கடற்கரும்புலி கப்டன் இயல்வளவன்
கடற்கரும்புலிகள் காவியத்தில் கடற்கரும்புலி மேஜர் புகழரசன் கடற்கரும்புலிகள் அணிக்குள் இவனது வீரச்சாவு சற்றும் வித்தியாசமானதே.
விடுதலை போராட்டம் தமிழீழத் தேசியத் தலைவர் காலத்தில் விருட்சமாக வளர்ந்து விடிவை நோக்கி நகர்கிறது; பல வரலாறுகள் பதிந்தும் – தொடர்ந்தும் பல இடைவெளிக்கு பின்பு விடுதலை சேனையில் இணைந்து எமக்கு முன்னர் விதையாக விழ்ந்தவர்கள் வழித்தடங்கள் விடிவை நோக்கிய நெஞ்சங்களின் பாதையாக, கிட்டண்ணா முதல் பல மூத்த தளபதிகள் கடலில் உலாவந்து மேற்கொண்ட ஈழத்தின் விடியலுக்காக திரவியங்கள் சேர்த்திட சுற்றும் பூமியை சூற்றுகின்றேன் ஈழக் கனவுடன்…………..
இது இயல்வளவன் உதிர்க்கும் வார்த்தைகள், வார்த்தைகள் போன்று விடுதலை உரம் இவன் மனதில் நிறைந்திருந்தது ஆனால் அப்படியே அவனது இறுதி மூச்சும் யாரும் நினைக்காத வண்ணம் ஒர் பூ மலர்ந்த இடத்திலே ஒவ்வோர் பூவின் இதழும் உதிர உதிர வாசனை இழந்து வாடிப்போவது போன்று அன்று கரையிலும் – கடலிலும் நின்று இவர்கள் நினைவில் விம்மி விம்மி மனம் குமுறி விழிகரைந்த சக தோழ – தோழியர் ஆயிரம்.
ஆம், ஒருவர் மீது அதிகம் அன்பு வைக்கும் போதும் அல்லது நட்புடன் உறவாடும் போதும் சுற்றிய சூழலும், காலத்தின் தருணமும் அவைகள் நிலைத்து செல்ல விடுவதில்லை. ஏதோ ஓர் கனவை சுமந்து திசைக்கு ஒவ்வோன்றாய் பிரிந்து செல்கிறது பல காவ்யங்கள்; ஆனால், அதில் ஓர் புனிதத்தின் எல்லையைக் கடந்து உயர்ந்த மனங்களாக காட்சிதருவர் மாவீரர்கள்.
இது எங்களின் வாழ்வில் தினம் தினம் காண்பவைகள் அப்படியாக கடற்கரும்புலி கப்டன் இயல்வளவனும் எம்மிடையே பிரிவை எகிச்சென்றான். என்னதான் செய்யமுடியும்? அவனது உயர்வான இலட்சியத்தைத் தேடி அவன் விரைந்தான்; எதோ ஓர் திசையில் கடமை அவனை அழைத்துச் சென்றது………………………………….
2006ம் ஆண்டு ஆவணி மாதம் தென் தமிழீழத்தின் படுவான் கரையில் சூரியன் மெல்ல மெல்ல மறைந்து தன் இயற்கை நிறைந்த மாலைக்காட்சியை படரவிட்டுக்கொண்டிருந்தது. அந்த மாலைநேர சூரியக் கதிர்கள் கடலில் ஓர் மீன்பிடி படகில் (றோலர்) இருந்த மூன்று உருவங்களின் தேகங்களை நிறைத்து, இன்னும் இயற்கையை அழகு படுத்தி அந்த அலையின் இசைவிற்கு ஏற்றால்போல் மிதந்தவண்ணம் இருந்தது.
