மண்சுமந்தோர் கனவு
துயிலுமில்ல விதைப்போன்றின் பின்னர்
வீடு திரும்பினேன்
படுக்கை விரித்துவிழ சாமக்கோழி கூவிற்று.
வித்துடல் தோளேற்றி நடந்ததால்
வலித்தது தோளும் மனமும்
தூக்கம் தொலைவாகிப்போனது.
கவிதையொன்று எழுதலாம்
எழுதலாம்தான் எப்படித் தொடங்குவது?
எழுதிச்சென்று எக்கே முடிப்பது?
பாட்டெழுதிப் பாட்டெழுதி
நான்படும் துயர் யாரறிவார்?
கூட்டுக்குள் கிடந்து குமைகிறது உயிர்
பூ அள்ளிப்போட்டே புண்ணானது கைகள்.
நிதம் அழுதழுது
நீர் வற்றிப்போனது விழிகள்.
கண்மலரும் காலை ஒவ்வொன்றும்
வீரச்சாவுடன் தானே விடிகிறது.
இமை மூடும்பொழுதும்
இடிவிழுத்தித்தானே இருள்கிறது.
நிலவு முகந்திருந்திய நிர்மலப் பூங்குடிகளை
இழவு எடுத்து செல்கிறது நாளாந்தம்.
எத்தனை காலத்துக்கென்றுதான் இது?
பத்துபரப்பில் விதைக்கத் தொடங்கிய வயல்
ஏக்கர் கணக்காக நீள்கிறது இன்று.
விதிக்கக் குழிதோண்ட வியர்க்கிறது நிலம்
காற்றின் விழிகலும்து.
வெள்ளையடித்த கல்லறைக்குள்ளே
பள்ளி கொள்கின்றனர் பரமாத்துமாக்கள்.
நூல்பிடித்து ஓடியநேராய்
வரிசையான நாற்று நடுகை.
எல்லாம் முளைக்குமெனும் எதிர்பார்ப்பு
பொய்க்கவில்லை
கங்கும் களைமாக எங்கும் அரும்புகள்.
ஒருநாள் வந்து
உள்ளே புகுந்து ஒரு பூவைத்துப்பரும்.
குழியிலிருந்து கேட்கும் குரல்
பார்க்கும் விழி
துடிக்கும் உயிர்.
எவர் சொன்னது இவர்களை இறந்துபோனவர்கள் என்று
எவர் சொன்னது எலும்பும் உக்கி எருவானார் என்று
வெளியே வருவதில்லையே தவிர
குழிக்குள்ளேயே ஒரு ராஜாங்கமே நடக்கிறது.
கார்த்திகை இருபத்தேழு
தேசத்துக்கு உயிர்பெழுதும் நாள்.
சில்லிட்டுப்போகும் நிலம்
பூக்கொண்டு நடப்போம் புனதரிடம்.
மெல்ல அருகமர்ந்து
கல்லறைகள் கழுவுவோம் கண்ணீரால்.
நெய்விளக்கு ஏற்றும் நேரம்
செல்வங்கள் விழிதிறப்பர்
செவிகேட்க சிரிப்பர்.
மெளனமொழியில்
பெற்றமனம் குரப்பேவர்
அதில் ஆயிரம் அர்த்தங்கள் அவிழும்.
“மொழியாகி எங்கள் மூச்சாகி” என்று
என்புருக வழியும் பாடலில்
சிலிர்த்துப்போய் சிலையாவோம்.
“பணிமுடித்து உறங்குகின்றோம்
மீதிவழி முன்செல்வீர்” என
தேவகுமாரனின் அசரீரி கேட்கும்.
“எமக்கானது பூவல்ல
எமக்கானது டரல்ல
எமக்கானது இந்தப்பாடல் மட்டுமல்ல
எமக்கானது விடுதலை
எமக்கானது தேசத்தின் விடிவு.”
காற்றிலேறும் இந்தப் பேரொலியுடன்
கல்லறைகள் மூடிக்கொள்ளும்
ஒளிபெறும் திசையில் பாதை தெளிவுறும்.
வாசல் கடந்து வெளியேவர
நிலம் வியந்திருக்கும்.
எம் பயணம் தொடரும்
மன்மடிந்தோர் கனவு நனவாகும்வரை.
– புதுவை இரத்தினதுரை.
(2009ம் ஆண்டு வரையப்பட்ட கவிதை)
“புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்”