ஈழகாவியம் – 02
1-உதயப்படலம்
நிகழ்காலம்-02
ஈழத்தைச் சுற்றிலும்.. இந்நாள்
(அறுசீர் விருத்தம்)
இந்துமா கடலைச் சுற்றி
எத்தரின் கூடா ரங்கள்!
கந்தகச் சுரங்கத் தோடு
கயவராய்ப் பலநா டுகள்!
செந்தமிழ் நிலத்துட் சிங்கச்
சேனையர்க் காகக் கொட்டி
வந்தவல் லரசார் எல்லாம்
வன்னியை முடித்தே விட்டார்!
தாங்கொணாக் கொடுமை யாலும்
தமிழரை இனமாய்க் கொல்லும்
தீங்குவார் ஆட்சி யாலும்
தீமையே உமிழ்வா ராலும்
ஓங்கிய அரக்கத் தாலும்
உயிர்நிலம் பறித்த லாலும்
வேங்கையர் ஆன மண்ணை
விசமிகள் எரித்தார் இந்நாள்!
முப்பது ஆண்டு காலம்
முடிவிலாப் போரி னாலே
அப்பிடச் சிங்க ராட்சி
அரக்கராய் அழித்தார் ஆயின்
துப்பிடும் தீர்வென் றாலும்
துட்டர்கள் வைத்தா ரில்லை
உப்பிநூற் றாண்டு காலம்
உலையினிற் தமிழர் செத்தார்!
இலங்கையைத் தங்கள் கையில்
இருப்பதற் காக வென்று
அலம்பிய கையின் ஈரம்
ஆறுமுன் ரசீவான் வந்தார்!
கலங்கிய குளத்தில் மீனை
கடகமாய் அள்ள வந்தும்
துலங்கிய அறிவில் லாமல்
துடித்தவோர் மரணம் கண்டார்!
யானைதன் கையி னாலே
மண்ணிடும் அதுபோ லத்தான்
ஏனையில் இராச பக்சா
இருக்கவும் இந்தி நாட்டார்
பானையில் ஆயு தத்தைப்
படைத்தனர் ஆனால் அந்தச்
சீனனைத் தடுக்க எண்ணிச்
செந்தமிழ் நிலத்தை விட்டார்!
ஈழமண் அழிப்பா ருக்கே
இந்தியம் கூட நின்றும்
பாழது தெரிந்தும் அள்ளும்
பணத்திடை சாக வென்று
தோழமைச் சோனி யாளின்
துட்டர சாங்கம் தன்னில்
கோழையர் கருணா நிதியார்
கோடரிக் காம்பாய் நின்றார்!
முன்னூறா யிரமாய் மக்கள்
முட்கம்பிக் கிடையே வைத்து
இன்னுமோர் கிட்லர் போன்றெம்
இனத்தையே மகிந்தன் கொன்றான்!
வன்னியை இராச பக்சா
வளைத்துமே சிதறச் செய்த
நன்னெறி இல்லா னுக்கே
நயந்ததே காந்தி வம்சம்!
சென்னையின் கோட்டை என்றும்
செந்தமிழ் ஆட்சி என்றும்
தன்னலம் ஒன்றிற் காகத்
தமிழ்தமிழ் என்றே சொல்வார்!
இன்னொரு இனமா அட
இரத்தமோ டுறவாய் நிற்கும்
அன்னையின் மக்கள் தன்னை
அழித்திடப் பார்த்தே நின்றார்!
புலியினர் என்ற வேங்கைப்
பொய்யிலார் ஏற்ற போரைத்
தொலைவெதும் இல்லார், பக்சத்
தீயரை ஓரா நாட்டார்
கொலைவளர் இலங்கத் தீவைக்
கொஞ்சிடும் நாள்தான் இந்த
அலையுளம் எழுது கின்றேன்
அஞ்சலாய் வரைகின் றேனே!
செத்திடும் தமிழச் சாதி!
சிங்களம் துடைத்த ழிக்கும்
புத்தரின் கோட்பா டெல்லாம்
புல்லருக் கில்லைத் துட்டர்
வைத்ததே சட்டம் வெந்து
மடிவனே தமிழன் என்றே
எத்தனை சொன்னோம்! அற்ப
இரசீவான் அறிந்தா னில்லை!
போரிலே தீரம் கண்டார்
புத்தியின் ஆரம் கண்டார்
பேரியற் தலைவ னான
பிரபாவைக் கண்டார் இந்த
வீரனே நாடு செய்தால்
வென்றொரு யூதம் போலே
தூரிகை ஆகும் என்றே
துடைத்தனர் இந்தி யத்தார்!
