அலையே!
அலையே!
ஞாயிறு அன்று ஒளியிழந்தது.
அழகு தந்த அலை
அன்று அவலம் தந்தது
முத்து தந்த கடல்
மூக்கைச் சிந்த வைத்தது.
கடலே!
உன்னை நம்பி வாழ்ந்த மக்கள்
உயிர்பறித்ததேனோ?
உணவு தந்தாய்
உயர்வு தந்தாய்
உணர்வும் தந்தாய்
ஏன் இப்போது உயிர் பறித்தாய்.
மூன்று மடங்கில் நீ
ஒரு மடங்கில் தானே நாம்?
அதிலும் தமிழனுக்கு
ஒருகிடங்குதானே!
அதிலும் உனக்கென்ன விருப்போ?
ஆடும் அலையே
இதென்ன கோரத்தாண்டவம்?
ஈவிரக்கம் இல்லாமல்
உனை ரசித்த மக்கள்
உலை களைந்தேனோ?
வாழ்ந்தவர் மட்டுமா மாண்டனர்?
நேற்று வந்த மழலையும்
இன்று போனதே!
உனது இரைச்சலையும்
இசையாய்க்கேட்ட மக்கள்
கூக்குரல் கூட
உன் செவியில் கேக்கலையோ?
போரிலும் எமை இழந்தோம்
இன்று நீரிலும் எமை இழந்தோம்.
பாரினில் எமைப்போன்று
பாவம் செய்தவர் யார் உளர்?
சாவதற்கென்று பிறந்த
உயிருள்ள பிணம்தான் நாமோ?
ஒன்றா இரண்டா எண்ணிச்சொல்ல
அள்ளிச்சென்று நீ
அணைத்தெல்லா தந்துவிட்டாய்
எங்கள் தீபங்களை!
தாயில்லாப்பிள்ளைää
கணவன் இல்லா மனைவி
மகன் இல்லாத அன்னை
உன்னைச் சொல்லி பயனில்லை
தாயாய் உனை பாடிப்பாடி
பேயாய் போனான் தமிழன் போ!
அதிகமாய் உனைப்புகழ்ந்து
அவலப்பட்டுப்போனான் காண்!
ஊழிக்கூத்து நீயாட
உயிர்துறந்தான் தமிழன்.
ஏ அலையே!
கவலையின்றி எங்கனம்
உன்னால் இங்கனம் செய்ய நேர்ந்தது.
கங்கனம் என்பது இதுதானோ?
வீதி செய்ய வந்த வாகனம்
நீ காவுகொண்ட உடல் புதைக்குது.
பாடையிலும் பகட்டாய்ப்போனவன்ää
பத்தோடு பதினொன்றாய்ää
செத்த நாய்போல் அங்கங்கே புதைகிறான்.
யாருக்காக யார் அழ?
ஏய் கடலே
உனக்காக இன்னும் காத்திருக்கிறோம்!
உன் அழகைக்காண அல்ல!
நாம் அழ அழ
நீ எடுத்துச் சென்ற உறவுகளின்
உடலைகாண!
தருவாயா திரும்ப.
அலையே வா!
ஆனால் எல்லை தாண்டாதே!
வாசலில் நில்.
எங்கள் பாசங்களைப்பறிக்காதே!
பாசாங்கு செய்யாதே!
பாவிக்கவிஞர்களே!
பாடுவதை நிறுத்துங்கள்
இந்த பாழாய்ப்போன அலையை!
ஆடும் அலையே
இன்று நீ
எமை ஆடவைத்துவிட்டாயே.
யேசுபாலன் பாலன் பிறப்பில்
மகிழ்ச்சிக் களிப்பில் இருந்த
மக்கள் உயிர் பறித்துச் சென்றாயே!
உன் நத்தார் பரிசு
நம் உயிர்தானோ?
– ரத்னா.