மடுத் தேவாலய படுகொலை
சிங்களப் பயங்கர வாதம் ஒன்றின் பதினான்காம் ஆண்டு நினைவு 20.11.1999 மடுத் திருப்பதிப் படுகொலை
புனித மடுமாதா தேவாலயத்தில் கடந்த 20.11.1999 அன்று இரவு திட்டமிட்ட வகையில் சிறீலங்கா இராணுவத்தால் கோரப்படுகொலைகள் நடத்தி முடிக்கபட்டன. இச்சம்பவத்தில் ஸ்தலத்திலேயே 37பேர் கொல்லப்பட்டனர். பின்னர் அது 44 ஆக அதிகரித்தது. 60 பேர் வரையானோர் படுகாயங்களுக்கு உள்ளாகியிருந்தனர். இச்சம்பவமானது உலகெங்கிலுமுள்ள மடுமாதாவினது பக்தர்களுக்கும் மற்றும் பலருக்கும் பெரும் அதிர்ச்சியைக் கொடுத்தது.
சந்திரிக்கா தலைமையிலான சிங்கள பேரினவாத அரசாங்கத்தின் ஆட்சிக்காலம் ஆரம்பமான காலத்தில் இருந்து இற்றை வரைக்கும் தமிழர் தாயகம் எங்கும் 1800ற்கும் அதிகமான வழிபாட்டு தளங்கள் குண்டு வீசி அழிக்கப்பட்டுள்ளன. தேவாலயங்கள் கோயில்கள் என்பன பெரும் படுகொலைகளை நடாத்தும் சிறீலங்கா அரச படைகளின் கொலைக்களங்களாக மாற்றப்பட்டுள்ளன. யாழ் யாகப்பர் ஆலயத்தில், நவாலி புனித பேதுருவானவர் ஆலயத்திலும் நடந்த பெரும் படுகொலைகள் வரிசையில் மடுத்திருப்பதியில் நடந்த கோரமும் இணைந்து கொண்டது.
சிறீலங்கா இராணுவம் தமிழீழத்தில் உள்ள இந்து, கிறிஸ்தவ ஆலயங்களை அழிப்பதும் மாசுபடுத்துவதும், கோவில் தேவாலயங்களை இடித்துத் தள்ளுவதும் வழமையான ஒன்றே. வழிபாட்டுத் தளங்களைப் படைத்தங்ககங்களாகப் பாவிப்பதும், விக்கிரகங்கள், சொரூபங்களை அகற்றுவதும் யாவரும் அறிந்ததே. இவையாவும் இனவாத அடக்குமுறையின் ஒரு வடிவமே.
கடந்த 22.03,1999 அன்று ரணகோச – 02 நடவடிக்கை மூலம் இராணுவம் மடுத்திருப்பதியைக் கைப்பற்ற முயற்சிகள் மேற்கொண்ட சமயம் மடுத்திருப்பதி வளாகத்திற்குள் இராணுவம் நுழைவதைத் தடுக்குமாறு ஜனாதிபதியிடம் மன்னார் ஆயரினால் தொடர்சியாக கோரிக்கை விடப்பட்டது. ஆனால் அது செவிமடுக்கப்படடாததோடு அங்கு தங்கியிருந்த மக்களும் வலுக்கட்டாயமாக வெளியேற்றப்பட்டனர்.
அதன் பிற்பாடு மடுப்பிரதேசம் இராணுவக் கட்டுப்பாட்டுப் பிரதேசமாக மட்டுமல்ல, இராணுவத்தின் பிரசன்னமான பகுதியாகவும் இருந்தது. மடுத்திருப்பதியின் புனிதத்தைப் பேண சிறீலங்கா அரசு தயாராக இருக்கவில்லை. இங்கு கவனிக்க வேண்டியது என்னவெனில் இது இராணுவ நலன் கருதி நிராகரிக்கப்பட்ட ஒன்றல்ல ஏனெனில் மடுத்திருப்பதிப் பிரதேசம் அன்றைய நிலையில் ஒரு கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த பகுதியாக இருக்கவில்லை. எல்லாவற்றையும்விட இப்பிரதேசத்தை புனித வலயமாக மதித்த விடுதலைப் புலிகள் அமைதி வலயமாகப் பேணி படை நடவடிக்கை எதனையும் மேற்கொள்வதில்லை. மடுப்பிரதேசத்தை இராணுவ ஆக்கிரமிற்குள் கொண்டு வந்தமையும், யுத்தமின்றிப் பெறப்பட்ட அப்பிரதேசத்தைப் பெரும் இராணுவ வெற்றியாகக் காட்ட முற்பட்டமையும் பெளத்த பேரினவாதத்தின் வெளிப்பாடுகளே ஆகும். அத்தோடு ஜனாதிபதி சந்திரிக்கா குமாரதுங்கா மடுத்திருப்பதியை பின்னணியாகக் கொண்ட தனது நிழற்படத்தை தேர்தலில் பயன்படுத்தியமையும் பெளத்த பேரினவாத வெறித்தனத்தின் கண்ணியமற்ற செயலின் குறிகாட்டி என்றே கொள்ளலாம்.
