குட்டிமணியின் கண்கள்…
“எனது மரணதண்டனையை நிறைவேற்ற முன் எனது கண்களை எடுத்து, பார்வையற்ற ஒருவருக்குப் பொருத்துங்கள். நான் பார்க்க முடியாத தமிழீழத்தை என் கண்களாவது பார்க்கட்டும்.” – குட்டிமணி
விடுதலை விலைமதிப்பற்றது. நாளை மலரப் போகும் தமிழீழத்திற்காக ஆயிரமாயிரம் வீரர்களும் வீராங்கனைகளும் தங்கள் இன்னுயிர்களை விடுதலை வேள்விக்கு காணிக்கையாக்கிக் கொண்டார்கள். தனது எதிர்காலத் தலைமுறை எந்த வித அடக்குமுறைகளும் அற்று உரிமையுடனும் சுதந்திரத்துடனும் வாழ்வதற்காக தன்னை அழித்துக் கொண்டவர்தான் குட்டிமணி என்று அழைக்கப்படும் திரு செல்வராசா யோகச்சந்திரன்.
ஈழத் தமிழர்களின் இன்னல்கள் நிரந்தரமாகக் களையப் படவேண்டுமென்றால் தனித் தமிழீழம்தான் நிரந்தரத் தீர்வாக அமையும் என்பதில் மிக உறுதியாக இருந்தவர் குட்டிமணி. அந்த விடுதலை வீரரை 08-05 1981 அன்று சிங்களக் காவல் துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர். சிங்கள நீதிமன்றம் அவருக்கு மரணதன்டனை வழங்கித் தீர்ப்பளித்தது. தீர்ப்பளித்த நீதிபதி குட்டிமணியின் இறுதி ஆசையைக் கேட்டபோது, அதற்கு குட்டிமணி கூறிய பதில் அவரது உள்ளக் கிடக்கையையும் விடுதலைமேல் அவர் கொண்டிருந்த தீராத பற்றையும் உலகுக்கு வெளிச்சம் போட்டுக் காட்டியது.
“எனது மரணதண்டனையை நிறைவேற்ற முன் எனது கண்களை எடுத்து, பார்வையற்ற ஒருவருக்குப் பொருத்துங்கள். நான் பார்க்க முடியாத தமிழீழத்தை என் கண்களாவது பார்க்கட்டும்.”
இதுதான் அந்த விடுதலை வீரரின் கடைசி ஆசை. அதற்குப் பின் அவர் வெலிக்கடைச் சிறையில் அடைக்கப் பட்டார். அந்தச் சிறையில் ஏற்கனவே பல சிங்களக் கைதிகளும் தமிழ்க் கைதிகளும் இருந்தனர். சிங்களக் கைதிகள் கொலை, கொள்ளை, பாலியல் வல்லுறவு போன்ற குற்றங்களுக்காக சிறை வைக்கப்பட்டிருந்தனர். தமிழர்கள் விடுதலைப் போராட்டத்தில் ஈடுபட்டதற்காக சிறை வைக்கப் பட்டிருந்தனர். இனமோதல்களை தவிர்ப்பதற்காக தமிழ்க் கைதிகளும் சிங்களக் கைதிகளும் வெவ்வேறு சிறைகளில் அடைத்து வைக்கப் பட்டிருந்தனர். குட்டிமணி 34 தமிழ்க் கைதிகளுடன் அடைத்து வைக்கப் பட்டிருந்தார். 1983 ஆம் ஆண்டு இலங்கையில் தமிழ் மக்களுக்கு எதிராக மிகப் பெரிய இனக் கலவரம் மூண்டது. யூலை மாதம் 24 ஆம் திகதி தொடங்கிய அந்தக் கலவரம் பல வாரங்கள் தொடர்ந்தது. இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட தமிழர்கள் படுகொலை செய்யப் பட்டார்கள். பலர் உயிரோடு கொழுத்தப் பட்டனர். தமிழ்ப் பெண்கள் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டு கொலை செய்யப் பட்டனர். பல்லாயிரக்கணக்கான தமிழர்களின் சொத்துக்கள் சூறையாடப் பட்டன. அப்போது ஆளுங்கட்சியாக இருந்த ஐக்கிய தேசியக் கட்சி (U.N.P.) கலவரத்தை அடக்காமல் கை கட்டி வேடிக்கை பார்த்ததுமில்லாமல் கலவரத்தை மேலும் தூண்டும் வேலைகளிலும் இறங்கியது.
