காந்தள் பூவின் வாசமானவரின் நினைவில்
காந்தள் பூவின் வாசமானவரின் நினைவில்
தமிழர்கள் நாம் சுவாசம் கொள்கிறோம்…!
இனத்தின் விடுதலைக்காய்
முப்படைகளிலும் இணைந்து
விலைமதிக்க முடியாத உயிர்களை
எங்களுக்காய் ஆகுதியாக்கியவரே
உங்கள் தியாகத்தை பணிகின்றோம்
தாயக தமிழக மாவீர கண்மணிகளே
உங்கள் பாதம் பட்ட இடமெல்லாம்
எங்கள் கண்ணீரை தெளிக்கின்றோம்
உங்கள் வீரத்தின் உச்சத்தையும்
எங்களை காத்திட அச்சம் தவிர்த்து
உலகமே மெச்சும் வகையில்
எதிரியை நேர்மையின் வழியில்
களமாடி மண்ணில் விதையானவரே…
மகிழ்வாய் வாழும் வயதில்
ஆசபாசங்களையும் மறந்து
தேசத்தின் விடுதலையை நினைந்து
தலைவனின் சேனையில் இணைந்து
வரிப்புலி உடை தரித்து
இரவு பகல் பாராது கண் விழித்து
காட்டிலும் மேட்டிலும் முட்புதரிலும்
மழையிலும் வெப்பத்தின் பிடியிலும்
உங்களை துன்பத்தின் பிடியில் இருத்தி
எம்மை இன்பமாக வாழ வைத்திடவே
உங்களை தியாகித்த எங்கள் வீரரே..!
தரைபடையாய் கடற்படையாய்
வான்படையாய் அணிவகுத்து
புலிக்கொடியின் கீழ் புலிப்படையாய்
உலக வல்லரச படைகள் எல்லாம்
வியந்து நிற்க்க நிமிர்ந்த எம் படை
இனத்தின் விடியலுக்காய் என்றும்
இறுதிவரை எதிரியோடு சமராடியே
எட்டு திக்கும் வாழும் தமிழரின்
இனமானம் காத்த தன்மானபடை
எங்கள் மறவரின் தியாகத்தால்
எதிரியை வதம் செய்த புலிப்படையின்
மண்டியிடாத வீரத்தின் விழுதுகளே..!
உங்கள் கல்லறைகளை அழித்து
உங்கள் நினைவுகளை சிதைத்து
உங்கள் கனவுகளை மறைத்து
எம்மை மீண்டும் அடிமை செய்யவும்
நினைக்கிறது இனவாதம்….
இது ஒரு போதும் நிறைவேறாது
உங்கள் கல்லறைகளை
எங்கள் நெஞ்சறையிலும்
உங்கள் நினைவுகளை
எங்கள் நினைவறையிலும்
உங்கள் கனவுகளை எங்கள்
உணர்வறைகளிலும்
ஒவ்வொரு தன்மான தமிழனும்
மரணம் வரை சுமக்கும் வரை….
உங்கள் தியாகங்கள் எமக்கான
விடுதலையின் ஒளிக்கீற்றுக்களே…!
இறந்தவர்களுக்காக அழுதவர்கள்
மத்தியில்….
அழுதவர்களுக்காக இறந்தவர்கள்
மாவீரர்கள் ….
வீரவணக்கம் உங்களுக்கு…!
கவியாக்கம்:- யாழவன் ராஜன் (பிரான்ஸ்)
“தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்”