குமுதினி மிதக்கும் போர் நினைவுச் சின்னம்
குமுதினி மிதக்கும் போர் நினைவுச் சின்னம்
குமுதினியில் பயணம் செய்து கொண்டிருந்த மக்கள் ஸ்ரீலங்கா படையினரால் அழிக்கப்பட்டது நடந்தேறி முப்பது ஆண்டுகளாகி விட்டன.
‘குமுதினி” நெடுந்தீவுக்கு பயணிகளை ஏற்றிச் செல்லுகின்ற படகு. 1960களிலிருந்து இன்று வரை நெடுந்;தீவு மக்களை வெளியுலகத் தொடர்பில் வைத்திருக்க உதவிய படகு.
குமுதினி அந்த மக்களின் உயிராகிவிட்டது. அது ஒரு நினைவுச்சின்னம். ஒரு போர் நினைவுச்சின்னம். அந்த மக்களின் வாழ்வின் நினைவுச்சின்னம். அந்த சடப்பொருள் இன்று வரலாறாகி விட்டது.
இப்போது நயினாதீவுக்கு செல்வதற்காக, குறிகாட்டுவான் இறங்குதுறைக்குள் ஸ்ரீலங்கா கடற்படையினர் மக்களை மூடியிருந்த கதவைத்திறந்து அனுமதிக்கின்றனர். அப்பொழுதுதான் என் வரலாற்றில் முதல் தடவையாக “குமுதினி” என் கண்களில்படுகின்றது. உண்மையில் குமுதினியில் மக்கள் உயிர்கள் ஸ்ரீலங்கா கடற்படையினரால் காவு கொள்ளப்பட்ட வேளையில் குமுதினியின் தோற்றம் எனக்குத் தெரியாவிட்டாலும், அந்த முதல் கடற் படுகொலையால் குமுதினி எல்லா மக்களின் மனங்களிலும் நிலைத்துவிட்டதைப் போலவே. தோன்றாப்பொருளாக நிலைத்துவிட்ட குமுதினியின் நேர்த்தோற்றம் எனக்குள்ளும் நிலைத்துவிட்டது என்பதை என்னால் உணரமுடிந்தது.
அவ்வேளை அதன் தோற்றம் ஒரு சடப்பொருளாய் வெறும் படகாய் இருக்கவில்லை. கொல்லப்பட்ட எமது மக்களின் உயிராகவும் தெரிந்தது. குறிகாட்டுவான் இறங்குதுறையின் முழு நீளத்ததையும் தாண்டி அறுபது அடி நீளத்தில் இறங்குதுறையில் குமுதினி கிடந்தது.
குமுதினியின் அரசியல் வரலாற்றின் முதற்பகுதி.
குமுதினி 1960களில் இலங்கை பொது வேலைத் திணக்களத்தினால்நெடுந்தீவுக்கு போக்குவரத்துச் சேவையில் ஈடுபடுத்தப்பட்டது. இது திருகோணமலை ‘டொக்யாட்டில்” கட்டப்பட்டு ஜேர்மனியின் புக் எந்திரம் பொருத்தப்பட்ட ஒரு குட்டிக்கப்பலின் பரிமாணத்தில் மரக்கலமாக குமுதினி உருவாகியிருந்தது. தீவகத்தின் ஆழக்கடலில் தனித்துநின்ற நெடுந்தீவு மக்களின் வெளியுலகத்ததரிசிப்புக்கான பாதையை திறந்துவைத்தது.
குமுதினியுடன் காலத்துக்கு காலம் பல படகுகள் நெடுந்தீவுக்கான போக்குவரத்துச் சேவையில் ஈடுபட்டாலும் குமுதினிதான் தன் வாழ்வை உழைப்பை 40 ஆண்டுகளாக தொடர்ந்துவந்தது.
1980களில் போர்முனைப்புற்ற காலத்தில் போராட்டப்பணிகளையும் ஒரு வகையில் அது ஆற்றியது.அ தனால் குமுதினிமீது நயினாதீவு ஸ்ரீலங்கா கடற்படையினர் கண்வைக்கத்தொடங்கினர்.நடுக்கடலில் வைத்து குமுதினி அடிக்கடி கடற்படையினரால் சோதனைக்கு உள்ளாக்கப்படத் தொடங்கியது. கடலில் குமுதினிக்கே இந்த விசேடகவனிப்பு. இதற்கு அடிப்படை காரணம் நெடுந்தீவு இந்திய கடல் எல்லைக்கு மிக அருகில் இருப்பதாகும். அத்தடன் நெடுந்தீவின் ஒரு கிராமசேவையாளர் பிரிவின் கீழ் உள்ள இந்திய கடற்கரைக்கு அண்மையாக உள்ள கச்சதீவும் ஒரு காரணமாகும். நடுக்கடல் சோதனையைத் தவிர நயினாதீவில் உள்ள ஸ்ரீலங்கா கடற்படைத்தளத்திலும் அதிக சோதனைக்கு குமுதினி உள்ளாக்கப்பட்டு வந்தது. அதில் செல்லும் மக்கள் விசாரிக்கப்படுவது, தாக்கப்படுவது வழமையானதாகியும் விட்டது. அன்றும் அப்படித்தான்பொழுது விடிந்தது. நெடுந்தீவின் மாவலித்துறை இறங்குதுறையில் குமுதினி காலை 7 மணிக்கு பயணத்துக்கு தயாராகியிருந்தது.
குமுதினியின் அரசியல் வரலாறின் தொடக்கம்
1985 மே 15 நெடுந்தீவு மாவலித் துறைமுகத்தில் இருந்து 64 பயணிகளுடன் காலை 7.00 மணிக்கு புறப்பட்டது. முதலில் பொது வேலைகள் திணைக்களத்தின் படகாக இருந்து, தற்போது வீதி அபிவருத்தி அதிகார சபையின் கீழ் இயங்கி வருகிறது.
குமுதினிப்படகு அரைமணி நேரத்தின் பின் கடலில் ஸ்ரீலங்கா கடற்படையினரால் வழிமறிக்கப்பட்டது. இயந்திர அறை முன்பகுதி பின்பகுதி என மூன்று பிரிவாகப் பிரிக்கப்பட்டுள்ளது.
கடற்படையினர் குமுதினியை நிறுத்தினர். எட்டு கடற்படையினர் முக்கோண கூர்க்கத்தியும் கண்டங்கோடலிகள் இரும்புக்கம்பிகள் சகிதம் குமுதினியில் ஏறினர். பின் புறமிருந்த பயணிகளை இயந்திர அறையின்; முன்பக்கம் செல்லுமாறு மிரட்டினர். அவர்கள் அனைவரும் சென்றுவிட்டனர். பின்புறம் இருபுற இருக்கைகளுக்கு நடுவே பலகைகளினால் இயந்திரத்தில் இருந்து பின்புறம் ‘புறொப்பிலருக்கு” செல்லும் ஆடு தண்டுப்பகுதி மூடப்பட்டிருந்தது மூடப்பட்டிருந்த அப்பலகைகளை கடற்படையினர் அகற்றினர். இருக்கை மட்டத்தில் இருந்து சுமார் 4அடி ஆழமானதாக அது இருந்தது.
இதன்பின் முதலில்படகுப்பணியாளர்கள் ஒவ்வொருவராக உள்ளே அழைக்கப்பட்டனர். குமுதினியின் இருபக்க வாசல்களிலும் உள்ளும் வெளியும் கடற்படையினர் இருந்தனர். ஒவ்வொருவராக கடற்படையினர் அழைத்து கத்தியால் குத்தியும் கண்டங்கோடலியால் வெட்டியும் இரும்புக்கம்பியால் தாக்கியும் கொன்று அந்த நடுப்பள்ளத்தில் போட்டனர். இப்படி கொல்லப்படுபவர்கள் எழுப்பும் அவல ஒலி முன்புறம் இருப்பவர்களுக்கு கேட்கக்கூடாது என்பதற்காக அவர்கள் பெயரையும் ஊரையும் உரக்கச் சொல்லுமாறு பணிக்கப்பட்டனர்.
அவர்கள் அனைவரும் உரத்துச் சொல்ல அதில் பின்புறம் கொல்லப்படுபவர்கள் எழுப்பும் அவல ஒலி மறைந்தது.பின்புறம் செல்பவர்களுக்கு என்ன நடக்கிறது என்பது முன்புறம் இருப்பவர்களுக்கு தெரியவே தெரியாது. பின்புறம் செல்பவர்கள் உள்ளே சென்று கிடங்காக உள்ள பகுதியில் குத்திக்கிடப்பவர்களை காணும் வரை அவர்களுக்கு முன் சென்றவர்களுக்கு என்ன நடந்தது என்பது தெரியாது.
அவலக் குரல் எழுப்ப முடியாது செத்தவர் போல் இருந்தவர்களும் உண்டு. கடுமையாகத் கடற்படை தாக்க குரல் எழுப்பியவர்கள் அதிகளவில் தாக்கப்பட்டு இறந்து விட்டார்கள் என கடற்படையினரால் கருதப்பட்டும் போடப்பட்டனர். உள்ளே பள்ளமாக இருந்த பகுதியில் உடல்கள் போடப்பட்டதால் முன்புறம் இருந்து செல்லுபவர்களுக்கு முதல் சென்றவர்களும் கொல்லப்படுவது தெரியாது மறைக்கப்பட்டது. கார்த்திகேசு நுழைவாயிலிலேயே கொலையுண்டோரைக் கண்டு கடலில் குதித்தார். வேட்டி அணிந்திருந்த படியால் அவர் கடலில் மிதக்கத் தொடங்கினார். துப்பாக்கியால் சுடப்பட்டு அவர் கொல்லப்பட்டார். ஏழு மாத குழந்தை; முதல் வயோதிபர் வரை ஈவிரக்கமின்றி கொலை செய்யப்பட்டனர். அதில் செத்தவர் போல் கிடந்து மூன்று அல்லது நான்கு படகுப்பணிகள் மட்டுமே உயிர் தப்பினார்.
