வெளியில் வராத சூரியன் றட்ணம் மாஸ்ரர்
வெளியில் வராத சூரியன் றட்ணம் மாஸ்ரர் ஒரு காலத்தின் கதை
விடுதலை வரலாற்றில் பலருக்கு விலாசம் இருந்ததில்லை விளம்பரம் இருந்ததில்லை முகம் இருந்ததில்லை முகவரி இருந்ததில்லை. ஏன் அவர்களது முடிவுகள் கூட யாருக்கும் தெரிவதில்லை. ஆனால் அவர்களின் ஆளுமையின் இயங்கு சக்தி மட்டும் என்றென்றும் உயிரோடு வாழ்ந்து பல்லாயிரம் பேரை இயக்கிக் கொண்டிருக்கும் பெரும் தீயாகி வியாபித்திருக்கும்.
இத்தகைய அடையாளங்களுக்குச் சொந்தக்காரனாக இருந்த ஒருவர் றட்ணம் என்ற இயக்கப் பெயரைக் கொண்ட தெய்வேந்திரம் ஜெயதீபன் என்ற இயற்பெயரோடு நெருப்பின் சக்தியாக இருந்ததை காலம் ஒரு போதும் அடையாளப்படுத்தியதில்லை.
1974ம் ஆண்டு உரும்பிராய் மண்ணில் தெய்வேந்திரம் தம்பதிகளின் 2வது குழந்தையாகப் பிறந்தஜெயதீபன் ஒரு சாதாரண குழந்தையாகவே பிறந்தான். சாதாரணமானவர்களின் பிறவியே பெரும் சரித்திரங்களை உருவாக்கிவிட்டுச் செல்லும் சக்தி கொண்டவையென்பதற்குச் சாட்சியமாய் ஜெயதீபனின் வரலாறும் தமிழீழ விடுதலைப் போராட்ட வரலாற்றில் என்றும் அழியாத பெயர்களில் ஒன்று.
அம்மா ஆசிரியை அப்பா வங்கி ஊழியர் வீட்டில் அண்ணாவுக்கும் தங்கைக்கும் நடுவில் வந்து அந்தக் குடும்பத்தின் மகிழ்ச்சியின் பிறப்பாய் பிறந்த பிள்ளை படிப்பில் ஒரு சாதனையாளனுக்குரிய ஆற்றலோடு தான் ஊரில் ஆரம்பக்கல்வியை முடித்து யாழ் இந்துக்கல்லூரியின் மாணவனாகினான்.
70களில் பிறந்த எல்லாப்பிள்ளைகள் போலவும் போரின் காயங்களையும் போராயுதங்களில் ஒலிகளையும் கேட்;டுக் கொண்டே உலவிய ஜெயதீபனை காலத்தின் தேவை புலிவீரனாக்கியது. தனது 16வது வயதில் 1990களின் இறுதியில் சொல்லாமல் கொள்ளாமல் போராளியாகிய மாணவன் ஜெயதீபனை சரத்பாபு 2 பயிற்சி முகாம் வரவேற்றுக் கொண்டது.
றட்ணம் என்ற பெயர் சூட்டப்பட்டு ஆரம்பப்பயிற்சியை முடித்துக் கொண்டு களமாடும் வீரனாகவே ஆனையிறவுச் சமரில் பங்கெடுத்தார். வெட்டைவெளியும் மணல்தரையும் , வெளிகளையே அதிகமாய் கொண்ட ஆனையிறவின் உப்பள வெளியில் கனவுகளோடு கரைந்தவர்கள் நினைவோடு களமாடிக் கொண்டிருந்தனர் புலிவீரர்கள்.
ஆனையிறவை நோக்கிய பல்முனை இராணுவ முன்னேற்றத்தில் இயக்கச்சிப் பகுதியில் நடந்த சமரில் றட்ணம் விழுப்புண்ணடைந்தார். களம் காணுதல் காயமடைதல் மீள களமடைதல் என்பது விடுதலைப்புலிகளுக்கே உரித்தான இயல்போடு றட்ணம் தனது காயம் ஆறி மீண்ட போது அவரது ஆற்றலின் மீதான நம்பிக்கையும் திறமையும் அவரைப் பிரதான பயிற்சியாசிரியனாக்கியது.
