கடற்கரும்புலி மேஜர் இன்மகன் உட்பட ஏனைய கடற்கரும்புலி மாவீரர்களின் வீரவணக்க நாள்.
கடற்கரும்புலி மேஜர் இன்மகன், கடற்கரும்புலி மேஜர் அன்பு, கடற்கரும்புலி மேஜர் வலம்புரி, கடற்கரும்புலி மேஜர் வினோதா, கடற்கரும்புலி மேஜர் சந்திரா, கடற்கரும்புலி கப்டன் சித்தா, கடற்கரும்புலி கப்டன் சுதாகர், கடற்கரும்புலி கப்டன் அருளரசன் வீரவணக்க நாள் இன்றாகும்.
கடற்புலிகளின் அணிகள் விநியோகத்தை முடித்துவிட்டு தளம் நோக்கித் திரும்புகையில் அவர்கள் மீது தாக்குதல் தொடுக்க சிறிலங்கா கடற்படையினர் எட்டு டோறா கலம் கொண்டு முயற்சித்த வேளை முல்லை மாவட்டம் கொக்கிளாய் கடற்பரப்பில் டோறாக் கலங்களை குறிவைத்துச் சென்ற கரும்புலிப் படகுகள் இயற்கை கடல் சீற்றத்தால் தவறுதலாக ஏற்பட்ட வெடி விபத்தின் போது 27.05.1997 அன்று வீரச்சாவைத் தழுவிக்கொண்ட கடற்கரும்புலி மேஜர் இன்மகன், கடற்கரும்புலி மேஜர் அன்பு, கடற்கரும்புலி மேஜர் வலம்புரி, கடற்கரும்புலி மேஜர் வினோதா, கடற்கரும்புலி மேஜர் சந்திரா, கடற்கரும்புலி கப்டன் சித்தா, கடற்கரும்புலி கப்டன் சுதாகர், கடற்கரும்புலி கப்டன் அருளரசன் ஆகிய கடற்கரும்புலி மாவீரர்களின் 18ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்.
|| தாய்மண்ணின் விடியலின் கனவுடன் கடலன்னை மடியில் உறங்கும் உயிராயுதங்கள்…………
கடற்கரும்புலி மேஜர் இளமகன்:-
எப்போதுமே சிரித்து சிரித்தே மற்றவர்களை கவர்ந்து நிற்கும் இளமகனுக்கு தெரியாததொன்று எதுவுமில்லை. கடற்சமராக இருந்தாலும், தரைத் தாக்குதலாக இருந்தாலும் இவனுக்கு எல்லாமே அத்துப்படி.
நீண்ட பெருநாட்களாய் இலக்கைத்தேடி அலையும் அவனுக்கான சர்ந்தப்பம் புல்மோட்டை நோக்கி விரைகிறது படகு. வீசி எழுந்த அலைக்கரம் எழுந்ததால் வெடிசுமந்த படகு இடியாக பேரொளியில் எங்கள் இளமகன் கரைந்து போனான்.
கடற்கரும்புலி மேஜர் அன்பு:-
கடற்கரும்புலிகளுக்கான பயிற்சிகளை நிறைவு செய்துகொண்டு தனது இலக்கிற்கான காத்திருப்புடன் கடற்புலிகளின் விநியோகப் பணியில் செயற்படுகிறான். இந்த தேசத்தையும், தேசத் தலைவனையும், மக்களையும் நேசித்த இவன் கரும்புலியாய் தன்னை மாற்றிக்கொள்கிறான்.
அவனுக்கும் தாக்குதலுக்காக சர்ந்தப்பம் கடற்கரும்புலி மேஜர் வினோதாவுடன் கூடிய அவனது கரும்புலிப் படகில் கடைசிக் கனம் பாரிய வெடியோசையுடன் கரைகிறான் கடலன்னை மடியில்…………..
கடற்கரும்புலி மேஜர் வலம்புரி:-
துடுக்குத்தனமும், குறும்புத்தனமும் மிக்க ஒரு போராளி. போராட்டத்தில் இவளது ஆரம்ப வாழ்வு மக்களோடு ஒன்றிய பணியாக இருந்தது. இந்தக் காலப் பகுதியில் மக்கள் எதிரியின் விமானத் தாக்குதலையும், கடல் தாக்குதலாலும் பட்ட பாடுகள், இழப்புக்கள் அவள் மனதில் ஆழ வேருன்றி நின்றது.
நான் கரும்புலியாகப் போகவேண்டும் எங்கட மக்கள் நிம்மதியாக கடலில் இறங்க வேண்டும் அதற்காகவே கரும்புலிகள் அணியில் இணைந்து கொள்கிறாள். மலை அசைவதுபோல் வரும் அலைகளுக்கு இடையில் லாபகமாக படகோட்டி அவள் செய்த கடற்சண்டைகள் ஏராளம் .
ஒவ்வொரு சண்டைக்கு போகும் போதும் அவள் சொல்லிப் போவது….. நான் கடற்சண்டையில் சாகக்கூடாது. கடற்கரும்புலியாகத்தான் போகவேண்டும். அப்படியேதான் சென்றாள்.
கடற்கரும்புலி மேஜர் வினோதா:-
கடற்கரும்புலி கப்டன் அங்கயற்கண்ணியுடன் இணைந்து 30 கடல்மைல் நீந்தி முடித்தவள். எந்த வேலையையும் மறுக்காமல் செய்யும் விநோதாவை எல்லோருக்கும் பிடிக்கும்.
மண்டைதீவுச்சமர், தரையிறங்குகலம் மீதான தாக்குதல், ஓயாத அலைகள் 01 என சண்டைகளுக்கு சென்று வந்தவளுக்கு ஓயாத அலைகள் ஒன்றில் காலில் பெரிய காயம். ஆனால் படகை விட்டு இறங்காது கடற்சமரில் ஈடுபடுகிறாள்.