நடுக்கடலில் இப்படியாக சகலரும் கொல்லபட்டும் காயப்பட்டும்போக அனைவரையும் கொன்று விட்டதாக கடற்படையினர் கருதிக் கொண்டு திருப்திப்பட்டனர்.அந்த திருப்தியால் மகிழ்வடைந்த கடற்படையினர் தமது படகில் நயினாதீவு தளத்துக்கு சென்று தமக்கும் இச் சம்பவத்திற்கும் தொடர்பில்லாதது போன்று இருந்து விட்டனர்.குமுதினி எந்திரம் நிறுத்தப்பட்டதால் அது நடுக்கடலில் தத்தளித்தது. குமுதினியில் சென்றோர் அனைவரும் இறந்தும் குற்றுயிரும் குலைஉயிருமாக பின்புற புறப்பலரை சுழற்றும் ஆடுதண்டு கிடங்குக்குள் கிடக்கின்றனர். படகின் ஓட்டிகள் அனைவரும் கொல்லப்பட்டுவிட்டனர். சம்பவ வேளையில் ஏழு படகுப்பணியாளர்களில் ஆறு பேர் மட்டும் இருந்துள்ளனர். அவர்களுடன் இருவர் ஒட்டிகளான ஹொக்ஸன்கள் அவர்கள் இருவரும் கொல்லப்பட்டுவிட்டனர். இவர்களை விட படகை ஒட்டக்கூடிய நிலையில் காயமடைந்து ஒருவரும் இல்லை.படகின் இயந்திர இயக்குனர் மட்டும் மண்டையில் கத்திக்குத்துடன் மயங்கிக் கிடந்தார். முப்பது நிமிடங்களாக குமுதினி ஆழக்கடலில் தத்தளித்துக்கொண்டலைந்தது.பின்புறக்கிடங்கில் மயங்கிக் கிடந்தவர்களில் தெளிந்த திடகாத்திரமான மயிலிட்டி வாசி தம்மை சுதாகரித்து எழுந்து மயங்கிக் கிடந்த இயந்திர இயக்குனரை எழுப்ப முயன்றார். ஆனால் அவர் அரை மயக்கத்திலிருந்து எழ வில்லை. இருந்தும் அந்த நிலையில் அவரை இழுத்துக்கொண்டு இயந்திர அறைக்குள் அவரை அவர்கள் இழுத்துச்செல்கின்றனர். இயந்திர இயக்குனரை இயந்திர அறைக்குள் அவர்கள் கொண்டு செல்கின்றனர். அவரை இயந்திரத்தை இயக்குமாறு செய்யச்சொல்கின்றனர். ஆனால் அவர் மயக்கமடையவே இயந்திரம் இயக்கப்பட முடியாது போனது. அவர் சுதாகரித்து இயந்திரத்தை இயக்கியிருந்தால் மிகுந்த ஆபத்து உருவாகியிருக்கும். ஏனென்றால் குமுதினியை ஸ்ரீலங்கா கடற்படையினர் மறித்தபோது அது இயக்கநிலையில் கியரிலேயே நிறுத்தப்பட்டது.
இதனால் அந்தவேளை எந்திரம் இயக்கப்பட்டிருந்தால் இயந்திரம் சுழல் ஆடுதண்டு புறப்பலரை சுற்றியிருக்கும். அந்த ஆடுதண்டுக்கு மேலேயே கொல்லப்பட்ட மக்களும் காயப்பட்ட மக்களும் போடப்பட்டிருந்தனர். ஆடுதண்டு சுழன்றிருந்தால் அவர்கள் சக்கையாக்கப்பட்டிருப்பர். எந்திரம் இயங்காத நிலையில் குமுதினி நடுக்கடலில் அலைந்து கொண்டிருந்தது.கடல் நீரோட்டத்தில் அது அடித்துச் செல்லப்பட்டது. புங்குடுதீவு கண்ணகை அம்மன் கோயில் கரையை நோக்கி தானாகவே நகரத் தொடங்கியது. கடலில் அலைந்து திரிந்த குமுதினி புங்குடுதீவு கண்ணகை அம்மன் கோயிலுக்கு நேராக சென்றது. அதன் பின் நீரோட்டத்தால் நயினாதீவு நோக்கி அலையத் தொடங்கியது. குறிகாட்டுவானில் எட்டு மணிக்கு வரவேண்டிய குமுதினி வந்து சேராததால் பதட்டம் ஏற்பட்டது. எந்திரக் கோளாறா, எரிபொருள் தீர்ந்ததா என்ற கேள்வியே அங்கு எழுந்தது. ஆனால் படுகொலை ஒன்று நடந்திருக்கும் என எவரும் எதிர்பார்க்கவில்லை. குமுதினியை தேட ஆயத்தம்நடந்தது.
குமுதினி நயினாதீவு நோக்கி அலைந்தது நயினாதீவு அருகே ஆழ்கடல் ஆரம்பிக்கும் பகுதியை அடைந்து களப்பு கடலின் ஒரு மேடருகே பொறுத்துப் போனது.குறிகாட்டுவான் துறையின் நுழைவாயிலில் ஒரு சில கடைகள் இருந்தன. உணவுக்கடைகள் அவை. திடீரென கடையொன்றின் உரிமையாளரான திருமதி. திருநாவுக்கரசு அவர்கள் இச் சம்பவத்தைக் கண்டு பரபரப்படைந்தார்.
தொலைவில் குமுதினி அலைவதைக் கண்டார். குமுதினிக்குள் இருந்து ஒரு வெள்ளைத்துணி ஒன்று அசைவதைக் கண்டார். குமுதினிக்குள் தப்பியவர் ஒருவர் காட்டிய அழைப்பு அது. அப்போது குமுதினி பழுதடைந்ததாகவே கருதி உடனடியாக அதனைநோக்கி படகில் மீட்புப்பணிக்காக குறிகாட்டுவான் இறங்குதுறையிலிருந்து குழு ஒன்று சென்றது. அவர்கள் குமுதினியை நெருங்கி அதனுள் ஏறிப்பார்த்தபோது இரத்தத்தை உறைய வைக்கும் பிணக்குவியலை கண்டனர். உடனடியாக குமுதினி குறிகாட்டுவான் நோக்கி இழுத்து வரப்பட்டது.
விடுதலைப்புலிகள் அங்கு விரைந்து மீட்பு நடவடிக்கையைத் தொடங்கினர். காயமடைந்தோர் உடனடியாக புங்குடுதீவு மருத்துவமனைக்குகொண்டு செல்லப்பட்டனர். இறந்தோர் உடல்கள் யாழ் போதனா மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டன. புங்குடுதீவு மருத்துவமனையிலிருந்து கடுமையாக காயமடைந்தோர் பின்னர் யாழ் போதனா மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.இப்படுகொலையின் பின் காயமடைந்தவர்கள் புங்குடுதீவு மருத்துவமனையிலும் யாழ் போதனா வைத்திய மனையிலும் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். இவர்கள் தாக்கப்பட்ட விடயம் மருத்துவமனை ஸ்ரீலங்கா பொலிசாரிடம் முறையிடப்பட்டும் எதுவித நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை. பதிலாக சில நாட்களில் தப்பியவர்களை மருத்துவமனைக்கு வந்த ஸ்ரீலங்கா கடற்படையினர் தேடத் தொடங்கினர்.
உடனடியாக மருத்துவமனையில் இவர்கள் விடுதிகளுள் இடம் மாற்றி மறைக்கப்பட்டனர். உயிர் தப்பிய படகுப்பணியாளர் மருத்துவமனையில் கடற்படையினர் தேடப்படுகின்றபோது அவர் மறைக்கப்பட்டு கடைசிவரை தலைமறைவிலேயே சிகிச்சை பெற்றார். இரு பெண்களைத்தவிர ஏனையோர் வெளிநாடுகளுக்கு தப்பிச் சென்றனர். படுகொலை சாட்சியங்கள் தப்பிவிடக்கூடாது என்பதற்காக கடற்படையினர் அவர்களை தேடித்திரிந்தனர். இன்றும் தேடிக்கொண்டிருக்கின்றனர். எதுவித விசாரணைகளும் நீதி வழங்கலும் இல்லாது அந்த கடற்படுகொலை மறைக்கப்பட்டுவிட்டது.ஆனால் ஆட்களை தேடுவதில் இன்றும் ஸ்ரீலங்காப்படையின் அக்கறை தீவிரமாக இருப்பது தெரிகின்றது.குமுதினி குறிகாட்டுவான் இறங்கு துறைக்கு கொண்டு வரப்பட்டு அதற்குள் இருந்த இறந்தோரையும் காயமடைந்தோரையும் வெளியேற்றும் பணி விடுதலைப்புலிகளால் மேற்கொள்ளப்பட்டது.அப்போதைய தீவகப் பொறுப்பாளர் உடனடியாக களத்தில் இறங்கி செயற்பட்டார்.காயமடைந்தோர் முதலுதவிக்காக புங்குடுதீவு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு முதலுதவியின் பின் யாழ் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். இறந்த முப்பத்தி மூன்று பேரின் உடல்கள் புங்குடுதீவு மருத்துவ மனையில் வைக்கப்பட்டன. புங்குடுதீவுமக்கள் அங்கு திரண்டனர். சிங்களப்படைகளின் கொடுமை கண்டு கொதிப்புற்றனர். அம் மக்கள் உடனடியாகவே பணம் திரட்டிக் கொடுத்தனர்.அந்த பணத்தைக் கொண்டு உடனடியாக தீவகப் பொறுப்பாளர் பாய்களை கொள்வனவு செய்து இறந்தோர் உடல்களை அவற்றைக் கொண்டு கட்டி யாழ் போதனா மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார். அடுத்த கட்டமாக இறந்தோரின் இறுதிக்கிரியைக்காக புங்குடுதீவு மக்களின் பணத்தைக்கொண்டு சவப்பெட்டிகள் கொள்வனவு செய்யப்பட்டன. மரண விசாரணையின் பின்னர் மருத்துவ மனையிலும் இறந்தவர்களுடன் முப்பத்தியாறுபேரின் உடல்கள் அவரவர் இடங்களுக்கு கொண்டு செல்லப்பட்டன.
