மிடுக்கான புலிமகள் மேஜர் நதியா
பரந்தன் – ஆனையிறவு படைத்தளங்கள் மீதான தாக்குதலின்போது 09.01.1997 அன்று வீரச்சாவைத் தழுவிக்கொண்ட மேஜர் நதியா அவர்களின் 18ம் ஆண்டு வீரவணக்க நாள் நினைவாக…………..
ஈழக்கடல் நோக்கி
எழுந்து ஓடிய நதியா – நீ தமிழ்
ஈழ விடுதலைக்காய்
உனை ஈந்த நதியா
எளிமை அழகுடன் எப்போதும்
வலம் வந்த குணவதியா
என்னுடைய மச்சாளாய் வாய்த்த
உன் பெயர் சுமதியா – தோழி நீ
எங்கள் வானத்தில் ஒளிரும்
இன்னுமோர் மதியா.
வரலாறு பல சுமந்த
மணலாற்று மண்ணிலே
செம்மலை எனும் வீரச்
சிற்றூர் தந்த புலியவளே
எழுபத்தி நான்காம் ஆண்டு
ஆவணி பதின் மூன்றாம் நாள்
இமை திறந்த என் தோழி
அமைதியே உருவான உன்
அன்பு மனம் அறிந்தவள் நான்
இராசையா சிவகாமிப்பிள்ளை
இணையரின் கடைக்குட்டி
இளங்கன்று என வளர்ந்தாய்
பயமறியாப் புலிக்குட்டி
படிப்பினிலே நீ சுட்டி
பல விளையாட்டில் மிகக் கெட்டி
பள்ளிக்கூடம் செல்கையிலே
நீயும் நானும்
தள்ளித் தள்ளி நடந்ததில்லை
துள்ளித் திரிந்தோம் ஒன்றாய் அன்று
கள்ளமில்லாப் புள்ளிமானாய்
இலங்கை இராணுவத்தின்
முற்றுகைகள் பல கண்டோம் – சொந்த
இடம் விட்டு விரட்டப்பட்டு
இடர் பல கொண்டோம்
இந்திய இராணுவத்தினர் பொழிந்த
குண்டு மழைக்குள்க் குளித்தோம் – தலைவரைத்
தேடி இராணுவம் சூழ்ந்த போது – பல
திகில்களை அனுபவித்தோம் – அப்போ
வஞ்சமில்லாப் பிஞ்சு மனதில்
மிஞ்சியது ஒன்றுதான் – அது
அச்சமில்லா வாழ்வின் வாஞ்சை
தமிழீழ விடுதலைக் கனவை
உனக்குள்ளே விதைத்தாய்
சிறகு விரிக்கும் உன் சிந்தனையில்
உறுதியேற்றி நிமிர்ந்தாய்
பள்ளித் தோழிகள் சிலரோடு கூடி
தெள்ளிய முடிவினை எடுத்தாய்
வெள்ளைச் சீருடைக்கு விடை கொடுத்து
விடுதலைச் சிறகசைத்தாய்
அந்த நாள் இன்னும்
எனக்குள்ளே பசுமையாய்
எண்பத்தி ஒன்பதாம் ஆண்டு ஒன்பதாம் மாதம்
திலீபன் அண்ணாவின் நினைவு ஒன்றுகூடல்
திரண்டனர் எல்லோரும் முள்ளியவளையில்
எழுச்சி கொண்ட மாணவர் அணிகள் வந்து
இறங்கின வித்தியானந்தாக் கல்லூரி
விளையாட்டு மைதானத்தில்
எங்கள் வித்தியாலய மாணவர் குழாம்
பேருந்தில் விரைகிறோம்.
இருக்கைகள் நிறைந்தது
மாணவர் கூச்சல்
மனம் கனத்தபடி உன்னருகில் நான் – எனக்கு
மட்டுமே நீ முன்னரே சொல்லி விட்டாய் – “நான்
மகளிர் புலியணியில் இணையப் போகிறேன்
பிரண் எல்.எம்.ஜியின்
சூட்டாளினியாய்ப் பரிணமித்தாய்.
