இவர்களின் நினைவாய்……….
தலைமைச் செயலகம்
தமிழீழ விடுதலைப்புலிகள்
தமிழீழம்
04.11.1996
பாரிஸ் நகரில் உள்ள விடுதலைப்புலிகள் இயக்கத்தின் அனைத்துலகத் தலைமைச் செயலகத்தில் முக்கிய பணியாளர்களாகப் பணிபுரிந்த திரு.கந்தையா பேரின்பநாதன் (நாதன்) திரு. கஜேந்திரன் (கஜன்) ஆகிய எமது உறுப்பினர்கள் இருவர் பகைவனின் சூழ்ச்சியால் படுகொலை செய்யப்பட்ட நிகழ்வை அறிந்து நான் ஆழ்ந்த கவலையும் வேதனையும் அடைகின்றேன்.
திரு. நாதன் எமது விடுதலை இயக்கத்தின் ஒரு மூத்த உறுப்பினர் நேர்மையும் கண்ணியமும் மிக்கவர். விடுதலை இலட்சியத்தில் அசையாத உறுதி கொண்டவர். நீண்ட காலமாக சர்வதேச நிதி திரட்டும் பெரும் பொறுப்பைச் சுமந்து உலகெங்கும் அலைந்து அயராது உழைத்தவர். கடும் உழைப்பாலும், செயல்திறனாலும் தமிழீழ விடுதலைப் போருக்கு அவர் ஆற்றிய பணி அளப்பரியது.
திரு. கஜன் எமது இயக்கத்தின் பரந்துரை செயற்பாட்டாளராகப் பணி புரிந்தவர். தாயக விடுதலையில் ஆழமான பற்றுடையவர். ஈழமுரசு ஆசிரியராகப் பணியாற்றி எமது இலட்சியப் போருக்கு ஆதரவு திரட்டுவதில் அரும் தொண்டு புரிந்தவர். நிதி சேகரிப்பு, பரந்துரை போன்ற முக்கிய சர்வதேசப் பணிகளில் ஈடுபட்டிருந்த இம் முக்கிய பொறுப்பாளர்கள் கொலையுண்டமை எமது இயக்கத்துக்கு மட்டுமன்றி எமது தேசிய விடுதலைப் போராட்டத்திற்கு ஏற்பட்ட பாரிய இழப்பாகும். பறந்து வளர்ந்து உலகெங்கும் கிளை பரப்பி நிற்கும் எமது விடுதலை இயக்கத்தின் சர்வதேசக் கட்டமைப்பை சீர்குலைத்து அனைத்துலக ரீதியாக எமக்கு அணி திரளும் ஆதரவை முறியடிப்பதற்காக சிங்கள இனவாத அரசு தீவிரமாகத் திட்டமிட்டு செயல்பட்டு வருவதானது உலகறிந்த உண்மை. வெளிநாடுகளில் எமது இயக்கத்தை தடைசெய்து, சர்வதேச தமிழ் சமூகத்திடம் இருந்து பெறப்படும் பங்களிப்பை முடக்கி ஈழத்தமிழரின் சுதந்திர இயக்கத்தை நசுக்கிவிட சந்திரிகா (சிங்கள) அரசு பகிரங்கமாகப் பகீரத முயற்சி செய்கின்றது. சிறிலங்கா அரசின் வெளிநாட்டு ராஜதந்திர நடவடிக்கைகள் இந்த நோக்கங்களைக் கொண்டமை என்பது சர்வதேச சமூகத்திற்குத் தெரிந்த விடயம். இந்த இராஜதந்திர முயற்சிகள் பலனளிக்காது போகவே சிறிலங்கா அரசு நாசகார சூழ்ச்சியில் இறங்கியிருக்கின்றது. இந்தச் சூழ்ச்சியின் கோரமான வடிவமாக இந்தக் கொலைகள் நடைபெற்றதென நாம் நம்புகின்றோம்.
தமிழருக்கு எதிரான சிறிலங்கா ஆட்சியாளரின் அரச பயங்கரவாதம் இப்பொழுது கடல் கடந்து சென்று சர்வதேச அரங்கில் மேடை ஏறியிருக்கின்றது. அரூபகரங்க்களால் எமது அன்புக்குரியவர்கள் அநியாயமாக உயிர் நீத்துள்ளனர். இக்கோழைத்தனமான கொடூரமான செயலின் நோக்குதாரிகள் யார் என்பதை சர்வதேச உலகம் உணர்ந்து கொள்ள வேண்டும். அப்பொழுது தான் சர்வதேச உலகம் உணர்ந்து கொள்ள வேண்டும். அப்பொழுது தான் சர்வதேச சட்டங்களையும் மனித உரிமைகளையும் மீறும் பயங்கரவாதிகள் யார் என்ற உண்மை உலகிற்குப் புலனாகும். எதிரியின் கையாலாகாத்தனத்தின் அதிட்டமான வெளிப்பாடாகவே நாம் இந்தப் படுகொலைகளைக் கருதுகின்றோம். எமது போராட்டத்திற்கு ஆதரவு நல்கும் உலகத் தமிழ் சமூகத்திற்கு விடுக்கப்பட்ட ஒரு சவால் இது. எதிரியின் இச் சவாலை துணிவுடன் எதிர்கொண்டு தாயாக விடுதலைக்கு தொடர்ந்தும் உறுதியுடன் பணியாற்றுமாறு உலகத் தமிழர்களை நான் வேண்டுகின்றேன்.
மிகவும் சோதனையான இக்காலகட்டத்தில் நெஞ்சத்தை உலுக்கும் வேதனைகளையும் நாம் சுமந்து நின்று மிகவும் நிதானமாக மிகவும் விழிப்பாக உறுதி தளராது எமது இலட்சியப் பணியைத் தொடர வேண்டும். தாயக விடுதலையென்ற உயரிய இலட்சியத்துக்காக அயராது உழைத்து தமது இன்னுயிரை அர்ப்பணித்த இலட்சிய வீரர்களுக்கு எனது இதய அஞ்சலியைச் செலுத்திக் கொள்கிறேன்.
“புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்”
வே. பிரபாகரன்
தலைவர்.
தமிழீழ விடுதலைப் புலிகள்,
தமிழீழம்.