நெடுந்தீவுக்கு கொண்டு செல்லப்பட வேண்டிய உடல்களை கொண்ட சவப் பெட்டிகள் புங்குடுதீவு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டன. அங்கு இனவாதத்தில் பலியான மக்களின் நினைவு கூரல் நிகழ்வு இடம்பெற்றது.குமுதினியில் கொலையுண்ட மக்களின் குடும்பங்களிற்காக அம் மக்கள் திரட்டிக் கொடுத்த பணத்தில் மிகுதியான பணத்தில் தமிழர் வரலாறில்முக்கியமான ஒர் பதிவு நடந்தது. எஞ்சிய பணத்தில் படுகொலைக்கான நினைவுப் பிரசுரம் ஒன்று அச்சிடப்பட்டது.
அதில் முக்கிய விஞர்களான சு.வில்வரத்தினம்,மு.பொன்னம்பலம் ஆகியோரின் கவிதைகளும் நிலாந்தனின் முதல் கவிதையும் பிரசுரமானது. சு.வில்வரத்தினத்தின் கவிதை ‘காலன் கடைவிரிக்கிறான்” என்ற தலைப்பில் அமைந்தது என்ற தகவல் மட்டும் இருக்கிறது. ஆனால் கவிதையை காணக்கிடைக்கவில்லை. மு.பொவின் கவிதையும் அப்படியே. ஆனால் நிலாந்தனின் ‘கடலம்மா” கவிதைதான் அழியாப் பதிவாக இலக்கிய சாட்சியமாக இன்றும் இருக்கிறது.காலத்தால் அழியாத பதிவாக அது இருக்கிறது. கடல் என்ற சடப்பொருளை ‘கடலம்மா” என விழித்து கடலுக்கு உயிர்ப்பைக் கொடுத்த கவிதை. கடலை தமிழருடன் உயிர்ப்பாக பிணைத்த கவிதை. கடலை கடலம்மாவாக கருத்துருவாக்கிய முதல்கவிதையாகவும் அதுதான் அமையும் என கருதலாம்.அந்த கடலம்மா என்று கடலுக்கு உயிர்கொடுத்தது அந்த கவிதை. கடலுடன் குமுதனி என்ற சடப் பொருளான படகுக்கும் உயிர் கொடுத்த கவிதை.இன்றும் குமுதினி தமிழ்மக்களின் உயிர்களின் இருப்பிடமாக இல்லாமல் குமுதினியாகவே மாறி இருக்கிறாள். இதனையும் நிலாந்தனின் கவிதை சாதித்துக் கொடுத்திருக்கிறது.
கடலம்மா…
கடலம்மா…! கடலம்மா… நீயே சொல்
குமுதினி ஏன் பிந்தி வந்தாள்? – எம்மவான் அவலங்களைச்சடலங்களாய்ச் சுமந்துகொண்டு
குமுதினி குருதி வடிய வந்தாள்.
கடலம்மா கண்டாயோ?
கார்த்திகேசு என்னவானான்?
எந்தக் கரையில்உடலு¡திக் கிடந்தானோ?
ஓ…! சோழகக் காற்றே
நீ, வழம்மாறி வீசியிருந்தால்…
குமுதினி வரமாட்டாள் என்று
நெடுந்தீவுக்குச் சொல்லியிருப்பாய்.
பாவம் மரணங்களின் செய்தி கூடக்கிட்டாத தொலைதீவில்,
ஏக்கங்களையும் துக்கங்களையும்
கடலலைகளிடம் சொல்லிவிட்டுக் காத்திருக்கும் மக்கள்…
கடலம்மா நீ மலடி
ஏனந்தத் தீவுகளை அனாதரவாய்த்
தனியே விட்டாய்?
கடலம்மா… உன் நீள் பரப்பில்அனாதரவாய்
மரணித்த எம்மவரைபுதிய கல்லறைகளை எழுப்பியு
அனாதைக் கல்லறைகள் என நினைவூட்டு.
ஆனால், இனிவருங் கல்லறைகள் வெறும்
இழப்புக்களின் நினைவல்ல,
எமதுஇலட்சியங்களின் நினைவாகட்டும்!
– 1985 அலை 26 கவிஞர் நிலாந்தன்.
இதை மையமாக கொண்டு 1990களின் பிற்பகுதியில்குமுதினியின் படுகொலை அவலத்தை சுவிசில் ஏ.ஜி.யோகராஜாவின் எழுத்தில் அன்ரன் பொன்ராஜாவின் நெறியாள்கையில் கடலம்மாஎன்ற நாடகத்தை அரங்கேற்றினர்.அது அங்குள்ள மற்றைய மொழிக்காரரின்கவனத்தை ஈர்த்தது.
குமுதினி ஒரு மிதக்கும் ஒஸ்ட்விச்
என்ன இது புதிதான சொல் என திகைக்கவேண்டாம்.ஒஸ்ட்விச் என்பது ஜேர்மனியை ஆண்ட ஹிட்லர் யூதர்களை படுகொலை செய்த வதை முகாம்.அந்த வதைமுகாமில் நடந்த மாதிரிதான் குமுதினியில் எமது மக்கள் சிங்களப்படைகளால் படுகொலை செய்யப்பட்டனர். தாம் கொல்லப்படும் வரை என்ன நடக்கப்போகின்றது எனத்தெரியாமலே குமுதினியில் மக்களின் படுகொலை நடந்தது.
குமுதனி படுகொலை நடந்த விதம் எப்படி என்பதை நாம் அறிந்திருக்கிறோம் .இப்போது ஒஸ்ட்விச் கொலை பற்றி யூதர்களின் ஆவணம் ஒன்றிலிருந்து பார்ப்போம். அறுபது ஆண்டுகள் கடந்தோடிவிட்டன. ஆயினும் மனித குலவரலாற்றில் ஆறாத காயாமாகவே இந்நிகழ்வு பதிந்துவிட்டது. உலகமே வெட்கித் தலை குனியும் அந்;த நாளை பத்திரிகைகள் ,வானொலிகள், தொலைக்காட்சிகள் யாவும் முக்கியத்துவம் அளித்துப் பேசின. வளர்ந்து வரும் இளம் சந்ததியிடம் – மனிதகுல வரலாற்றில் நிகழ்ந்த அந்த அநீதியை மறக்கக்கூடாத ஒரு பாடமாகக் கையளிப்பதற்காகவும், அவர்களை மனித நேயம்மிக்கவர்களாக வளர்ப்பதற்காகவும் இந்த நாள் நினைவுகூரப்படுகிறது. இரண்டாம் உலக மகாயுத்தக் காலத்தில், நாசிப்படையானது பல வதைமுகாங்களை உருவாக்கியுள்ளது.
பல லட்சக்கணக்கான மக்களை, குறிப்பாக யூதர்களை உலகத்தின் பார்;வையிலிருந்து மறைத்து இரகசியமாக சிறையில் அடைக்கவும், சித்திரவதை செய்யவும், கொல்லவுமாக அமைக்கப்பட்டதே இந்த வதை முகாம்கள். இவற்றுள் போலந்து நாட்டில், ஜேர்மனியின் எல்லைக்கு அருகிலுள்ள ஒஸ்விச் என்ற நகரத்தில் 1940 ஆம் ஆண்டளவில் அமைக்கப்பட்ட வதைமுகாம் மிகவும் முக்கியமானது.
