவதேச தலையீடு நேர்ந்தது. அதனை அரசியல் களத்தில் அமைதி, பேச்சுவார்த்தை ஆயுதங்கள் வழி அறிவுத்திறனைப் பயன்படுத்தி தடைகள் தாண்ட முற்பட்ட போதே சுனாமிப் பேரழிவு நேர்ந்தது. தேசியத் தலைவர் குறிப்பிட்டது போல முதலாவது சுனாமியான சிங்கள அரசின் அடக்குமுறையினை தகர்க்கும் வேளையில் இரண்டாவதான இயற்கைச் சுனாமிக்கு எவ்விதம் முகம் கொடுப்பது? இரண்டாவது சுனாமிக்கு முகம் கொடுக்கும் அதேவேளையில் விடுதலைப் போராட்ட செல் நெறிக்கு பாதகமில்லாமல் அதனை எவ்வாறு கையாள்வது?
இதற்கான வழியையும் வழமைபோலவே தேசியத்தலைவர் தன் இயற்கையறிவால் இயல்பாகவே கண்டறிந்தார். இப் புதிய வழிமுறைகளை புலிகள் கையாள்வதால் ஏற்பட்ட உடனடி விளைவுகளை இப்போது உலகம் உன்னிப்பாக அவதானிக்கின்றது. தமிழர் தாயகத்தில் என்ன நடக்கின்றது
என்பதை இன்று எவரும் கண் கூடாகவே காணமுடியும். சுனாமிப் பேரழிவோடு இராணுவத்தினால் ஏற்பட்ட பேரழிவை கூடவே காணமுடியும். எந்தெந்தச் சொற்களைப் பயன்படுத்தி விடுதலைப் போராட்டத்தினை பலமிழக்கச் செய்ய உலகம் முயன்றதோ அதே சொற்களையே புலிகள் வெளிப்படையாகவே பயன்படுத்துகின்றனர். வெறும் சொற்கள் என்றில்லாமல் கருத்தளவிலும் வெளிப்படைத் தன்மை (Transparancy), வகை கூறும் தன்மை (Accountablity), பேண்தகு வளர்ச்சி (Sustainable development), வலுப்படுத்தல் (Empowerment) மதிப்பிடும் கண்காணிப்பும் என நீளும் இன்றைய உலகின் கருத்தமைவிலும் புலிகள் உட்புகுந்துள்ளனர்.
இது சிங்களம் சற்றும் எதிர்பார்க்காத நிலைப்பாடு. சுனாமியால் வட – கிழக்கிலேற்பட்ட பேரழிவை உலகின் கண்களிலிருந்து மறைக்க சிங்களம் எடுத்த முயற்சி இதனால் பயனளிக்காமல் போய்விட்டது. அரசாங்கத்தால் திரட்டப்பட்டுள்ள புள்ளி விபரங்களையே புலிகள் ஆதாரமாக பயன்படுத்தியும் அதேவேளை சிங்கலத்திலேற்ப்பட்ட அழிவுகளை குறைத்து மதிப்பிடாமலும் அதேவேளை வட – கிழக்கிலேற்பட்ட பேரழிவுகளை உலகின்முன் வைத்தும் புலிகள் உடனடி நியாயம் கோருகின்றனர். உழுத்துப்போன சிங்கள அரசின் நம்பகத்தன்மையற்ற நிர்வாக இயந்திரம் தயாரிக்கும் வெறும் புள்ளி விபரங்களைக் கொண்ட அபிவிருத்தித் திட்டங்கள் ஏற்கப்படமுடியாதவை. அதற்குப் பதிலாக ஆக்கபூர்வமான
01. அறிவியல் வழியிலமைந்த,
02. மக்களை வலுப்படுத்தக் கூடிய,
03. சூழல் பேண் தகைமையிலான,
04. வெளிப்படைத் தன்மையிலான,
05. வகை கூறும் தன்மையுள்ள,
மேம்பாட்டுத் திட்டமொன்றை உலகின் முன் வைக்க அவர்கள் ஆயத்தமாகின்றனர். இதனை தமிழர் தாயகத்தில் நிறைவேறற் ஒரு பொறிமுறையை புலிகள் வேண்டி நிற்கின்றனர். தொடரும் தமது இராசதந்திரப்போரின் தொடர்ச்சியாக இதனையும் இணைத்துள்ளனர். இலகுபடுத்தப்பட்ட செயற்திறன் வாய்ந்த இவ்வமைப்பினை உலகம் எவ்விதம் மறுக்கமுடியும்? அவ்விதம் மறுத்தால் அதன் விளைவென்ன? தென்னாசியப் பிராந்தியத்திலே மிக மோசமான பாதிப்புக்குள்ளான தமிழர் தாயகத்தில் இலங்கையின் 1900கிலோமீற்றர் நீளமான கடற்கரையின் 1000கிலோ மீற்றர் உள்ளது. இக்கடற்கரையின் 800கிலோ மீற்றர் பாதிப்பினை உலகம் எவ்விதம் கவனத்தில் கொள்ளாது விடமுடியும்? இலங்கையின் மொத்த அழிவின் 2/3 பகுதியை தமிழர் தாயகமே தாங்கியுள்ளது என்பதை உலக வங்கியின் வதிவிடப் பிரதிநிதியான பீற்றர் கலோல்ட் (சண்டே ஐலண்ட் 16.01.05) ஏற்றுள்ளார். ஆகவே எம் மக்கள் கேட்கின்றார்கள், “உலகே என்ன செய்யப்போகின்றாய்?”