சரத்பாபு 04 தொடக்கம் சரத்பாபு 09 வரையுமான பயிற்சியணிகளின் சிறப்புப் பயிற்சியாசிரியனாகி பலபோராளிகளை போர் வீரர்களாக உருவாக்கி றட்ணம் என்ற பெயரோடு மாஸ்ரர் என்ற அடைமொழியும் சேர்ந்து றட்ணம் மாஸ்ரராகினார்.
விடுதலைப் பயணத்தில் ஒன்றாக இணைந்த போராளிகள் ஒவ்வொருவரும் தேசத்தின் எல்லா மூலைகளிலிருந்தும் வந்திருந்தார்கள். அந்தப் போராளிகளின் இயல்புகள் கூட வேறுபட்டவை. ஆனால் எல்லா வகையான குணவியல்புகளைக் கொண்டிருந்த போராளிகளையெல்லாம் அவரவருக்கு ஏற்ப அவர்களோடு தானும் ஒருவராகி எல்லாப் போராளிகளையும் அரவணைக்கும் பண்பானது றட்ணம் மாஸ்ரரை போராளிகளிடத்தில் மேலுயர்த்தி வைத்தது.
ஏற்கனவே தலையில் காயமடைந்து மருத்துவம் பெற்றிருந்தும் அதிக வெயில் அல்லது வேலைப்பழு கூடினால் இரத்த வாந்தியெடுத்து முடிந்ததும் பழையபடி இயல்பாகிவிடும் கடமை வீரனை போராளிகளே வியந்து பார்த்தது வரலாறு.
பயிற்சியில் போராளிகளோடு ஓடிக்கொண்டு வரும் மனிதன் திடீரென எங்காவது ஓரிடத்தில் நின்றுவிடுவார்.
ஓடிக்கொண்டு வந்தவர் எங்கே காணவில்லையென போராளிகள் தேடுகிற போது மீளவும் வரிசையில் இணைந்து ஓடி வருவார். தனது வலிகளையும் தாங்கிக் கொண்டு போராளிகளோடு இணைந்திருக்கும் அற்புதமான அதிசயமான போராளி.
இம்ரான் பாண்டியன் படையணியின் உள்ளக வெளியக கட்டமைப்புகளுக்கான பயிற்சிகளை சரத்பாபு பயிற்சி முகாமிலிருந்தே உருவாக்கப்பட்டு தெரிவு செய்யப்பட்டு அனுப்பப்படுவார்கள். இந்தப் பயிற்சிகளை வழங்கி இம்ரான் பாண்டியன் படையணிக்கான வலுவை வழங்கியதில் றட்ணம் மாஸ்ரரின் பங்கும் திறமையும் அளப்பரியது.
இவரது திறமையை அவதானித்து ஆளுமையை அறிந்து கொண்ட தளபதி சொர்ணம் அவர்களால் மாஸ்ரர் தலைவரின் வெளிப்பாதுகாப்பு அணியில் நியமிக்கப்பட்டார். 95இறுதிப்பகுதியில் வெளிப்பாதுகாப்பு அணியிலிருந்து விசேட கொமாண்டோவாகத் தெரிவாகி ஆறு மாதங்கள் நடைபெற்ற விசேட கொமாண்டோ சிறப்புப்பயிற்சியில் பங்கெடுத்தார்.
இப்பயிற்சி நடைபெற்றுக் கொண்டிருந்த போது முல்லைத்தீவு முகாம் மீதான தாக்குதலுக்கான ஏற்பாடுகள் நடைபெற்றுக் கொண்டிருந்தது. அப்போது பாதுகாப்பணியின் பொறுப்பாளராயிருந்த கப்டன் கௌதமன் (ஊரான்) முல்லைத்தீவு சமரில் பங்கெடுக்க தானாகவே விரும்பிப் போயிருந்தார். அவ்வேளையில் பாதுகாப்பணியின் பொறுப்பாளராக றட்ணம் மாஸ்ரர் தளபதி கடாபி அவர்களால் நியமிப்பட்டார்.
