பிரிகேடியர் சொர்ணம் வாழ்வு ஓர் வரலாறு
பிரிகேடியர் சொர்ணம் வாழ்வு ஓர் வரலாறு.
தமிழீழத் தலைநகர் திருகோணமலை தந்த எங்கள் தானைத் தளபதி. தமிழ்த் தாயின் தமிழ்ப் பாலைப் பருகியவன். தமிழர்கள் உயிர்களுக்காக உள்ளம் துடித்தவன். தாய்மண்ணின் விடுதலைக் காற்றை மட் டுமே சுவாசிக்க நேசித்தவன். தமிழர்கள் படும் வதைகளில் விதையாகி வெடித்து வெளிவந்த வேங்கை.
எங்கள் விலங்குகளைச் சிதறடிக்க விடுதலைப் புலியாகியவன். எங்கள் அன்னை பூமிக்காக அனைத்தையும் துறந்தவன். நெஞ்சில் விடுதலையெனும் நெருப்பேந்தியவன். அவன் வாழ்வில் அவன் உதடுகள் அண்ணன் என்ற சொல்லைத்தான் அதிகபங்கு உச்சரித்தது. தலைவனைத் தன் கண்ணுள் வைத்ததால் அவன் தலைவனின் கண்ணாகியவன். தானைத் தலைவனின் எண்ணக் கருவுக்கு உருவமைத்தவன்.
அவன்தான் புலிகளின் மூத்த தளபதி புகழ் பூத்த தளபதி சொர்ணம்.
தம்பியை வீட்டில் செல்லமாக அழைக்கும் பெயர்தான் தயாளன். தந்தை யோசப் தாய் திரேசம்மா (பரிபூரணம்) என்ன தவம் செய்தனரோ? ஒரு உலகம் போற்றும் மாவீரனை மகனாகப் பெற. தாய் திரேசம்மாவின் மடி அது ஓர் புலியுறங்கிய குகை.
திருகோணமலை அது எப்பொழுதும் அலையெழுந்து ஆர்ப்பரிக்கும் ஓர் அழகிய நகரம். கடல் ©த்த ©மி. எங்கள் தமிழீழத்தின் தலைநகர் எனும் சிறப்பைப் பெற்றது. அந்தத் தலைநகர் தன் பங்கிற்காக தானைத் தளபதியைத் தமிழீழ விடுதலைப் போராட்டத்திற்கு உவந்தளித்தது. திருகோணமலை அரசடி அது அன்று திருமலை வாழ் சிங்களவரின் வயிற்றில் புளியைக் கரைக்குமிடம். சிங்களவரைப் பயத்தில் சிறுநீர் போகவைக்குமிடம். திருமலை அரசடி வாழைத்தோட்டம் அதுதான் தயாளனைப் பச்சிளம் குழந்தையாக பாலருந்தும் பாலகனாக பள்ளிச் சிறுவனாக பாடசாலை மாணவனாக தன் மடியில் சுமந்த மண். மலையென எழும் கடலலைகளை அன்றாடம் எதிர்த்து வாழ்ந்த குடும்பத்தில் பிறந்ததால் அலையையும் புயலையும் எதிர்த்து வளர்ந்தது அவர் வீரம்.
சிறுவயதிலேயே அவன் குறும்புகளுக்குக் குறைவில்லை. அது மட்டுமன்றி உடற்பயிற்சியிலும் தற்காப்புக் கலைகளிலும் சிறப்புப் பயிற்சிகள் பெற்றவர். அவர் நண்பர்கள் கூட்டத்தில் என்றும் அவர் தலை உயர்ந்து நிற்கும் கலகங்கள் வந்துவிட்டாலோ அவர் கரம் ஓங்கிநிற்கும்.
திருகோணமலை மாவட்டம் அன்று 80வீதம் தமிழ் மக்கள் வாழ்ந்த மண். அதைச் சிங்கள பூமியாக்க சிங்களவர் மும்மரமாகச் செயற்பட்டகாலம். தயாளன் சிறுவயதிலேயே துவேசம் கொண்ட சிங்களவர் முப்படைகள் பொலீசாலும் தமிழ் மக்கள் படும் வேதனைகளையும் கொடுமைகளையும் கொலைகளையும் கண்டு கொதித்தெழும்பியவன். இதனால் வெறிகொண்ட சிங்களத்தின் கண்கள் தயாளனைக் குறிவைக்கத் தொடங்கியது.
