இலங்கை வரலாற்றில் தடம்பதித்த இனவன்முறைகள்
இலங்கை வரலாற்றில் தடம்பதித்த இனவன்முறைகள்
எமது நாட்டில் இனக்குரோதம் சுதந்திரத்தின் பின் விஸ்வரூபம் எடுத்துள்ளது. இதற்குப் பொருளாதார ரீதியான காரணிகள் சிறிதளவே செல்வாக்குச் செலுத்தியுள்ளன. பல இனங்கள் வாழும் இலங்கை போன்ற நாடுகளில் இனரீதியான பிரச்சினையின் தீவிரத்திற்குக் கடந்தகால அனுபவங்களை வெளிக்காட்டும் வெறுப்பான சம்பவங்களைக் கொண்ட வரலாறே காரணமாக இருந்துள்ளது என்பது தெளிவு.
காலத்துக்குக் காலம் மேற்கொள்ளப்பட்ட அகிம்சாவாதிகளின் போராட்டங்களினால் கிடைத்த கசப்பான அனுபவங்கள் மற்றும் ஏமாற்றங்கள், ஒதுக்குமுறைகள், ஒடுக்குமுறைகள் போன்றவற்றை வெளிக்காட்டிய வரலாறு இலங்கையின் தமிழர் தாயகப் போராட்டத்தைத் தீவிரப்படுத்திக்கொண்டு செல்வதில் பெரும்பங்களிப்பைச் செலுத்தியுள்ளன. இதனை வரலாறு மற்றும் அரசியல் ஆய்வாளர்கள் ஏற்றுக்கொண்டுள்ளனர்.
இலங்கை வரலாற்றை அறிய உதவும் நூல்களில் மகாவம்சம் முதன்மையானது. இந்நூலின் கூற்றுப்படி கி.மு. 06 ஆம் நூற்றாண்டின் பின்பே இங்கு மனிதக் குடியேற்றங்கள் இடம்பெற்றன. அந்த குடியேற்றங்கள் வட இந்தியாவிலிருந்தே மேற்கொள்ளப்பட்டன. அதுமட்டுமல்ல, ஆரியர் என்ற இனத்தவர்களே இங்கு முதலில் குடியேறினர் என்பதும் மகாவம்சம் தரும் தகவலாகும். ஆனால், ஆரியர் வருகைக்கு முன்பே இங்கு மக்கள் வாழ்ந்துள்ளனர் என்பதனை தொல்லியல் ஆய்வுகள் வெளிக்காட்டியுள்ளன. ஆரியர் வருகைக்கு முன்பு இங்கு வாழ்ந்தவர்களை அமானுஷர் என்று (நாகரிகமடையாதவர்) மகாவம்சத்தில் குறிக்கப்பட்டுள்ளது. இந்த அமானுஷர்கள் யார்? என்பதனை ஆய்வாளர்கள் தொல்லியல், மானிடவியல், வரலாறு ரீதியாக மேற்கொண்ட ஆய்வுகள் மூலம் திராவிடர் என்பதனைத் தற்காலத்தில் நிறுவியுள்ளனர்.
மகாவம்சத்தை எழுதிய மகாநாமர், தன் இனம் (சிங்களவர்), தன்மதம் (தேரவாத பௌத்தம்), தன்மொழி (சிங்களம்) என்பனவற்றின் மீது கொண்ட உயர்ந்த பற்றுக்காரணமாக, பக்கச்சார்பான கருத்தை இந்நூலின் மூலம் வெளியிட்டுள்ளார். இவை மறுக்கமுடியாத உண்மை. எனவேதான், தான் சார்ந்த இனம், மதம், மொழி என்பனவற்றை உயர்வாகக் காட்டிய அதேவேளை, தமிழர்கள் தொடர்பான உண்மைக்குப் புறம்பான தகவல்களைக் கொடுத்து அவர்களைப் புறந்தள்ளி சிங்களவர்களை உயர்வாகக் காட்ட முற்பட்டுள்ளார்.
அதுமட்டுமல்ல, குறித்த காலத்தில் வாழ்ந்த ஏனைய மக்களின் மதம், மொழி, பண்பாடு தொடர்பான தகவல்களைத் திரிபுபடுத்தி உண்மைக்குப் புறம்பாகக் காட்டியுள்ளார். அதாவது, கி.மு. 247 இல் பௌத்தம் இலங்கைக்குக் கொண்டுவரப்பட்ட பின்னர்தான் இங்கு வாழ்ந்த மக்கள் நாகரிகமடைந்தனர் என்ற கருத்துப்படக் கூறியுள்ளார். அக்காலத்தில் காணப்பட்ட ஏனைய மதங்கள் தொடர்பான தகவல்களை மறைத்து தேரவாத பௌத்த மதம் தொடர்பான தகவல்களை முதன்மைப்படுத்தியுள்ளார்.
