தொலைதூரக் கடலேறி கரைந்த காவியங்களில்………..
எம்.ரி சொய்சின் கப்பலில் வீரச்சாவைத் தழுவிய மாவீர்களின் வீரவணக நாள் இன்றாகும்.
சாமாதான உடன்படிக்கை காலத்தில் சிறிலங்கா கடற்படையின் யுத்த நிறுத்த மீறலால் சர்வதேசக் கடற்பரப்பில் 14.06.2003அன்று விடுதலைப்புலிகளின் எம்.ரி சொய்சின் எண்ணைக்கப்பலை வழிமறித்து தாக்கி அழிக்கப்பட்டபோது வீரச்சாவைத் தழுவிக்கொண்ட முன்று கடற்கரும்புலிகள் உட்பட ஏனைய கடற்புலி மாவீரர்களின் 12ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்.
தாய்மண்ணின் விடியலுக்காக தொலைதூரக் கடலேறி கரைந்த காவியங்கள்………….
ஆலக்கடலோடிகளின் வாழ்வியல், விடுதலையின் தாகத்துடன் அவன் பணியாற்றிய சூழ்நிலையின் சூழல் விபரம் தெளிவானால் அவனின் பணி எப்படியானதாக அமைந்திருக்கும் என புரிந்துகொள்ள முடியும்.
விடுதலைப் போராட்டத்தின் வீச்சுக் கருதியும் அதன் காப்புக் கருதியும் தேசியத் தலைவரின் தீர்க்க தரிசனத்தாலும், மதிநுட்பத்தாலும் உருவாக்கப்பட்டது கடற்புலிகளின் படையணி ஆகும். சின்ன விதையாகப் போட்ட விடுதலைப்பயிர் இன்று ஓர் விருட்சமாக கால் பதித்து நிற்கிறது.
அதிலே ஆழக்கடலோடிகளின் வீரம் செறிந்த தியாக அர்பணிப்பு சற்று மாறுபட்ட வரலாறாகி நிற்கிறது.
கடலோடிகளின் அன்றாட வாழ்வின் ஒவ்வொரு வினாடிகளும் எப்படியான ஓர் நிலையில் அமையும் என்பதை எழுத்துருவில் வடித்துவிடலாகாது, ஆயினும் காலவோட்டத்தில் நாம் அவர்களைப் பற்றி அறிந்தோமேயானால் அவர்களின் தியாகத்தையும் தியாகத்தின் உச்சத்தையும் புரிந்தவர்களாகவும் அவர்களின் இலட்சியப் பாதையில் தொடர்ந்து பயணிப்போமானால் அவர்களின் கனவை நனவாக்கி வீரத்தின் வரலாற்றில் நிலைக்கலாம்.
கிட்டண்ணாவின் காலம் தொடக்கம் விடுதலைப் புலிகளின் கப்பல்களின் போராளிகளுடன், சில மக்களும் இருப்பார்கள், அவர்கள் தேசியத் தலைவரின் சிந்தனைக்கு அமைவாக ‘விடுதலைப் போராட்டத்தில் மக்கள் வெறும் பார்வையாளராக இராது, நேரடிப் பங்காளிகளாக மாறவேண்டும்’. இப்படியாக சில மக்கள் தங்கள் வார்த்தைகளால் சொல்ல முடியா தியாகத்தின் உச்சமாக அளப்பரிய கடமைகளை விடுதலைப் போராட்டத்தில் செய்தார்கள். பின்நாட்களில் மாமனிதராக, நாட்டுபற்றாளராக மதிப்பளிக்கப்பட்டார்கள். அப்படியாக கடலிலும் தங்கள் பணியை முழு மூச்சுடன் செய்து முடித்தார்கள் வரலாறு ஓர் நாள் தன்னேட்டில் பதிவாக்கும் என்பதில் ஜயமில்லை.
அவர்கள் கப்பலில் கப்பல் கப்டனாக, இயந்திர பொறியியலாளராக, மாலுமியாக(கடலின் தகமை, மாற்றல்கள், காலநிலை) அறிந்தவர்களாக, சமையலாளராக இருப்பார்கள். அவர்களின் உயிருக்கு ஆபத்து நேரும் போது போராளிகள் தங்கள் உயிரை அர்ப்பணித்து அவர்களின் உயிரைக் காப்பற்றிய வரலாறுகளும் உண்டு.
ஓர் சாதாரண கப்பலின் வாழ்விலிருந்து எத்தனையோ மடங்கு வித்தியாசப்பட்டது தான். எம் கடலோடிகளின் அதாவது போராளிகளின் கப்பல் வாழ்வு அதில் அவர்கள் எம் நாட்டிற்கு தேவையான வளங்களை எப்படி சேகரிக்கின்றார்களோ அதற்கு எத்தனயோ தியாகங்களைத் தாண்டி எம் தேசத்தின் கரையை அடைகிறது.
அதில் ஓர் சிறு வட்டத்திற்குள் நாளும் எத்தனையோ வேலைகள் அலுவலகங்களைப் போல் அன்றாடம் நீளும் கடமைகள், இதற்கும் மத்தியில் சில கப்பல்களில் போராளிகளே நாளாந்த ஓர் அட்டவணையின்படி அன்றாட உணவு சமைக்கும் முறையும்வரும். சில கப்பல்களில் அதற்குரிய சமையலாளர்கள் ஒருவர் இருப்பார் அவர் ஓர் மாவீரனின் குடும்பத்தை சேர்ந்தவராகவும், அல்லது எம் தேசத்தின் விடுதலைக்காக நாளும் உருகி வறுமைக் கோட்டின் கீழ் வாழும் ஓர் குடும்பத்தின் அங்கத்தவராக இருப்பார் அவருக்கு மாதாந்த உதியமும் வழங்கப்படும். ஆயினும் அவரும் போராளிகளின் வாழ்வுடன் ஒன்றிக் கலந்தவராக அந்த வாழ்வுச் சுற்றோடு சேர்ந்து செல்வார்கள்.
இன்று விடுதலைப் புலிகளின் படையணிகளின் வீரத்தையும், ஆழக்கடலோடிகளின் அர்பணிப்பையும் வார்த்தைகளால் வடிக்கமுடியாது. விடுதலைப் போராட்டத்தின் அடிநாதமாகவும், ஆணிவேராகவும் இருக்கும் மூலாதாரங்களைக் கொண்டு வந்து சேர்க்கவும் அடக்குமுறையாளர்களின் அல்லலுறும் மக்களின் அத்தியாவசியப் பொருட்களைக் கொண்டு வந்து கரை சேர்க்கவும் ஆயிரம் ஆயிரம் கடலன்னை மடியில் காவிய வரலாறாகி சென்றனர்.
வெளியே மட்டும் தெரிந்ததுமாய், உள்ளே மட்டும் அறிந்ததுமாய் அளப்பரிய பணிகளை இந்த கடலோடிகள் சேர்ந்து முடிக்கின்றனர். எம் கடலோடிகளின் வீரம் செறிந்த சாதனைகள் மூலமே எம் விடுதலைப் போராட்டம் எவராலும் அணைக்க முடியாத பெரும் தீயாகி எரிகின்றது. அதற்கு ஆயிரம் ஆயிரம் போராளிகளின் அர்ப்பணிப்பும் தியாகமும் என்றும் அழியாத நினைவாகி தடம் பதித்து நிற்கின்றது.
– மாவீரர்களின் ஈகத்தில் நினைந்துருகி அ.ம.இசைவழுதி.
“புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்”