இங்கு 1942 க்கும் 1945 இடையில், பத்து லட்சத்திற்கும் மேற்பட்ட யூத மக்கள் கொல்லப்பட்டிருக்கிறார்கள். 6 லட்சத்திற்கும் மேற்பட்ட ஏனையோர்கள் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். இதனால் ஒஸ்விச்சினுடைய பெயர் என்றென்றும் மறக்க முடியாததாக இருக்கிறது. அங்கே துன்பங்களும் அதைத் தொடர்ந்த மரணங்களும் பின்னிப் பிணைந்திருக்கின்றன. அம் முகாமில் யூத மக்களை அழிப்பதற்காகவென்றே நச்சுவாயு அறைகளும், இறந்தவர்களது உடல்களை எந்த அடையாளமுமின்றி எரிக்கக்கூடிய மின்சார அடுப்புக்களும் நன்கு திட்டமிட்டு அமைக்கப்பட்டிருந்தன அந்நேரம் ஒரு ரயில் கூவலின் சத்தம் அந்த அமைதியை கிழித்துக்கொண்டு கேட்கும். அங்கு நாய்களின் சத்தத்தைக் கேட்கமுடியாது. அல்லது அந்த அவலத்துக்குட்பட்ட பெற்றோர்களிடமிருந்து பிள்ளைகளை பிரிப்பதன் கதறல் ஒலிகளைக் கேட்கமுடியாது. அமைதி மட்டும்தான்; அங்கு குடியிருக்கும்.அப்போது பொதுவாக யாருடைய மனக்கண்களிலும், பல லட்சக்கணக்கான பெண்களை விரியும். அப்படி அனுப்பப்பட்ட அம் மக்களுக்கு தாம் எங்கே கொண்டு செல்லப்படுகின்றோம் என்பது தெரியாது.அவர்கள் தங்களது குடும்பத்திலிருந்து பிரிக்கப்பட்டவர்களாக, நிர்வாணமாக்கப்பட்டவர்களாக, தலை மொட்டையடிக்கப்பட்டவர்களாக, அழுதுகொண்டேயிருப்பவர்களாக, தொடர்ச்சியான உடல் வதைக்குட்பட்டவர்களாக, தாங்கள் வாழ்ந்த இடங்களை விட்டு பிரிக்கப்பட்டவர்களாக, பல கொடுமைகளை சுமந்து அந்த வதை முகாம்களுக்குள் அடைக்கப்பட்டார்கள். பின்பு அவர்கள் விசவாயு மூலம் கொல்லப்பட்டார்கள்.
கடைசிவரை தாம் கொல்லப்படப் போகிறோம் என்பது தெரியாது ஒஸ்டவிச்சில் யூதர்கள் படுகொலையானதைப்போல சில அடி தூரத்துக்குள் தம் சக மக்கள் கொல்லப்படுவது தெரியாது கொல்லப்பட்ட அவலம், ஏழு மாத குழந்தை பறித்தெடுக்கப்பட்டு குத்திக் கொல்லப்பட்ட கொடுமை குமுதினியில் நிகழ்ந்தது. யூதமக்களின் படுகொலையை நினைவில் வைத்திருக்க அந்த வதை முகாம் இன்றும் பராமரிக்கப்படுகின்றது.
நமது தாயகத்திலும் இன்றும் வாழும் படுகொலை வரலாற்றுச்சின்னம் குமுதினி. யாழ் பொது நூலக அழிப்பு மறைக்கப்பட்டது போல விடக்கூடாது எம் உயிர்களை பலிகொண்ட அந்த கொடுமை மறக்கப்படக்கூடாது. எம் மக்கள் படுகொலை செய்யப்பட்ட நினைவுச்சின்னங்கள் வேறு எமக்கு இல்லை. குமுதினியில் கொல்லப்பட்ட மக்களின் சடலங்களை நெடுந்தீவுக்கு கொண்டு செல்லப்பட ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டன. குமுதினி குறிகாட்டுவான் இறங்குதுறையில் கட்டப்பட்டுக்கிடந்தது.அதனுள் மக்களின் இரத்தமும் கடல்நீரும் டீசலும் கலந்து இருந்தன. அந்தப்பக்கமே மக்கள் செல்லமுடியாத படி நிண நாற்றம் எடுத்தது. இந்தக் குமுதினியில்தான் உடல்கள் நெடுந்தீவுக்கு கொண்டு செல்லப்படவேண்டும்.
அதற்கு குமுதினி சுத்தப்படுத்தப்பட வேண்டும். ஆனால் எல்லோருமே அதற்குக் கிட்ட செல்ல பயப்பட்டார்கள். ஒன்று நிணநாற்றம், அடுத்தது அதற்குள் மக்கள் படுகொலை செய்யப்பட்டதால் ஏற்பட்ட பயம். இறுதியாக சாராயம் வாங்கிக் கொடுக்கப்பட்டு சிலரைக்கொண்டு குமுதினி கழுவப்பட்டது. மூன்றாம் நாள் தனது மக்களை சடலங்களாக காவிக்கொண்டு குமுதினி நெடுந்தீவு நோக்கி புறப்பட்டது. இந்தக் கல்வெட்டு நெடுந்தீவின் மாவலித்துறையில் அமைக்கப்பட்டுள்ள குமுதினிப்படுகொலை நினைவாலயத்தில் அமைக்கப்பட்டுள்ளது. இந்த
நினைவாலயம் ஸ்ரீலங்கா கடற்படையினதும், பொலிசாரினதும் காவல் நிலையமாக இப்போது இருக்கிறது. அதனுள் நுழைந்து அந்த கல்வெட்டை பார்ப்பதே பெரும் துன்பம்.ஒரு நாள் இந்தப் பெயர் விபரத்தை எடுப்பதற்காக நெடுந்தீவிற்குச் சென்றேன். மாவலித்துறையில் நுழைந்து குமுதினி நினைவாலயத்துள் செல்லமுற்பட கடற்படையினர் என்னை மறித்தனர்.
“என்ன” என்று கேள்வி எழுப்பினர். நான் குமுதினி கல்வெட்டைப் பார்க்கப்போகிறேன் எனக் கூறினேன். “அது முடியாது” எனத்தடுத்தனர். அதற்கு நான் இது இராணுவ இலக்கல்லவே எனப் பதிலளித்தேன்.அப்பொழுது அங்கு நின்ற ஸ்ரீலங்கா பொலிசாரிடம் கடற்படையினர் கேட்டனர். அவர் உடன் வந்து “யார் நீ, எதற்கு இந்த பேர் விபரம்” எனக்கேட்டார். அதற்கு நான் கட்டுரை ஒன்றுக்கு தேவை என்றேன். அதற்கு அவரோ மேலதிகாரியிடம் கேட்கவேண்டும் என்றார். சிறிது நேரம் சிங்களத்தில் தொலைத்தொடர்புக் கருவியில் கதைத்தார். பிறகு திரும்ப விபரம் கேட்டார், சொன்னேன், அடையாள அட்டை காட்டச் சொன்னார். காட்டினேன், அரைகுறை மனதுடன் சம்மதிக்க பையிலிருந்து கமரா எடுக்க “எதற்குக் கமரா” எனக் கேட்டார்.கல்வெட்டைப் படமெடுக்க எனப் பதிலளித்தேன். அதற்கு அவரோ ‘முடியாது” என்றார். கல்லை மட்டும் எனக்கேட்டேன். அரைகுறை மனதுடன் பொலிஸார் சம்மதித்தார். உடனடியாக கல்வெட்டுடன் சார்த்தி வைத்திருந்த துப்பாக்கிகள், ரவைக்கூடு, தாங்கி அணிகள் என்பவற்றை வேகமாக அகற்றினர். கல்லை மட்டுமா படமெடுக்கிறேன் என அவதானித்தனர் படையினர். அதைமட்டும் படமெடுத்துவிட்டு வெளியேறி நெடுந்தீவை சுற்றிப் பார்த்துவிட்டு திரும்ப ஒரு மணிக்கு குறிகாட்டுவான் திரும்பவென மாவலித்துறைக்கு திரும்பி அதன்மடத்துச் சுவரில் அமர்ந்திருந்தவாறு அங்கிருந்த ஒருவருடன் கதைத்துக் கொண்டிருந்தேன். அப்பொழுது குமுதினி நினைவாலயத்தில் இருந்து ஸ்ரீலங்கா பொலிசார் என்னைக்கூப்பிட்டார்.
என்ன எனக்கேட்டேன் ‘இந்தப்படம் எதற்கு” என்றார். இது ஒரு கட்டுரைக்கு என்றேன். மீளவும் அரைமனதுடன் அந்தப் பொலிசார் ‘சரி” என்றார். எந்தப் படையினர் எமது மக்களை குமுதினிப் படகில் கொன்றனரோ அந்தப்படையினரே அந்த மக்களின் நினைவாலயத்தை ஆக்கிரமித்தும் நின்றனர்.
குமுதினி படுகொலையின் பின்னரும் அது நெடுந்தீவு மக்களை ஏற்றிப் பயணித்துக் கொண்டேயிருந்தது. அந்த காலத்தில் குமுதினிக்கு சகோதரப் படகுகள் வீதி அபிவிருத்தி அதிகார சபையால் சேவையில் ஈடுபடுத்தப்பட்டன.கப்பலின் வடிவிலான உருக்கினால் உருவாக்கப்பட்ட வசதி மிக்க மணிமேகலை, வடதாரகை ஆகிய படகுகளும், எலரா என்ற மரத்தினாலான படகும் சேவையில் இறங்கின. இவற்றில் எலரா வல்வெட்டித்துறையைச் சேர்ந்த தனியார் ஒருவரின் படகு. கடத்தல் நடவடிக்கையில் ஈடுபட்ட போது அது ஸ்ரீலங்கா
படையினரால் பிடிக்கப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டு அரச உடமையாக்கப்பட்டது. அரசுடைமையாக்கப்பட்ட அந்த இழுவைப்படகு அரசால் நெடுந்தீவுக்கு கடல் போக்குவரத்துக்காக வழங்கப்பட்டது. வீதி அபிவிருத்தி அதிகார சபைக்குரிய படகு திருத்தத் தளம் காரைநகர் ஸ்ரீலங்கா கடற்படைத்தளத்துக்கு மேற்காக நீலாங்காடு என்ற இடத்தில் இருந்தது.
