மாவீரன் மேஜர் சிட்டு … .
மரணத்தின் முகநூலுக்கு,
மனம் விரும்பி, நட்பு நாடிய,
மாவீரர்கள் வரிசையில்,
முண்டியடித்து முன்னேறியவன்!
வாழ்வின் வசந்தத்திற்கு
விடை கொடுத்தனுப்பிய,
வீரத் தளபதிகளின் வரிசையில்
விதையாகி வீழ்ந்தவன்,
மாவீரன் மேஜர் சிட்டு!
வீசும் வாடைக் காற்றின்
வெறி அடங்கும் ஓசையில்…
அசையும் காவோலைகளின்
சர சரப்புச் சத்தத்தில் ,
ஆசையுடன் நிலம் தழுவும்
அலைகளின் முனகலில்,
சிற்றாறுகளின் சிரிப்பொலியில்,
சங்கீதம் படித்தவன்!
ஓயாத அலைகளின் காலத்தில்,
வெற்றி நடை பயின்ற,
வேங்கைகளின் படை நடையில்,
‘கம்பீர நாட்டை’ வாசித்தவன்!
கலைப் பண்பாட்டுக் கழகத்தின்.
காவலனாய் வாழ்ந்தவன்!
கறையாக நிலைத்து விட்ட
கண்ணீரால் காவியங்களும்,
சிதறிப் போன சொந்தங்களின்,
செந்நீரால் ஓவியங்களும்
செருக்களத்தில் வரைந்தவன்!
பார் போற்றி நிற்கும்
பாடகனாய் மலர்ந்தவன்!
பாசறைக் கீதங்களினால்,
போர்க்களத்தை உயிராக்கி,
குஞ்சும் குருமானுமாய்க்,
கொத்தாக வீழ்தல் கண்டு
நெஞ்சு பொறுக்காது,
போராடப் புறப்பட்டவன்!
புறநானூறு தந்த போர் மகனாய்,
போராடி, வீர மரணம் கண்டவன்!
கிட்டம்மானின் நினைவு நாளில்,
மொட்டவிழ்ந்த பாடலினால்,
கடலம்மாவிடம் நீதி கேட்டவன்!
சின்னச்சின்னக் கண்களில்,
மின்னல் விளையாடும் வேளையில்,
உயிர்ப் பூவை, நிவேதனமாக்கி,
ஓமந்தையில் வீழ்ந்தவன்!
போராளிகளின் பாசறையில்,
படைப்பாளியாய் வளர்ந்தவன்!
போராட்டமென்ற விருட்சத்தின்,
வேரடி மண்ணாகி நின்று,
போராட்ட காலத்தை,
வரலாறுகளில் வரைந்து,
விடுதலையின் வித்துக்களை,
வீதியெங்கும் விதைத்து,
வீரவரலாறு படைத்து,
விதையாகி வீழ்ந்தவன்!
மாவீரன் மேஜர் சிட்டு….
– புங்கையூரான்.
“தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்”