பௌத்த மதத்தில் தேரவாதம், மகாஜனம் எனும் இரண்டு பிரிவுகள் காணப்படுகின்றன. மகாவிகாரையை மையமாகக்கொண்டு வளர்க்கப்பட்ட, தான்சார்ந்த தேரவாத பௌத்த பிரிவு பற்றிச் சிறப்பித்து மகாநாமதேரர் குறிப்பிட்டுள்ளார். அபயகிரி விகாரையை மையப்படுத்திய மகாஜன பௌத்த பிரிவு பற்றியோ, ஏனைய மதங்கள் பற்றியோ உண்மையான தகவல்களை அவர் மறைத்து விட்டார்.
இதேபோன்றுதான் தமிழ் மன்னன் எல்லாளன் என்பவருக்கும் துட்டகைமுனுவுக்குமிடையில் நடைபெற்ற அரசியல் ரீதியான ஆதிக்கப் போராட்டத்தைத் தமிழருக்கும் சிங்களவருக்குமிடையில் நடைபெற்ற இனப்போராட்டமாக மகாநாமதேரர் காட்டியுள்ளார். உண்மையில், கி.பி. 15 ஆம் நூற்றாண்டின் இறுதிவரை இந்த நாட்டில் இன, மத, மொழி அடிப்படையிலான போராட்டங்கள் இடம்பெற்றதற்கான வரலாற்றுச் சான்றுகள் கிடைக்கவில்லை என்று கூறிக் கொள்ளலாம்.
துட்டகைமுனுவுக்கும் எல்லாளனுக்கும் இடையில் பெரும் யுத்தம் ஒன்று நடைபெற்றதாகவும், அதில் ஏராளமான தமிழர்கள் கொல்லப்பட்டதாகவும் மகாவம்சம் தகவல்களைத் தருகின்றது. பேராசிரியர் பி.புஸ்பரட்ணம் போன்ற வரலாறு, தொல்லியல் துறைசார் ஆய்வாளர்கள், இந்த யுத்தம் இன, மத, மொழி ரீதியாக நடந்ததற்குச் சான்றுகள் இல்லை என்றும் மாறாக அரசியல் ஆதிக்கமே பிரதானமாக இருந்ததென்றும் காட்டுகின்றனர். எனவே, இனரீதியான வன்முறைகள் 1915 இன் வரை நடைபெற்றதாகத் தெரியவில்லை. அரசியல் ரீதியான ஆதிக்கமே காலத்துக்குக் காலம் யுத்தங்கள் நடைபெறப் பிரதானமான காரணமாக இருந்தன என்பது நோக்கத்தக்கது.
ஐரோப்பியர் இலங்கையை ஏறத்தாழ 450 வருடகாலம் தமது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவந்து ஆட்சி செலுத்தினர். ஆங்கிலேயர் 1796 இல் இலங்கையில் தமது ஆட்சியை நிறுவிய பின்னர் 1815இல் கண்டி உட்பட முழுநாட்டையும் தமது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்தனர். இவர்கள் அதிகாரம் செலுத்திய காலத்திலேதான், இரண்டு இனங்களுக்கிடையிலான இனவன்முறை மோதல் முதன் முதலாக நடைபெற்றது. இது முஸ்லிம், சிங்கள இனங்களுக்கிடையிலான கலவரமாகும். எனவே, முதல் இனரீதியான அடி தமிழருக்கு அல்ல, மாறாக 1915 இல் சிங்களவர்களால் முஸ்லிம்களுக்கெதிராக மேற்கொள்ளப்பட்டதென்பது உண்மை.
1833 இல் ஆங்கிலேயரால் சட்டசபை முறை அறிமுகப்படுத்தப்பட்டது. 1835 இல் அரசாங்க மொழி பெயர்ப்பாளராக இருந்த சிங்களவர் ஒருவர் மற்றும் தமிழர், பறங்கியர் இனங்களில் தலா ஒருவர் வீதம் மொத்தம் மூன்று உறுப்பினர்கள் இனரீதியில் நியமிக்கப்பட்டனர். இனரீதியான நியமனங்கள் 1835 ஆம் ஆண்டுதான் முதன்முதலாக இலங்கையில் அறிமுகப்படுத்தப்பட்டதென்பது மற்றோர் முக்கிய விடயமாகும். இந்தச் சட்டசபையில் பல்வேறு மாற்றங்களை மேற்கொள்ளவேண்டித் தொடர்ச்சியாகப் போராட்டங்கள் நடத்தப்பட்டன.
