ஈழகாவியம் – 04
அத்தியாயம் 06:
நிகழ்காலம் கனடிய நாடும்; கனித்தமிழ் இனமும் (கும்மி)
மானுட சாசனம் வைத்திருக் கும்நல்ல
மாக்கன டாவினைப் பாடுமம் மா!
வானிடும் குண்டில் மக்களெ ரிகையில்
வாழக்க ரம்தந்த நாடுஅம் மா!
ஈனத்த ரானஇ லங்கரின் ஆட்சியில்
என்றும ழிந்ததும் எம்மின மே!
கூனக்கி ழத்தின ரானமோ டர்களால்
கொஞ்சுநி லம்எரிந் தாச்சுதம் மே!
ஈழமண் பின்னொடு மிக்கன டாவிலே
இன்றுநாம் நான்குஇ லட்சமம் மா!
ஆழம னம்தந்து ஆதரித் தாரிந்த
அன்புநி லத்தையே போற்றுமம் மா!
கூழைத்தின் றானாலும் கூடென வாழ்ந்தநாம்
கொள்கன டாவிலும் கூடநின் றோம்!
பூழைசா றிட்டதோர் பேயாட்சிப் பூதத்தை
பொங்குத மிழ்கொண்டு காட்டிநின் றோம்!
எட்டப்ப ரானவர் எம்தமிழ்க் கேடவர்
ஈழவி னத்தினிற் கேடுதந் தார்!
அட்டதி சையெல்லாம் அந்நியர்க் காசிலே
அம்மான்க திர்காமர் ஊறுதந் தார்!
வேங்கையெ திர்க்கின்ற நாடுக ளாக்கஇவ்
வேடனன் சென்றனன் பார்முழு தும்!
பூங்கையிற் சிங்களப் பெண்ணைம ணந்தவன்
பெற்றவி னம்விற்றான் நாள்முழு தும்!
தாங்காது தாங்காது தண்தமி ழெட்டப்பர்
தாரணி மீதிலும் தந்தவ டு!
வேங்கைய ரின்விடி யல்லொடும் போரிட
விசங்க ளும்தந்த திச்சுவ டு!
தாசியி லங்கவைத் தாலாட்டப் பல்நாடு
தந்தது வேபுலித் தான்தடை யே!
நாசிசக் காட்டுக்கு நம்கன டாவிலும்
நல்குதி சைவந்து பாய்ந்தது வே!
தேடியு ழைப்பவர் தேசம்வ ளர்ப்பவர்
தேன்தமிழ் மக்களை இன்றுணர் தார்!
கூடித்த டையிட்ட கொள்கைக்கு மாறாகக்
கொல்லுமி லங்கவைத் தானேகண் டார்!
ஆடிச்செவ் வாயிற்கும் அய்ப்பசி வெள்ளிக்கும்
ஆலயம் தந்தது மாக்கன டா!
ஓடிஇ லட்சங்கள் ஒன்றாயி றங்கிட
எம்முணர் வானதும் இக்கன டா!
கால்நின்ற வாறெல்லாம் காரிறைக் கோவில்கள்
கட்டப்ப டைத்ததெம் கார்க்கன டா!
காலிற்ச தங்கையும் காரிசை யும்மிட
கட்டிவ ளர்த்திடும் தேன்கன டா!
ஈழமெ ரிக்கையில் ஈனர ழிக்கையில்
எட்டுதிக் கிங்குமெ ரிந்தது வே!
ஆழநெ டும்பாதை ஆர்த்தமி ழன்தனை
ஆனவு ணர்வொடும் ஈர்த்தது வே!
வன்னிமு காம்களை வாதைநி லங்களை
வண்ணத்த ராட்சியர் பார்ப்பதற் கு
உன்னியெ டுத்தனர் என்றாலி லங்கவின்
ஈனர்வி ட்டிலர் போவதற் கு!
நீதன்உ லோகனென் றீழவர் தேர்தலில்
இங்கேந கர்ரொடும் வெற்றிபெற் றார்!
சாதனை உற்றத மிழ்இன மாணவர்
சாலைகள் தோறும்ப டித்துநின் றார்!
கொட்டிக்கொ டுக்குமே யெங்களி னத்தொடும்
கொள்ளினம் வென்றதோர் காலம்அம் மா!