உண்மையாகவே எங்கள் தமிழ் மண்ணை எங்கள் தமிழீழ எல்லைகளைக் காக்கவேண்டுமென்றால் அது எங்கள் தலைவனால் அமைக்கப்பட்ட புலிகள் அமைப்பில்தான் இணையவேண்டும் என்பதை தம்பி தயாளன் தூரநோக்கோடு நன்கு அறிந்துகொண்டார். அவர் தன் விடுதலை வேட்கையை வீச்சாக்க திருகோணமலை அர்ச் சூசையப்பர் கல்லூரியில் பயின்ற உயர்தரக் கல்வியை இடைநிறுத்திக்கொண்டு 12.09.1983ல் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பில் இணைந்துகொண்டார்..
தானைத் தலைவனின் வழிநடத்தலில் புடம்போட்ட தங்கமாகப் புதுப் பொலிவு பெற்று புதுப் புலியாகி எங்கள் தேசத்தின் எல்லைகளுக்கு தன்னுயிரை வேலியாக்கினான். அவன் கரங்களில் சுமந்த கருவிகள் பகைவனின் பகைமுறித்தது. அவன் மனங்களில் தோன்றிய பேராற்றல் பகைவனின் சதிமுறித்தது. தலைவன் கூறும் தத்துவங்களை எல்லாம் களத்திலே காரியமாக்கிக் காட்டிய கட்டளைத் தளபதி. கயமைத்தனங்களைக் கட்டவிழ்த்துவிட்ட சிங்கள இராணுவத்திற்கோர் சிம்மசொற்பனம்.
களத்திலே இவன் இறங்கிவிட்டால் இவன் கைகளில் வீரம் விளையாடும். புடைத்து நிற்கும் இவன் தோள்களிலே வெற்றிகள் புன்னகை பூக்கும். இவன் வெறுங்கையோடு வீதியில் வந்தாலும் எதிர்கொள்ளும் எதிரிகள் தலைதெறிக்க விழுந்தடித்து ஓடுவர். இவன் தலைவன் காட்டிய நெறியில் தவறியதில்லை இவன் வைத்த குறியும் தப்பியதில்லை.
அழகிய புன்முறவலும் அடங்காத புரட்சியுணர்வும் கொண்டவன் . பட்டத்து யானைபோன்று நெடிய கம்பீரத் தோற்றம். புது யுகத்தின் அத்தியாயத்தை எழுதத் துடித்துநின்ற தானைத் தளபதி.
தமிழனின் விடிவிற்காய் தமிழீழ விடுதலைப் புலிகளின் ஆக்ரோசமான போர் வியூகங்களைக் கண்டு அகமகிழ்ந்த அன்னைத் தமிழும் அரியணை ஏற ஆயத்தமானாள். ஆனாலும் உலகத்தின் துரோகக் கரம்ஒன்று பின்னால் தொடர்ந்ததை யாரறிவார்?. இருபதற்கும் மேற்பட்ட உலகில் சக்திவாய்ந்த நாடுகள் முண்டுகொடுக்க இனவெறிகொண்ட சிங்களம் கூன் நிமிர்ந்து எமது சொந்தங்களை வெறித்தனமாய் வேட்டையாடி எங்கள் தேசத்தைச் சுடுகாடாக்கியது.
அன்று உன்னதமான தமிழீழத் தலைமைத் தளபதி வீழ்ந்துவிட்டான். ஆம் வீழ்ந்துவிட்டான். ஆளரவமற்ற இருட்புலத்திலே புதைக்கப்பட்டான். அவனுக்காக யாரும் கண்ணீர் சிந்தினார்களா?
தெரியவில்லை. யாரோ அவனைக் கல்லறைக்கு எடுத்துச் சென்றனரே. அவனின் புகழ்வாய்ந்த பெயர் கூறிட அங்கே சிலுவையோ சமாதியோ மண்டபமோ ஏது மில்லையே. அங்கு தலை சாய்ந்திருந்த புல்லிதழ்கள் அவனின் மரணத்தை அறிந்திருக்கும். முள்ளிவாய்க்கால் கரையை மோதிச் சீறியடிக்கும் அலைகளே அவன் மரணத்திற்குச் சாட்சி.
வல்லமை வாய்ந்த அவ் அலைகளால் கூட தொலை தூரத்திற்கு அந்தச் செய்தியை எம்மிடம் கொண்டுவர முடியாமற் போய்விட்டதே. இன்று ஆண்டு ஒன்று ஆனபின்பும் நீ இறுமாப்போடு எழுந்து வருவாயென்று நான் எதிர்பார்த்தேனே. என் கனவுகள் பொடியானதே.