இனரீதியான பிரதிநிதித்துவத்தின் ஆபத்தினை உணர்ந்ததாலோ என்னவோ, 1910 இல் பிராந்திய பிரதிநிதித்துவத்தினை இலங்கையர் கோரலாயினர். இக்கோரிக்கையினை ஆங்கிலம் கற்ற வகுப்பினர் மேற்கொண்டனர். இதற்காக அகிம்சைப் போராட்டங்களையும் கிளர்ச்சிகளையும் அவர்கள் நடத்தினர். 1833 இல் கொண்டுவரப்பட்ட அரசியல் யாப்பில் திருத்தங்கள் கோரி தொடர்ச்சியாக ஆங்கில அரசாங்கத்திற்கு எதிராகக் கிளர்ச்சிகளில் ஈடுபட்ட காலம். 1910 -1915 இல் இக்கிளர்ச்சி தீவிரமடைந்திருந்தது. 1915 இல் பௌத்த மத ஊர்வலம் ஒன்றை நடத்தும் போது குறிப்பிட்ட கம்பளை முஸ்லிம் பள்ளிவாசலைக் கடக்கும் சந்தர்ப்பத்தில் 100 யார் தூரத்துக்கு எந்தவித ஆரவாரமும் இன்றிச் செல்ல வேண்டுமென்ற உயர்நீதிமன்றத் தீர்ப்புக்கு மதிப்பளிக்காது ஊர்வலத்தில் ஈடுபட்ட பௌத்த சிங்களவர் செயற்பட்டுக் கொண்டனர். இதனால், இந்திய முஸ்லிம்களுக்கும் சிங்களவர்களுக்குமிடையே மோதல்கள் வெடித்தன.
ஏற்கனவே முஸ்லிம்களுக்கும் சிங்களவர்களுக்கும் இடையில் சமூக, பொருளாதார ரீதியாகக் காணப்பட்ட போட்டியானது இந்தக் கலவரத்திற்கு மற்றொரு காரணமாகவும் கூறப்படுகின்றது. எது எவ்வாறாக இருந்தபோதும், சமயம் சம்பந்தமான இந்த முரண்பாடானது முஸ்லிம்களுக்கு எதிரான வன்செயலுக்கு காரணமாயிற்று. இந்த வன்செயலினால், கம்பளையிலுள்ள முஸ்லிம்களின் கடைகள், சொத்துக்கள் அடித்து நொறுக்கப்பட்டன. கொள்ளையடிக்கப்பட்டன. இந்த வன்செயல் கொழும்பு, குருநாகல் போன்ற இடங்களுக்கும் பரவிக்கொண்டது. இந்த நிலையைக் கண்டு ஆங்கில அரசு அச்சமடைந்தது. இந்த அச்சத்திற்கு மற்றொரு முக்கிய காரணமும் இருந்தது. அப்போது முதலாம் உலக மகாயுத்தம் தீவிரமடைந்திருந்தது. இந்த யுத்தத்தில் பிரித்தானியா முக்கிய பங்கு வகித்திருந்தது.
இதனால் சிங்கள முஸ்லிம் குழப்பத்தின் பின்னணியில் அரசாங்கத்திற்கு விரோதமான சக்திகள் இருப்பதாக ஆளுநர் றொபட் தோமஸ் அச்சமும் ஐயமும் கொண்டார். இதனை அடக்க கடும் நடவடிக்கை எடுத்தார். ஏறக்குறைய நாட்டில் எல்லாப் பகுதிகளுக்கும் பரவிய முஸ்லிம்களுக்கெதிரான வன்செயல்களை அடக்க இராணுவச் சட்டத்தை (மார்ஷல்லோ) பிரகடனப்படுத்தினார். எவ்.ஆர். சேனநாயக்க அவரின் சகோதரர், டி.எஸ். சேனநாயக்க போன்ற பல சிங்களத் தலைவர்கள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். அதுமட்டுமல்ல, கலகத்தை அடக்க எடுத்த கடும் நடவடிக்கையினால் வில்லியம் பதிரிஸ் உட்பட பல சிங்களவர்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
முஸ்லிம் சிங்கள இனமோதல் மூலம் அவர்களிடையே காணப்பட்ட உறவுகள் திருப்தியற்றனவாக மாறிக்கொண்டன. தற்போது இலங்கையில் தமிழர்களுக்கெதிராக மேற்கொள்ளப்படும் வன்முறையானது சிங்களவர்களாலும் அவர்களின் ஆட்சியாளர்களினாலும் காலத்துக்குக் காலம் கட்டவிழ்த்து விடப்பட்டன என்பது தெளிவானது. ஆனால், 1915 இல் இடம்பெற்ற முஸ்லிம் சிங்கள வன்முறையானது தாய்நாட்டவர்களுக்கிடையிலானதாக அமைந்த போதும் அவற்றினை அடக்கியவர்கள் அந்நியரான ஆங்கில ஆட்சியாளர்கள் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.