இந்தக் கலவரத்தின் தீ வெலிக் கடைச் சிறையில் அடைத்து வைக்கப்பட்டிருந்த சிங்களக் கைதிகளையும் பற்றிக் கொண்டது. சிறைக் காப்பாளர்கள் அந்தச் சிங்களக் கைதிகளின் இனவெறிக்கு தீனி போடும் வகையில் தமிழ்க் கைதிகள் அடைத்து வைக்கப் பட்டிருந்த சிறைக் கதவுகளைத் திறந்து விட்டனர். கத்தி, வாள் மற்றும் பல கூரிய ஆயதங்களுடன் தமிழ்க் கைதிகளின் அறைகளுக்குள் நுழைந்து அவர்களை வெட்டி வீழ்த்தினர். குட்டிமணியின் கடைசி ஆசையை ஏற்கனவே கேள்விப் பட்டிருந்த அந்தச் சிங்களக் கைதிகள் அவரை வெட்டிப் படுகொலை செய்தது மட்டுமல்ல அவரது கண்களைத் தோண்டி எடுத்து அதை தங்களது கால்களால் நசுக்கி அழித்தனர். குட்டிமணியோடு சேர்த்து படுகொலை செய்யப் பட்ட 35 தமிழ்க் கைதிகளின் உடல்களை வெளியில் எடுத்துச் சென்று சிறைச் சாலை முற்றத்தில் இருந்த புத்தர் சிலைக்கு முன்னால் போட்டு விட்டு ஆனந்தக் கூத்தாடினர்.
குட்டிமணி மட்டுமல்ல அவரது கண்கள் கூட தமிழீழத்தைப் பார்த்துவிடக்கூடாது என்பதில் வெறியாக இருந்தனர் அந்தச் சிங்களக் கைதிகள். அந்த விடுதலை வீரரின் இறுதி ஆசையை நிறைவேறாமல் செய்தனர். குட்டிமணி மட்டுமல்ல பல்லாயிக்கணக்கான பெண்களும் ஆண்களும் தங்கள் உயிரினும் மேலாக நேசித்த அந்தத் தமிழீழத் தனியரசைக் காணும் முன்பே போர்க்களத்தில் தங்கள் உயிர்களைக் காணிக்கையாக்கிக் கொண்டனர். இவர்கள் எதைக் கேட்டார்கள்? உரிமைகள் மறுக்கப்பட்ட தங்கள் இனத்துக்காக விலங்கிலும் கேவலமாக நடத்தப்பட்ட தங்கள் மக்களுக்காக நீதியையும் நியாயத்தையும் அமைதியையும் விடுதலையையும் கேட்டார்கள்.
