மணித்துளி ஒவ்வொன்றிலும் உன் நினைவு….
அன்று அதிகாலை ஏறக்குறைய ஏழு மணி இருக்கும் எமது தங்ககத்துக்கு கிடைத்த வான்வெளி தாக்குதலுக்கான சமிக்கையை அடுத்து நாங்கள் எங்களை தற்காத்து கொள்வதற்காக பதுங்குகுழிகளில் மறைந்து கொள்கிறோம். எமக்கு அருகில் குறித்த சில நிமிட இடைவெளியில் இலங்கை வான்படை பலத்த தாக்குதலை செய்கிறது. எமது பதுங்குகுழி தாக்குதலின் வேகம் தாங்க மாட்டாது அதிர்கிறது. அப்போதே புரிந்தது அருகில் இருக்கும் எதோ ஒரு முகாம் மீதே இந்த தாக்குதல் ஆனாலும் நமக்கு அப்போது தெரிந்திருக்கவில்லை. எமது தமிழ்செல்வன் அண்ணாவின் தங்ககம் தான் அங்கே சிதைக்கப்படுகிறது என்று.
தாக்குதல் நடந்து சில நிமிடங்களில் எங்கள் தங்ககங்கள் விட்டு வீதிக்கு வந்த போது வீதியே வெளித்து போய் கிடந்தது எந்த அசைவும் அற்று அந்த கிளிநொச்சி மண் கிடந்தது. சில மனித நடமாட்டங்கள் இயக்க வாகனங்கள் பலவற்றின் உறுமல்கள் ஆனால் என்ன நடந்தது என்பதை ஊகிக்க முடியாத நிலை. அப்போது தான் எனக்கு அறிமுகமான உயர்தர மாணவியின் குரல் என்னை திரும்பி பார்க்க வைத்தது.
அண்ண தமிழ்செல்வன் மாமாவுக்கு என்ன நடந்தது…? அழுது அழுது விழிகள் சிவந்த நிலையில் பள்ளி மாணவி ஒருத்தி என்னிடம் வினவுகிறாள். என்னம்மா ஏன் அழுகிறா? உண்மைய சொல்லுங்க தமிழ்செல்வன் மாமாவுக்கு என்ன நடந்தது ? இல்லம்மா ஒன்றும் இல்ல அவருக்கு ஒன்றும் இல்ல. இல்ல அண்ணா நீங்க பொய் சொல்லுறீங்க அவருடைய பேஸ்க்குத் தானாம் கிபிர் அடிச்சவனாம் மனது ஒரு நிமிடம் அடித்து கொள்கிறது. இல்லம்மா நீ வீட்ட போ அவருக்கு ஒன்றும் இல்லை. எனது உதடுகள் உரைத்தனவே தவிர உள்ளம் அந்த வார்த்தைகளை ஏற்றுக்கொள்ள தடுமாறியது.
உந்துருளி அவரது தங்ககம் நோக்கி நகர்கிறது. அப்போது அங்கே குழுமி இருந்த போராளிகளின் உதடுகள் ஒவ்வொன்றும் உரைத்த வார்த்தைகள் “பங்கர் மூடிட்டுதாம் ரீ.எஸ் அதுக்க தான் இருந்திருக்கணும் ஆளிண்ட தொடர்பு இல்லையாம்.” மனம் ஒரு கணம் அதுவரை நினைக்காத கடவுளை வேண்டி கொள்கிறது. தமிழ்செல்வன் அண்ணாவுக்கு ஒன்றும் ஆகி இருக்க கூடாது. ஆனாலும் அது நடந்தே விடுகிறது. அவருடன் கூட இருந்த போராளிகள் அதை உறுதிப்படுத்தினார்கள். வித்துடல்கள் மூடி போன பதுங்ககழியில் இருந்து மீட்கப்படுகிறது. சாவிலும் புன்னகைத்தபடி எங்கள் அண்ணன் வீழ்ந்திருந்தார். அவரை காத்திட அவரை அணைத்தபடி அவரது போராளிகள் ஐவரும் விழிமூடி போயிருந்தார்கள். அப்போதும் மனம் ஏற்க மறுத்துவிடுகிறது. தமிழ்செல்வன் அண்ணாவின் உடலம் இல்லை அது என்று இவர்கள் கூற மாட்டார்களா என்று ஏங்க வைத்தது அவரது வீரச்சாவு. ஆனாலும் அது பொய்யாகாது உறுதிப்படுத்தப்பட்டு தலமைச்செயலகத்தால் பிரிகேடியர் தமிழ்செல்வன் உட்பட ஐந்து போராளிகள் வீரச்சாவு என்பதான செய்தியை புலிகளின்குரல் சுமந்து வந்தது.