அப்போது, ஓர் தென்னிந்திய திரைப்பாடல் வரிகளை அந்த உருவங்களில் ஓர் இளைய உருவம் முனுமுனுத்தபடி படகை செலுத்தியவண்ணம் இருந்தது. (அவைகள் பகைவனின் தேசம் கடந்தும் சென்று செய்யவேண்டிய சில நடவடிக்கை காரணமாகவும், தமிழீழ தேசியத்தலைவரின் அனுமதி கொடுக்கப்பட்டு இருந்தது. ஆதலால் அந்த போராளிகளுடைய விடுதலைக்கான ஒழுங்குகள் மேற்கொள்ளும் அந்த படகில் சினிமா பாடல் கேட்கும் வகையில் ஒழுங்கும் செய்யப்பட்டது. அவைகள் எக்காரணம் என திரிவு படுத்த வேண்டிய தேவை எனக்கு இருக்காது என நினைக்கிறன் நீங்களே இலகுவாக புரிந்து கொள்வீர்கள்) தொடர்பாடல்களில் உரையாரும் போதும் அந்த வீரனின் உதட்டில் இருந்து ஓர் உணர்வாகத்தான் அவன் தனக்குரிய பாணியில் இசைத்தான்.
காற்று மழையில் கலங்குவதில்லை
கட்டுமரங்கள் மூழ்குவதுமில்லைமூழ்குவதுமில்லை…………………
நாம் ஓய்வதுமில்லை……………..
கோடையினாலே கடல் காய்வதுமில்லை…………….
அது இயலுக்கு பிடித்த ஓர் கரையோர மக்களின் தென்னிந்திய திரைப்படப் பாடல் அதையும் சற்று நீங்களும் ஓர் உணர்வாக ரீதியாக மட்டும் கேட்டுப் பாருங்கள்…………..
கதிரவனில் கதிர்கள் பட்டுத்தெறித்த அந்த உருவங்களில் கடற்கரும்புலி கப்டன் இயல்வளவ னும் ஒருவனாக நிஜத்திலும் கருமையாகத்தான் இருந்தான்.
2004க்கு முன்னர் எங்கள் கட்டுப்பாட்டாக இருந்த கடல் அப்பொழுது கிழக்கில் நடந்த துரோகத்தால் தற்காலிகமாக பறிபோன கடல்பரப்பாலும், கரைகளைப் பார்த்த வண்ணமும் துரோகத்தின் ஆறாத ரணத்தின் பழைய நினைவுகளுடனும் வேறு ஒரு பிரத்தியேக இடம் நோக்கி தமிழீழ போரியல் வழங்களைச் சுமந்து சென்றவண்ணம் இருந்தது. ஆனால் அங்கே இடையில் அவர்களை வேட்டையாட குரோதத்துடனும், கொலைவெறியுடன் காத்திருந்தது துரோக நாய்கள் ஆம்………………………..
யாவற்றையும் அறியாது கடலில் துள்ளிவரும் அலையின் துளிகளும், வாடைக் குளிர்க் காற்றும் மேனி தடவி தடவிச்செல்ல வழமைபோல் அந்த நடவடிக்கையின் கட்டளை அதிகாரி லெப். கேணல் குகன் அவர்களின் தலைமையில் அன்றைய பயணமும் தொடர்கிறது.
பயணம் தொடரும் வேளை இயலின் கடந்த நினைவுகளுக்கு சற்று செல்வோம்…………………..
தமிழீழத்தின் தலைநகர் திருமலையில் 1987ம் ஆண்டு பிறந்து. சிங்கள ஆதிக்க வெறிகளின் அடாவடியால் உருக்குலைந்த தலைநகரில் அகதி வாழ்வு சூழ்ந்த மக்களில் இவனது குடும்பமும் உள்ளாக்கப்பட்டது. தன் குடும்ப சுமையை சிறிய பிராயத்தில் சுமந்தவன் தான் வேலைக்கு செல்லும் பொது ஏற்பட்ட போராளிகளின் தொடர்புகளால் போராட்டத்துக்கு உறுதுணையான சில போராட்ட வேலைகளுக்கு பின்னணியில் இருந்து வெளித்திரியாது உழைக்கின்றான். ஆனால் தன்னை முழுநேர போராட்ட பங்காளனாக மாற்றிக்கொள்ள முயற்சித்து சில வேலைகள் சார்ந்த பொறுப்பாளர்களுக்கு தன்னை வன்னிக்கு அனுப்புமாறும் அல்லது பயிற்சி அளிக்குமாறும் அழுத்தம் மற்றும் (அன்பு ரீதியான கரைச்சல்) கொடுக்கிறான். ஆயினும் இவனது சில தேவைகளின் முக்கியத்தை உணர்ந்து உன் வயது நிலை போதாது என்று மழுப்பி பதில் கூற பின்பு அங்கிருந்து வன்னி நோக்கி சென்று விடுதலைச் சேனையில் தன்னை இணைக்கின்றான்.
