இரகசிய இடைவெளி….
கட்டைக்காடு மணல் வெய்யிலில் தகித்துக் கொண்டிருக்கிறது. வானம் தெளிந்து நீலமாகக் காட்சியளிக்கின்றது. ஆயினும் யுத்தமேகம் அப்பகுதியை ஆக்கிரமித்துள்ளது. மயான அமைதி மறைமுக அழுத்தமொன்றைப் பிரயோகிக்கின்றது. பகைவனிடமிருந்து கைப்பற்றப்பட்ட மினி முகாமொன்று களமருத்துவ நிலையாக இயங்கிக்கொண்டிருக்கிறது. அதன் பொறுப்பு மருத்துவர் பிரத்தியேக அழைப்பையேற்று பின்தளம் செல்கின்றார். ஆதலால் நிலைமைகளுக்கு ஏற்ப முடிவெடுக்கும் பொறுப்பு தன்னியல்பாக அங்கு கடமையாற்றும், அனுபவமுள்ள களமருத்துவர் எனவகைப்படுத்தப்பட்ட பெண் போராளி மருத்துவர் சாந்தியிடம் சென்றடைகின்றது. தவிர்க்க முடியாமல் உருவான இச்சூழலால் அவள் சற்றுத் தடுமாறவே செய்கிறாள். களமருத்துவத்தில் அவசர அவசிய முகாமைத்துவம் என்பது இயல்பானதொன்று. ஆபத்தான காயங்கள் வந்தால் தான் எவ்வாறு செயற்படவேண்டும், எவ்வாறு ஒருங்கிணைப்பை மேற்கொள்ள வேண்டும் என தன்னுள் ஒத்திகை பார்க்கிறாள். அவ்வேளை கடந்தகால கள நிகழ்வொன்று ஞாபகக்கதவை திறக்கின்றது.
ஜெயசிக்குறு மூர்க்கம் பெற்றிருந்த காலத்தில் வன்னி மண்ணின் மையப்பகுதியின் பெரியமடுப் பகுதியில் பெரியமடு எனும் கிராமத்தில் களமருத்துவ முகாம் அமைக்கப்பட்டுள்ளது. அங்கு பிரதான மருத்துவருக்கு உதவியாக இவள் பணியாற்றுகின்றாள். ஒருநாள் அதிகாலை மூன்றுமணியளவில் காயமொன்று வருகின்றது. போராளியொருவனின் வலது மேற்காலில் நடுப்பகுதி சிதைந்துள்ளது. அவசரமாக அவனது உடல்நிலையும் காயமும் பரிசோதிக்கப்படுகின்றது. மீளவுயிர்ப்பளித்தல் சிகிச்சை அளிக்கப்படுகின்றது. சிதைந்த காயத்தினூடாக தொடைநாடி துடிப்பது தெரிகின்றது. உயிர்ப்பான குருதி வெளியேற்றம் காணப்படவில்லை. கீழ் கால்பகுதியின் குருதியோட்டம் முற்றாகத் துண்டிக்கப்பட்டதற்கான அறிகுறியும் தென்படவில்லை. மீள் குருதிப்பெருக்கு ஏற்படாத வகையில் கட்டுப்போடப்பட்டுள்ளது. திரவ ஊடகம், நோநிவாரணி என்பன ஏற்றப்பட்டு வேறு வாகனத்தில் மேலதிக சிகிச்சைக்காக பின்தள மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்படுகின்றான்.
சிறிது நேரத்தில் போன வாகனம் திரும்பி வருகின்றது. என்ன ஏதுவென்று விளங்காமல் ஓடிச்சென்று வினாவுகின்றார்கள்.
“இல்லை, இல்லை இன்னும் காயம் வருகின்றதாம் அதனையும் ஏற்றிப்போகட்டாம்” சாரதி கூறுகின்றான். வாகனங்களின் பற்றாக்குறை என்பது விளங்குகின்றது. அதற்காக இக்காயக்கத்தை தாமதிக்க இயலாது. “இல்லை இப்ப கொண்டுபோங்கோ மற்றதை வந்த பிறகு பார்ப்போம்” என திருப்பி அனுப்புகிறார்கள். “ச்சே… சரியாக விளங்கப்படுத்தியிருக்கவேணும் இன்னும் அரை மணித்தியாலம் பிந்தப்போகுது” மருத்துவர் தன்னுள் பேசிக்கொள்கிறார்.
