அன்புள்ள மகனுக்கு…………
10.02.1993
அன்புள்ள மகனுக்கு,
நீ நலமாயிருப்பாய் என நம்புகிறேன். நானும் இருக்கிறேன். நீ போய் கனகாலமாயிற்று. கப்பல் ஒழுங்காக வராதபடியால் உனது கடிதமும் ஒழுங்காகக் கிடைக்கிறதில்லை. இங்கே சாப்பாட்டுச் சாமான்களும் அப்படித்தான். சுய உற்பத்தி என்று சொல்லி நாங்களும் குரக்கன், மரவள்ளி என்று செய்யிறபடியால் தான் சமாளிக்கிறம்.
நீ முந்தி ஓடித்திரிந்த வெறும் வளவுக்குள்ளே இப்ப நிறைய சங்கங்கள் வந்திருக்கினம். அவையள் மாதகலிலிருந்தும், தீவிலிருந்தும் அகதியாக வந்தவையள். இந்த மழைக்குள்ளேயும், பனிக்குள்ளேயும் மரங்களுக்கு கீழேயும், சின்னச் சின்ன கொட்டில்களிலேயும், சாக்குகளை மறைப்புக்கு கட்டிக் கொண்டு சரியாக கஸ்ரப்படுதுகள். அரசாங்கம் ஒழுங்காக சாப்பாடு அனுப்பிறதில்லை. நிவாரணம் என்று சொல்லி இன்ஹ்கு குண்டுகள்தான் போடுது.
நீ சின்ன வயதில் படித்த பள்ளிக்கூடத்தின் மேலே சுப்பசோனிக் விமானக் குண்டு விழுந்து சரியான சேதம். உன்னப் படிப்பிச்ச செல்லத்துரை மாஸ்ரருக்கு உடம்பெல்லாம் காயம். எங்கட மூத்தண்ணையின் கடைசி மகனும் இன்னும் கொஞ்சப் பொடியளும் அதில் செத்துப்போட்டுதுகள். பாவம் மூத்தண்ணை, அவனை நம்பித்தான் இருந்தவர். இதோட தன்ரை மகளைக் கொண்டுபோய் இயக்கத்தில் சேர்த்துவிட்டார். இப்படி அநியாயமாக சாகிறதைவிட வீரமாகச் சாகலாம் என்று எனக்குச் சொன்னார்.
உன்னோட படிச்ச பொடியலெல்லாம் இப்ப இங்கே இல்லை. அரைவாசிப் பேர் வெளிநாட்டுக்கு போய்விட்டார்கள். மிச்ச அரைவாசிப்பேர் துவக்குத் தூக்கப் போய்விட்டார்கள். உன்னோட ஒன்றாக ரீயூடனுக்குப் போன முரளியை ஞாபகமிருக்கோ? அவன் போன கிழமை வந்தவன். இப்ப மணலாறில் நிக்கிறானாம். ஆனையிறவு சண்டையில் காயப்பட்டு ஒரு கால் இல்லை அவனுக்கு. அப்படியும் திரும்பவும் சண்டைக்குப் போகப் போறானாம். அண்டைக்கு நல்ல மழை. இங்கே வரேக்கை முழுக்க நனைஞ்சு வந்தான். நான் நீ விட்டுப்போன ரெயின் கோட்டை அவனுக்குக் கொடுத்து விட்டன். இந்தப் பொடியள் எல்லையில் மழையிலேயும், வெய்யிலேயும் நிக்கிறபடியால்தான் இங்கே உள்ள சனங்கள் நிம்மதியாக இருக்குதுகள்.
எங்கட பக்கத்து வீட்டு அன்னமாக்காவுடைய மகன் வளலாய் சண்டையில் வீரச்சாவடைந்து விட்டான். அவனது இறுதி நிகழ்ச்சிக்கு நானும் போனனான். மாவீரர் துயிலும் இல்லத்துக்கு அன்றுதான் முதல் முறையாக போனனான். உன்ரை அப்பு செத்ததுக்கு கூட இப்படி நான் அழேல்லை. இதை என்னவென்று எழுதுவது? வாழ வேண்டிய இந்தப் பிஞ்சு வயதுப் பிள்ளையள்……………….
நீ என்னை வரச்சொல்லி எழுதியிருக்கிறாய். இறுதிவரை இந்த மண்ணில் தான் வாழுறதெண்டு முடிவெடுத்திருக்கிறன்.
எங்களுக்கு எண்டொரு நாடு வேணுமடா தம்பி!
உன்ர சுகத்தைக் கவனி.
அடுத்த கடிதத்தில் சந்துக்கும்,
அன்புடன் – அம்மா.
“தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்”