முல்லைமாவட்டத்தில் சிலாவத்துறை கடற்புலிகள் “இரும்பொறை” பயிற்சிப் பாசறை பாசறை 2001ம் ஆண்டு முதல் பயிற்சி ஆரம்பமாகி பல போராளிகளைகளை உருவாக்கி அவர்களில் பாதங்கள் உலாவந்த அந்த தென்னம் சோலை அடங்கிய வளாகம் மீண்டும் தன்மீது பல காவிய மைந்தர் கள் உருவாகுவார்களா என எக்கிக் காத்திருந்த போது வட்டக்கச்சி “அன்பு” அடிப்படை முகாமிலிருந்து சிறு தொகை போராளிகள் (அதாவது புதிதாக இயக்கத்தில் இணைந்தவர்கள்) முல்லைத்தீவுக்கு அழைத்துவரப்பட்டார்கள். ஆயினும் அந்தத் தொகை சற்று போதாததால் முத்தையன் கட்டு மணிவண்ணன் பாசறையில் இருப்பில் அடிப்படை பயிற்சிக்காக காத்திருந்த சில போராளிகளும் அழைத்து வந்தார்கள். (அங்கே சில பாசறைகளை உருவாக்கியவர்களும் இவர்களே பயிற்சிக்காக சுபேசன், யாழினி, மணிவண்ணன் எனும் பாசறைகளே ஆகும்.) அதிலே இயலும் ஒருவனாக இருந்தான். அனைவரையும் ஒன்றாக்கி கடற்புலி சூட்டுப்பயிர்சியாளர் அனந்தன் தலைமையில் “இரும்பொறை 02” உருவாகியது அந்த தென்னம் சோலை நிறைந்த வனாந்தரமும் ஒரு புத்துயிர் கொண்டு பல போராளிகளை வளர்க்கத் தொடங்கியது. அதிலே இயல் சகல விதமான பயிற்சிகள் மற்றும் கடற் பயிற்சிகளையும் மேற்கொண்டான்.
இவனது திறனும், பயிற்சியின் வேகமும் அனைத்து போராளிகளையும் மற்றும் பயிற்சி ஆசான்களையும் கவர்கின்றது. அதன் பயனே அந்தப் பயிற்சியின்போது இவன் ஒரு 12 போராளிகளுக்கு குழுத் தலைவனாக நியமிக்கப்பட்டான். (ஒரு கொட்டிலில் 12 போராளிகள் வசிப்பர்) பின்னர் ஞாயிறு தோறும் நடைபெறும் கலைத்திறன் நிகழ்ச்சிகளில் இவனது ஒரு கலைநிகழ்ச்சியும் மேடை ஏறும் சற்று நகைச்சுவை கலந்திருக்கும். மற்றவர்களை எந்நேரமும் சிரிக்கவைக்கும் ஓர் நகைச்சுவையாளன். தமிழீழ விடுதலை மீது அதிக அவாகொண்டும், தலைவர் மீதும் அன்பு கொண்டிருந்த இந்த புலிமறவன் அங்கு வைத்தே ஓர் கடிதம் வரைகின்றான் தலைவருக்கு அதன் பதில் சற்று காலம் தாழ்த்தியே வந்து கிடைக்கின்றது. இவனில் ஓர் பெரும் சோகத்தை புதைந்து கிடக்கும் ஆயினும் சோகத்தை மிறிய அந்தப் புன்சிரிப்பை எந்நேரமும் மலரவைப்பான்.