எனவே, இலங்கையின் இன ரீதியான வன்முறையானது தமிழருக்கு எதிராக அல்லாமல் முதன் முதல் முஸ்லிம்களுக்கெதிராகவே நடத்தப்பட்டதென்பது குறிப்பிடத்தக்கது. சிங்களவர்கள், சிறுபான்மைத் தமிழர்களுக்கெதிராக இன்று மேற்கொள்ளும் இனவன்முறையின் முதற்படி 1915 இல் முஸ்லிம்களுக்கு எதிராக சிங்களவர்களால் நடத்திக் காட்டப்பட்டதென்பதும் சுட்டிக்காட்டத்தக்கது.
தனிச் சிங்களச் சட்டமும் தமிழர்களுக்கு எதிரான முதல் இனக்கலவரமும் 1956
இலங்கை சுதந்திரமடைந்த பின்பு சிறுபான்மையோர் புறக்கணிக்கப்பட்ட முதல் வரலாற்றுச் சம்பவம் 1956 இல் கொண்டுவரப்பட்ட தனிச்சிங்களச் சட்டமாகும். அப்போதைய பிரதம மந்திரி எஸ்.டபிள்யூ.ஆர்.டி. பண்டாரநாயக்க சிங்களம் மட்டும் சட்டத்தைக் கொண்டுவந்து கறைபடிந்த இலங்கை வரலாற்றை உருவாக்கினார். இதன் மூலம் தமிழ் மொழியையும் புறக்கணித்தனர்.
இதனை எதிர்த்து 1956 ஜூன் 5 ஆம் நாள் காலிமுகத்திடலில் உண்ணாவிரதம் இருந்த தமிழரசுக் கட்சியின் உறுப்பினர்கள் சிங்களமொழி மட்டும் சட்டத்திற்கு ஆதரவான குண்டர்களினால் மிகக் கடுமையாகத் தாக்கப்பட்டனர். தமிழர்கள் பலர் கொல்லப்பட்டனர். தமிழர்களுடைய சொத்துக்கள் கொள்ளையடிக்கப்பட்டு தீக்கிரையாக்கப்பட்டன. சுதந்திர இலங்கையில் சிறுபான்மை இனத்தவரான தமிழருக்கு எதிராக சிங்களவர் மேற்கொண்ட முதல் இனக்கலவரம் இதுவாகும். இதன் பின்பு இரண்டு இனங்களும் இரு துருவங்களாக ஒருவரை ஒருவர் சந்தேகத்துடன் நோக்கும் நிலை தொடரும் நிலை ஏற்பட்டுக்கொண்டது.
1958 இனக்கலவரம்
1957 ஜூலை 26 ஆம் நாள் தமிழரசுக்கட்சியின் தலைவர் எஸ்.ஜே. செல்வநாயகம் மற்றும் அப்போதைய பிரதமர் எஸ்.டபிள்யூ.ஆர்.டி. பண்டாரநாயக்கவுக்குமிடையில் ஒப்பந்தம் ஒன்று செய்யப்பட்டது. இது பண்டா செல்வா ஒப்பந்தம் என அழைக்கப்பட்டது.
