மாவீரர் நினைவுகள்…..
இன்று எம் தேசத்தின் உறவுகள் அனைவரும் புலத்தில் வாழ்ந்தாலும் தமிழீழ விடியலுக்காக வித்தான மாவீரர்களை நினைக்க மறந்ததில்லை.
பல உறவுகளுக்குள் சில கருத்து வேறுபாடுகள், போட்டிகள் இருந்தாலும் அனைவரும் ஒன்றே ஒன்றை விட்டுக்கொடுத்ததில்லை. அது எம் தேசியம். தேசியத் தலைவர் அவர் வழி மாவீரர்களை……,
அந்த வீரர்களின் வீரத்தின் ஈகங்களை, சுவடுகளை (நினைவுகள்) பல இணையம் முகநூல் மற்றும் பல ஊடகங்கள் வாயிலாக பல வர்ணம் தீட்டி பல வகையான பரிமாணத்தில் நீளும் நினைவுகளை மீட்டுச் செல்கின்றனர்.
தாயத்தில் அன்றும் தமிழீழ தேசியக் கட்டமைப்பு அன்றைய சூழ்நிலைகளில் மாவீரர்களின் நினைவுகளை பல ஆவணங்களில் பதித்து வைத்தது. அவை தமிழீழத்திலும், புலத்திலும் சில பத்திரிகை, வார இதழ்கள், சஞ்சிகைகள் என நின்றன.
ஆயினும் கரும்புலிகள் நினைவுகள் அடங்கிய தொகுப்பு அருச்சுனா புகைப்படப் பிரிவு வெளியிட்டு அவை கரும்புலிகளின் ஈகத்தின் சான்றின் திருவுருவமாக இன்றும் உலா வருகின்றன. எம் தேசம் போர் மேகம் கொண்ட வாழ்வாக இருந்தது. அதற்குள்ளும் இருந்தும் எம் தேசியத் தலைவரின் எண்ணத்திலும் பல போராளிகளின் தியாகத்திலும், உழைப்பிலும் பல படைப்புகள் ஆவணப்படுத்தப்பட்டு வந்தன எம் ஆணிவேர்களே மாவீரர்கள் தான்.
அதற்குள் இருந்து ஆவணப்படுத்தப்பட்ட கரும்புலி தொகுப்பு அடங்கிய படத்தொகுப்புகள், ஒளிவீச்சு சஞ்சிகைகள், மற்றும் சூரியப்புதல்வர்கள், நெருப்பு மனிதர்கள், கரும்புலிகள், உயிராயுதங்கள் என கரும்புலிகள் நினைவில் மலர்ந்த இவ்வகையான ஆக்கங்கள், காணொளிகள் வடிவில் வந்தன. இவை பல உறவுகளின் கைகளில் இருந்து இன்று பல ஊடகங்கள், முகநூல், ரிவிட்டர் போன்று பல சமூக இணையத்தளம் வாயிலாக நாம் பார்க்க முடியும்.
குறிப்பாக நாம் அனைவரும் முகநூலில் பகிரும்போது சில மாற்றத்தை அவதானிக்க முடியும் அது என்னவெனில் சில கரும்புலிகள் பதிவுகள் திகதிகள் மாதங்கள் குழப்பத்தை ஏற்படுத்தும்.
கரும்புலிகள் மீது நாம் எவ்வளவு வார்த்தைகளால் வர்ணிக்க முடியாத அளவு பற்று வைத்துள்ளோம். அந்தப் பற்றின் காரணமாக அனைத்து கரும்புலிகளின் நினைவு தினத்தை எம் வசம் இருக்கும் கரும்புலிகள் பதிவை நாம் பகிருவோம்.
இது எவரின் தவறும் இல்லை. அன்று அந்தக் கரும்புலியின் திருவுருவம் வடிவமைக்கும் போது இருந்த களச்சுழல் நாம் அறியோம். அந்த களச்சுழலில் இருந்து வடிவமைக்கப்பட்ட பதிவுகளில் சில எழுத்துப்பிழைகள் ஏற்பட்டிருக்கலாம், ஆதலால் மாவீரர்களின் பல பதிவுகளை நாம் அவதானித்து அவர்களின் வீரவணக்க நினைவின் நீளும் நினைவுகளை மீட்டுவோம் என்றும் அவர்களே எம் தேசத்தின் உயிர்நாடிகள்.
உதாரணமாக ஒன்றை இணைக்கின்றேன்:- கடற்கரும்புலிகள் லெப்.கேணல் நீதியப்பன், மேஜர் அந்தமான் ஆகியோரின் பதிவுகள் 15.08.1999 என்று பல இணையத்தில் பதியப்பட்டது. ஆனால் உயிராயுதம் பாகம் 07ல் இவ் கடற்கரும்புலிகளின் உயிரோட்டம் 01.34:45 – 01.40:00 வரை 16.09.1999 கூறி நீள்கிறது.
தேசத்தின் வரலாறு என்றும் தவறாகக்கூடாது எனும் ஆதங்கத்தில் தேசத்தின் குடிமகனாய்.