முல்லைச்சமரில் வெற்றிகளைப் பெற்றுத் திரும்பிய வீரர்களோடு எங்கள் வீரர்கள் பலர் திரும்பி வராமல் அந்த வெற்றியின் வேர்களாக களத்தில் வீழ்ந்தார்கள். வெற்றின் விழுதாக வீரச்சாவடைந்த வெற்றி நாயகர்கள் வரிசையில் கப்டன் கௌதமன் (ஊரான்) வீரச்சாவடைந்தார்.
தனது ஆற்றலாலும் ஆளுமையாலும் பொறுப்பில் உயர்ந்த மாஸ்ரர் தனது வாழ்விலும் மிகவும் எளிமையாகவே இறுதிவரை வாழ்ந்த பெருமைக்குரியவராகினார். இயக்கத்தின் பொறுப்பு தன்னிடம் வழங்கப்பட்ட கடமைகளை சரியான முறையிலும் தவறாமலும் செய்து முடித்துக் கொள்ளும் கடமையுணர்வை முதன்மையாகக் கொண்டவர்.
பொதுவாக போராளிகளுக்கு வெளியில் பொதுமக்களின் வீடுகளுடன் தொடர்புகளும் பழக்கமும் இருக்கும். அவர்களுக்கான உணவு முதல் பலரது அன்பை நிச்சயம் ஒவ்வொரு போராளியும் பெற்றிருப்பார்கள். ஆனால் இவற்றுக்கெல்லாம் விதிவிலக்காக கடைசி வரை வாழ்ந்த போராளியென்று குறிப்பிட்டால் அது றட்ணம் மாஸ்ரராகவே இருக்கும்.
சக போராளிகளின் வீரச்சாவு நிகழ்வுக்காக மட்டுமே வெளியில் வீடுகளுக்குச் சென்றிருந்ததைத் தவிர தனக்காக வெளியில் எவ்வித உறவுகளையும் வைத்துக் கொள்ளாத வளர்த்துக் கொள்ளாத முற்றிலும் நாட்டையும் தலைவரையும் சக போராளிகளையுமே உலகாகக் கொண்டு வாழ்ந்தார்.
அன்பைக் கொடுத்த தம்பியாகவும் அண்ணாவாகவும் வீட்டின் செல்லப்பிள்ளை ஜெயதீபன்.அண்ணா தங்கை மீது மிகவும் அளவு கடந்த அன்பைக் கொண்டிருந்த போதும் தங்கை மீது அதிகம் அன்புடைய அண்ணனாகவே வாழ்ந்தார். எனினும் தனக்கு கிடைத்த விடுமுறை நாட்களைக் கூட தனது பாசத்துக்கினிய தங்கையோடு அல்லது குடும்பத்தினரோடு கழித்ததில்லை.
94ம் ஆண்டில் கிடைத்த விடுமுறையில் 2நாட்கள் மட்டுமே குடும்பத்தினரோடு தங்கிவிட்டு நீண்ட விடுமுறையை அனுபவிக்காமல் முகாம் திரும்பியிருந்தார். அந்த விடுமுறையின் பின்னர் சமாதான காலத்தில் குடும்பத்தார் வந்து சந்தித்தது தவிர வீட்டாருடனான தொடர்பு என்பது வேறெந்த வகையிலும் இருக்கவில்லை. வீட்டாருடனான தொடர்புகளைக்கூட பேணிக்கொள்ளவில்லை. தனக்காக காத்திருக்கும் பணிகளையே என்றும் மனதில் கொண்டு ஓயாது இயங்கிய எரிமலை.
வெளியில் எங்கு சென்றாலும் தனது பணிகளை முடித்து அது எத்தனை மணியானாலும் தனது முகாமிற்கு வந்த பின்னரே தனக்கான சாப்பாட்டைத் தேடுவார். வெளியில் எங்கும் கடைகளிலோ அல்லது வேறெந்த இடங்களிலோ ஒரு போதும் சாப்பிட்டது வரலாறில்லை. முகாமிற்குத் திரும்புகிற போது சிலவேளைகளில் உணவு இல்லாது போயிருக்கும். ஆனால் அதற்காக அலட்டிக் கொள்ளாமல் தண்ணீரைக் குடித்துவிட்டு உறங்கிவிடும் இயல்பு கொண்ட போராளி.