(செப்டம்பர் திங்கள் 1997 ஆம் ஆண்டு, ‘Tamil Tribune’ எனும் இதழில் பேராசிரியர் தஞ்சை நலங்கிள்ளி அவர்கள் எழுதிய “Eyes Of Kuttimani” என்ற ஆங்கிலக் கட்டுரையின் தமிழாக்கம்)
வெலிக்கடைச் சிறைச்சாலையில் படுகொலை செய்யப்பட்டவர்களின் விவரம் பின்வருமாறு …
* தங்கதுரை என்று அழைக்கப்படும் நடராசா தங்கவேல்
* குட்டிமணி என்று அழைக்கப்படும் செல்வராஜா யோகச்சந்திரன்
* ஜெகன் என்று அழைக்கப்படும் கணேஷானந்தன் ஜெகநாதன்
* தேவன் என்று அழைக்கப்படும் செல்லதுரை சிவசுப்பிரமணியம்
* சிவபாதம் மாஸ்டர் என்று அழைக்கப்படும் நவரத்தினம் சிவபாதம்
* செனட்டர் என்று அழைக்கப்படும் வைத்திலிங்கம் நடேசுதாசன்
* அருமைநாயகம் என்றும் சின்னராஜா என்றும் அழைக்கப்படும்செல்லதுரை ஜெயரெத்தினம்
* அன்ரன் என்று அழைக்கப்படும் சிவநாயகம் அன்பழகன்
* ராசன் என்று அழைக்கப்படும் அரியபுத்திரன் பாலசுப்பிரமணியம்
* சுரேஷ் மாஸ்டர் என்று அழைக்கப்படும் காசிப்பிள்ளை சுரேஷ்குமார்
* சின்னதுரை அருந்தவராசா
* தேவன் என்றும் அரபாத் என்றும் அழைக்கப்படும் தனபாலசிங்கம் தேவகுமார்
* மயில்வாகனம் சின்னையா
* சித்திரவேல் சிவானந்தராஜா
* கணபதிப்பிள்ளை மயில்வாகனம்
* தம்பு கந்தையா
* சின்னப்பு உதயசீலன்
* கணேஷ் என்றும் கணேஷ்வரன் என்றும் அழைக்கப்படும் கதிரவேற்பிள்ளை ஈஸ்வரநாதன்
* கிருஷ்ணபிள்ளை நாகராஜா
* கணேஷ் என்று அழைக்கப்படும் கணபதி கணேசலிங்கம்
* அம்பலம் சுதாகரன்
* இராமலிங்கம் பாலச்சந்திரன்
* பசுபதி மகேந்திரன்
* கண்ணன் என்று அழைக்கப்படும் காசிநாதன் தில்லைநாதன்
* குலம் என்று அழைக்கப்படும் செல்லப்பா குலராஜசேகரம்
* மோகன் என்று அழைக்கப்படும் குமாரசாமி உதயகுமார்
* ராஜன் என்று அழைக்கப்படும் சுப்பிரமணியம் சிவகுமார்
* ராஜன் கோதண்டபிள்ளை தவராஜலிங்கம்
* கொழும்பான் என்று அழைக்கப்படும் கருப்பையா கிருஷ்ணகுமார்
* யோகன் என்று அழைக்கப்படும் ராஜயோகநாதன்
* அமுதன் என்றும் அவுடா என்றும் அழைக்கப்படும் ஞானசேகரன் அமிர்தலிங்கம்
* அந்தோணிப்பிள்ளை உதயகுமார்
* அழகராசா ராஜன்
* வேலுப்பிள்ளை சந்திரகுமார்
* சாந்தன் என்று அழைக்கப்படும் சிற்றம்பலம் சாந்தகுமார் ஆகிய 35 தமிழர்களும் ….
இரண்டாம் நாள் படுகொலை செய்யப்பட்டோர் விவரம் வருமாறு…
* தெய்வநாயகம் பாஸ்கரன்
* பொன்னம்பலம் தேவகுமார்
* பொன்னையா துரைராசா
* குத்துக்குமார் ஸ்ரீகுமார்
* அமிர்தநாயகம் பிலிப்குமாரகுலசிங்கம்
* செல்லச்சாமி குமார்
* கந்தசாமி சர்வேஸ்வரன்
* அரியாம்பிள்ளை மரியாம்பிள்ளை
* சிவபாலம் நீதிராஜா
* ஞானமுத்து நவரத்தின சிங்கம்
* கந்தையா ராஜேந்திரம்
* டாக்டர் ராஜசுந்தரம்
* சோமசுந்தரம் மனோரஞ்சன்
* ஆறுமுகம் சேயோன்
* தாமோதரம்பிள்ளை ஜெயமுகுந்தன்
* சின்னதம்பி சிவசுப்பிரமணியம்
* செல்லப்பா இராஜரட்னம்
* குமாரசாமி கணேசலிங்கன்
இனவெறி சிங்கள ஆதிக்க சக்தியின் இன அழிப்பு கோரவதாண்டவத்தில் படுகொலையான இவ் உறவுகளுக்கு எம் இதய அஞ்சலிகள்.
“தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்”