முட்டப்பெ ரும்விழி முட்டித்து டிக்கையில்
எட்டிக்கொ டுத்ததெம் இனங்களம் மா!
நாடுக டந்தத மிழ்ரசம் மின்னாள்
நாடிடப் பல்வழி ஆர்க்குதம் மா!
கேடுக ளிழைக்கச் சாவிட்ட போதிலும்
கோடோமென் றோசையே கேட்குதம் மா!
ஏழ்பத்து ஆறிலே வட்டுவில் எம்மினம்
ஏற்றபி ரக்ஞையின் சாரமிட் டு!
வாழுமி லட்சத்து வாலிப ரார்ந்திட
வந்ததே நாளொடும் தேதியிட் டு!
ஆயிர மாயிரம் மக்களைக் கொன்றுமே
அன்னைநி லங்களைப் பூட்டிவிட் டான்!
தாயொடும் தந்தையும் வாழ்ந்தநி லங்களைத்
தாடையி லங்காவான் ஓட்டிவிட் டான்!
எங்களி னத்தொடும் ஈழமண் ஆட்சியின்
ஏடுதொ டக்கியே இங்குநின் றோம்
சங்குத மிழ்இனம் சாற்றிடும் தேர்தலைச்
சார்கன டாவிடக் கூடுகின் றோம்!
நாடுகள் பல்லென நாடிநின் றோம்வையம்
நாடுமீர் பத்தாகி வாழுகின் றோம்!
கூடுக லைந்திடப் போகுவ தோவெங்கள்
கொள்கையி டித்திடக் கூடுவ தோ!
நாடுக டந்தநம் மீழர சையிட்டு
நல்லர ணொன்றையே தேடிநிற் போம்!
கேடுக ளிட்டவர் கேடுகள் செய்யினும்
கொற்றமெ மக்கொன்று கூடவைப் போம்!
வேங்கையின் விண்கொடி வீசிப்ப றந்திட
வேர்க்கன டாத்தடை ஏதுமில் லை!
ஏங்கிசு தந்திரம் இட்டத மிழ்க்கொடி
ஏற்றவெ ழுச்சியும் தீதுமில் லை!
ஈனத்தர் கையிலே ஈழமண் தீயிலே
இங்குரொ றன்ரோவில் ஆர்த்தெழுந் தோம்!
ஆனநே ரத்திற்பல் லாயிர மக்களாய்
ஒட்டாவாத் மன்றத்திற் சூழநின் றோம்!
இன்தமி ழானவர் கொண்டது யர்ரொடும்
ஏற்றுந டைமுறை ஏற்றுகி றார்!
இன்றர சானவர் இயற்றும் ஆட்சியில்
எங்களி னம்கண்டு போற்றுகி றார்!
எங்களி னத்திற்கு இப்பாரின் பேர்நாடும்
இந்தப்பேர் நாட்டுக்கு நாங்களு மாய்!
தங்கியி ருக்கிறோம் தாய்நாடு போலேயித்
தந்ததே சத்தையே பூசிக்கி றோம்!
தாய்நாட்டிற் குப்பின்னே தான்நான்கு (இ)லட்சமாய்த்
தண்தமிழ் மாந்தரின் பொற்கன டா!
சேய்நாடி துவொன்றே செப்பிடும் எங்களின்
சொல்கேட்கும் மானிடத் தேன்கன டா!
தூய்மைக்கும் வாய்மைக்கும் சொல்கேட்கும் என்றதோர்
மாயையி லங்கவை மாற்றிவிட் டார்
தீய்மைக்கும் கொல்வெறிக் கூட்டத்து லங்காவைக்
தேர்ந்துவிட் டோமென்று கூறிவிட் டார்!
வாழிஇன் நாடதே வாழ்த்துகின் றோமெங்கள்
வாதைக ளேற்றனை வான்கன டா!
நாளைய சந்ததி நம்பியு னைத்தொடும்
நாடாகி வந்திடும் தேன்கன டா!
அறுசீர் விருத்தம்
ஊழியம் செய்திட் டாலும்
உயர்தொழில் புரிந்திட் டாலும்
மேழியர் வயல்கள் பச்சை
விளைபயிர் வளர்த்திட் டாலும்
ஏழிசைக் கலைகள் ஏடு
எழுத்திசை வடித்திட் டாலும்
தோழமை யாக்கி வெள்ளைத்
தேசமே வியக்கச் செய்தோம்!
