ஈழகாவியம் – 07
அத்தியாயம்:09 நிகழ்காலம்.
நோர்டிக் நாடுகளும் ஐரோப்பியமும்!
(அகவல்)
கடலும் வானும் கரையும் நிலமும்
உடலை வருத்தி உள்ளமும் நொந்தும்
ஆயிர மாயிரம் இனச்சிற கிழந்தபின்
சேயொடும் தந்தையும் சேர்ந்த அன்னையும்
இருபது நாடுகள் ஏறி இறங்கி
வருவதை ஏற்று வந்து குவிந்தோம்!
நோர்வே, டென்மார்க், சேர்மனி, இற்றலி
கோர்வை யாகவே கொண்டு பிரான்சும்
நேட்டோ என்றும் இரச்சியம் சுவிசும்
கேட்போ ரின்றிக் குதித்துமே விட்டோம்!
தமிழீ ழத்திற் தந்த கல்வியும்
அமிழ்தாய் எங்களை ஆக்கிய தாமே!
ஒசுலோத் தலைமை எரிக்சொல் கெய்ம்மை
வசமாய்த் தீர்வை வகுத்திட வென்றே
பணித்தும் உதவியும் பணக்கடல் இலங்காப்
பிணிக்கெலாம் கொடுத்தார்! புத்த யுத்தரின்
கணிப்பில் நோர்வேக் கணக்கைக் கொழும்பு
திணிப்பாய் எடுத்துத் தீயிலே விட்டதே!
வீடுகள் கண்டோம் நாடுகள் நின்;றோம்
பாடுகள் சிலுவைப் பாரமும் சுமந்தோம்!
ஊடுகள் ஊடாய் உலவிய நாட்களில்
கேடுகள் செய்திடும் கீழரும் கண்டோம்!
நல்லவன் போலவே நடித்த நம்மவன்
கல்லை எறியக் காண்கிறோம் நாமே!
ஆட்டுப் பட்டியில் ஓநாய் வந்ததால்
போட்டுப் புலியாய் பெட்டிசம் எழுதவும்
காட்டிக் கொடுக்கும் காக்கை வன்னியர்
நீட்டிக் கொண்டும் நிலமெலாம் விரிந்தனர்!
நாடுபல் லாகியும் நாய்ச்சா திகளும்
வாடும் இனத்தில் வராண்டிப் பறித்தனர்!
இறைவனைப் போலே இருகை குவித்துப்
பொறையொடும் நின்று புகுந்து கோவிலைத்
தன்பெய ரோடும் தாங்கி எழுதியே
பின்னவன் இறாஞ்சிய பேடியைக் கண்டோம்!
சுனாமிக் கொடைகளைச் சிக்கிய படியே
பினாமிகள் பெயரால் போட்டதைக் கண்டோம்!
மனைவிமண் ணிருக்க மற்றவள் பிடிப்பான்
துணைவனை விட்டுத் தேடுவள் ஆணை
கனகடல் ஏறிக் கனிந்தபின் மாறி
இனமடல் தீய்த்தார்! இன்னும் பகைவர்
ஆக்கிய குளத்தில் அருஞ்சே றள்ளிய
போக்கிரிக் கூட்டம் புலத்திலும் வந்தார்!
உலகத் தமிழர் இயற்றிய இளைஞர்கள்
அலகை ஈழம் அடுக்கிய வாலிபர்
குளிருக் குள்ளும் கொழுத்தும் வெயிலும்
ஓளியாய் மண்ணுக் குயிர்கொடுத் தவர்கள்
உலகம் முழுதும் ஓங்கிய தாற்தான்
நிலமும் பலமும் நிலைத்தது கண்டோம்!
நாடுகள் போலொரு நாடது செய்யவும்
தேடு மாயுதம் திரிந்து பெறவும்
உலகத் தமிழன் ஓங்கிய கரத்தின்
அலகிலே தலைவன் ஆர்த்தனன் அறிவீர்!
சுழகையே பறித்த செம்மறிச் சில்லோர்
அழகாய் வந்து அடித்தும் போயினர்!