இவள் எதிர்பார்த்த அந்த இலக்கு. இலக்கு தந்த மகிழ்ச்சி நீர் கிழித்து ஓடுகிறது வண்டி. பொங்கியெழும் அலையின் வேகத்தில் அலைமடியில் கலந்து போனாள் மேஜர் வினோதா.
கடற்கரும்புலி மேஜர் சந்திரா:-
என்ற தம்பியை சுட்டவனை நான் சுடாமல் விடமாட்டேன் என சொல்லிச் சொல்லியே தனது 50 கலிபர் துப்பாக்கியை இயக்குவாள் சந்திரா.
இயக்கத்திற்கு வரும்முன்பே இவள் நிச்ச்சலில் கெட்டிக்காரி. இவளின் நீச்சல் திறமை நீச்சல் பயிற்சி ஆசிரியராக மாற்றுகிறது. ஆரம்ப காலத்தில் கிளாலி கடல் நீரேரியில் மக்களுக்கான பாதுகாப்புப் பணியில் ஈடுபட்ட இவள் பின்னாளில் சுகன்யா தாக்குதல் அணியில் செயற்படுகிறாள்.
இந்தக் காலப் பகுதியில் கடலுக்கு சென்ற அவளது தம்பி திரும்பி வரவேயில்லை. சிறிலங்கா கடற்படையின் கோரப்பசிக்கு பலியான மீனவர்களில் அவனும் ஒருவனான போதும் சந்திராவினால் பொறுக்கமுடியவில்லை. அந்தக் கடலரக்கனுக்கு என்ற இடியன் பதில் சொல்லும் அந்த ஓர்மம் அவளைக் கரும்புலியாக மாற்றியது.
இலட்சியத்தை வரித்துக்கொண்ட அவள் தன் இலக்கிற்கு செல்ல முன்பே பேரிடியில் அவளும் கடல்மடியில் கலந்துபோனாள்.
கடற்கரும்புலி கப்டன் அருளரசன்:-
மக்களுக்காக தன்னை அர்பணிக்க வேண்டும் எப்போது இவனது கனவு இதுதான்.
கடற்புலிகள் அணியில் பயிற்சிகளை நிறைவு செய்த இவன் நல்ல நீச்சல்காரன். தொழில்நுட்பம், தொலைத்தொடர்பு, ஆயுதங்களின் தேர்ச்சி, படகோட்டி என இவனது நிலைகள் விரியும்.
எந்தச் சண்டையிலும் எந்த நிலையிலும் செல்லக்கூடிய வல்லமை இவனுக்கு உண்டு. இவனது கனவுகளுக்கான காலம் கனிந்தது. காத்திருப்பு நிறைந்த காலங்கள் கரைந்தது. அந்த நாளும் வந்தது. கரையிருந்து நகர்கிறது கந்தகப் படகு கூடவே கையசைத்து நகர்கிறாள் சந்திரா.
இலட்சியத்தில் உயர்ந்த இவர்கள் இலக்கினை அடைய முன்பே கடல்த் தாயின் தாலாட்டில் உறங்கிப்போயினர்.
கடற்கரும்புலி கப்டன் சித்தா:-
மக்கள் மத்தியில் தன் அரசியல் பணிமூலம் பிரபல்யமானவன். மற்றவர்களின் துன்பங்களை எல்லாம் தனதாக்கி கவலைப்படும் சித்தாவின் மனதில் தான் கரும்புலியாகச் சென்று மக்களுக்கு விடிவை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும் என்ற பேரவா அவனை கடற்கரும்புலியாக மாற்றுகிறது.
பிறப்பிலே இயலாத கால் என்றாலும் எல்லாப் பயிற்சிகளையும் திறம்படச் செய்கிறான். கலகலப்பு குறும்புத்தனமெல்லாவற்றையும் தன்னகத்தே கொண்டவன் தன் இறுதி இலட்சியத்திற்காக காத்திருக்கிறான். அந்த நாள் வழமையான கலகலப்புடன் விடைபெற்றுப் போகிறது.
இலட்சியத்தில் உயர்ந்த இவர்கள் இலக்கினை அடைய முன்பே கடல்த் தாயின் தாலாட்டில் உறங்கிப்போயினர்.
கடற்கரும்புலி கப்டன் சுதாகர்:-
தேசம் விடியவேண்டும் என்ற பேரவா, நெஞ்சம் நிறைந்த விடுதலைக்கனவு இவனை போராளியாக மாற்றுகிறது.
கண்ணீரோடு கரையும் மக்களின் வாழ்விற்கு தீர்வு எழுத புறப்பட்ட சுதாகரின் எளிமை, இளகிய மனம், மற்றவர்களை நோகவைக்கத் தெரியாத இயல்பு இவனிடத்தில் எல்லோருக்கும் விருப்பு ஏற்படுத்தும்.
கடற்தாக்குதல்கள், கடல் நடவடிக்கைகள் என விரிந்த இவன் களப்பணி பின்னாளில் கடற்கரும்புலிகள் அணியில் இணைந்து கடல் பாதுகாப்பு அணியில் செயற்படவைக்கிறது.
இலட்சியத்தில் உயர்ந்த இவர்கள் இலக்கினை அடைய முன்பே கடல்த் தாயின் தாலாட்டில் உறங்கிப்போயினர்.
தாயக விடுதலை வேள்வி தன்னில் தங்கள் உயிரை அர்பணித்து மண்ணை மக்களைக் காத்த மாவீரர்களுக்கு எமது வீரவணக்கங்கள்…!
“புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்”