தனது போராட்ட வாழ்வுக் காலத்தில் தனக்காக எதையுமே ஆசைப்பட்டதோ அனுபவித்ததோ இல்லையெனும் அளவு மிகவும் எளிமையாக வாழ்ந்து முடித்த பெருமைக்குரிய வீரன். தனக்கான உடைகள் கூட இயக்கம் கொடுக்கும் வரையும் காத்திருந்து பெற்று அணிவதையே வழக்கமாகவும் பழக்கமாகவும் கொண்டிருந்தார்.
ஒரு தளபதியாக உயர்ந்த பின்பும் ஆடைகளிலிருந்து தனக்கான எதையும் மேலதிகமாகப் பெற்றதில்லை. வழங்கல் பகுதியிலிருந்து வரும் உடுப்புகளைத் தவிர வெளியிலிருந்து ஒரு போதும் உடைகள் பெற்றதுமில்லை அணிந்ததுமில்லை. மறுமுறையும் வழங்கலில் இருந்து உடுப்புகள் வரும் வரையும் முதல் முறை கிடைத்த உடுப்பையே தொடர்ந்து அணிவார்.
தளபதி சொர்ணம் கூட பலமுறை கடிந்திருக்கிறார். ஒரு தளபதியாக உயர்ந்துள்ளாய் அதற்கேற்ப மாறிக் கொள்ளென. ஆனால் தனது எளிமையான வாழ்விலிருந்து ஒருதுளியும் மாறாமல் எல்லாவற்றிற்கும் சிரிப்பாலே பதில் சொல்லி மௌனமாகி தனது கடமைகளில் கவனமாக இருக்கும் காரியக்காரன்.
இயக்கத்தின் மீதான தனது நேசத்தை என்றென்றும் தனது பணிகள் மூலமே வெளிப்படுத்திக் கொண்டிருந்த வீரத்தளபதி. தானொரு பொறுப்பாளர் தளபதியென்ற நிலையில் என்றும் சக போராளிகளுடன் பழகியதில்லை. ஒவ்வொரு போராளியின் இயல்புக்கும் ஏற்றவாறு அவர்களாகவே தான் மாறியிருந்து சகலத்தையும் சரி சமானமாகப் பகிர்ந்து அவர்களிடமிருந்து வேலைகளைப் பெற்றுக் கொள்வார். எளிமையும் இனிமையும் கடமையும் மட்டுமே றட்ணம் மாஸ்ரர் என்ற போராளியின் அடையாளமாகியது.
1999 ஆரம்ப காலத்தில் இம்ரான் பாண்டியன் படையணியில் சிறப்பாகச் செயற்பட்டமையின் அடிப்படையில் தலைவரின் பணிப்பின் பேரில் தளபதி கடாபி அவர்களால் இம்ரான் பாண்டியன் படையணியின் தளபதியாக மேலுயர்த்தப்பட்டார். 2000ம் ஆண்டு ஆரம்பத்தில் தலைவரால் இராணுவ புலனாய்வுப் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டார். 2002 வரையிலும் புதிய பழைய போராளிகளை வைத்தே தனது பணிகளைத் திறமையாகவும் நேர்த்தியாகவும் செய்து கொண்டிருந்தார்.
2002காலத்தில் மீண்டும் தலைவரின் வெளி பாதுகாப்புப் பொறுப்பாளராக நியமனம் பெற்று உறங்காது இரவு பகலென்ற வேறுபாடு காணாத உறங்காத சூரியனாக வெளியில் வராத வெளியில் தெரியாத வெளிச்சமாக ஒளிர்ந்து கொண்டிருந்தார்.
பின்னர் 2003 இறுதிப்பகுதியில் ராதா வான்காப்புப் படையணியின் சிறப்புத்தளபதியாக உயர்வடைந்தது தொடக்கம் 2008 தளபதி சாள்ஸ் அவர்கள் வீரச்சாவடையும் வரையும் சிறப்புத்தளபதியாக இருந்து கடமையைக் கவனித்த பெருமைக்குரிய மனிதர்.