கடலில் இருந்து படகை துலாவினால் (வின்ச்) டொக்கில் ஏற்றப்பட்டு தண்டவாளம் மூலம் திருத்த வேலைத்தளத்திற்கு கொண்டு செல்லக்கூடிய வசதியினை இந்த வேலைத்தளம் கொண்டிருந்தது. வீதி அபிவிருத்தி அதிகார சபை முன்னர் பொது வேலைத்திணைக்களம் என்ற பெயரில் இயங்கிவந்தது. அப்போது இந்தத்தளம் ‘பிடபிள்யுடி” வேலைத்தளம் என்ற பெயராலேயே அழைக்கப்பட்டது.
1986ல் மணிமேகலை, வடதாரகை ஆகியன திருத்தப்பணிக்காகநீலாங்காடு தளத்துக்கு கொண்டு வரப்பட்டன.இவற்றில் மணிமேகலை டொக்கில் ஏற்றப்பட்டு நிறுத்தப்பட்டிருந்தது.
வடதாரகை டொக்கில் ஏற்றப்படுவதற்காக கடலில் நீலாங்காடு தளத்தின் முன்பாக நிறுத்தப்பட்டிருந்தது. ஈ.பி.டி.பி டக்ளஸ்தேவானந்தா ஈ.பி.ஆர்.எல்.எவ் இராணுவத்தளபதியாக இருந்தபோது 1986ல் காரைநகர் கடற்படைத்தளத்தை தாக்கியழிக்கிறேன் என்று ஒரு தாக்குதலை நடத்தினார். தாக்குதல்களுக்குரிய உபாயங்கள், இரகசியம் பேணும் தன்மை என்பவற்றை கொண்டிராத நிலையில் அந்த தாக்குதல் தோல்வியடைந்தது. இதில் இவர்களைக் காப்பாற்றியதில் விடுதலைப்புலிகளின் பங்கு இருந்துள்ளது. இந்த தாக்குதலையடுத்து காரைநகர் கடற்படைத்தளத்தில் நின்ற ஸ்ரீலங்கா கடற்படையினர் சரமாரியாக நீலங்காடு திருத்த தளம் மீது தாக்குதல் நடத்தினர்.இந்த தாக்குதலில் மணிமேகலையும், வடதாரகையும் அழிந்து போயின. திருத்தத்தளமும் அழிந்து போனது. இந்த வசதி மிக்க இரு படகுகளும் அழிந்து போன நிலையில் குமுதினிதான் நெடுந்தீவின் போக்குவரவிற்கான உயிரானாது. எலரா படகும் பழுதடைந்து கைவிடப்பட்டது. இதற்கு பிறகு 1980களின் கடைசியில் மீளவும் ஒரு உருக்கினாலான வசதிமிக்க வேகமாக பயணிக்கத்தக்க படகு ஒன்று வீதி அபிவிருத்தி அதிகாரசபையால் வழங்கப்பட்டது. அதற்கு இடப்பட்ட பெயர் வலம்புரி. இந்த பெயர் பரீட்சயமான ஒன்றாக இருக்கிறதா.
ஓம், போரில் ஸ்ரீலங்கா கடற்படையின் பயன்பாட்டில் இருந்து தமிழ்மக்கள் அழிப்பு நடவடிக்கையில்ஈடுபடுத்தப்பட்டிருந்த வேளையில் வலம்புரி பருத்தித்துறை கடற்பரப்பில் கடற்கரும்புலித்தாக்குதலில் அழிக்கப்பட்ட தகவலை நீங்கள் அறிந்திருப்பீர்கள். அந்த அதே வலம்புரிதான் நெடுந்தீவுக்கு வழங்கப்பட்டது. அதன் கதையைப்பார்ப்பம். 1980 களின் கடைசியில் கையளிக்கப்பட்ட வலம்புரி சிறிது காலமே மக்களுக்கு சேவையாற்றியது.வசதியான இந்தப்படகு தமிழ் மக்களுக்கான சேவையில் ஈடுபட்டிருப்பது. ஸ்ரீலங்கா கடற்படையின் கண்களை உறுத்தியது. அதனை தாம் கைப்பற்ற வேண்டும் என அவர்கள் திட்டமிட்டனர். நயினாதீவு ஸ்ரீலங்கா கடற்படையினர் இதன் மீது கண்வைத்தனர்.ஆயினும் கைப்பற்றும் சந்தர்ப்பம் அவர்களுக்கு கிட்டவில்லை. இந்திய இராணுவ காலம் என்பதும் ஒரு காரணமாக இருந்தது. 1990 மார்ச்சில் இந்திய இராணுவம் போய்விட்டது.
அதற்கு பிறகு கொஞ்சக்காலம் பிரேமதாசவுடனான சமாதானக் காலம். 1990 யூனில் 2ம் ஈழப்போர் தொடங்கிவிட்டது.அப்போது வலம்புரியை கடற்படை பறிக்கும் என்று தெரிந்த காரணத்தால் வலம்புரியை மாவலித்துறையில் கட்டிவிட்டு. குமுதினியையும் கட்டிவிட்டு சாதாரண போக்குவரவுப்படகுகளில் பயணம் மேற்கொள்ளப்பட திட்டமிடப்பட்டது. இருந்தும் வலம்புரியை அவசர பயணமொன்றிற்காக குறிகாட்டுவான் கொண்டு செல்ல வேண்டிய தேவை ஏற்பட்டது.
வலம்புரி குறிகாட்டுவன் சென்றது. அதனை நயினாதீவிலிருந்து கடற்படையினர் கண்டு விட்டனர். படையினர் பார்த்துவிட்டது படகுப்பணியாளர்களுக்கு தெரிந்துவிட்டது. அதனால் அவர்கள் வலம்புரியை குறிகாட்டுவான்துறையில் கட்டிவிட்டு அதனை பூட்டிவிட்டனர்.அவர்கள்வேறு படகில் அதாவது நெடுந்தீவு கூட்டுறவுச் சங்கப்படகில் நெடுந்தீவு திரும்பினர். அந்தப்படகை கடற்படையினார் நயினாதீவுக்கு வருமாறு அழைத்தனர். அப்போது குறிகாட்டுவான் விடுதலைப்புலிகளிடம் இருந்தது. நயினாதீவுகுறிகாட்டுவான் இரண்டும் கால் மைல் இடைவெளியில் நேருக்கு நேர் தெரியும் வகையில் உள்ளன.இந்தப்படகு நயினாதீவு ஸ்ரீலங்கா கடற்படை இறங்கு துறைக்கு சென்றது. வலம்புரிப் படகுப் பணியாளர்களை கடற்படைக்கு தெரியும்அவர்களை அழைத்து ‘வலம்புரியை பார்க்கவேணும் கொண்டு வரும்படி” அவர்களிடம் கேட்டனர் கடற்படையினர்.அதற்கு அவர்கள் ‘வலம்புரியில் எஞ்சினியர்களை கொண்டு வந்தனாங்கள். அதில சின்னப்பழுது. எஞ்சினியர் பூட்டித் திறப்புக்கொண்டு போயிற்றார்.” என்றனர் அவர்கள். அரைகுறை மனதுடன் கடற்படையினர் அவர்களை விட்டுவிட்டனர். அடுத்தடுத்த நாட்கள் அவர்களுக்கு அழுத்தம் கடற்படையால் கொடுக்கப்பட்டது. ‘வலம்புரியை கொண்டு வரவேணும்.பார்த்துவிட்டுவிடுகிறோம்”
என அழுத்தமாக கடற்படையினர் சொல்லினர். வலம்புரியின் உண்மை நிலையை கடற்படைக்கு அவர்களின் உளவாளிகளாக இருந்த தமிழர்கள் சிலர் சொல்லிக்கொடுத்துவிட்டனர். ஒரு வார காலத்துக்கு மேல் கடற்படையினரைத் தாக்காட்டமுடியாத நிலையில் வலம்புரியை கொண்டு செல்ல முடிவு எடுக்கப்பட்டது. பயணிகளுடன் சென்றால் படகை விட்டுவிடுவார்கள் என்று பயணிகளையும் வலம்புரியில் ஏற்றிச் சென்றனர். நயினாதீவுக்கு வலம்புரி கொண்டு செல்லப்பட்டு இறங்கு துறையுடன் அணைக்கப்பட்டது. அவசர அவசரமாக கடற்படையினர் அங்கு குவிந்தனர். அவர்களுடன் நயினாதீவின் விகாரையில் இருந்த பௌத்தபிக்கு ஒருவரும் நின்றிருந்தார். வலம்புரியிலிருந்து மக்களை வெளியே வருமாறு கடற்படையினர் மிரட்டினர். பயத்துடன் மக்கள் வெளியில்; வந்தனர்.கடற்படையினர் வலம்புரிக்குள் ஆவலுடன் சென்று பார்த்தனர். பிறகு வெளியில் வந்தனர். அதிகாரிகள் தரத்தில் ஒருவர் வந்தார். படகுப் பணியாளரிடம் வலம்புரியின் திறப்பைத் தருமாறு கேட்டனர்.’ஏன்” என்று அவர்கள் கேட்டனர்.அதனை நாம் பொறுப்பேற்கிறோம் என்றார் கடற்படையின் அதிகாரி ‘அதனை நாங்கள் செய்யமுடியாது. எமது அதிகாரிகள்தான் அதனை தீர்மானிக்கவேண்டும்” என்றனர் அவர்கள்.’ அதனை ஏற்கமுடியாது திறப்பைத் தாருங்கள்” கடற்படை இதனை பொறுப்பேற்கிறது என தெரிவித்து கடற்படையினர் திறப்பை பறித்து விட்டனர்.