புறநானூற்றின் வீரத்தை புதிதாகப் பிறப்பித்த மாவீரன் விடுதலை தேடி வேகத்தோடு உயர்ந்து வீசியடித்த பேரலை இருபத்தாறு வருடங்களாக ஓயாது சுழன்றடித்த சூறாவளி ஓய்ந்துபோனது. மரணித்துவிட்ட எங்கள் விடியலே பலவீனமான எம் இனத்தின் பலமான உயிராயுதமே எமது திமிரின் அடையாளமே எங்கள் இனத்தின் இன்றைய இன்னல் தீர்க்க இன்னொருமுறை எழுந்துவர மாட் டாயோ?
நினைவுப்பகிர்வு:- யேர்மன் திருமலைச்செல்வன்.
தமிழீழ விடுதலைப்புலிகளின் முதன்மைத் தளபதிகளில் ஒருவராக விளங்கிய யோசப் அன்ரனிதாஸ் என்று அழைக்கப்படும் பிரிகேடியர் சொர்ணம் அவர்கள், 15.05.2009 அன்று முள்ளிவாய்கால் பகுதியில் சிறீலங்காப் படையினருடனான மோதலின்போது வீரச்சாவடைந்துள்ளார்.
தமீழீழ விடுதலைப்புலிகளின் தொடக்ககால போராளியாக 1983 ஆண்டு தன்னை விடுதலைப்புலிகள் அமைப்பில் இணைத்துக்கொண்ட சொர்ணம் அவர்கள், இந்தியாவின் மூன்றாவது பயிற்சி பாசறையில் பயிற்சிபெற்று தமிழீழ தேசியத்தலைவர் அவர்களின் பக்கத்துணையாக நின்று செயற்பட்டார்.
இவ்வாறு தாயகத்தில் இந்திய படையினருடனான மோதல்களின் போது எதிரிக்கு பாரிய இழப்பினை கொடுத்த விடுதலை வீரனாக செயற்பட்ட செர்ணம் அவர்களை தமிழீழ தேசியத்தலைவர் அவர்களின் பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டு தமிழீழ விடுதலைப்புலிகளின் படைத்துறையின் வளர்ச்சியில் அடுத்த நிலையாக படைக்கட்டுமானங்களை உருவாக்கும் செயற்பாடுகளில் முனைப்புடன் ஈடுபட்டார்.
இந்நிலையில் களத்தில் களமுனை போராளிகளை வழிநடத்தி போர் வியூகங்களை அமைப்பதில் தமிழீழ தேசியத்தலைவர் அவர்களுக்கு பக்கத்துணையாக நின்று திட்டங்களை தீட்டினார். இவ்வாறு விடுதலைப்புலிகளின் பெயர்சூட்டப்பட்ட வெற்றித்தாக்குதல்களில் எல்லாம் சொர்ணம் அவர்களின் திட்டமிடலும் கட்டளைகளும் வழிநடத்தல்களுடாகவே வெற்றிகளை பெற்றர்கள்.
இவ்வாறு விடுதலைப்புலிகளின் வளர்ச்சிக்கு ஏற்றால்போல் படைஅணிகளின் பொறுப்பாளராக செயற்பட்ட சொர்ணம் அவர்கள் ஓயாத அலைகள் தாக்குதல்களின் கட்டளைத் தளபதியாக செயற்பட்டார். தமிழீழ விடுதலைப்புலிகளின் படைத்துறையின் ஆய்வாளராக செயற்பட்ட சொர்ணம் அவர்கள் பின்னர் திருகோணமலை மாவட்ட தளபதியாக செயற்பட்டார்.
பின்பு வன்னியில் மணலாற்றுப்பகுதி கட்டளைத் தளபதியா பொறுப்பேற்று திறம்பட செயற்பட்டு எதிரிக்கு பாரிய இழப்புக்களை ஏற்படுத்தினார். இவ்வாற விடுதலைப்புலிகளின் வலிந்த தாக்குதல்கள், எதிர்சமர்கள் அனைத்திலும் சொர்ணம் அவர்களின் கட்டளைகள் செயற்பட்டுக்கொண்டிருக்கும், இன்நிலையில்தான் சிறீலங்காப்படையின் இறுதிக்கட்ட போர் நடவடிக்கையில் விழுப்புண்ணினை தாங்கியவாறு களமுனைப் போராளிகளுக்கு கட்டளைகளை வழங்கிய சொர்ணம் அவர்கள்
இறுதியில் முள்ளிவாய்கால் பகுதியில் ஓருங்கிணைப்பு பணிகளை மேற்கொண்டு எதிரியுடன் போரிட்டுக்கொண்டிருக்கையில் 15.05.2009 அன்று விழுப்புண் அடைந்து வீரச்சாவடைந்துள்ளார்.
“புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்”