சோக இசையுடன் கூடிய அந்த கறுப்பு செய்தியை கேட்டு துடித்து போனது. தமது பிள்ளையை இழந்ததை தாங்க முடியாது சோகத்தில் வீழ்ந்து விடுகிறது. நானும் அவரை முதன்முதலாக சந்தித்த அந்த நினைவை மீட்டுக்கொள்ள எனது பழைய நாட்குறிப்பேடுகளை திறந்து பார்க்கிறேன். அதில் ஒன்று “அன்புடன் கவிக்கு ” என்று குறிப்பிடப்பட்டு கீழே தனது அழகான எழுத்துருக்களால் அன்புடன் சு.ப.தமிழ்செல்வன் என்று கையெழுத்திடப்பட்டிருந்த அந்த நாட்குறிப்பேட்டை எடுத்து கொள்கிறேன். கையெழுத்தை ஒரு முறை தடவி பார்த்து கொள்கிறேன். எனது கல்வி காலம் அது அந்த நேரத்தில் ஒரு பணியாற்றிய திருப்தியில் அவரை சந்தித்த போது அதை எனக்கு அவர் அன்பாக தந்திருந்தார். அதிலே பல விடையங்கள் உள்ளடக்கப்பட்டிருந்தாலும். முதல் பக்கத்தில் இருந்த அந்த வார்த்தைகள் மீதே எனது கண் நிலைத்து விடுகிறது.
தினேஷ் என்ற பெயரை கொண்ட இந்த புனிதன் இயக்க போராளிகள் அனைவரும் தமிழ் பெயர்களை மாற்ற வேண்டும் என்ற நிலை வந்த போது “தமிழ்செல்வன்” தனது சொந்த பெயரையே இயக்க பெயராகவும் கொண்டு வாழத் தொடங்கினார். இந்த செய்தி அவரது வீரச்சாவு வரை யாருமே அறியாத ஒன்று தமிழ் பற்று கொண்ட இவரது தந்தை தனது மகனின் விடுதலை பற்றை பிறந்தவுடனேயே அறிந்திருப்பார் என்று நினைக்கிறேன். அன்றே அந்த புனித பெயரை அவர் சூட்டிஇருந்தார்.
தமிழ்செல்வன் அண்ணாவின் உறுதியான போராட்ட வாழ்க்கையில் போராளிகளுக்கு இருக்க வேண்டிய அதுவும் முக்கியமாக தளபதி ஒருவனுக்கோ அல்லது பொறுப்பாளர் ஒருவருக்கோ இருக்க வேண்டிய முக்கிய பண்புகளில் ஒன்றான நேரம் தவறாமை என்பது அவரிடம் நிறையவே இருந்தது. இல்லை எனில் தனி மனிதனாக ஒரு பெரும் மரபு வழி இராணுவமாக வளர்ந்து முப்படைகளையும் வைத்திருந்த தமிழீழ அரசாங்கத்தின் ஒரு பெரிய பிரிவான அரசியல் துறையை பொறுப்பாளன் என்ற நிலையில் இருந்து வழிநடத்துவது என்பது சாத்தியமற்றதாகி விடும்.
கிட்டத்தட்ட அரசியல்துறைக்குள் உருவாக்கப்படுத்தப்பட்டிருந்த 54 கிளை பிரிவுகளை மட்டுமல்லாது. சர்வதேச அரசியல் மற்றும் உலகநாடுகளுடனான நட்புறவு என்று பறந்து விரிந்த பொறுப்பை மட்டுமல்லாது அரசியற்றுறை படையணியின் சிறப்புத் தளபதியாகவும் செயற்படுவது என்பது சாதாரண ஒரு போராளியால் முடியாத காரியம். இதை தனது சாவு வரை சீராக செய்து உறங்கி போனவர் தமிழ் செல்வன் அண்ணா. பலர் அவரை பற்றிய பத்திகளில் பலத்தை குறிப்பிட்டு இருந்தாலும் எனக்கு குறிப்பிட வேண்டிய ஒன்றாக படுவது அவரது நேரம் தவறாமை என்ற பண்பையே அதற்கு எடுத்துக்காட்டாக எனது நாட்குறிப்பேடு ஒரு செய்தியை தாங்கி நின்றது.