இப்படியாக பயிற்சிப் பாசறையில் உலாவந்த போது சிலோஜன் நீரடி நீச்சல்ப் பிரிவுக்கு 20 பேர் கொண்ட போராளிகள் தெரிவாகி செம்மலை நோக்கி அவர்கள் அந்தப் பயிற்சிப் பாசறையில் இருந்து அழைத்துச் செல்லப்பட்டார்கள் அவர்களின் இயலின் இணைபிரியா நண்பர்கள் பலர் பின்னைய நாட்களில் ஈழக்கடலில் சாதனை வரலாறாகிய கடற்கரும்புலி மேஜர் தீக்கதிர், கடற்கரும்புலி கப்டன் முறையமுதன், கடற்கரும்புலி கப்டன் சோழமைந்தன் போன்ற பல போராளிகள்………………………
இவர்கள் சென்று மறுதினம் கடற்புலிகளின் சிறப்புத் தளபதி வந்து பன்னிரண்டு போராளிகளைத் தேர்வு செய்தார். அதில் இயல்வளவனும் ஒருவன். உடனே நீங்கள் உங்கள் கொட்டிலுக்கு சென்று உங்கள் உடமைகளை எடுத்துக்கொள்ளுங்கள் பின்பு ஒருவர் வந்து உங்களை அழைத்துச் செல்வர் என்று கூறி வாழ்த்துக்கள் கூறி விடைபெற்று சென்றார்.
பயிற்சிப் பாசறையில் ஆயிரம் விழிகள் இவர்களைப் பார்த்தபடி, ஏதேதோ வினவி முனுமுனுத்தபடி இருந்தார்கள் மற்றப் போராளிகள். பின்பு ஓர் நள்ளிரவில் இதமான தென்னம் காற்றுடன் கடல்காற்றுடன் கலந்து தேகத்தை சிலிர்க்கச் செய்த தருணம் லெப். கேணல் கடாபி அண்ணா அவர்கள் மத்தியில் வந்து நான்தான் உங்களை பொறுப்பெடுக்கப் போகின்றேன் என கூறி ஓர் வாகனத்தில் ஏற்றி வாகனம் பறந்தது தேவிபுரம் நோக்கி………. ஆனால், வாகனத்தில் இருந்த மனங்கள் பலத்தை சிந்தித்தபடி எங்கு போகின்றோம்????????????? சில மனம் ஓர் மகிழ்ச்சி பயிற்சி முகாம் விட்டு கடமைக்கு போகின்றோம் என. வாகனம் தேவிபுரத்தில் அரைகுறையாக கிடந்த “லெப். கேணல் சதீஸ் இயந்திரவியல் கல்லூரியில்” வந்து நின்றது. அன்றிலிருந்து கடற்புலிகளின் (Inboard and Outboard Engine) உள் – வெளி இணைப்பு இயந்திரவியல் அணி (டோறா ரிம்) மீள் எழுச்சி கொண்டு கடமை ஏற்று பயணித்தது அதன் சாதனைச் சரங்கள் விபரமாக விபரப்படுத்த முடியவில்லை மன்னிக்கவும்.
உண்மையில் இந்த அணி உருவாக்கம் 2000ம் ஆண்டு வெற்றிலைக்கேணியில் சண்டை ஒன்றில் சேதமடைந்த சிறிலங்கா கடற்படையின் அதிவேக டோறாவை கரைகொண்டு வந்து சேர்த்து பின்பு வேறு ஒரு சண்டையில் வீரமரணம் அடைந்த லெப். கேணல் சதீஸ் நினைவாகவும் கடற்புலிகளின் டீசல் – பெட்ரோல் மற்றும் நான்கு வகையான் இயந்திர வகைகள் கடற்புலிகளின் வளர்ச்சிக்கு பெரிதும் வலுச்சேர்த்தன என்பன குறிப்பிடத் தக்கது அதன் வளர்ச்சியை அதிகரிக்கவும் மற்றும் டோறா இயந்திரத்தின் (MTU Aero Engines) Motoren- und Turbinen-Union GmbH (MTU) தொழில்நுட்பம் மற்றும் அதன் பரிமாண தேர்வுகள் முற்றும் மாறுபட்டதனாலும் அவற்றில் முழுமையான தரவுகளுடன் பல போராளிகளை வளர்க்க வேண்டும் அவற்றைப் பராமரித்து எம் வளங்களை அதிகரிக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் ஆரம்பிக்கப்பட்டது.
