நினைவுகளை மட்டும்….
நினைவுகளை மட்டும் விட்டுச் சென்ற நினைவழியாப் போராளி பிரகாஸ் !
எழிலெனும் எழிமையான விடுதலை புலியே
எங்கள் எண்ணங்களில் நிலைபெற்ற இனியவனே
திருமலை மண்ணிலிருந்து புறப்பட்ட எரிமலையே
தியாகப் பயணத்தின் வழியெல்லாம்
தோழொடு தோழாய் வந்த அன்புத் தோழனே !
விடுதலையின் வேர் நாட்டி
உலகின் திசையெங்கும் விழுதெறிந்து சென்றவனே
நீயாற்றிய பணிகள் கண்டு நிமிர்ந்தோமே அன்று நாங்கள்.
அடிமை விலங்குடைய அன்னை மண் விடுதலையடைய
உனை வருத்தி நீ சாதித்தவைகள் ஏராளம்.
சாவின் விளிம்பில் நின்றாலும் சாதுரியமாய்
வென்று வரும் சாதனையாளன் நீ.
உன் சாவைக் கூட அறிவிக்காமல் சத்தமில்லாமல் போனாயே !
பறந்து திரிந்த புலியுன்னைப் புற்றுநோய் தின்று
நீ பாடையிலே போய் முடியும் வரையுமெந்தச்
செய்தியும் எட்டாமல் வருடங்கள் இரண்டு
இரகசியமாய் கழிந்து போய்
இன்றுன் நினைவாய் அன்னிய மண்ணில்
நாட்டப்பட்ட கல்லறையில்
அமைதியாய் உறங்குமென் அன்புத் தோழனே !
நீ கனவு கண்ட தமிழீழம் மலருமொரு நாள்; வரவே
உலகமெங்கும் உன் போன்ற வீரர்கள் நினைவோடு
இயங்குகிற இதயங்கள் வாழும் வரையுனக்கு மரணமில்லை.
கனவுகள் நனவாகிக் காலமொரு புதியகாலை கொண்டுவரும்
அதுவரையில் உறங்கு நண்பா !
10.07.02013 அன்று 2ம் ஆண்டு நினைவில்….
– நிக்ஸன்