ஒப்பந்தம் செய்யப்பட்டு 5 மாதங்கள் கடந்த பின்பு அது நிறைவேற்றப்படவில்லை. ஒப்பந்தம் தேங்கிக் கிடந்தது. இது ஒருபுறமிருக்க 1957 நவம்பர் சிங்கள “ஸ்ரீ’ சட்டம் கொண்டுவரப்பட்டது. இதனால் தமிழரசுக்கட்சியினர் கடுமையான எதிர்ப்புப் போராட்டங்களை நடத்தியிருந்தனர். 1958 ஏப்ரல் 9 ஆம் நாள் விமல விஜயவர்த்தன தலைமையிலான குழுவினர் ஒப்பந்தத்தைக் கிழித்தெறியும்படி கோரிப் பிரதம மந்திரியின் இல்லத்தை முற்றுகையிட்டுக் கொண்டனர். இதனைத் தொடர்ந்து இந்த ஒப்பந்தம் கிழித்துத் தூக்கி வீசப்பட்டது. இதனால், நாடு முழுவதும் தமிழருக்கெதிரான இனக்கலவரத்தை சிங்களவர் ஏற்படுத்தினர். இக்கலவரம் 1958 மே 26, 27, 28 ஆம் திகதிகள் வரை நீடித்திருந்தது. இதனைத் தொடர்ந்து ஆயிரக்கணக்கான தமிழர்கள் அகதிகள் முகாமுக்குள் புகுந்துகொள்ள நேர்ந்தது.
தமிழாராய்ச்சி மாநாடும் தாக்குதலும்
1974 ஜனவரி 3 ஆம் திகதி முதல் 10 ஆம் திகதி வரை யாழ்ப்பாணத்தில் நான்காவது தமிழாராய்ச்சி மாநாடு நடைபெற்றது. இம்மாநாட்டில் பல வெளிநாட்டுப் பிரமுகர்களும் கல்விமான்களும் கலந்து கொண்டனர்.
1974 ஜனவரி 10 ஆம் நாள் மாநாட்டில் புகுந்த பொலிஸார் பெரும் தாக்குதல் ஒன்றை நடத்தினர். எந்தவித காரணமும் இன்றி தாக்குதல் நடத்தப்பட்டது. இதன்போது 9 தமிழ்ப் பொதுமக்கள் கொலை செய்யப்பட்டனர். இது மற்றொரு இனரீதியான ஒடுக்குமுறைத் தாக்குதலாகும். இது ஸ்ரீமாவோ பண்டாரநாயக்கா அம்மையார் பிரதம மந்திரியாக இருந்த காலத்தில் இடம்பெற்றது.
1977 இன் இனக்கலவரம்
ஐ.தே.க.வினர் ஆட்சிப் பொறுப்பேற்று ஒரு மாதம் கடக்கும் முன்னர் தமிழருக்கு எதிரான மற்றொரு வன்முறை கட்டவிழ்த்து விடப்பட்டது. யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற களியாட்ட நிகழ்வின் போது பாடசாலை மாணவர்களுக்கும் பொலிஸாருக்கும் இடையில் மோதல் ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து மூன்று மாணவர்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர். இதன் பின்னணியில் இரண்டு பொலிஸார் சுட்டுக் கொல்லப்பட்டனர். இச்சம்பவம் காட்டுத்தீ போல் பரவியது. 1977 ஆகஸ்ட் 17 இல் அனுராதபுர புகையிரத நிலையத்தில் வைத்து தமிழர்கள் தாக்கப்பட்டனர். இதனையடுத்து இனக் கலவரம் ஒன்று வெடித்தது.
இக்கலவரம் இரண்டு வாரகாலம் நீடித்தது. தமிழர்களின் உடைமைகள், உயிர்கள் பறிக்கப்பட்டன. சொத்துக்கள் தீயிட்டு எரிக்கப்பட்டன. இக்கலவரம் 1958 ஐ விட சற்று விரிவாக நடத்தப்பட்டது. மலையகத்திற்கும் பரவியது. இலங்கைவாழ் தமிழர்கள் கடும் இன்னல்களுக்கு முகம் கொடுத்ததோடு, இடம்பெயர்ந்தனர். இந்த துயரச் சம்பவங்கள் இலங்கைத் தமிழர் வரலாற்றில் ஜீரணிக்க முடியாதவையாகும்.
1981 ஆகஸ்ட் செப்டெம்பர் மாத இனக்கலவரம்
இதேபோன்று 1981 ஆகஸ்ட் செப்டெம்பர் மாதங்களில் தமிழருக்கு எதிரான வன்செயல்கள் கட்டவிழ்த்து விடப்பட்டன. ஐ.தே.க. அரசாங்க காலத்தில் இடம்பெற்ற இரண்டாவது இன வன்முறை இதுவாகும். அதாவது, ஜே.ஆர். ஆட்சிப் பொறுப்பேற்று நடந்த மற்றொரு துயரச் சம்பவமாகும்.