வானலை உண்டு செய்தி
வழங்கிடத் தொலையின் காட்சித்
தேனலை உண்டு தெய்வக்
கோபுரம் கோவில் உண்டு!
ஆனநல் வளாகம் கல்வி
அரசொடும் தொழில்கள் இல்லம்
மானமாய்க் கண்டோம் ஆயின்
மண்ணொடும் கண்ணீர் விட்டோம்!
வேதனை உண்டோம் சிங்க
விசத்தினால் செத்தோம் தேச
நாதனைக் காணோம் வேங்கை
நாடர்கள் அழிந்தார் வெட்டும்
கூதலுக் குள்ளே இளைஞர்
குதித்தனர்; சாலைக் குள்ளே
சாதலா இல்லை எங்கள்
சாதியின் உயிர்ப்பா என்றார்!
மானிடத் துலகை எல்லாம்
மதித்திடாக் கொடுமை ஆட்சி
ஈனமாய்த் தமிழர் கொல்ல
இலங்கையே எரிந்த போதில்
மானராய்த் துடித்தோம் காப்பர்
மாட்சிமை அரசைச் சூழ்ந்து
வானமே அதிர வைத்தோம்
வரைந்தது கனடா மன்றே!
தலைநகர் நிறைத்த ஈழத்
தமிழரே சரிதம் வைத்தார்
அலையலை யாக வந்தே
அதிர்த்தனர் ரொறன்ரோ மன்றை
கொலைகொலை ஈழ மண்ணில்
கொடியதோர் அரசே என்று
மலைவெடித் திடுதல் போலே
மக்களின் குரலே வைத்தோம்!
இறங்கியே வந்தார்! வெள்ளை
இமயங்கள் கீழே வந்தார்!
உறங்கிய ஊட கங்கள்
உயிர்த்தனர்! இனத்தின் கண்ணீர்
அறம்படக் கண்டார்! எங்கள்
அசைப்பிலே தினத்தாள் ஏட்டார்
திறந்தனர் மகிந்தன் கொல்வாள்
திரையொடும் காட்சி கண்டார்!
எங்களுக் காக வெள்ளை
இனத்தவர் அழுதார்! வெய்யச்
சிங்களக் கொடுமை கண்டு
திகைத்தனர்! போர்க்குற் றத்தை
அங்கதர் போலே கொன்ற
அரசதை உலக முற்றும்
பங்கமென் றுரைத்தார்! எங்கள்
பலமதே அசைக்கக் கண்டோம்!
இளைஞர்கள் குளிரி னுள்ளும்
இயற்றிய இனத்தின் கோடு
சுளையென மக்கள் ஒன்றாய்த்
திறந்ததால் தேசக் கொற்றம்
வளையெனப் பலமாய் நின்றும்
வதையிடும் இந்தி யத்தின்
அளையிலே மடிந்தோம் ஈழ
அரணதும் இழந்து விட்டோம்!
இழப்பிலே எழியோர் சில்லோர்
இங்கொடும் வெறியில் நின்று
அழப்பிய கதையும் மொய்ப்பில்
அரற்றிய ஒலியும் ஆக்கிக்
குழப்பிய மனதாய் மாற்றான்
கொலைஞரை வாழ்த்துப் பாடிச்
சுழற்றிய குதர்க்கம் கண்டேன்
சிறுநரி மானோ சொல்வீர்!
நாடுக டந்த நாடு
நமக்குளே வேண்டும் தேடு
பாடுகள் சுமந்த அன்னைப்
பதியதை விடியல் ஆக்கு
கோடுகள் வரைந்த ஈழம்
கொண்டிடும் உலகத் தோடும்
சூடுக தமிழா மண்ணின்
சுதந்திரம் உனக்கே சொந்தம்!
வெண்பா!
போர்வைத்தே யீழப் பெருநிலத்தைத் தீயாக்கிச்
சார்வைத்து வெட்டிச் சதைதின்றார்-வாருற்று
வையப் பெருங்கோட்டில் வாழும் தமிழர்கள்
கையொடு கைசேர்ந்தார் காண்!
– புதியபாரதி.
|| தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம் ||