குன்றும் குழியுமான பாதையில் ஊர்ந்து, காட்டில் புதிதாக வெட்டிய பாதைகளைக் கடந்து, ஒட்டுசுட்டான் பகுதியில் இயங்கும் மருத்துவமனையை காயம் வந்தடைகின்றது. அதற்குள் மேலும் மூன்று மணித்தியாலங்கள் கடந்துவிட்டிருந்தது. அங்கும் அவனுக்குத் தேவையான சிகிச்சைகள் வழங்கப்படுகின்றது. இக் காயத்திற்குக் குருதிக்கலன் திருத்தும் பாரிய சத்திர சிகிச்சையினை மேற்கொள்ளவேண்டும். அதற்கான பிரத்தியேக வசதிகளைக்கொண்ட, காட்டினுள் மறைமுகமாக இயங்கும் இன்னொரு மருத்துவமனைக்கு அனுப்பவேண்டும். அதற்கு மருத்துவமனைக்குச் சென்ற வாகனம் திரும்பவேண்டும். மீண்டும் ஒரு தாமதம் ஏற்படுகின்றது. குறித்த வாகனம் வந்தவுடன் காயக்காரன் மீண்டும் பயணிக்கின்றான். இக்காயம் வருவதற்குச் சிறிது நேரம் முன்னர்தான் அவ் மருத்துவமனையின் சத்திரசிகிச்சைக்கூடம் தனது அன்றைய பணிகளை நிறைவுசெய்திருந்தது. தொடர்ந்து சுத்திகரிப்பு வேலையும் மேற்கொள்ளப்பட்டிருந்தது. போராளிகளும் ஓய்வெடுக்கச் சென்றுவிட்டனர். இலத்திரனியல் ஒட்டுக்கேட்கும் கருவிகளின் உதவியால் இவ்விடம் அறிவிக்கப்பட்டுவிடக் கூடாது என்பதற்காக ” வோக்கி ” கதைப்பதும் மட்டுப்படுத்தப்பட்டிருந்தது. இதன் காரணமாக முன்னறிவிப்பு செய்வதும் சாத்தியம் இல்லாமல் போயிற்று. காயம் அம்மருத்துவமனையை வந்தடைய மேலும் இரண்டு மணித்தியாலங்கள் கடந்திருந்தது. மீண்டும் உரிய பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு சத்திரசிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. எனினும் காயமடைந்த காலின் இழையங்கள் தாக்குப் பிடித்து மீளத் தொழிற்படும் தன்மையை இழந்திருந்தன. சத்திர சிகிச்சையின் வெற்றியை பலகாரணிகள் தீர்மானிக்கும். அவற்றில் ஒன்றான நேரம் பிந்திவிட்டிருந்தது. இரண்டாம் நாள் அப்போராளியின் வலதுகால் தொடைமூட்டுடன் சத்திரசிகிச்சை மூலம் அகற்றப்பட்டுவிட்டது. இது அனைவருக்கும் ஒரு தோல்வி மனப்பான்மையைக் கொடுத்தது. இவ்வாறான சம்பவங்கள் தொடராமல் இருப்பதற்காக விளக்கங்கள் கோரப்பட்டு, ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு, மீள் அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டன. எது எப்படியோ சாதாரண செயற்கைக்கால் பொருத்த முடியாததால், அவனது நகரும் திறன் குறைக்கப்பட்டுவிட்டது.
மேற்படி அழுத்தம் தரும் நினைவுகள் அசைபோட்டுக் கொண்டிருந்தவளை விரைந்து வரும் வாகனச் சத்தம் உலுப்பி விட்டது. அதில் முன்னர் குறிப்பிட்ட மாதிரியான காயத்துடன், அதிர்ச்சி நிலையில் ஒரு பெண் போராளி கொண்டுவரப்பட்டிருந்தாள். அவள் கண்ணிவெடிப் பகுதிக்கு பொறுப்பாகச் செயற்பட்டுக் கொண்டிருந்தவள். வேகமாக மீளவுயிர்ப்பளித்தல் மேற்கொள்ளப்படுகின்றது. இரத்தம் ஏற்றவேண்டும், ஆனால் கைவசம் இரத்தம் சேமிப்பில் இல்லை. வேறு ஒருவரில் எடுத்து ஏற்றச் சூழ்நிலை இடம் கொடுக்கவில்லை. திரவ ஊடகம் ஏற்றி குருதியமுக்கத்தை தற்காலிகமாகப் பேணிக்கொள்கின்றாள். இரத்தப் பெருக்கை கட்டுப்படுத்தும் கட்டை சரிபார்த்துக் கொள்கிறாள். நோ நிவாரணி, நுண்ணுயிர் கொல்லி மருந்துகளையும் ஏற்றுகின்றாள். காயமடைந்த இடம், கொண்லட்டு எடுத்த நேரம், மேலதிக சிகிச்சைக்கு அனுப்பவேண்டிய தூரம், அதற்கு எடுக்கும் நேரம், இடையில் ஏற்படக்கூடிய தடங்கல்கள், தாமதங்கள், அவற்றைத் தவிர்க்கும் வழிமுறைகள் அனைத்தையும் கணித்துக்கொள்கிறாள். வேகமாகச் சிகிச்சை மேற்கொண்ட வண்ணம் கட்டளைகளை பிறப்பிக்கின்றாள். வாகனத்தை ரெடி பண்ணுங்கோ, வண்டியை தயாராக நிக்கச்சொல்லுங்கோ, கடற்கரையில O – இரத்தத்தோட கட்டாயம் களமருத்துவரை வந்து நிக்கச் சொல்லுங்கோ, மூன்று மணித்தியாலத்தில் கேஸ் கிடைக்கும் தியேட்டரை ரெடிபண்ணச் சொல்லுங்கோ… என மழ மழவென கட்டளைகளைப் பிறப்பிக்கிறாள். மேற்படி விடயங்களைச் சந்கேத பாசையில் அறிவித்து பதிலை உறுதிப்படுத்திக் கொள்கிறாள் அவளின் உதவியாள்.
