இரு கண்கள் சிலையாய் நிற்க…
இரு கண்கள் சிலையாய் நிற்க…
இமைகள் இரண்டும் தீ பந்தம் போல் எரிய..
இதயத்தை மட்டும் அழவிட்டு எம் உயிர் காத்தவர் எண்ணி..
உடலுக்குள் எரிமலை வெடிக்கும் ஒரு நாள்!
நெடும் பனை என நேர் நடை கொண்டவனும்…
இரட்டை ஜடை முளைத்த பட்டாம் பூச்சி என
பறந்து திரிந்தவளும்…
சுகங்களை எல்லாம் மூட்டை கட்டி விட்டு
சுதந்திரத்துக்காய் எரிந்து போனார்களே..
அந்த பூந்தளிர்கள் பொசுங்கி போனதை எண்ணி…
எம் தேச வானம் நெருப்பு நிறத்தில் உடை கொள்ளும் நாள்!
இங்கொரு விடுதலைக்காக…
எங்கெல்லாமோ மறைந்து போனவர்களை..
நரம்பெங்கும் தீ மூட்டி…
நாமெல்லாம் தேடும் நாள்!
எத்தனை தரம் முரட்டு சிங்களங்கள் முகத்தில் மோதி..
அவன் முகம் பெயர்த்து… நீரும் சாய்ந்தீர் ..
நீங்கள் மூச்சடங்கிப் போன இடம் எங்கும்…
முல்லை பூக்கள் உயிர் கொள்ளும்
என்னால் முடிந்ததை என் தாய்க்கு செய்து முடித்தேன்
என்று சிரித்து கொண்டே உறக்கமா?
எங்கள் கண்ணீரால் உங்கள் கல்லறை கழுவுவோம்!
கோடி புண்ணியம் அதில் கொண்டோம்!
உங்களின் சுவாசத்தை எங்கள் தேசத்து
மலர்கள் கடன் கேட்கும்!
உங்களின் துடி துடிப்பை எங்களின்
தேச பறவைகள் யாசகம் வேண்டும்..
உங்களின் மன ஆழத்தை எம் தேச கடல்
தன் இரு கை ஏந்தி இரந்து நிக்கும்!
உங்களுக்கு பிறப்பு மட்டுமே உண்டு..
இறப்பு என்பது இல்லவே இல்லை!
நெடுந்தூர விடுதலைப் பயணம் கொண்டீர்….
களைத்து விழுந்த போதெல்லாம்..
எங்கள் தேச காதலை தானே உணவாய் கொண்டீர்!
வாழ்வுக்குள் சாவு கொள்பவர் பலர்..
சாவுக்குள் வாழ்வு கொண்டவர் உம்மை போல சிலர்…
தியாகம் என்ற சொல்லை பூமி இனி
உங்களின் பெயர் கொண்டு உச்சரித்தால்தான் என்ன?????
மீண்டும் வாருங்கள்..
அந்த மெய் சிலிர்க்கும் நாட்களுக்காய்…
கண்ணீரை கரம் கொண்டு துடைக்காமல்
காத்துக்கொண்டிருக்கிறோம்!!
ஆக்கம் : ரசிகை (யாழ் கருத்துக்களம்)
“தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்”