தலைவன் விளக்கம் தாவெனக் கேட்கையில்
புலையர் போயே பொய்யெலாம் சொல்லிப்
பெயர்ந்து வந்ததும் உருவிய காசை
கயமையாய் எடுத்த கள்ளரும் உண்டுகாண்!
ஆனால் ஆனால் அள்ளி இறைத்த
மானார் மக்களால் மண்ணெழக் கண்டேன்!
மண்ணைத் தெரியார் வளர்பனை தெரியார்
அண்ணனைத் தெரியார் அரும்புலி தெரியார்
இந்த நாட்டில் எழில்முகம் வெள்ளைச்
சிந்துகள் பாடும் சிறப்பாம் மருத்துவர்
கண்முனே விழித்த கனித்தமிழ்ச் சிறுவர்
மண்துயர் புக்கவே மலையாய் எழுந்தனர்!
உண்ணா விரதம் உயிர்நில வதைகள்
எண்ணா நின்ற இளைஞ ரின்நாடுகள்
போக்கு வரத்தும் பெரும்தடை ஆக்கியும்
தாயாள் அன்னைத் தங்கமண் ணுக்காய்
எழுந்தார் இலட்சம் இலட்சமாய எங்கும்
தொழுதமண் துயரில் துடித்தெழுந் தனரே!
நாயார் சில்லேர் நாட்டை நயந்து
காயாப் புழுக்கை காய்ந்த மாதிரி
தன்னை மக்களிற் தானாய் வளர்த்தபின்
இன்றுமா வீரரை ஏளனம் செய்து
வானொலி நடத்தும் வஞ்சனைக் கண்டேன்!
பேனாய்த் தலையிலே பொரிந்திடக் கண்டேன்!
சுயநலப் பேய்கள் சேர்ந்து நடந்துபின்
தயவைப் பெற்றுத் தான்பின் னதுவாய்
அந்நியன் காலில் அடிச் சங்கிலியாய்
சந்திப் பூக்கள் சாற்றுவான் கேளீர்
மந்திபோற் பாய்ந்து மாற்றான் மடியில்
குந்தியே இருக்கும் குரங்கிவன் தானே!
புரளிக் கந்தல் போட்டவர் ஏட்டில்
அரளிக் காயாய் ஆகுவான் தன்னை
எல்லா நாடும் இருக்கிறார் என்றே
பொல்லாத் தீயர்ப் பெருந்தீ உடைத்தோம்!
நாளையும் நாளை நமக்கொரு நாட்டை
காளையர் செய்யக் கனிந்ததெம் மினமே!
நச்சுக் குண்டிலே நம்மினம் எரியப்
பிச்சும் குளிரிலே பெரும்நகர் இடித்தோம்!
பிஞ்சும் குஞ்சும் அஞ்சுகத் தாயரும்
தஞ்சம் கெட்டுத் தமிழீ ழத்தொடும்
குண்டில் எரிகையில் கூவிய கையொடும்
மண்ணின் மைந்தரை மடையெனக் கண்டேன்!
மழையின் தூரல் வாடையின் ஈரம்
அழைக்கும் குரல்கள் அம்மா என்கும்
மாவீ ரர்கள் மனச்சுடர் விரியும்
தீப விளக்குகள் தேசெலாம் எரியும்!
சிதைகள் மருங்கில் சிந்திய கண்ணீர்
கதைக்கும் மறவரைக் கண்முனே காட்டும்!
அர்ச்சுனன் மைந்தன் அபிமன்யு வீழக்
கைத்தலம் மீது கண்டனன் பார்த்தன்!
சார்ள்ஸ்அன் ரனியோ சாற்றிய களத்தின்
போர்க்குளத் துள்ளே புரிந்த சாகசம்
சாவைக் கண்டே சரிந்தனன்! தந்தையைக்
காவைத் திடவே கனிந்த செம்மலான்!
பேரியற் தலைவன் பெற்ற பிள்ளையைச்
சார்ள்ஸ்அன் ரனியைத் தன்னினும் மேலாம்
வீரக் களிறை மெய்ம்போர் மீட்டிய
ஆரா இளைஞன் அம்பிக்கு இந்தநாள்
பேரா என்றே சிதையெலாம் வீழும்
வாராய்க் கண்ணீர் வடித்திடும் இந்நாள்!