இன்று எமது கல்லூரியில் ஒரு சிறப்பு விழா அதன் போது நான் ஒரு உண்மையான போராளியின் நேரம் தவறாமையை உணர்ந்து கொண்டேன். இன்று நேரம் அதிகாலை 9.30 நிகழ்வு ஒன்றுக்கான ஏற்பாடுகள் நிறைவடைந்து இருந்தது. கிளிநொச்சியில் சிறப்பாக ஒழுங்குபடுத்தப்பட்ட அந்த மண்டபத்தில் நிகழ்வுக்கானவர்கள் கூடி நிக்கிறார்கள். தொழில்நுட்பவியல் கற்கைநெறிகளை கற்றுத் தேர்ந்தவர்களுக்கான பட்டம் வழங்கும் நிகழ்வு அது. பட்டம் பெறுபவர்கள் ஆயுத்தமாக காத்திருக்கிறார்கள். பட்டம் வழங்க வந்த பல்கலைகழகத்தை சேர்ந்த பேராசிரியர்கள் விரிவுரையாளர்கள் ஆரம்ப நேரத்துக்காக காத்திருக்கிறார்கள்.
நாங்கள் நிகழ்வின் ஒழுங்கு படுத்தல் பொறுப்பில் இருப்பவர்கள் எங்கள் அணியை சேர்ந்தவர்கள் ஒவ்வொருவரும் ஒரு வேலையை செய்து கொண்டு ஒழுங்குபடுத்தல்களில் ஓடித்திரிகிறோம். நிகழ்வின் ஆரம்ப நேரம் நெருங்கி கொண்டிருக்கிறது. ஆனால் நிகழ்வுக்கான பிரதம அதீதி வந்து சேரவில்லை. பட்டமளிப்பு விழா ஒருங்கிணைப்பாளர் சற்று குழப்பமாகவே காணப்படுகிறார். அது அவரது முகத்தில் வெளிப்படையாகவே தெரிகிறது. பதட்டமும் இயலாமையும் அவரது விழிகளில் தெரிகிறது. கவி ஒருக்கா கேள் ஆள் வெளிக்கிட்டுதா என்று… அடிக்கடி அந்த வார்த்தையே அவரிடத்தில் இருந்து வருகிறது அருகில் இருப்பவர்களை கூப்பிட்டு இதையே திருப்ப திருப்ப கூறுகிறார்.
எங்கள் கல்லூரியில் நேர ஒழுங்கு என்பது மிக கட்டுப்பாடாக கடைப்பிடிக்கப்படும் ஒன்றாகும் அதற்கு எமது கல்லூரிக்கு பொறுப்பானவர் மிக கடும் போக்கை எமக்குள் விதித்திருந்தார். அதனாலோ என்னவோ குறிந்த விரிவுரையாளர் பதட்டத்துடன் காணப்படுகிறார். என்ன ஆச்சு என்ன பதட்டம்? நான் அவரை வினவுகிறேன். இல்ல ரீ.எஸ் என்னும் வரல்லடாப்பா இவன் பாவி சரியா பத்து மணிக்கு துவங்கல்ல என்றா திட்டப்போறான். பயப்பிட வேண்டாம் நேரம் தவறாமை அவரது சுய குணத்தில் ஒன்று கட்டாயம் அவர் வருவார் நீங்கள் யோசிக்க வேண்டாம். நேரம் 9.45 நேரத்தை பார்ப்பதும் வாசலை பார்ப்பதுமாக இருந்த பொறுப்பாசிரியரிடம் எதுக்கு இவ்வளவு யோசினை விடுங்க அண்ண சரியான நேரத்துக்கு இங்க நிற்பார்.
சரியாக நேரம் 9.50 கடக்கிறது உந்துருளியில் வந்து இறங்கிய போராளியை கண்டு மகிழ்வடைகிறேன் நான். TS ன் பாதுகாப்பு அணியின் பொறுப்பாக இருந்த போராளி வந்து இறங்கி உள்ளே உருவாக்கப்பட்டிருந்த பாதுகாப்புகளை சரிபார்க்கிறார். அங்கே ஏற்கனவே வேறு முக்கியமானவர்களுக்காக பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது ஆனாலும் இவருக்கான பிரத்தேயக பாதுகாப்பணி தமது பணியில் இருந்தார்கள்.