நயினாதீவிலிருந்த படகு ஒன்றில் மக்களை நெடுந்தீவுக்கு அனுப்பப்பட்டனர்.இந்த காலம் தொட்டு நெடுந்தீவு பயணிகள் படகுகள் நயினாதீவுக்கு வந்து செல்ல வேண்டும் என்று சொல்லப்பட்டது. இதேபோல் அனலைதீவு, எழுவைதீவு பயணிகள் படகுகளும் நயினாதீவு வந்துதான் குறிகாட்டுவான் செல்லவேண்டும் என கடற்படையினாரால்கட்டளையிடப்பட்டது. வலம்புரி பறிகொடுக்கப்பட்டது. சில நாட்களில் அது காரைநகருக்கு கடற்படையினரால் கொண்டு செல்லப்பட்டது. இனி கடற்படையின் அடுத்தஇலக்கு என்ன? அடுத்ததாக நெடுந்தீவு பயணிகள் படகான குமுதினி இலக்கானது. குமுதினி போக்குவரத்தில் ஈடுபட வேண்டிய நிலை ஏற்பட்டது.இரண்டாம் ஈழப்போர் தொடங்கி ஒரு வாரமளவில் குமுதினி பயணிகளை ஏற்றி குறிகாட்டுவான் நோக்கிப்புறப்பட்டது. ஆழ்கடல் கடந்து குறிகாட்டுவான் போக முன் சோதனைகளுக்காக குமுதனி நயினாதீவு கடற்படை இறங்க துறைக்குச் சென்றது. அங்குவழமைபோல் எதுவும் சொல்லாமல் சோதனையை படையினர் மேற்கொண்டனர். இதன் மர்மம் குமுதினி ஓட்டிகளுக்கு புரிந்தது. குமுதினி பறிக்கப்படத்தான் போகிறது என அவர்கள் உணர்ந்து கொண்டார்கள்.குறிகாட்டுவானில் பயணிகளை இறக்கிவிட்டு குமுதினி நெடுந்தீவுக்கு பயணிகளை ஏற்றிப்புறப்பட்டது. சோதனைக்காக நயினாதீவு கடற்படைத்துறைக்கு அது சென்றது. இறங்குதுறையுடன் குமுதினி அணைக்கப்பட்டது. அதிலிருந்து பயணிகள் சோதனைகளுக்காக இறங்கினர். கடற்படையினர் சாமான் மூட்டைகளையும் இறக்கச் சொல்லினர். சோதனைக்காக்கும் என நினைத்து மக்கள் பொருட்களை இறக்கினர். இறக்கப்பட்டதும் நயினாதீவிலிருந்து ஒரு பயணிகள் படகை கடற்படையினர் வரவழைத்தனர். அதில் ஏறி நெடுந்தீவுக்குப்போங்கள். பாதுகாப்புக் காரணங்களுக்காக குமுதினியை கடற்படை பொறுப்பேற்கின்றது என கடற்படையினர் சொல்லிவிட்டு அதனை தமது கட்டுப்பாட்டில் எடுத்தனர்.அப்போதும் நயினாதீவு விகாரையைச் சேர்ந்த பிக்கு ஒருவர் வெறித்தனமாக நின்றிருந்தார்.
1990 யூனில் வலம்புரியுடன் குமுதினியும் பறிபோனது.துயரத்துடன் மக்கள் சென்றனர்.வலம்புரியை விட அவர்கள் குமுதினி மீதுஉயிரைப்போன்ற பற்றை வைத்திருந்தனர். அவர்களின் உறவுகளின் உயிர்களின் ஆத்மா உலாவும் இல்லமாக அவர்கள் குமுதினியைக் கருதியிருந்தனர். அந்த குமுதினி பறிபோன போது மக்கள் அழுதனர். பறிக்கப்பட்ட குமுதினியும் வலம்புரியும் ஸ்ரீலங்கா கடற்படையால் திருகோணமலை சீனன்குடா ஸ்ரீலங்கா கடற்படைத்தளத்துக்கு கொண்டு செல்லப்பட்டன.அங்கு அவற்றுக்கு ஸ்ரீலங்கா கடற்படையின் கடற்கலங்களுக்குரிய சாம்பல் கடும் நீல வண்ணங்கள் பூசப்பட்டது. ஆம் தமிழ் மக்களின் இன அழிப்புக்குவலம்புரியும், குமுதினியும் ஸ்ரீலங்கா கடற்படையால் தயார் செய்யப்பட்டன.
1990 ஆவணியில் தீவகம் ஊர்காவற்றுறையில் இருந்து, மண்டைதீவுக்கு நகர்ந்து ஸ்ரீலங்கா படைகள் மக்களை படுகொலை செய்த திரிவிடபலய இராணுவ நடவடிக்கைக்கு இராணுவத்தினரை தரையிறக்க குமுதினியும் வலம்புரியும் கடற்படையால் பயன்படுத்தப்பட்டன. இதனை எழுவைதீவிலிருந்த மக்கள் நேரடியாகக் கண்டுள்ளனர். அடுத்ததாக ஆனையிறவு இராணுவ முகாமை விடுதலைப்புலிகள் 1991ம் ஆண்டு தாக்கிய ஆகாய – கடல் – வெளி நடவடிக்கையின்போது ஸ்ரீலங்கா இராணுவத்தினர் வடமராட்சி கிழக்கில் வெற்றிலைக்கேணியில் கடற்படை தரையிறக்கக்கப்பலிலும் குமுதினியிலும் கொண்டு வந்து தரையிறக்கப்பட்டனர். இதன் பின்னர் படையினரின் போக்குவரவுப்படகாக குமுதினியும் வலம்புரியும் படையினரால் பயன்படுத்தப்பட்டன. 1993ம் ஆண்டளவில் குமுதினியின் இயந்திரம் அதன் கட்டமைப்பு பழுதடைய கடற்படையினர் ஊர்காவற்றுறை கடற்பகுதியில் அதனை கைவிட்டனர். குமுதினி கடலில் தரைதட்டி அனாதரவாகக் கிடந்து சிதைந்த கொண்டிருந்தது. நெடுந்தீவு மக்கள் பாதுகாப்பற்ற திறந்த படகுகளான உதயதாரகை, சமுத்திரதாரகை ஆகிய கூட்டுறவுச் சங்கப் பொருளேற்றும் படகுகளையும், தனியாரின் சிறிய அக்குவாட்டிக் நிறுவனப் படகுகளையும் பயன்படுத்தினர். இவற்றில் அக்குவாட்டிக் நிறுவனப் படகு ஒன்றையும் சமுத்திரதாரகை என்ற படகையும் ஈ.பி.டி.பி.யினர் இரவொன்றில் கடத்திச் சென்றுவிட்டனர். இதுவரை அவற்றின் கதை தெரியாது. அவை மூலம் ஈ.பி.டி.பி.யினர் இந்தியா சென்றதாக தகவல் உள்ளது. 1992ல் தீவகம் முழுமையையும் ஸ்ரீலங்காபடையினர் ஆக்கிரமித்தபின்னர் குறிகாட்டுவானுக்கான படகுப் போக்குவரவு ஸ்ரீலங்கா கடற்படையினரால் துண்டிக்கப்பட்டது. காரணம் குறிகாட்டுவானில் இறங்கும் மக்கள் புங்குடுதீவு வழியாகவே செல்லவேண்டும். யாழ்ப்பாணத்துக்கு மக்கள் செல்லமுடியாத காரணங்களால் அரச படைத்தலைமையகம் ஊர்காவற்றுறையில் இருந்ததால் மக்களை அங்கு மட்டும் செல்ல படையினர் அனுமதித்தனர். அதைவிட புங்குடுதீவு முழுமையாக ஸ்ரீலங்கா படையினரிடம் இல்லை. அதில் விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதியாக இருப்பதாகவும் மக்கள் அவர்களுக்கு பொருட்களை கொண்டு சென்று கொடுக்கலாம் என்று தெரிவித்தே புங்குடுதீவுக்கான பயணம் ஸ்ரீலங்கா படையினரால் தடுக்கப்பட்டது. பாதுகாப்பற்ற படகுகளில் நீண்ட தூரம் பயணித்து ஊர்காவற்றுறைக்கு செல்லவேண்டியிருந்தது.
அப்போது குமுதினி கடலில் அனாதாரவாக சிதைந்து கிடந்ததை கண்டு மக்கள் துயருற்றனர். 1996ல் யாழ்ப்பாணத்தை ஸ்ரீலங்கா படையினர் ஆக்கிரமித்த பின்னர் தீவகத்துக்கான பண்ணை வீதி ஸ்ரீலங்கா படையினரால் திறக்கப்பட்டு தீவகம் யாழ்ப்பாணத்துடன் இணைக்கப்பட்டது.இதன் பின் தீவகத்தில் மக்களின் போக்குவரவு சிறியளவில் அதிகரித்தது. அவ்வேளையில் குமுதினியை மீட்க வீதி அபிவிருத்தி அதிகார சபை நடவடிக்கை மேற்கொண்டது. படகின் பணியாளர்கள் சகிதம் குமுதினியை மீட்க அது இருக்கும் இடத்தை அடையாளப் படுத்தினர். 1997ல்.அதன்பின் வீதி அபிவிருத்தி அதிகாரசபையினர் அதனை மீட்டுத் திருத்த காரைநகர் ஸ்ரீலங்கா படையினரிடம் அனுமதி கேட்டனர்.