ஆனையிறவு ஆகாயக் கடல் வெளி தொடங்கி
மின்னல், தவளைப் பாய்ச்சல், பத்தை மேனி,
பரந்து விரிந்த சமர்க்களங்களில்
தூள் கிளப்பியது உனது சூட்டுவலு
உன் சக தோழிகளால் – நீ
அதிகம் நேசிக்கப்பட்டவள்
எடுத்த பணியை சரிவர நிறைவேற்றும்
இயல்பினால் மதிக்கப்பட்டவள்.
பத்தைமேனிச் சமரிலே
படுகாயமடைந்து நீ
முழங்கால் முறிவு கண்டாய்
இயல்பாய் நடக்க முடியவில்லை – உன்
இலட்சியப் பற்று மட்டும் குறையவில்லை
லீமா ஒன்று, இரண்டு, நான்கு இவை
புதிய போராளிகளைப் புடம் போடும் – பெண்
புலிகளின் பயிற்சி முகாம்கள் – அங்கே
நிர்வாகப் பொறுப்பேற்று நீ
திறம்படச் செயற்பட்டாய்
நானும் நீயும் மீண்டும் சந்தித்தோம்
சீருடையணிந்த புலிகளாய் அப்போது
உன் புன்னகை மட்டும் மாறாமல்
அப்படியே இருந்தது
உன்னால் வேகமாய் நடக்க முடியவில்லை என்று
விசனப்பட்டுக் கொண்டாய்.
எல்லோருக்கும் உன்னை
மிகவும் பிடித்திருந்தது
இன்னும் இன்னும் உன்னை எண்ணி
பெருமிதம் கொண்டேன்
சீக்கிரத்தில் மீண்டும் நீ
செருக்களம் போவாய் என்று
எதிர்பார்க்கவில்லை நான்
அடம் பிடித்து நீ – தாக்குதல்
அணியில் இடம் பிடித்தாய்
தைத்திங்கள் ஒன்பதாம் நாள்
தொண்ணூற்றியேழாமாண்டு
பரந்தன் கிளிநொச்சி
வலிந்த தாக்குதலில்
நீ வீழ்ந்த செய்தி கிடைத்தது.
விரைந்து உனைப் பார்க்க
ஓடோடி வந்தேன் துயிலுமில்லம்
நேரம் கடந்து விட்டது
நீ விதைக்கப்பட்டு விட்டாய்
கண்ணீரைக் காணிக்கையாக்கிக்
கரைந்தேன் – உன்
கனவுகளை எனக்குள் மெல்லக்
கரைத்தேன்.
போராடப் புறப்பட்ட போது
சொல்லிவிட்டுப் போனாய்
பூமி விட்டுப் போகும்போது – ஏன்
மௌனமாகி விட்டாய்?
துப்பாக்கியை இறுகப்பிடித்து
நிலையெடுத்து இருந்தவாறே – உயிர்
பிரிந்து விட்டிருந்தாயாமே
தோழிகள் சொன்னார்கள்
எங்கள் பலருக்கு நீ
எடுத்துக்காட்டாய் இருக்கிறாய்
இலட்சியம் வெல்லும் வேகத்தை
இப்பொழுதும் கொடுக்கிறாய் – தமிழ்
ஈழ விடுதலைப் பெண் புலிகள் வரலாற்றில்
மேஜர் நதியா உன்
பெயரும் பொறிக்கப்பட்டது
எனக்குள் இருக்கும் உனது கனவுகள்
இறுக வலுப்பெற்று ஈழக் கடல் நோக்கி
ஓடும் நதியாகும்.
நினைவுக் கவிதாஞ்சலி:- கலைமகள் (09.01.2015)
“தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்”