ஐந்து கண்டமும் ஐம்பெரும் சமுத்திரம்
தந்த பூமியைத் தாங்கிய உலகம்
எங்கெலாம் தமிழன் இருக்கின் றானோ?
அங்கெலாம் தீப அடுக்குகள் வைப்பான்!
தேரா விளக்கே! தேவியே! மகனே
வாராப் புலியே வருகவென் றழைப்பார்!
நரகா சுரரை நரமா மிசத்தைப்
புரமாய் ஆக்கிய பெருஞ்சிங் களத்தை
ஐயகோ நீவிர் அரக்கரே! எங்கள்
மெய்நில மெல்லாம் வீசிட நச்சுக்
குண்டிலே தீய்த்த கொடியரே! என்று
மண்தனை வாரியே இறைத்தல் கண்டேன்!
எட்டபன் ஆகி இராச பக்சனைத்
தொட்டவன் எல்லாம் தீயரே! இனத்தின்
கெட்டவன் அவனே! கொண்ட தாய்நிலம்
மட்டமாய் எடுக்க மடிதூங் கினனே!
குட்டியும் குடியும் கூத்தும் எங்கள்
தொட்டிலை விற்றுத் தின்னவே போயினர்!
ஆமாம் ஆமாம் இனத்தின் விம்பம்
தேமாங் கனியாய்த் துருவிடும் இளைஞர்!
கூரப் பாயும் குளிரிலும் தேச
வீரராய் நின்றே விளைநிலம் செய்தார்!
சாராத் தமிழன் சரிந்து அந்நியச்
சூரரின் சட்டியில் தோரோட் டினனே!
உள்ளும் புறமும் உலக மெல்லாமும்
வெள்ளமாய்த் தமிழர் விளைத்தனர் இமயம்!
தீயாய் எரிக்கத் தேச மெல்லாமும்
பாயாய்க் கிடந்து பக்கம் இருப்பினும்
எங்கள் கரங்கள் இளைஞரின் கரங்கள்
தங்கத் தீழம் தரணியில் எழுதுமே!
போரின் பின்னே புலிகள் இழந்தமண்
வேரொடும் பாறி விழுந்த காலையில்
இந்தியம் சீனா இரஷ்யா பாகியர்
வந்ததாற் தானே வரலா றிழந்தோம்!
புலத்தின் தமிழரே பெற்றமண் ஈழக்
கலத்தை இன்று காப்பவர் ஆனார்!
சுவிஸ்நாடு
(எண்சீர் விருத்தம்)
அய்நாவின் கொடிபறக்கும் அழகு நாடு!
அவனியிலே கண்போன்ற அறிவார் நாடு!
தெய்வமென எங்களினம் தேரும் நாடு!
திக்கற்றோர் சேதியிடத் தெளிந்த நாடு!
மெய்ம்மையுளத் தமிழரொடும் மொய்த்த நாடு!
வீதியெலாம் தமிழ்முழக்கம் கேட்ட நாடு!
பொய்நாவார் இலங்காட்சி புரிந்த நாடு!
பேருலகக் கொடியெல்லாம் திகழும் நாடு!
தீக்குண்டில் ஈழமது எரிந்த போதில்
திக்கெல்லாம் தமிழனிட்டான் செனீவா மன்றில்!
நாக்குண்டு வைத்தோம்நாம் நாடெல் லாமும்
நலிந்தவினம் பற்றியொரு நாடும் சொல்லாப்
போக்குண்டு என்பதினால் முருக தாசன்
பேரீழ மைந்தனவன் தீயில் வெந்து
சாக்கொண்டு அய்நார்க்குச் சாற்றி வைத்தான்!
சரித்திரமீ தென்னாளும் தொலையா தையா!
செனிவாவில் திருவீதி உடைத்துத் தள்ளிச்
சேதியிட்ட நாளெல்லாம் சொல்லும் எங்கள்
மனிதத்தை வளர்நாட்டை வார்ந்து தள்ளி
மரணத்தில் எரித்திட்ட மகிந்தக் கூட்டை
இனமாகத் தமிழ்கொன்ற இராட்ச தர்கள்
எரித்துவிட்ட ஈழமதை என்றும் சொல்லும்!