கொன்றிடும் சிங்க ராட்சிக்
கொடியவன் தன்னை ஓரார்
இன்றவன் குண்டில் தீய்க்கும்
இராட்சதம் தன்னைத் தேரார்
வன்னழிப் பிற்குப் பின்னே
வையவர் வந்தார்! கேட்டார்!
மன்பதைப் படலம் எல்லாம்
மடையருக் குரைத்தார் சென்றார்!
ஈழத்தின் எரிநாள் கொல்லும்
இராட்சதர்த் திருநாள் என்றும்
ஏழனர் வதைநாள் கூற்றர்
இழுத்திடும் பதைநாள் குச்சில்
ஏழையர் அழுநாள் வையம்
ஏதிடா விதுநாள் இன்னும்
வாழலாம் என்று சொல்லி
வருபவ ரெல்லாம் பொய்யே!
இந்தியம் சீனம் பாக்கி
இரச்சியா ஈரான் கியூபா
அந்தகம் இருபத் தாக
அச்சிலே வந்த போதும்
எந்தையும் தாயும் மன்னர்
ஏற்றிய தர்ம பூமிச்
சந்ததிப் போரின் கூர்வாள்
சரித்திரம் படைக்கும் ஓர்நாள்!
வெண்பா
வேங்கையாய் நின்றநிலம் வேரிழந்து போவதற்குத்
தீங்குமனத் திந்தியமே தீயிட்டார்-காங்கையில்
ஈழத்தே நின்று இராட்சதர்கள் கூட்டியள்ளக்
கூழக்கை இட்டாரே கொள்!
1-உதயப்படலம்
நிகழ்காலம் -03
இந்திராவுக்குப்பின் இந்தியா
(எழுசீர் விருத்தம்)
பாரதம் என்றும் பண்புநா டென்றும்
பாலபா டந்தனில் படித்தோம்!
வேரது ஓடும் வேதநா டென்றும்
வேள்வியும் ஓமமும் விளைக்கும்
ஈரநா டென்றும் இந்தியம் என்றும்
ஏடுகள் அன்றெலாம் இயற்றும்
சூரநா டின்று செல்லரித் திட்ட
சூதுநா டென்றெலோ ஆச்சு!
இந்திரா காந்தி ஏற்றிய ஆட்சி
இந்தியச் சரிதமார் சிறப்பாம்
தந்தையார் நேரு தங்கமார் மகளாய்த்;
தாங்கிய சகாப்தமே தனியாம்!
நொந்தவங் கத்தை நெம்பிட வைத்து
நிமிர்த்திய பிரதமர் அவளே!
எந்தவல் லர்க்கும் இன்னொரு நாட்டும்
இவள்பயம் கொண்டதே இல்லை!
மோதிலால் பேத்தி நேருவின் பிள்ளை
பெற்றனள் கல்வியொக்ஸ் போட்டில்!
நீதிதாம் கொண்டு நெஞ்சில் மானிட
நித்திலம் கொண்டதோர் பெண்ணாள்!
காதலன் பெரொஸ்காந் தன்னொடும் வாழ்வில்
கண்டனள் பிள்ளைகள் இருவர்!
மாதவக் காந்தி மகாத்மாவொடும் தேச
மகத்துவப் போரதும் கண்டாள்!
பேருறும் காந்திப் பிள்ளைகள் இருவர்
பெரியவன் ரசீவு,பின் சஞ்சய்
பாருவந் தேத்தப் படித்தனர், கணவர்
பற்றிய வாழ்க்கைவிட் டகன்றார்!
நேருவின் மகளாய் நின்றதோர் பேராள்
` நிகழ்வொடும் பிரதமர் ஆனாள்!
சீருற நின்ற சிறப்பொடு வாகை
செப்பிடும் பாரதம் வைத்தாள்!
வாருருப் பெற்ற வல்லமை நாடாய்
வளர்த்தனள் இந்திராத் தாயார்!
பாரிய விபத்திற் சஞ்சயும் இறந்தார்
பதைத்தவ ளாயினும் தந்தை
நேருயர் மகளாய் நிமிர்ந்தபா ரதத்தின்
நிழலென ரசீவொடும் நின்றாள்
பாருவந் தேற்றப் பாரதம் ஏற்கப்
பட்டொளி ஆகினள் பாரீர்!
ஈழமா மண்ணின் இதயமாய் நின்ற
இந்திராத் தாயரைக் கண்டோம்!
பாழராம் சேயார் பார்த்திருந் தழிக்கப்
பண்ணிய கலவரம் தன்னில்
ஆழமாய்ச் சொற்கள் அன்னையள் பகன்றார்
அகதிகள் தன்னையே ஏற்றார்!
