” என் தேசமே ! “
மேஜர் பாரதி
என் இனிய தேசமே!
குறிப்பெடுத்துக்கொள்.
எரியுண்டு
சிதையுண்டு போன
என் தேசத்தின்
காப்பகழி ஒன்றில்
எழுகின்ற
உணர்வு அலைகளைக்
குறிப்பெடுத்துக்கொள்.
இந்தத் தேசத்தை
எப்படிநான்
நேசித்தேன் என்று
தெரியுமா உனக்கு?
கீழ்வானம் எமக்கு
எப்போது சிவக்கும்?
என் இதயத்தின் துடிப்பிது;
கேட்கிறதா உனக்கு?
என்னால்
விளங்கப்படுத்த முடியவில்லை
ஆனாலும்
என் தேசமே
கறிப்பெடுத்துக்கொள்.
இன்னும் என்
அம்மா என்ற பெயரில்
உயிரோடு உலாவும்
எலும்புக்கூட்டை நீ
கண்டிருக்கிறாயா?
ஆம்! கண்டிருப்பாய்
நடைப்பிணமாய் திரியும்
‘அதன்’ கால்கள்
நிச்சயம் உன்மடியில்
பதிந்திருக்கும்.
வாழ்வின்
பற்றுக்கோட்டினை
தேடி அலையும்
இந்த எலும்புக்கூடு
தினம் தினம் என் நினைவில்
வந்து போனாலும்
இன்னும் எதன்மீது
அன்பு செலுத்துகின்றேன்
தெரியுமா உனக்கு?
தெரிந்துகொள்
உன்மீது தான்!
இருண்டு போயிருக்கும்
என் தேசத்தில்
ஏற்றப்படும்
விடுதலைத் தீபத்திற்கு
என் உயிரும்
எண்யெய்யாய்
ஊற்றப்பட வேண்டும்!
குறிப்பெடுத்துக்கொள்
என் தேசமே
குறிப்பெடுத்துக்கொள்!
காதோடு சொல்லிவிடு
புரட்டாசி 1992