அதனைக்கொண்டு செல்ல கடற்படையினர் அனுமதி மறுத்தனர். தமது ஒட்டுக்குழுவான ஈ.பி.டி.பி.யுடன் தொடர்புகொண்டு அதனை எடுக்குமாறு ஒரு அரசியல் களத்தை அந்த குழுவுக்கு கடற்படை அதிலும் உருவாக்கிக்கொடுத்தது. அந்த ஒட்டுக்குழுவும் குமுதினியின் எந்திரத்தை திருத்துகிறோம் என்ற நாடகத்தை நடத்தியது. அது நிறைவேறாமல் கைவிடப்பட்டது.
இதன் பின் கடற்படைக்கு அழுத்தம் கொடுக்கப்பட்டது. அவர்கள் பறித்துச் சென்ற குமுதினிக்கு இந்த நிலை ஏற்பட்டது என்ற போர்வையில் இந்த அழுத்தம் கொடுக்கப்பட்டது. அதனையடுத்து தாம் குமுதினியின் எந்திரத்தை திருத்தி தருவதாக காரைநகர் கடற்படையினர் சம்மதித்தனர்.இது இந்த பிராந்தியத்தில் தம்மைத்தவிர வேறு எவரும் வந்து திருத்தக்கூடாது என்ற இராணுவ நோக்கில்தான்.கடற்படை ஒரு இழுவைப்படகு ‘அசோக் லேலன்ட்” எந்திரத்தை பொருத்தியது. இது புதிதாக அல்லது அவர்கள் கைப்பற்றிய இந்திய இழுவைப்படகில் இருந்து கைப்பற்றியதா தெரியாது. ஒரு நாள் அதனை பொறுப்பெடுக்குமாறு வீதி அபிவிருத்தி அதிகார சபையினரிற்கு குமுதினியை பொறுப்பெடுக்குமாறு கடற்படை அறிவித்தது. வீதி அபிவிருத்தி அதிகாரசபையினர் குமுதினியின் பணிக்குழுவையும் கூட்டிக்கொண்டு காரைநகர் கடற்படைத்தளத்துக்கு சென்றனர். குமுதினியைப்பெற்றுக் கொண்டோம் என கடிதம் ஒன்றில் கையெழுத்திடும் படி கடற்படையினர் கேட்டனர். குமுதினி என்ன நிலையில் ருக்கிறது எனத்தெரியாமல் கையெழுத்துப்போடுவதில் வீதிஅபிவிருத்தி அதிகார சபையினருக்கிடையில் இழுபறி ஏற்பட்டது. படகுப்பணிக்குழுவினர் முதலில் கடற்படையிடம் இருந்து குழுதினியை எடுப்பம் என வலியுறுத்தினர்.அவர்கள் கையெழுத்திட்டனர்.அதன் பின் கடற்படையினர் தமது துறையில் கட்டப்பட்டிருந்த குமுதினியை ஒப்படைத்தனர். பணிக்குழுவினர் படகைப்பொறுப்பேற்று அதன் எந்திரத்தை இயக்கி கடற்படையிடமிருந்து அதனை விடுவித்துக்கொண்டு புறப்பட்டனர். குமுதினி கடலில் பயணிக்கத் தொடங்கியது. அது அலைகளை கிழித்துக்கொண்டு போனது. திடீரென்று ஏதோகழன்று விழும் உணர்வு குமுதினியில் ஏற்பட்டது.அலை கிழித்து குமுதினியால் தொடர்ந்து நகரமுடியவில்லை. அலைகளால் எற்றி அலைக்கழிக்கப்பட்டுக் கொண்டு. நடுக்கடலில் நின்றது. குமுதினியின் சுக்கான் கழன்று விட்டதே அது நடுக்கடலில் நகராமைக்கு காரணம் ஆகும். படகுப்பணியாளர்கள் ஆராய்ந்து அந்தப்பிழையைக் கண்டு பிடித்தனர். நடுக்கடலில் இருந்து கடற்படைக்கு அவர்கள் சைகை காட்டினர்.
அதன் பின் ஸ்ரீலங்கா கடற்படையினரின் படகு ஒன்று அப்பகுதிக்கு வந்த குமுதினியை கரைக்கு இழுத்துச் சென்றது. மீளவும் குமுதினி கடற்படை வசம் சென்று விட்டது.கடற்படையினர் கடலில் வைத்து சுக்கானை பொருத்தியிருக்கின்றனர். அதனால் சுக்கான் ஒழுங்காகப் பொருத்தப்படவில்லை.இப்பொழுது மீளவும் பல நாட்கள் குமுதினி கடற்படை வசம் இருந்தது. பிறகொரு நாள் குமுதினியைப் பொறுப்பெடுக்குமாறு கடற்படை அறிவித்தது. மீளவும் குமுதினிபொறுப்பேற்கப்பட்டது. இதன் பின் குமுதினி ஊர்காவற்றுறைக்கு கொண்டு செல்லப்பட்டு யாழ்ப்பாணம் புரோமோட்டஸ் நிறுவனத்தால் அதற்கு காப்பு செப்புத்தகடு அடிக்கப்பட்டது. அதாவது குமுதினியின் கடலில் மூழ்கும் பகுதியில் நீர் உட்புகாமல் கடல்புழுக்கள் அதன் மரத்தை அரிக்காமல் அடிப்பது இந்த செப்புத்தகடு. மற்றப்படகுகளில் இதற்கு குங்கிலியம் சீமெந்து பூசுவார்கள். அதை காறை என்பார்கள். இந்திய இழுவைப்படகுகளில் பைபர்கிளாஸ் பூசுவார்கள்.
இது வேறு படகுத்தொழில்நுடபம். புரோமோட்டஸ் செப்புத்தகடு அடித்தபின்னர் குமுதினிக்கு வண்ணமாற்றம் செய்யப்ட்டது. அப்போது குமுதினிக்கு ஸ்ரீலங்கா கடற்படை படகுகளின் கடும் நீல வண்ணமே இருந்தது.அந்த வண்ணம் மாற்றபட்டு வெள்ளை வண்ணம் அதற்கு பூசப்பட்டது. வெள்ளை நிறம் கடலில் அது மக்களின் பயணப் படகு என்பதை தெளிவாகக் காட்டுவதற்காகும். 1990ல் ஸ்ரீலங்கா கடற்படை குமுதினி கைப்பற்றப்படுகையில் அது வெளிர்நீல நிறத்தைக் கொண்டிருந்தது. 1998ல் மீளவும் குமுதினி நெடுந்தீவுக்கான பயணத்தை ஆரம்பித்தது. அப்போது குறிகாட்டுவான்துறை கடற்போக்குவரவுக்கு ஸ்ரீலங்கா கடற்படையால் தடை செய்யப்பட்டிருந்து.இதற்குகாகரணம் .குறிகாட்டுவானில் இருந்து யாழ்ப்பாணம் செல்ல புங்குடுதீவு வழியாகவே செல்ல வேண்டும்.அப்போது புங்குடுதீவு முழுதாக ஸ்ரீலங்கா கடற்படையிடம் இருக்கவில்லை.அது விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டிலும் இருப்பதாகவும் மக்கள் அங்கு சென்றால் விடுதலைப்புலிகளுடன் தொடர்பு கொண்டு விடுவர் என்று குறிகாட்டுவான் இறங்குதுறையை போக்குவரவுக்கு தடை செய்த ஸ்ரீலங்கா படையினர் சகல போக்குவரவுகளையும் ஊர்காவற்றுறை இறங்குதுறைக்கு மாற்றினர்.1996 முதல் இதனை படையினர் நடைமுறைப்படுத்தினர். இதனால் மக்கள் ஊர்காவற்றுறை சென்று அங்கிருந்தே யாழ்ப்பாணம் செல்லவேண்டியிருந்தது. அப்போது குமுதினி நெடுந்தீவுக்கு பயணிகளை கொண்டு சென்று விட்டு மாலை வேளையில்அது நயினாதீவு கடற்படை இறங்குதுறையில் நிறுத்தப்படவேண்டும் என கடற்படையினால் கட்டளையிடப்பட்டது. அதன்படி மாலையில் அது நயினாதீவு சென்று காலையில் ஏழு மணிக்கு முன்பாக நெடுந்தீவு மாவலித்துறைக்கு சென்று திரும்ப பயணிகளுடன் ஊர்காவற்றுறைக்கு திரும்பும் இடர் பயணத்தை மேற்கொண்டது. இதேவேளை நெடுந்தீவு மாவலித்துறை ஈ.பி.டி.பி தேசவிரோத சக்திகளின் பிடியில் இருந்தது.
இவர்கள் மாவலித்துறையை சூழ தமது நிலைகளை அமைத்திருந்தனர். அதனால் மாவலி இறங்குதுறையை மக்கள் பயன்படுத்த ஈ.பி.டி.பி.யினர் தடைவிதித்தனர் .இதனால் மக்கள் இறங்குதுறைக்குச் செல்லமுடியாமல் இறங்குதுறையின் வெளிப்புறச்சுவரின் வழியாக கரடுமுரடுமுருகைக்கல்மதில் மீது ஏறி நடந்து ஆற்றுக்கட்டை எனப்படும் இறங்குதுறை நுழைவாயிலுக்கு சென்றே குமுதினியில் அல்லது போக்குவரவுப்படகில் ஏறவேண்டும்.ஒரு பக்கம் அலையெறியும் ஆழக்கடல் மறுபக்கம் இறங்குதறைமுகம். இதற்கு நடுவிலான சுவரில் ஏறியே மக்கள் படகில் ஏறிப் பயணிக்க வேண்டும். இந்த இடர்பயணம் ஆண்டுக்கணக்கில் 1996 முதல் மக்களால் அனுபவிக்கப்பட்டது. இடையில் குமுதினி பழுதடைந்து இறங்குதுறையில் தரித்து நின்றது. அவ்வேளை குமுதினி ஈ.பி.டி.பி. யினரால் பிடிக்கப்படுவோர் அடைத்து வைக்கும் வதைமுகாமாகவும் இருந்தது. இறங்குதுறையில் குமுதினி கடல்நீரின் நடுவில் நின்றது. அதனால் அதனுள் அடைத்துவைக்கப்படுவோர் அதலிருந்து தப்பமுடியாது. இதனால் அங்கு ஈ.பி.டி.பியால் பிடிக்கப்படுவோர் அடைத்து வைக்கப்பட்டனர். அவர்கள் அதனுள் வதைக்கப்பட்டனர்.
