” இறப்பற்றோர் ! “
கப்டன் கஸ்தூரி
வெட்டப்பட்ட கரங்கள்
வேகமுடன் வளர்கின்றன.
முறிக்க முறிக்க
முளைவிடும்
மூர்க்கமான செடியைப் போல்,
கத்தரிக்கப்பட்ட கரங்கள்
கணுக்களைப் பிரசவிக்கின்றன
சிதைக்கப்பட்டவைகள்
சிவப்பாக வெடிக்கின்றன.நெரிக்கப்பட்ட குரல்வளைகள்
நெருப்பு வரிகளில்
முற்றுகையை எதிர்த்து
முழக்கமிடுகின்றன.
சூடுபட்ட
சுவாசப் பைகள்,
ஆக்கிரமிப்பாளனை
அவிப்பதற்கு
விடுதலை மூச்சை
வெம்மையாக
வெளியேற்றுகின்றன.
இறந்து போனான்
என எதிரியவன்
எக்காளமிடுகையில்,
பிணங்கள் இங்கே
பிறவி எடுக்கின்றன.
எதிகளே…..
துடிக்கப் பதைக்க
வதைத்துக் கொல்லுங்கள்;
அதனாலென்ன!
துண்டிக்கத் துண்டிக்கத்
துளிர்ப்பார்கள் வீரர்கள்.
எங்கள் எல்லை நீக்கி
உங்கள் படைகள்
ஓடும் வரை
எங்கள் வீரர்க்கு
இறப்பே இல்லை.
உரிமைவேண்டி
உயர்ந்த கரங்கள்
ஆக்கிரமிப்புகளுக்கு
அடிபணிந்து போகாது!
கஸ்தூரியின் ஆக்கங்கள்
வைகாசி 1992.