2004கருணா பிரிவின் காலம். மிகவும் இறுக்கமான சூழல். எனினும் தனது சிறப்பான வழிநடத்தலால் எல்லாத் தடைகளையும் உடைத்தெறிந்த தளபதி. தலைவருக்கு எவ்வித இடைஞ்சலோ தடைகளோ வரக்கூடாதென்ற உறுதியில் தடைகள் நீக்கிய தடைநீக்கியாய் தலைவரை பாதுகாத்த தளபதியாய் தலைவரின் பிள்ளைகளின் கல்வியில் தடைகள் வராவண்ணம் பணியாற்றி உறங்காத விழியாக தன்னை முழுமையாக அர்ப்பணித்த நெருப்பு. காலம் மறைத்து வைத்திருந்த பேரொளியாகவே வாழ்ந்திருந்த தளபதி.
05.01.2008 அன்று எங்கள் தேசத்தின் பெறுமதி மிக்க தளபதிகளில் ஒருவரான தளபதி கேணல் சாள்ஸ் அவர்கள் மன்னார் மாவட்டம் பள்ளமடுப்பகுதியில் சிறிலங்காப் படைகளின் ஆழஊடுருவும் படைப்பிரிவு நடாத்திய கிளைமோர்த் தாக்குதலில் வீரச்சாவடைகிறார்.
புலனாய்வுத்துறையின் முதுகெலும்பாக இயங்கிக் கொண்டிருந்த கேணல் சாள்ஸ் அவர்களின் வீரச்சாவு பேரிழப்பாகியது. புலனாய்வுத்துறையின் ஆளுமைகளில் ஒருவராகவும் பல வெற்றிகளின் வேராகவும் இருந்த இயங்கிய தளபதி சாள்ஸ் அவர்களின் வீரச்சாவின் பின்னர் அவரது பொறுப்பை றட்ணம் மாஸ்ரரே ஏற்றுக் கொள்கிறார்.
2007இல் உலகிற்கு ஆச்சரியத்தையும் இலங்கையரசிற்கும் அழிவையும் கொடுத்த அனுராதபுரம் எல்லாளன் நடவடிக்கையின் வெற்றியின் வேராக மூலமாக அந்தத் தாக்குதலின் ஒவ்வொரு விடயத்தையும் நுணுக்கமாக ஆராய்ந்து திட்டமிட்டு ஒருங்கிணைத்து எல்லாளன் நடவடிக்கையின் ஆதாரமாக இருந்த வெற்றியின் பெருமைகளில் றட்ணம் மாஸ்ரரின் பங்கென்பது முக்கியமானது.
எப்போதும் திறமைகளுக்கு முன்னுரிமை வழங்கி திறமையானவர்களை வளர்த்து விடுவதில் றட்ணம் மாஸ்ரருக்கு நிகர் அவரேதான். வயது தோற்றம் எதையும் பார்த்து திறனை எடைபோடாமல் ஒவ்வொரு போராளிக்குள்ளும் உள்ள ஆற்றலை அறிந்து அவர்களை அவர்களது ஆற்றலுக்கு ஏற்ப வழிகாட்டியாகி றட்ணம் மாஸ்ரரால் உயர்த்தப்பட்டவர்கள் பலர். அவர்களில் ஒருவரே எல்லாளன் நடவடிக்கையில் வீரகாவியமான இளங்கோவும் அடங்குகிறார்.
இராணுவப் புலனாய்வு காலத்தில் எடுக்கப்பட்ட தரவொன்றை அடிப்படையாக வைத்தே எல்லாளன் நடவடிக்கையைத் திட்டமிட்டு நெறிப்படுத்தி அத்தாக்குதலை வெற்றிபெற வைத்தார மாஸ்ரர். எத்தனையோ மௌனமாக நடந்து முடிந்த சமர்கள் வெற்றிகளில் றட்ணம் மாஸ்ரரின் பங்களிப்பும் முழுமையான உழைப்பும் இருந்ததை காலம் ஒரு பொழுதும் வெளியில் தெரியப்படுத்தவில்லை. காரணம் அவரது தாயகம் மீதான நேசிப்பின் முன்னால் காலம் கூட மௌனமாகவே கௌரவப்படுத்தி வைத்திருந்தது.
