வீரனே…. நீயின்றி இசைக்கு ஒரு ஐீவனில்லை…
|| வீரனே…. நீயின்றி இசைக்கு ஒரு ஐீவனில்லை!
பாடித் திரிந்த குயில் ஒன்று
பாடையில் வீழ்ந்தது.
விடுதலை மூச்சொன்று
வேள்வியில் வித்தாகிப் போனது.
கண் முன்னே இவை எல்லாம்
கனவென்று ஆகாதோ!
கண நேரம் எம் கண்கள்
உனை இங்கே காணாதோ!
நீ பாடக் கேட்டு வீரர்கள்
குழிகளில் துயில் கொள்வர்.
அவர் வாழ்ந்த நிமிடங்கள்
விழி முன் நிஐமென்று ஆகும்.
நீ இன்றி முன்னால் எம்
விழிகளில் உறக்கங்கள் இல்லை.
வீரனே உனையின்றி
இசைக்கு ஒரு ஐீவனில்லை.
எழுந்தோடிக் கண் முன்னே வாராயோ!
எம் கதைகளை உன்குரலில் பாடாயோ!
மண் மீது நீ வாழ்ந்த காலங்கள்
மனதினில் எப்போதும் பொற் கோலங்கள்.
குரலெடுத்து நீ பாடும் பாடல்கள்
விடுதலையின் பூபாள ராகங்கள்.
மூங்கிற் துளைகள் அடைக்கின்ற போதும்
இசையின் இனிமையில் குறையேதும் இல்லை.
மரணம் உனைத் தீண்டிய போதும்
வீரனே உனக்கு மரணங்கள் இல்லை.
காதோரம் இன்றும் உன் பாடல் கேட்கும்;
கண் முன்னே என்றும் உன் வாழ்க்கை தோன்றும்.
– துரைரத்தினம் தயாளன்.
“தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்”