இவ்விடயத்தில்தான் புலிகள் மிக முக்கியத்துவம் வாய்ந்த நில்லைப்படுகளை முன்வைக்கின்றனர். சுனாமியால் தாக்கப்பட்ட எம் மக்களுக்குதவுவது என்பது வெறுமனே இரக்கம், கருணை கலந்த செயற்பாடாக மட்டும் இருக்கமுடியாது. அதாவது சுனாமிக்கு முன்னிருந்த வாழ் நிலைக்கு அவர்களை இட்டுச் செல்வதாகவிருக்க முடியாது. அல்லது போர் தொடங்கிய 1970களில் இருந்த நிலைக்குமல்ல. எல்லாருக்கும் கிடைத்த வாய்ப்பைப்போலவே அவர்களுக்கும் தொடர்ந்து கிடைத்திருந்தால் இன்று என்ன நிலைக்கு வந்திருப்பார்களோ அந்த நிலையை கருத்தில்கொண்டே உதவித்திட்டங்கள் வரையப்பட வேண்டும். இதுவரை எம் மக்களுக்கு மறுக்கப்பட்ட வாழ்நிலை தொடர்ந்தும் மறுக்கப்படுவதை உறுதிப்படுத்துவதாக சுனாமியின் விளைவால் வரும் உதவிகள் உறுதிப்படுத்துவதாக அமையுமானால் அது முறையற்றது. எது கிடைத்தாலும் சரியென இரந்து வாழ எம்மக்கள் ஆயத்தமாயில்லை.
சிறிலங்காவின் இரண்டகமும் ஓரவஞ்சனையும் உலகறிந்தது. அதன் நிருவாக இயந்திரத்தின் மெத்தனமும் ஒழுங்கீனமும் ஊழலும் உலகப் புகழ் பெற்றது. சிறிலங்கா அரசு ஒரு “தோற்றுப்போய்விட்ட அரசாங்கம் (ஜயதேவ உயங்கொட) என்றே இப்போது கருதப்படுகின்றது. எனவே கிடைக்கப் போகும் வெளிநாட்டுதவிகளை முறையாகப் பங்கிட, தேவைகளை இனம்காண, அதற்கான திட்டங்களை தயாரிக்க, அதனை நடை முறையளவிட தனியான, சிறிலங்கா அரசாங்கத்தின் கட்டமைப்பிற்குள் அகப்படாத திறன்வாய்ந்த கட்டமைப்பே அவசியம் என்பதே புலிகள் நிலைப்பாடு. இக் கருத்து இன்று இவ்வுலகின் கவனத்தினை ஈர்த்துள்ளது. மோதல்கள் நிரம்பிய நாடுகளில் மத்திய அரசுகள் மாற்றாந்தாய் போக்கிற்கு மாற்றாக இதனை ஒரு முன்மாதிரித் திட்டமாக பயன்படுத்த முடியுமா என உலகவங்கி போன்றவை ஆராய்வதாக தெரிவிக்கப்படுகின்றது.
இவையே விடுதலைப் புலிகளின் புத்தாக்கத் திட்டமான போதும் இரண்டு அடிப்படைகளை எப்போதும் புலிகள் இறுகப்பற்றி நிற்பர். ஒன்று, இத்தகைய பேரிடர்களுக்கு உடனடி முகம் கொடுக்கும் இவ்விடை நிலையேற்பாடுகள் விடுதலைப் போராட்டத்தின் செல்நெறியில் பாதிப்பினை ஏற்படுத்தாது பாதுகாத்துக் கொள்ளல். உதாரணம் இடைக்கால நிருவாகசபை யோசனைக்கு இவ்வேற்பாடு மாற்றாக அமையாது என்பதே புலிகளின் நிலை. இரண்டாவதும், மிக முக்கியமானதுமான சுனாமியால் பெரும் பாதிப்புற்ற – பேராசிரியர் மௌனகுரு கூறிய கருத்தினை பிரதிபலிப்பது “இதற்கு முன்னமும் கடல் கோள்கள் வந்தன. சூறாவளியும் வீசியது. அப்போதெல்லாம் யாரும் நிவாரணம் பற்றி அலட்டிக்கொள்ளவில்லை…
அழிவை மீளக் கட்டியெழுப்ப வேண்டுமென்ற எண்ணம் எல்லாருள்ளும் உள்ளது. இதை வளர்க்கும் முயற்சியில் சகலரும் ஈடுபட வேண்டும். எவரையும் தங்கியிருப்பவர்களாக மாற்ற முயலாமல் ஒவ்வொருவரையும் அவர்கள் சொந்தக்காலில் நிற்கவைக்க வேண்டும்.”
தேசியத் தலைவர் அண்மையில் பின்வருமாறு கூறினார். “எம் மக்களை எவரில் தங்கியும் பிறரை எதிர் பார்த்தும் நிற்கும் மனநிலைக்கு நாம் இட்டுச் செல்லாமல் அவர்கள் தங்களில் தாங்களே தங்கி நிற்கவைக்கவே நாம் முயல வேண்டும்”
க.வே.பாலகுமாரன்.
விடுதலைப்புலிகள் (மார்கழி 2004 – தை, 2005) இதழிலிருந்து தேசக்காற்று.
“தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்”