கனமான நீதியெனில் காலம் வெட்டிக்
கனிப்பிழம்பு போலெழும்பும் காணும் ஈழம்!
அய்ரோப்பா ஒன்றியம்..!
அய்ரோப்பா ஒன்றியத்தார் அவனி தன்னில்
அகலக்கூ டுடையார்கள் அணித்தே ரான
மெய்நிலமும் மானிடமும் விதந்து வையம்
விளைந்துதவி செய்கின்ற விதிகள் வைத்தார்!
பொய்யகவிப் பேயாகிப் போர்க்குற் றத்தின்
புத்தலங்கா நிற்பதனால் புரிந்தே கொன்ற
செய்கையினாற் பணவுதவி செய்யா ராகச்
செப்பியதால் ஈழவதை தெரிந்தே நின்றார்!
ஒன்றியத்தின் உதவியொடும் இலங்கா நாடு
இலட்சமென வேலைகளை இயன்ற போதும்
கொன்றீழ இனமழித்த கொடுமை தன்னால்
குவலயமெல் லாமெல்லாம் குறித்த பின்னால்
வன்கதைகள், சட்டத்தின் வடிவிற் சென்ற
வாதையிடும் போர்க்குற்றம் மலிந்த பின்னால்
இன்றுதவி செய்யாராய் இழுத்தே நிற்கும்
இந்தகணம் வரையிலுமே ஏற்கா நின்றார்!
போர்முடிந்து இருநூறாய்ப் போன நாட்கள்
பெரும்புகையாய் எரிமலையாய்ப் போன மக்கள்
கார்வனத்தில் கனக்கின்ற கதைகள் கேட்டும்
கடும்வதையின் முகாம்களிடும் கதறல் கண்டும்
மார்கழியின் மழைபொழிதற் கிடையே சொந்த
மனைகளுக்குப் போகவிடு மாறும் கேட்டும்
சீர்செய்யா விட்டாலே தேர்ந்து காசைச்
செய்துவிட முடியாதாய்ச் செப்பி விட்டார்!
இருபதுவாம் நாடுகளாய் இணைந்தய் ரோப்பா
ஒன்றியமாய்ப் பாராளும் இணக்கம் பெற்ற
பெருமிணைப்புச் சபையிதுதான் பூமி தன்னிற்
பெட்டகமாய் ‘யூறோ’வாய்ப் பொதுவாய்க் காசு
வருவாயைக் கண்டதொரு மன்றம் செய்தார்!
வையத்தை வளர்விக்கும் வனப்பும் கொண்டார்!
செருவாயில் இனவழிப்புச் சிறீலங் காவார்
செய்காசுப் கேங்குகிறார் சிரிப்புத் தானே!
நோர்வேயாம் மனிதநல் நாடு வந்தே
நோர்க்காத போரென்று நுணுக்கம் செய்து
கூர்க்காவாய்த் திரிந்தகவிச் செய்தொப் பந்தம்
கொல்லாடும் இலங்கத்தைக் கூட்டி வந்தார்!
வார்க்காடு இந்தியத்தின் வரவால் ஆட்சி
வலைக்குள்ளே வைத்ததொரு பொறியிற் சிக்கப்
போர்க்காடு பெற்றோம்நாம் சோனியாளின்
புருசனுக்காய் ஈழத்தை எரித்தாள் தாமே!
வாழ்நாடு எல்லாத்தும் வணக்கம் செய்வோம்!
வந்தபோர் தனிலெங்கள் மண்ணே சாகச்
சூழ்நாடு எல்லாமும் தெளிவே சொன்னோம்!
தெருக்களிலும் சனக்கடலாய்த் திரண்டு நின்றோம்
பாழ்நாடு இந்தியமே பகைக்கு நாறிப்
பட்டதுவே ஆனாலும் பாரின் வெள்ளை
ஆழ்நாடு யாவற்றும் ஆர்த்த எம்மின்
அகநாட்டை என்றென்றும் நெஞ்சில் வைப்போம்!
யூறோ:அய்ரோப்பிய நாடுகள்
யாவற்றுக்கும் பொதுவான நாணயத்தின் பெயர்.
– புதியபாரதி.
|| தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம் ||