ஒளிரும் ஓவியம்
அந்தச் செய்தியைக் கேட்டதும் என்னுள் இனம்புரியாத ஒரு அதிர்வு. சண்டைக் களங்களில் இப்படி நடப்பது வழமைதான். ஆனால் அவனுக்கு ஏற்பட்டதுதான் என்னால் ஏற்றுக்கொள்ள முடியாமல் இருந்தது.
அவனது கண்கள் காட்சிகளை உள்வாங்க, எண்ணங்கள் எழுச்சியூற, வண்ண ஓவியங்கள் வடிவெடுக்கும், அவனது ஓவியங்களைப் பார்த்ததும் காட்சிகளை நேரில் கண்ட திருப்தி என்னுள் ஏற்படுவதுண்டு.
ஒய்வு நேரத்தில் ஓவியம் வரைவதிலும் ஒப்பற்ற புத்தகங்களைப் படிப்பதிலும் மூழ்கிப்போயிருப்பான். புதிய போராளிகளைப் புடம்போடுவதில் அவனுக்கு நிகர் அவனேதான். வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ஓயாத அலைகள் ஒன்றுக்கான ஒத்திகைகள் நடந்துகொண்டிருந்தன. அந்த அலையில் கலக்க அவனுக்கும் அனுமதி கிடைத்தபோது அகமகிழ்ந்து போனான்.
ஓயாத அலை ஓங்கி எழுந்தது. எதிரிகளுக்கு என்ன செய்வதென்று தெரியாத அதிர்ச்சி. அவசா கதியில் அவர்கள் ஏவிய எறிகணை, அவன் நிலையெடுத்திருந்த இடத்திற்கு அருகாமையில் விழுந்து வெடித்தது. எறிகணைத் துண்டுகளும் மண் துகள்களும் அவனைப் பதம்பார்த்தன. குருதி வெள்ளத்தில் கிடந்தான். மருத்துவ முகாமிற்கு கொண்டுசென்று சிகிச்சையளித்தபோது, காயங்கள் மாறியபோதும் ஒளியீழந்த கண்களை உயிர்ப்பிக்க முடியவில்லை.
அவனால் இனி எப்படி ஓவியம் வரியமுடியும்? எப்படி புத்தகங்களைப் படிக்கமுடியும் இப்படிப் பல கேள்விகள் என் மனதில் எழுந்தன. என்னால் விடைகாணமுடியாத வினாக்களாகிப் போயின.
சிறிது காலத்தின் பின் ஒரு நிகழ்வில் கரும்புலிகளின் தியாகம் பற்றிப் பேசினான். அவனால் ஓவியம் வரைய முடியாவிட்டாலும் சொல்லோவியத்தால் கரும்புலிகளின் உணர்வுகளை சிறப்பாக வெளிப்படுத்தினான். மக்களின் கண்களில் கண்ணீர் துளிர்த்தது.
அவன் மீண்டும் பல போராளிகளை வழிநடத்துகின்ற நிலையில் இருப்பதை அறிந்து அளவற்ற மிகிழ்ச்சியடைந்தேன். சில மாதங்களுக்கு முன்னர் அவனைச் சந்தித்தபோது, எனது குரலை வைத்தே யாரென இனங்கண்டுகொண்டான். இப்போது அவனது கைகளில் புத்தகங்களுக்கு பதிலாக வானொலிப்பெட்டி இருந்தது. மற்றைய போராளிகளை புத்தகத்தை வாசிக்கச் சொல்லிவிட்டு கேட்டுக்கொண்டிருப்பான். பின்னர் அவைதொடர்பான பல விடயங்களை விளங்கப்படுத்துவான். நடைமுறை விடயங்கள் மற்றவர்களைவிட அவனுக்குக் கூடத் தெரிந்திருந்தன.
என்னுள் எழுந்த கேள்வியை அவனிடம் கேட்டேன்.
“உங்களுக்கு கண்பார்வை இல்லாதது சரியான சிரமமா இருக்குமென்ன?”
“சிரமமெண்டு நினைச்சாத்தான் சிரமமாயிருக்கும்” அவன் புன்னகையோடு பதில் தந்தான். தன்னம்பிக்கைக்கு முன்னால் ஒளியிழந்த கண்கள் தோற்றுப்போனதை, அவனது வார்த்தைகள் சொல்லாத செய்தியாய் சொல்லி நின்றது.
நினைவுப்பகிர்வு:- ஆ.ந.பொற்கோ.
விடுதலைப்புலிகள் (வைகாசி 2004) இதழிலிருந்து தேசக்காற்று.
“புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம் “