நேரம் 9.57 வாகனம் ஒன்று உள்நுழைகிறது. வரவேண்டிய பிரதம வருகையாளர் வந்து சேர்கிறார். கூடி இருந்தவர்களது பதட்டம் நின்று புன்னகை மலர்கிறது. திட்டமிட்டபடி 10 மணிக்கு தேசியக்கொடி ஏற்றி வைக்கப்படுகிறது. இப்படியாக தான் தன்னுடைய நேர ஒழுங்கை சரியாக கடைப்பிடிக்கும் தமிழீழ அரசியல் துறையின் பொறுப்பாளர். வாழ்ந்து கொண்டிருந்தார். தனது வசீகரப்புன்னகையால் அனைவரையும் கவர்ந்து கொள்ளும் தமிழ்செல்வன் அங்கு கூடி இருந்தவர்களையும் தன்மீதான நம்பிக்கையை நிலை நிறுத்தி அந்த நிகழ்வுகளை தொடர்கிறார்.
இப்படித்தான் அவர் எங்களுக்கு பல வாழ்வியலின் நியாங்களை விதைத்து சென்றார். அதனால் தான் அவர் தேசியத் தலைவருக்கு அருகில் இருக்க முடிந்தது அவரது நம்பிக்கைக்குரியவனாக விருப்பத்துக்கு உரியவனாக வாழ முடிந்தது இதனால் தான் எங்கள் தேசியத்தலமை அவரை தனது தம்பியாக நெருக்கமாக வைத்திருந்ததாக குறிப்பிடுகிறார்.
“தமிழ் செல்வன்” நான் அவனை ஆழமாக அறிந்து, ஆழமாகவே நேசித்தேன். எனது அன்புத் தம்பியாகவே வளர்த்தேன். அவனது அழகிய சிரிப்பும் அதனுள் புதைந்த ஆயிரம் அர்த்தங்களையும் அவனுள் அடர்ந்து கிடந்த ஆற்றல்களையும் ஆளுமைகளையும் நான் ஆரம்பத்திலிருந்தே கண்டுகொண்டேன். இலட்சியப் போராளியாக, தலைசிறந்த தானைத் தளபதியாக, மாபெரும் அரசியல் பொறுப்பாளனாக,அனைத்துலகோடும் உறவாடிய இராஜதந்திரியாக, பேராற்றல்மிக்க பேச்சுவார்த்தையாளனாக அவன் வளர்ந்திருந்தான்.
உண்மையில் தமிழ்செல்வன் அரசியல் துறையின் பொறுப்பாளனாக பொறுப்பெடுத்த காலத்தில் இருந்து அரசியலில் எமது மக்களுக்கான தேவைகளை இனங்கண்டு அவற்றினூடாக எமது போராட்டத்தின் தேவைகளை நிவர்த்தி செய்வதில் வெற்றி கண்டிருந்தார். மக்கள் மனங்களில் அப்பளுக்கற்ற மனிதனாக உறங்கி கிடந்தார். இதை அவரது வீரச்சாவு நிகழ்வில் எமது மக்களின் மனதில் இருந்து எழுந்த வலி அலைகள் எமக்கு உரைத்து நின்றன.
தமிழ்செல்வன் அண்ணாவின் உடலத்தை தாங்கிய ஊர்தி தாயகம் எங்கும் பயணம் செய்து கொண்டிருந்தது. ஸ்கந்தபுரம் என்ற பகுதியை அண்மித்த போது ஒரு தாய் “ஐயோ நான் பெத்தவனே நான் திட்டிய திட்டோ உன்னை சாகடித்து போட்டது. என் பிள்ளைய இயக்கத்துக்கு இணைத்தது நீ என்று உன்னை திட்டினனே ஆனா இன்று மண்ணுக்கு எருவாக போக போறியோ இந்த தாய் சொல்ல கேளுடா எழும்பி வாடா நான் உனக்கு சோறூட்ட வேணுமடா தமிழ்செல்வா வாடா ” அந்த தாய் கதறிய போது கூடி இருந்தவர்கள் விழிகள் வற்றாத இரத்தத்தை பாச்சின என்பது மறுக்க முடியாத நியம்.