தலைவரின் பாதுகாப்புப் பணியில் முழுமையாக ஈடுபடத் தொடங்கியதிலிருந்து தலைவரின் அனைத்து விடயங்களையும் இவரே கவனித்து காப்பாற்றி தலைவரின் நிழலாக ஒளியாக நெருப்பாக இயங்கிய காலத்தை இயற்கையே அறியும்.
தலைவரின் நம்பிக்கையையும் நன்மதிப்பையும் பெற்ற தளபதிகளில் இவரும் குறிப்பிடத்தக்கவர்களில் ஒருவர்.
தலைவரின் பணிகளில் பாதிக்குமேல் கண்காணிப்பு நெறிப்படுத்தல் திட்டமிடல் என எல்லாத்தளங்களிலும் இவரது பங்கு மிகவும் காத்திரமானது. தலைவரின் அனைத்து விடயங்களையும் தானே கவனித்து செயற்படுத்துவதற்கான தலைவரின் சிறப்பான அனுமதியையும் பெற்று அனைத்துத் தளபதிகள் போராளிகளின் அனுமதியோடும் தலைவருக்குத் தேவையான சகலத்தையும் கவனித்த பெறுமதி மிக்க போராளி.
பல போராளிகளுக்கு எழுத்தறிவித்த ஆசானாக கல்வியில் முன்னேற்றமடையக் காரணமாக தனது ஆற்றலுக்கும் மேலாக ஒவ்வொருவரையும் ஒவ்வொன்றையும் நேசித்தார். எதையும் முடியாது அல்லது இயலாது என ஒதுங்கியதே இவரது வரலாற்றில் இல்லையெனலாம்.
இதயத்தில் நெருப்பின் இருப்பு கண்ணில் கடமையின் கவனமும் எல்லாவற்றையும் தனது பார்வையாலேயே கணிப்பிட்டு திறனறியும் ஆற்றல் பெற்றவர்களில் இவரும் அடங்குகிறார். எல்லாமே எங்களால் முடியுமெனத் துணிந்து எல்லாவற்றிற்கும் வெற்றியைக் காட்டிய வெற்றியைத் தந்த அமைதியான தளபதியாக எளிமையோடும் எல்லோராலும் நேசிக்கப்பட்ட எல்லோரையும் நேசித்த தளபதி.
உலக விடுதலை வரலாறுகளுக்கெல்லாம் உதாரணமாயும் ஆதர்சமாயும் இருந்த தமிழீழ விடுதலைப் போராட்டத்தையும் வீரம் மிக்க தளபதிகள் வெற்றி கொள்ளப்பட முடியாத பலத்தையும் கொண்டிருந்த விடுதலைப்புலிகள் அமைப்பினை சதியால் மட்டுமே வெல்ல முடியுமென்று உலக வல்லரசுகள் இலங்கையரசோடு கைகோர்த்தது.
அந்த இறுதிக் கால நாட்களில் கூட தளபதிகள் தொடக்கம் போராளிகள் வரை றட்ணம் மாஸ்ரரையே தேடுவார்கள். படையணிகள் தங்களது செயற்திட்டங்கள் திட்டமிடல்கள் தொடக்கம் அனைத்துத் திசையிலும் ரட்ணம் மாஸ்ரரின் ஆளுமையும் இரண்டறக்கலந்திருந்தது.
ஆயுதங்களை விட மனவலிமையால் 30வருடகால போராட்டத்தை நடாத்திய உலகிற்கே ஒரு விடுதலைப் போராட்ட அமைப்பென்றால் இப்படித்தான் இருக்க வேண்டுமென்பதற்கு எடுத்துக்காட்டாக இருந்த விடுதலைப்புலிகள் அமைப்பையும் ஈழத்தமிழர்களின் பூர்வீக நிலத்தையும் கொள்ளையிடும் வஞ்சத்தோடு வன்னிமண் மீது அனைத்துலகமும் ஒன்றிணைந்து போர் தொடுத்தது.
