இன்னும் துயிலுதியோ! தமிழா!
புலம்பெயர் தேசமெங்கும்
புலிவீரம் செய்தவனே
தமிழீழ மண்ணுக்காய்
தடையின்றி உழைத்தவனே
விடையேதுமில்லாது
வீழ்ந்து போயினையோ
முள்ளிவாய்க்கால் மௌனமுன்னை
மூச்சடங்க வைத்ததுவோ
தாயக விடுதலையை
உயிர் மூச்சாய் கொண்டவர்கள்
தமிழீழ தேசமெங்கும்
விதையாய் கிடக்கின்றார்.
முள்ளிவாய்க்கால் மண்ணொன்றே
பேசுபொருள் ஆகுதென்றால்..
எண்ணிப்பார்! கண்ணீர்க்
கடலுள் நீ அமிழ்வாய்.
பாதுகாப்பு வலயமென
பாவியர்கள் கூற
பதுங்கு குழி தவிர்த்து
மேவிய அப்பாவிகளை,
கொத்துக் குண்டுகளால்
கோரக் கொலைசெய்து
உதிரச் சகதிக்குள்
எம்மினத்தைப் புதைத்தாரே!
உலகப் பரப்பின்
அரக்கத் தனங்களெல்லாம்
ஒரு கைகோர்த்து வர
எம்மினத்தை அழித்தாரே.
முள்ளிவாய்க்கால் மண்- ஈனர்
முகத்திரையைக் கிழிக்கட்டும்.
சோகத்துள் சுகம் காணும்
இனமாக இருந்த எம்மை,
சோகத்தைச் சோகமாக்கி
மானத்தை வீரமாக்கி
இழப்புகளை உரமாக்கி
தமிழீழ விடுதலையை
கண்ணெதிரே நிறுத்தியவன்,
தானைத் தலைவன்
தன்மானப் பெருந்தலைவன்
தேசியத் தலைவனவன்
சிந்தனைக்குள் உயிர் கொள்ளும்
வீரத் தமிழா!
உனக்கெதற்கு சோகம்.
நல்லுகம் உனக்காய்
கரம் கொடுக்கக் காத்திருக்க,
தவறிழைத்தோர் தவறுணர்ந்து
தமிழீழ விடிவுக்காய் குரல் கொடுக்க
தமிழீழ விடுதலையின்
சிறு தீப்பொறி தெரிகிறதே..
இன்னும் துயிலுதியோ
உறக்கம் கலையாயோ
தர்மப் போர் தவிர்த்து
தமிழினத்தை அழித்து
அடைக்கலம் என்றவரை
படைக்கலமாக்கி
வெள்ளைக் கொடிகளெல்லாம்
உதிரச் செங்கொடியாய் மாற
நம்ப வைத்துச் சிதைத்ததானே
சிங்கள இன வெறியன்.
குண்டுபட்டுச் சிதைந்த உடல்கள்
காமக் குண்டுகளால் சிதைந்ததுவே
குஞ்சு குமரென்று பாராமல் புசித்தானே
காணெளிகள் செய்து எமைக்
கண்கலங்க வைத்தானே
இன்னும் துயிலுதியோ
தூக்கம் கலையாயோ
துக்கநாள் எமக்கெதற்கு
துயரநாள் எமக்கெதற்கு
சுனாமிநாள் ஒன்றே
போதும் தமிழுறவே
இனவழிப்புச் செய்து
போர்க்குற்றம் புரிந்தவரை
அடையாளம் காட்டியது
முள்ளிவாய்க்கால் அன்றோ
குற்றம் புரிந்தவனைக்
கூண்டிலேற்ற வேண்டாமா
சிறைக்கூண்டாய் மாறிய மண்
விடிவு பெற வேண்டாமா
மாற்றானின் மண்மீதா
எமதுறக்கம் நிகழவேண்டும்.
எழு!
விவேகத்தைத் துணை கொள்
பொறி கொண்ட விடுதலையை
ஊதிப் பெரிதாக்கு
உலகம் எம்பக்கம்
உண்மையும் எம்பக்கம்
ஒற்றுமை தவிர எம்மிடம்
என்ன இல்லை
நான்பெரிது, நீ பெரிது
என் று உளர்பவரால்
நாமுறக்கம் கொள்வதுவா
ஒன்று படுவோம் தமிழீழ
விடுதலைக்காய் ஒன்று படுவோம்.
அதுமட்டும் இருந்து விட்டால்
முள்ளிவாய்க்கால் மண்ணின்
மே பதினெட்டில்
போர்க்குற்றம் புரிந்த
சிங்களம் சிறை செல்லும்
உதிரம் படிந்த தமிழீழம்
உயிர் கொள்ளும்.
ஓன்றுமட்டும் உண்மை
எமது ஒற்றுமையை
உலகுக்குத் தெரிவிக்க
நதியாக ஊற்றெடுப்போம்
கிளைகள் தம் போக்கில்
வந்திணையும்
பெருநதியாகி உலகை
வியக்க வைப்போம்
போர்க்குற்ற நாளில்
ஓன்றாகி உணர வைப்போம்.
தமிழரெல்லம் ஒன்றாவோம்.
ஓன்றானால் நாம் நன்றாவோம்.
முல்லை ஜெ – யேர்மனி.