வேழமா மென்க ஈழமாத் துயரை
விதைத்தனள் உலகெலாம் தானே!
தமிழவர் இதயம் தாங்கிய பெண்ணாய்
தந்தவர் இந்திராத் தாயர்
அமையவோர் ஈழம் ஆக்கிடும் தீர்வை
அரனென வைப்பளென் றிருந்தோம்!
சுமையொடு சுமையைச் சுமந்தவர் ஆனோம்!
சொர்ணமாம் அம்மையைச் சுடவே
கமழ்நிலம் முழக்கக் கண்ணிமை நீரிற்
கலந்ததே சரித்திரம் ஆச்சு!
இந்திரா வொடும்நம் ஈழமும் வெந்து
எடுத்தது சிவிகையே அவர்க்காம்!
சந்திசந் திவாழைக் கமுகுதோ ரணமும்
சாற்றிய பறைகளும் வைத்து
எந்தவோர் மகற்கும் இல்லையென் றிடவே
ஈழமும் எரிந்தது கண்டோம்!
வந்தது வினையே வந்தர சீவார்
மாற்றினார் கதையினைத் தானே!
ஈழமா மண்ணின் எரிநிலை முற்றும்
இன்றுவந் தவரெலாம் தெரியார்!
ஆழவே ரூன்றி அரக்கமே கொன்றிடும்
ஆனநூற் றாண்டினைத் தெரியார்
சூழவே தங்கள் சுயநலம் கொண்டு
சுழல்பவர் வந்துமே தமிழர்த்
தோழமை தின்றார் தேசெலாம் எரித்தார்
தீய்ந்தது ஈழமா மண்ணே!
இந்தியப் போக்கின் இழிநிலை யாற்றான்
இன்றுபல் லாயிரம் செத்தார்
கந்தகத் தீயைக் கக்குமொரி லங்காக்
கயமையைத் தெரிந்திடாக் கணக்கர்
வந்தனர் அமைதிப் படையெனும் பெயரில்
வற்புணர்ச் சாவினை வைத்தார்!
இந்தநூற் றாண்டு ஈழமே சாவொடு
இயற்றிய தெல்லமும் இவரே!
வேண்டவே வேண்டாம் விசரிது என்றே
வேங்கையின் மைந்தனும் சொன்னான்
காண்டிபம் எங்கள் களமது சிங்கக்
கடியரை வென்றிடும் போங்கள்
தாண்டி வந்தால் தமிழரின் வாழ்வில்
தருவது எல்லமும் தீயே!
வேண்டினன் பிரபா வேடனன் ரசீவால்
விளைந்ததே ஈழமார் எரிப்பே!
விடுதலைப் போரில் விளைதமிழ் ஈழம்
வேங்கையாய் மலர்ந்ததும் இந்நாள்
படுகொலைப் பாதை பரவுநாள் எல்லாம்
பரவிய குரதியின் சேற்றில்
நடுநிலை கெட்டு நாடெலாம் விரித்த
நச்சுவா யுதமெலாம் வைத்தே
கெடுதலைச் செய்த சிங்களப் பதரர்
கொழுத்தினர் தமிழ்நிலம் முழுதும்!
ஈழமார் கதையே எடுத்தறி விக்கும்
இந்தநாள் உள்ளுவ தெல்லாம்
ஆழமாய்க் கொண்ட அவனியின் போக்கை
அடுக்கிய தாகவே செல்வேன்!
சோழவை சேரர் பாண்டியர் மன்றில்
சிறப்பிட நின்றவள் அன்னை
தோழமை தந்த ஈழமண் துரவித்
தீந்தமி ழாளொடும் வருவேன்!
இந்திரா சாக இனிப்புகள் வழங்கி
இலங்கையி ருந்ததைக் காணார்!
வந்தணி வகுப்பில் வந்துர சீவான்
வாங்கிய அடிதனும் வருந்தார்!
இந்தியப் பாதை எதிரியாய்த் தமிழர்க்
கிருப்பவர் தன்னையே வைத்து
இந்தநூற் றாண்டை எரித்தனர் என்றே
ஈழமே நாளெலாம் எழுதும்!
வெண்பா!
இந்திரா நீத்தாள் இரசீவான் வந்திங்கே
சிந்தனையி லோராமற் செய்தகளம்-சிந்தார்
புலிகள் அழியப் பொறிவைத்த தாலே
வலிமை இழந்ததுவே மண்!
– புதியபாரதி.
|| தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம் ||