17.11.1999 திகதி மன்னார் பெருநிலப்பரப்பில் வீசிய புலிவீரரின் ஓயாத அலைகள் – 03 ன் அனல் பட்டு மதுவை விட்டுப் பின்வாங்கிய இராணுவம், கொலை வெறியோடு 20ற்கு மேற்ப்பட்ட கவசவாகனங்களோடு 20.11.1999 அன்று காலை 10.00 மணிக்கு மடுத்திருப்பதிக்குத் திரும்பியது. மடுத்திருப்பதியைச் சூழ வசித்த மகள் அனைவரையும் தேவாலயத்திற்குள் இரவு தங்கவேண்டும் எனக் கட்டளை போட்டது. ஆண்டாண்டு காலமாக தொடர் சிங்களப் பயங்கரவாதத்தின் கோர வீச்சினை தாங்கமுடியாமல் அன்னையின் மடியில் தஞ்சமடைந்திருந்த மக்கள் கூட்டம் கலக்கத்துடன் ஆலயத்தில் முடங்கியது. தமிழீழத்தின் பல பாகங்களிலும் காலகாலமாக சொத்து சுக நலன்களோடு உற்றார் உறவினர்களோடு வாழ்ந்த மக்களை நிர்க்கதியாக்கியது சிங்களப் பேரினவாதம். இனிவரும் இன்னல்களிலிருந்து மடுமாதா காப்பாற்றுவார் என்ற நம்பிக்கையில் உயிரை மட்டுமே கையில் வைத்திருந்த மக்களை வேட்டையாட நேரம் குறித்தனர் சிங்கள வெறியர். 20.11.1999 அன்று முன்னிரவு 11.00 மணிக்கு இராணுவத்தின் யுத்த தாங்கிகளில் இருந்த பீரங்கிகளின் சுடுவாய்கள் அப்பாவிகள் படுத்திருந்த தேவாலய முன்னரங்க மண்டபத்தின் மீது இலக்கு வைத்து நிரத்தப்பட்டு குண்டுமாரி பொழிந்தன. ஏதுமறியா எதிலிகளின் அவலக்குரல் பரலோகத்தை எட்டுமாற்போல் ஆலயத்தில் எழுந்தது.
இராணுவம் படுகொலை நோக்கத்தை திட்டமிட்ட வகையில் மடுத்திருப்பதிக்குள் அத்துமீறி நுழைந்து புரிந்துவிட்டுச் சென்றிருக்கிறது. படுகொலைக்கான காரணிகள் பல இருந்துள்ளன. சிங்கள பெளத்த வணக்கஸ்தலங்களைத் தவிர இலங்கைத் தீவில் வேறு வணக்கஸ்தலங்களுக்கு அவற்றின் புனிதத்தன்மைக்கு மதிப்பளித்தல் கூடாது என்ற சிங்களப் பேரினவாதத்தின் குறுகிய எண்ணமே மடுத்திருத்தலத்தின் மீது தாக்குதல் நடத்தத் தூண்டியது. இதைவிட இலங்கைத்தீவில் தமிழரை அழிப்பதையே நோக்கமாகக் கொண்ட சிங்கள அரசும், அரச படைகளும் கிடைத்த சர்ந்தப்பத்தைப் பயன்படுத்தி அப்பாவித் தமிழர்களை ஈனத்தனமான முறையில் கொன்றுள்ளனர்.
இதற்கு மடுத்திருப்பதி திறந்த களமாய் இருந்துள்ளது. மாதாவின் கருவறையில் ஒதுங்கிய தமிழர் வேட்டைப் பொருளாயினர். ஏனெனில் மடுத்திருப்பதியின் புனிதத்தை மதிக்கும் புலிகள் அப்பகுதிக்கு வந்து தம் மீது தாக்குதல் நடத்தப் போவதில்லை என்பதை சிங்களப்படை நன்குணர்ந்திருந்தது. இந்நிலையிலே நிராயுத பாணிகளாக ஏதுமறியாதவர்களாக மடுத்திருப்பதியின் உள்ளே தஞ்சமடைந்த மக்கள் மீது வாளேந்திய சிங்கங்கள் மரண விளையாட்டில் ஈடுபட்டன. தனது சரீரமாகிய அப்பத்தையும் இரத்தமாகிய பானத்தையும் யாருடைய மீட்பின் தீர்வாக இறைமகன் பங்கிட்டாரோ அவர்களின் சரீரமும் இரத்தமும் அழிந்து புனித முற்றத்தில் பழி படிந்தது. 13 சிறுவர்கள் உட்பட 44 பொதுமக்களின் குருதியில் மாதாவின் திருமுடி சூடிய ஒளிவட்டம் உருகி வழிந்து இருழ்மண்டியது. 400 வருடகாலப் பாரம்பரியம் மிக்க மடுத்திருப்பதியில் இரத்தச் சகதியை தோற்றுவித்து மகிழ்ந்தனர் இரு குழந்தைகளின் தாயான சந்திரிக்காவின் சிப்பாய்கள். மடுத்திருப்பதியில் ஒரே தடவையில் தன் நான்கு குஞ்சுகளைப் பறிகொடுத்து கதறிய தாயின் கூக்குரலுக்கு 5,110 நாட்கள் கடந்துவிட்டன.
தறுக்கர் தறித்த உறவுகளின் நினைவுத்துயரில் தோய்ந்து இலக்கு நோக்கிய எம் பயணம் தொடரும்.
சிங்களத்தின் இரக்கமற்ற கோரத்தாக்குதலில் பலியான உறவுகளுக்கு எம் இதய அஞ்சலிகள் நாளும் உங்கள் நினைவு எம்மை விடியலின் பாதையில் வேகத்துடன் பயணிக்க செய்யும்.
– வரலாற்றுத் தொகுப்பிலிருந்து தேசக்காற்று இணைய தட்டச்சு உரிமத்துடன்
“தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்”