மீண்டும் காயமடைந்தவளின் உடல்நிலையைப் பரிசோதிக்கின்றாள். காலின்கீழ் மட்டை வைத்துக் கட்டுகின்றாள். காயமுறற் வளின் உடற்தொழிலியகக்ம் தாக்குப்பிடிக்கும் பொறிமுறை இன்னும் சிறிதுநேரம் செயற்படும். அது கைவிடும்போது குருதியமுக்கம் திடீரென விழும். சிறுநீரகமும், ஏனைய அங்கங்களும் நிரந்தர பாதிப்புக்கு உள்ளாகலாம். அதனைத் தடுப்பதற்கான முன்னேற்ப்பாடுகளைச் செய்கிறாள். அவசர தேவைக்கான மருந்துகள் அடங்கிய பையையும், தனது துப்பாக்கியையும் எடுத்துக்கொள்கிறாள். பிக்கப் வாகனத்தில் காயத்தை ஏற்றி தானும் ஏறிக்கொள்கிறாள். அப்போது உதவிக்கு நிற்கும் போராளி கேட்கிறாள், “வேற காயம் வந்தால் என்ன செய்கிறது?”
“உனக்குச் சரியெண்டுபட்டால் செய், அங்கால பொறுப்பா ஒப்படைச்சுப்போடு. ஒரு மணித்தியாலத்தில திரும்பிடுவன்” என்றவள் சாரதியிடம் சொல்கிறாள், “உங்கட வேகத்திலதான் இவள் உயிர், கால் அல்லது இரண்டும் தங்கியிருக்கு” என தலையாட்டியவள் வாகனத்தை ஸ்ராட்செய்ய அது சீறிப்பாய்கின்றது.
அரை மணித்தியாலத்தில் கண்டாவளை நீரேரியை வந்தடைகின்றாள். அங்கு படகு தயாராக நின்றது. காயத்தை மாற்றி அதில் ஏற்றினார்கள். அது வேகமாக நீரைக்கிழித்துப் புறப்பட்டது. படகு அக்கரைசேர மேலும் அரை மணித்தியாலம் எடுத்தது. மறுகரையில் மருத்துவர் சீர்மாறன் ஆயத்தமாக நிற்கின்றார். படகு கரையை அண்மித்தவுடன் படகில் வைத்தே இரத்த மாற்றீடு செய்யப்படுகின்றது. அழற்சிக்குரிய அறிகுறிகள் தென்படவில்லை என்பதை உறுதிப்படுத்திய பின்னர் மீண்டும் ஒருபை இரத்தம் ஏற்றுகின்றார்கள். மீண்டும் உடல் நிலையைப் பரிசோதிக்கின்றனர். மறுபக்கம் நின்ற பிக்கப்பில் ஏற்றுகின்றனர். இரு மருத்துவர்களும் வெற்றிதான் என்பதற்கு சைகையாக வலதுகைப் பெருவிரலை உயர்த்தியபடி எதிர், எதிர்த் திசைகளில் நகர்கின்றார்கள்.
சில நாட்களின் பின்னர் மேற்படி போராளியின் சத்திர சிகிச்சை வெற்றியளித்ததை உறுதிப்படுத்திக் கொள்கிறாள். அவள் உயிர் காப்பாற்றப்பட்டதுடன் அல்லது காலின் தொழிற்படுதிறன் முழுமையாக மீளப்பெறப்படும் என்பதும் தெளிவானது. இது ஒரு திருப்தியைக் கொடுத்தது. எனினும் ஒரே மாதிரியான காயத்திற்குட்பட்ட இருவரில் ஒருவர் முழுமையான போராளியாகவும், இன்னொருவரின் கால் முழுமையாக இழக்கப்பட்டதற்குமான இரகசிய இடைவெளி நெஞ்சைப் பிசைகின்றது. ஆனாலும் இந்தமுறை அவர்கள் வென்றேவிட்டனர்.
குறிப்பு:- தொகுப்பு மருத்துவப் போராளிகள் பற்றியதால் அவர்கள் சார்ந்த புகைப்படத்தை தேசக்காற்று இணையம் பதிவாக்கியது.
– தூயவன்.
விடுதலைப்புலிகள் (ஆடி – ஆவணி 2005) இதழிலிருந்து தேசக்காற்று.
“புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்”