ஐ.தே.கட்சியின் சார்பில் யாழ்ப்பாணத்தில் மாவட்ட அபிவிருத்தி சபைத் தேர்தலில் போட்டியிட்ட தியாகராசா சுட்டுக் கொல்லப்பட்டார். அதுமட்டுமல்ல தேர்தல் பணிகளில் ஈடுபட்டிருந்த பொலிஸார் இருவர் வேறொரு சம்பவத்தில் சுட்டுக் கொல்லப்பட்டனர். இதனைத் தொடர்ந்து தமிழருக்கு எதிரான வன்செயல்கள் கட்டவிழ்த்து விடப்பட்டன. தமிழர் விடுதலைக் கூட்டணியின் காரியாலயம் உடைக்கப்பட்டு தீக்கிரையாக்கப்பட்டது. 96 ஆயிரம் புத்தகங்களுடன் கூடிய யாழ். நூலகம் திட்டமிட்டு எரிக்கப்பட்டது. தமிழர்களின் அறிவியல் பொக்கிசம் எரிக்கப்பட்டு நாசமாக்கப்பட்டதை எந்தத் தமிழராலும் ஜீரணிக்க முடியுமா?
யாழ்ப்பாணத்துக்கென நிரந்தர இராணுவ அணி ஒன்று நிறுத்தி வைக்கப்படுவது தொடர்பிலும் அதற்கு வழங்கப்பட்டிருந்த அதிகாரங்கள் பற்றியும் செய்திகள் பத்திரிகைகளில் வெளியாகியிருந்தன. அத்துடன், 1981 ஜூலை 28 ஆம் நாள் ஆனைக்கோட்டைப் பொலிஸ் நிலையம் தமிழ்ப் போராளிகளினால் தாக்கியழிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து புகைந்துகொண்டிருந்த தமிழருக்கெதிரான மற்றொரு வன்செயல் 1981 ஜூலை 31 ஆகஸ்ட் 1 ஆம் திகதிகளில் திட்டமிட்டு ஐ.தே.க.வில் செல்வாக்குமிக்கவர்களால் இந்த இனவன்முறை முன்னெடுக்கப்பட்டிருந்தமையும் நாம் நினைவு கூரத்தக்கது. கிழக்கு மற்றும் தென் பகுதிகளில் வாழ்ந்த தமிழ்மக்கள் தாக்கப்பட்டனர். மலையகத்திலும் திட்டமிட்டு தோட்டத் தொழிலாளர்கள் தாக்கப்பட்டனர். தமிழர்களின் சொத்துக்கள், உடைமைகள் சேதமாக்கப்பட்டன. இந்த இனவன்முறையினை அனுபவித்த தமிழர்களால் இதனை மறக்க முடியுமா?
1983 ஜூலை இனக்கலவரம்
1983 ஜூலை 23 ஆம் நாள் இரவு யாழ்ப்பாணத்தில் ரோந்து சென்ற படையினரின் வாகனத்தின் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் 13 இராணுவ வீரர்கள் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து மறுநாள் குண்டர்களால் இனவன்முறை மேற்கொள்ளப்பட்டது. இந்த இனக் கலவரத்தின்போது வெலிக்கடைச் சிறையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த 52 தமிழர்கள் கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டனர். சிறைச்சாலையில் குட்டிமணி, ஜெகன், தங்கத்துரை உட்பட்டவர்களும் அடங்கியிருந்தனர். ஆயிரக்கணக்கான தமிழர்கள் அகதிகள் முகாம்களில் தஞ்சமடைந்தனர். கோடிக்கணக்கான பெறுமதியான பொருட்சேதம் ஏற்பட்டது. தமிழர்களால் என்றென்றும் மறக்கமுடியாத துயரச் சம்பவமாக 1983 ஜூலைக் கலவரத்தைக் குறிப்பிடமுடியும். இந்தக் கலவரத்தினால் இழப்புக்களைச் சந்தித்துக் கொண்டவர்களால் என்றும் இந்தக் கலவரத்தை மறக்க முடியுமா? 1983க்கு பிற்பட்ட காலத்திலும் பல இன ரீதியான தாக்குதல் சம்பவங்கள் வரலாற்றில் இருப்புக்கொண்டுள்ளன என்பதனை நாம் குறித்துக்கொள்ள முடியும்.
“தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்”