அவ்வாறு வதைபடுவோர் எழுப்பும் அவல ஒலி குமுதினியையும் தாண்டி மாவலித்துறையிலும் பெரும் கடலிலும் எதிரொலிக்கும்.அப்படி ஒரு வதைமுகாமாகவும் குமுதினி வரலாற்றில் இயங்கியது.இந்த ஈ.பி.டி.பியின் வதைகளுக்கு முற்றுப்புள்ளிவைக்கும் ஒரு நாள் அந்த தீவில் வந்தது.
1998ம் ஆண்டு நெடுந்தீவு மாவலித்துறையில் ஈ.பி.டி.பி தேசவிரோதிகள் முகாமில் தம்மை அசைக்கமுடியாது என்று இறுமாந்திருந்தனர்.இதற்கு வேட்டு வைக்கும் வகையில் அன்று விடுதலைப்புலிகள் தாக்குதல் நடத்துவதற்காக படகு ஒன்றில் வந்து மாவலித்துறைக்கு அருகாக தரையிறங்கினர்.இருளோடு இருளாக நகர்ந்து வந்து காலைவேளை அந்த முகாம் மீது திடீர்த் தாக்குதலை நடத்தினர்.
அந்த தாக்குதலால் நிலைகுலைந்த ஈ.பி.டி.பியினர் அங்கிருந்து ஓடத்தொடங்கினர். அவர்களின்முகாம் எரியூட்டப்பட்டது. அவர்களில் இருவர் கொல்லப்பட்டனர். தாக்குதலை விடுதலைப்புலிகள் நடத்தியவேளை அவர்களுக்கு உதவ உடனடியாக ஸ்ரீலங்கா கடற்படையினர் வரவில்லை. அவர்களால் உடனடியாக வரவும் முடியாது. ஏனெனில் அந்த தனித்த ஆழ்கடலில் கடற்புலிகளிடம் தாம் மாட்டிக் கொண்டால் தப்பமுடியாது என்ற பயம்தான். அதனால் அவர்கள் தப்பித்துக்கொள்ள முடியாது மக்கள்குடியிருப்புகளை நோக்கி ஓடினர்.அந்த தாக்குதலின் பிறகுதான் மாவலித்துறை விடுதலை பெற்றது. ஆம் அங்கிருந்து ஈ.பி.டி.பி.யினர் மக்கள் குடியிருப்புகள் உள்ள இடங்களில் முகாம்அமைத்தனர். அப்போது தமது துணைப்படையான ஈ.பி.டி.பியினர் அங்கு தமக்குப்பதிலாக நிலைகொள்ள வேண்டும் என்பதற்காக அடுத்தடுத்த நாட்களில் ஸ்ரீலங்கா கடற்படையினர் நெடுந்தீவில் நிலைகொண்டனர்.
ஒரு மாத காலமளவில் நிலைகொண்ட அவர்கள் பிறகு அச்சம்மிகுந்தவர்களாக அங்கிருந்து நயினாதீவுக்கு சென்றுவிட்டனர்.இதற்கிடையில் நெடுந்தீவில் போராளி ஒருவர் காட்டிக்கொடுப்பவன் ஒருவனால் உணவளிப்பதாக அழைத்துவந்து கொல்லப்பட்ட சம்பவம் நடந்தது. அதே போல் புங்குடுதீவிலும் இவ்வாறு போராளி ஒருவர் காட்டிக்கொடுக்கப்பட்டு கொல்லப்பட்டார். இந்த துரோகிகளுக்கு தண்டனை கொடுக்கும் வகையில் புங்குடுதீவில் தேசத்துரோகிகளின் முகாம் விடுதலைப்புலிகளால் தாக்கியழிக்கப்பட்டது. 1998 ஜனவரி 23 ம் திகதி புங்குடுதீவு ஈ.பி.டி.பி முகாம் தாக்கி அழிக்கப்பட்டது. இதில் ஒன்பது பேர் ஈ.பி.டி.பியினர் கொல்லப்பட்டனர். அவர்களில் எட்டுப்பேர் அப்போது நடைபெறவிருந்து உள்ளுராட்சி தேர்தலில் ஈ.பி.டி.பியினரால் வேட்பாளர்களாக நிறுத்தப்பட்டவர்களாவர். இந்த தாக்குதல் புங்குடுதீவில் அவர்களின் அட்டகாசத்தை குறைத்தது. நெடுந்தீவில் அட்டகாசத்தை ஒரு அளவுக்கு மட்டுப்படுத்தியது.
இந்த தேசவிரோதிகளின் பிடியிலிருந்து மாவலித்துறை விடுதலை பெற்றதன் மூலம் குமுதினியும் வதை முகாமாக இருந்து விடுதலைபெற்றது.அ த் பின் குமுதினி திருத்தம் பெற்று மீள போக்குவரவில் ஈடுபடத்தொடங்கியது. இதற்கிடையில் 2000 ஆண்டு காரைநகர் ஸ்ரீலங்கா கடற்படைத்தளத்தை அதிகம் பலப்படுத்தும் நோக்கில் கடற்கோட்டைமுதல் ஊர்காவற்றுறை வரையான கடற்பகுதியை அதிஉயர் பாதுகாப்பு வலயமாக பிரகடனப்படுத்தி அங்குபயணிகள் படகுகள் வருவதை ஸ்ரீலங்கா கடற்படை தடைசெய்திருந்தது. ஆனால் அந்தப்பயணிகள் லோஞ்சுகள் குறிகாட்டுவானுக்கு செல்லவும் ஸ்ரீலங்கா கடற்படை தடை செய்திருந்தது. இந்த நிலையில் மக்கள் லோஞ்சுகள் செல்ல இறங்குதுறை தேவைப்பட்டது.
ஊர்காவற்றுறையில் கரம்பன் என்ற கிராமத்தின் கடற்கரையில் பழைய கண்ணகை அம்மன்கோயில் ஒன்று இருக்கின்றது. ஆண்டுக்கொருமுறை நிகழும் பொங்கல் மூலமே இவ் ஆலயம் அறியப்பட்டிருந்தது. அந்த இறங்குதுறை தேசவிரோதிகளின் பயன்பாட்டில் இருந்து வந்தது. கடற்படை தனது பாதுகாப்புக்காக அவர்களை எப்பொழுதும் தனதுதளங்களுக்கருகில் இருக்கவிடுவதில்லை. அவர்களை அந்த விடயத்தில் கடற்படை எட்டவே வைத்திருந்தது. இதனால் தான் ஈ.பி.டி.பியினருக்குகண்ணகை அம்மன் கோயிலடியில் இறங்குதுறையை அமைக்க அனுமதித்திருந்து. ஊர்காவற்றுறை இறங்குதுறைக்கு லோஞ்சுகள் நுழைவதற்கு தடை விதித்த கடற்படை லோஞ்சுகளை அணைவதற்கான துறையாக கண்ணகை அம்மன்கோயில் துறையை தெரிவு செய்து அங்குதமது பெரிய முகாமை அமைத்து ஈ.பி.டி.பியை வெளியேற்றிவிட்டு தாம் அங்கு நிலைகொண்டனர். ஆனால் ஈ.பி.டி.பியினர் மக்களுக்கு தாம் அமைத்துக்கொடுத்த இறங்குதறை என்ற அரசியல் நாடகத்தை அரங்கேற்றினர். அது அப்படி அல்ல. ஸ்ரீலங்கா கடற்படைக்கு மக்களின் இறங்குதுறையை அபகரித்து வசதியற்ற ஆழமற்ற இந்த துறையை தயார் செய்து கொடுத்துள்ளது.
இதுதான் உண்மை. இந்த நிலையில் இந்த நிலையில் குமுதினியும் ஆழமற்ற இந்த இறங்குதுறைக்கு போக்குவரவு செய்ய ஆரம்பித்தது. ஆழமற்ற காரணத்தால் குமுதினி அடிக்கடி போக்குவரவில் ஈடுபடமுடியாத நிலைமை காணப்பட்டது. 2002 வரை இந்த அவலமே காணப்பட்டது. 2002 போர்நிறுத்தஉடன்பாடு வந்த பின்னர் தான் குறிகாட்டுவான் இறங்குதுறையை ஸ்ரீலங்கா கடற்படை போக்குவரவுக்கு திறந்து விட்டது. அந்த உடன்பாட்டின் பிறகும் குமுதினி அடிக்கடிபழுதடைந்து போக்குவரத்தில் ஈடுபட்டுக்கொண்டுதான் இருக்கின்றது.
அந்த மிதக்கும் போர் நினைவுச் சின்னம் தமிழரால் பாதுகாக்கப்பட வேண்டிய அரும் பொருளாகும். எமது வரலாற்றில் அது மிதக்கும் ஒரு ‘ஒஸ்ட்விச்” முகாமாக அலைந்து கொண்டிருக்கிறது.
எரிமலை இதழிலிருந்து……
“தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்”