கிழக்கில் மாவிலாற்றில் தொடங்கி பிறகு மன்னாரை உலக வல்லரச பலம் தின்று கொண்டு நகர்ந்து செல்லத் தொடங்கியது. இறுதியில் முள்ளிவாய்க்காலில் புலிகள் ஆயுதங்களை மௌனிக்கும் வரையிலும் வஞ்சம் எங்களது வரலாற்றையும் வீரத்தையும் கொன்று முடித்துக் கொண்டு போனது.
வெளியில் வராத சூரியனாய் வெளிச்சம் காணாத ஆனால் வேருக்கு நீராய் வெற்றிகளின் வேராய் வாழ்ந்து மடிந்து போன மாவீரர்கள் வரிசையில் மே18 நந்திக்கடல் முனையில் முடிந்து ஆனாலும் முற்றுப்பெறாத கனவுகளோடு மீண்டும் துளிர்க்கும் விடுதலை வீச்சோடு றட்ணம் மாஸ்ரர் என்ற சமுத்திரமும் ஓயாது அடித்துக் கொண்டிருந்த அலைகளின் மௌனத்தோடு ஓய்ந்து போனது.
பருவக்காற்றின் அலைவு ஆழக்கடல் அலைகளை ஒருபோதும் அள்ளிக் கொண்டு தொலைந்து விடுவதில்லை. அதுபோலவே றட்ணம் மாஸ்ரரும் ஒரு பெரும் ஆழக்கடல். அந்தக்கடலின் அமைதியான அலைகளின் அழகை மட்டுமே உலகறியும் ஆனால் எங்கள் றட்ணம் மாஸ்ரரை உலகம் கூட அறிந்ததில்லை. ஏன் ஊர்கூட அதிகம் அறிந்ததில்லை. காலக்கடல் தனது கதைகளை எழுதிக் கொண்டு நகர்கிறது றட்ணம் மாஸ்ரரின் ஆழுமையை இன்றும் காலம் கௌரவித்தபடியே நகர்கிறது.
கண்ணீரஞ்சலியென்றுங்கள் புனிதம் மிகுந்த தடங்கள் மீது நாங்கள் காயங்களைத் தரமாட்டோம். தலைநிமிரும் தமிழ் வீரத்தின் குறியீடாய் எங்களின் இனிய தளபதியாய் இறுதிவரை வாழ்ந்த உங்களுக்கு வீரமுடன் வீரவணக்கத்தையே தெரிவித்துக் கொள்கிறோம்.
ஊழிப்பெருந்தீயாய் எங்கள் தளபதியே நீ ஒருநாள் காலப்பெருவெளியில் மட்டுமல்ல இந்த ஞாலப்பெரு விதியின் போராயுத ஆய்வாய் , அறிவாய் அறிவியலாய் நீளக்கிடக்கும் காலவிதியின் பதிவாய் எங்கள் தாயகத்தின் கடைசிக் காற்றின் மூச்சுள்ள வரை வாழ்ந்து கொண்டேயிருப்பாய்….
எங்கள் வரலாற்றின் பொக்கிசமாய் உலகின் கடைசி இராணுவ வல்லமையின் வடிவாய் எங்களோடும் எங்கள் கனவுகளோடும்; பார்த்திபனாய் படைநடத்திய அருச்சனனாய் றட்ணம் மாஸ்ரராய் என்றென்றும் விடுதலையின் கதைகளாய் வீரமாய் வாழ்ந்து கொண்டே எங்களோடு…வெளியில் வராத சூரியனாய் காலத்தின் கதையோடு பயணித்தபடி வருவாய்….!
நினைவுப்பகிர்வு – சாந்தி ரமேஷ் வவுனியன். (20.11.2013)
மின்னஞ்சல் :- rameshsanthi@gmail.com
காலத்தின் மாற்றம் அறியாத உள்ளங்கள் பலவிதமான கருத்துக்களை முன்வைக்கும் காலமிது. தாயகத்துக்காக என்றும் ஓயாமல் இயங்கிய ஓர் வீரனின் வரலாறு போய்விடக்கூடாது எனும் ஆதங்கத்தின் இந்த வீரன; பற்றிய படைப்பு பதிவு செய்யப்பட்டுள்ளது.
“புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்”