ஊரெங்கும் தமிழ்செல்வன் என்ற நாமம் மட்டுமே ஒலித்து வலிகளால் எங்கள் விழிகள் நிரம்பியிருந்த நேரம் சமாதான புறாவாக சர்வதேசம் எங்கும் பறந்து கொண்டிருந்த புன்னகை மன்னனை திட்டமிட்டு சாகடித்த பெருமையில் துள்ளிக்குதித்து கொண்டிருந்தது அன்றைய சிங்களதேசம். அதை கண்டும் காணாது மௌனம் சாதித்தது இந்தியா வல்லாதிக்கக சக்தி உட்பட்ட சர்வதேசம். ஆனால் எமது மக்கள் உறுதி கொண்டே இருந்தார்கள். இறுதி நிகழ்வுகள் கிளிநொச்சி மண்ணில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த போது தாயகம் எங்கும் இருந்து குவிந்த சனத்தொகையை தாங்க முடியாது கிளிநொச்சி நகரம் நிறைந்து கிடந்தது.
எங்கள் வான்பரப்பில் அத்து மீறி நுழைந்த சிங்களத்தின் வான்படை விமானங்கள் குண்டு போடுவதாக பதிந்து வந்து மீண்டும் மேலெழுந்து என்று இறுதி நிகழ்வை குழப்பும் முயற்சியில் ஈடுபட்ட போதும் எங்கள் மக்கள் இறுதி நிகழ்வுக்காக கூடி இருந்தார்கள் ” அக்கா கிபிர் இப்பிடி வாரான் அடிக்கிறானோ தெரியல்ல கூறிய ஒரு பள்ளி மாணவிய பார்த்து மற்றவள் தமிழ்செல்வன் அண்ணாவையே சாகடிச்சிட்டான் எங்கள சாகடிச்சு என்னத்த காணப்போறான் அண்ணைய விதைச்சிட்டு போவம் பயப்பிடாம நில்லு என்று கூறுமளவுக்கு எங்கள் மக்களின் மனங்களில் அவர் நிறைந்து கிடந்தார். அன்று எங்கள் மக்கள் சிங்களத்தின் எந்த மிரட்டலுக்கும் பயப்பிடாது இந்த வீரனின் வித்துடலுக்கு மண் போட காத்து கிடந்தார்கள்.
தனது போராட்டத் தேவையை 1984 ஆம் ஆண்டு உணர்ந்து கொண்ட தமிழ்செல்லவன் என்ற இயற்பெயரை கொண்ட தினேஷ் விடுதலை புலிகளின் உறுப்பினராக தன்னை இணைத்து கொள்கிறார். விடுதலைப்புலிகளின் 4 ஆவது பயிற்சி முகாம் இவரை புடம்போட்டு கொள்கிறது. பயிற்சிகள் மூலம் தன்னை முழுமையான வீரனாக மாற்றிய தினேஷ் தனது முதல் பணியாக தேசியத்தலைவரது அருகிலே அமர்ந்து கொள்கிறார் அவரது இணைப்பாளராக.
தினேஷ் மிகவும் துடிப்பான போராளி புன்னகையால் அனைவரையும் கவரும் தன்மை கொண்டவன் அதே நேரம் தனது கடமைகளில் கண்டிப்பு மிக்கவன் இப்படி அவருடன் கூட இருந்த மூத்த போராளிகள் அவரின் நினைவு பகிர்வில் குறிப்பிட தவறுவதில்லை. இதையே அவரது போராளிகளும் குறிப்பிடுவார்கள். அரசியல்துறையை சேர்ந்த போராளிகளுக்கான சந்திப்புக்களை மாதாந்தம் மேற்கொள்ள தவறுவதில்லை. அப்படியான சந்திப்புக்களின் போது தமிழீழ மட்ட பிரிவு பொறுப்பாளர்கள் முதல் சாதாரண போராளிகள் வரை அவரது கண்டிப்பான நடவடிக்கைகளில் இருந்தோ அல்லது வழிப்படுத்தலில் இருந்தோ தப்பித்து விட முடியாது.
“ம்ம்ம் இண்டைக்கு சிவராத்திரி தான் இந்த மனுஷன் விடாது” போராளிகள் தமக்குள் பேசிக்கொண்டாலும் தனித்தனியாக அவர்களை சந்திக்கும் போது ஒவ்வொரு போராளிகள் மீதும் அவர் காட்டும் அக்கறை என்பதும் சோர்ந்து போனவர்களுக்கான வழிநடத்தல் என்பதும் அந்த போராளிகளுக்கு அவர் மீதான பற்றுதலையே அதிகரிக்க செய்தது. அதனால் தான் அவர் வீழ்ந்த போதும் அவர் காட்டிய தடங்கள் பற்றி அரசியல்துறை படையணி சாதித்தது என்றால் அதில் பொய் எதுவும் இல்லை.
நினைவுப்பகிர்வு:- கவிமகன்.இ
“தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்”