ஆசை
எல்லாமே ஏற்பாடாகிவிட்டது.
அவன் புறப்பட்டுவிட்டான்
இதற்கு முன்னரும் பலதடவை போய்ப் போய் வந்தவன்தான். ஆனால் இனி வரமாட்டான்.
வழியனுப்பி வைக்க வந்த தோழன் , அவனது தோள்களை அணைத்துக் கூட்டி வந்து கொண்டிருந்தான்.
அழைத்துச் செல்லப்போகிறவரும் , அனுப்பிவைக்க வந்த தோழர்களும் அருகிலே வந்து கொண்டிருந்தார்கள்.
இருந்தாற்போல அவனது நடையின் வேகம் சற்றுக் குறைந்தது.
ஏனோ தெரியவில்லை, அவனது முகம் இறுகிக் கொண்டே போனது.
கண்களில் நீர் திரையிட அவன் தயங்கினான்.
அவன் பின்னாலே திரும்பிப் பார்த்தான்.
அருகில் நின்ற தோழர்களைக் கடந்து வெகு தொலைவைப் பார்த்தான்.
விழிகளைப் பரப்பி ஏக்கத்தோடு பார்த்தான். திரும்பி திரும்பி பார்த்தான்.
” எல்லாவற்றுக்கும் தயாராகி சந்தோசமாக வந்தவன் , ஏன் திடிரென இப்படி ஆகிப் போனான்….. ? ”
இவன் நினைக்கும் போதே இவனிடமிருந்து மெல்ல விலகிக் கொண்டு …..
அருகிலிருந்த காட்டுத் துண்டுக்குள் அவன் போனான். போனவன் திரும்பி வந்தான்.
ஒரு சோர்வான நடை , நடை மட்டும்தான்.
தனது உடம்பில் படிந்திருந்த மண் புழுதியை தட்டிக் கொண்டு வந்தான். தனது உதடுகளிருந்த மண் புழுதியையும்.
தாயகத்துக்கு கடைசி முத்தம் கொடுத்து வணங்கி விட்டு அவன் வந்து கொண்டிருந்தான்.
கண்கள் சிவந்து கலங்கிப் போயிருந்தன. ஆனால் முகத்தில் தெளிவு தெரிந்தது. பார்வையில் உறுதி தெரிந்தது.
தோழர்களுக்கு மெய் சிலிர்த்தது. இப்போது அவனை புரிந்து கொள்ள முடியாததனால் எதுவும் அவனிடம் கேட்கவில்லை.
எல்லோரிடமும் விடை பெற்று திரும்பிப் பார்த்துக் கையசைத்து அவன் நடந்து கொண்டிருந்தான். நடந்துகொண்டு இருந்தவன் தோழர்களை விட்டு விலகி, சற்று எட்டத்திற்குப் போனதற்குப் பிறகு….
சட்டைப் பைக்குள் இருந்து எதையோ கிள்ளி எடுத்து , கைகளை விரித்துக் கூட்டிச் சென்று கொண்டிருந்தவரிடம் காட்டினானாம்… !
அவர் விக்கித்துப் போனார்.
” இது ‘ எங்கட மண் ‘ …. இனிமே ஒரு நாளும் எனக்கு இதைப் பார்க்கக் கிடைக்காது …. அது தான் ! ”
– உயிராயுதத்திலிருந்து……
” புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம் “