வீரவணக்கம் பிரிகேடியர் பால்ராஜ்
வீரத்தின் தலைவனோ
நீ வெற்றியின் சிகரமோ
ஆருக்கும் அஞ்சிடா
எங்கள் சேனைக்கு அரசனோ
பாருக்குள் புண்ணியம் செய்தோம்
நாம் உன்னையே எவருக்கும் இணையில்லா
சாள்ஸ்அன்ரனி சிறப்புத்தளபதியாய்
பெற்றதால் பெருமிதம் கொண்டிங்கு நிமிர்ந்திட்டோம்
கற்பித்தாய் போர் வித்தை எம்களவீரர் தமக்குத்தான்
பற்றுவைத் துன்னிடம் பயின்றவர் எழுந்தனர்
மற்றதோர் துணை வேண்டாம் உன் மாவீரம் போதுமே
தாயகம் மீட்டிட எனத் தமிழினம் நினைக்கையில்
போய்விட்டாய் வீரத்தின் சுவர்க்கத்தைத் தேடியே
வாய்விட்டுச் சொல்ல முடியாத இழப்பிங்கு
நோயுற்றுத் தவிக்கிறாள் தமிழ் ஈழ மாதாதான்
எமைவிட்டுப் பிரித்தானே எமனவன் உன்னைத்தான்
சுமையது இதயத்தைச் சோகமாய் அழுத்திட
இமைமூடா திங்குநாம் ஏங்கியே அழுகையில்
அமைதியாய்த் தூங்குதல் முறையோதான் சொல்லையா
எதிரியை அழித்திட எழுந்து நீ நடக்கையில்
உதிருமே உன்னிடம் வீரத்தின் முத்துக்கள்
கதிர் அறுத்தறுவடை செய்கின்ற வேளையென்று
எதிர்பார்த்திருந்தோமே எம் விடுதலை விளைச்சலை
தமிழினம் செய்திட்ட பாவம்தான் என்னவோ
அமிழ்தினும் இனிய உன் ஆருயிர் பிரிந்ததே
குமிழ்விட்டு மலுருமே தமிழ்ஈழம் பாரய்யா
உமியல்ல நாங்களும் உன் விளைச்சலின் நெல்மணி
தலைவனின் எண்ணத்தைத் தலை மீது தாங்கினாய்
மலைபோன்ற வெற்றிக ள் குவித்து நீ காட்டினாய்
விலையில்லா உன் வீரம் கண்டஞ்சி எதிரிதான்
தலைதெறித்தோடினன் தலைவனும் மகிழ்ந்தனன்
தாயகக் காற்றிலே உன்உயிர் கலந்ததா
தலைவனின் உயிரிலே உன் உயிர் இணைந்ததா
புலம்பெயர் மண்ணையே தேடியே வந்ததா
புதிதாகத் தமிழ் ஈழம் படை என்று சொனனதா
சிலகண நேரத்தில் சிந்தையில் நிறுத்தி உன்னை
மலர்ப்படுக்கை போட்டு விட்டு மறப்போமா உன்னைஐயா
கடமை முடிந்ததென்று நாம் கை கட்டி நிற்போமா
வீரத் தளபதி உன் கனவை நனவாக்கிடுவோம்
எம் இதயத் துடிப்பிங்கு எழு எழு என்குதே
உதிரத்தின் ஓட்டமோ உணர்வினால் கொதிக்குதே
எதிர்காலம் எம்கையில் என அது உணர்த்துதே
எடுத்தோம் உன் இலட்சியம் நிறைவேற்றிக் காட்டுவோம்
எம்தலை குனிந்துமக்கு வீர வணக்கத்தைச் செலுத்தினோம்.
கவியாக்கம்:- அம்பிகா ( 2008 எழுதிய கவிதை )
“புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்”