பின்பு கடற்புலிகளின் மூத்த உறுப்பினர்கள் கடாபி அண்ணா, குபேரன் அண்ணா, ரோமியோ அண்ணா, செமாலை அண்ணா, சின்னக்கண்ணன் அண்ணா மற்றும் சில பழைய போராளிகளையும் உள்ளடக்கி இவர்களுக்கும் (MTU Aero Engines) இயந்திரம் பற்றி மற்றும் அடிப்படை இயந்திரம் பற்றி (பெற்றோல் & டீசல்) கற்றுக்கொடுக்கப்பட்டு பயிற்சியும் வேறு ஒரு நாட்டில் இருந்து அழைத்துவரப்பட்ட தமிழரால் நடத்தப்பட்டு அந்த நாட்டு மொழியும் கற்றுக்கொடுக்கப்பட்டது. அந்த நாட்டு மொழி உண்மையில் அனைவரது மண்டையிலும் ஏறுவது கடினமாக இருந்தது அப்போது நகைச்சுவையாக இயலின் குரல் கேட்கும்.
இப்படியாக பயிற்சிகளில் தேர்வு செய்து அனைவரது பாராட்டுக்களையும் பெற்றனர் இயல் உட்பட ஏனைய போராளிகளும்.
இப்போது பழைய உறுப்பினர்களும் புதிய போராளிகளுக்கு வாழ்த்துக்களை கூறி நீண்ட தூரம் பிரிந்து ஊர் விட்டு ஊர், மாவட்டம் விட்டு மாவட்டம் அவர்களின் பழைய கடமை ஏற்று சென்றார்கள்.
இப்போது இவர்கள்தான் யாவுமாகி…………… சதீஸ் இயந்தியவியல் எங்கும் பேசப்பட்டார்கள் ஆயினும் அவர்களின் அடையாளம் கடாபியின் பெடியல்கள்……………. ஆனால் இந்த அணியின் அதிக வளர்ச்சிக்கும் பெரிதும் பாடுபட்டவர் லெப். கேணல் கடாபி அண்ணா.
இப்போது படையணிக்குள் சென்று அவர்களின் தொகுதிப் படகுகளின் இயந்திரம் இணைப்பது பிழை திருத்துவது, விநியோக இயந்திரம் புதிதாக பூட்டுவது போன்று கடற்புலிகளின் சண்டைப் படகுகளிலும், விநியோக வள்ளங்களிலும் (பெற்றோல் & டீசல்) என அனைத்து வகையான இயந்திரங்களிலும் இயலின் கைவண்ணம் தெரிந்தது. நாளடைவில் கடற்கரும்புலி மகளிர் போராளிகளுடன் இணைந்து செயற்பட்டார்கள். எம்முடன் உழைத்து பின்தளத்தில் இருந்து அனைத்து வகையான கடல்சார் நடவைக்கைக்கும் நீண்ட தூர பயணத்திற்கும், சண்டைகளின் அதிவேகம் கொண்ட இயந்திரங்களை இயக்கும் கரங்களாக இரவு பகலாக தமிழீழத் தேசியத் தலைவரையும், தேசத்தையும், மக்களையும் நெஞ்சிருத்தி உழைத்தார்கள்.
தமிழீழத்தில் அன்று கடற்புலிகளின் கடலோடிகள் நினைவில் கலை நிகழ்வு மாலை “அலைபாடும் பரணி” பாடல் இறுவட்டு வெளியீடு முல்லைத்தீவு மகாவித்தியாலய மைதானத்தில் நடைபெறவிருந்தது. ஆனால் அதன் நிகழ்ச்சி ஒத்திகை லெப். கேணல் சாள்ஸ், லெப். கேணல் நிறோஜன் நினைவு மண்டபம் அமைந்திருக்கும் வட்டுவாகல் கடற்புலிகளின் பிரத்தியேக தளத்தில் நடைபெற்றது.
அதில் சிறப்புத் தளபதி உட்பட கடற்புலிகளின் உள்ளக கட்டமைப்பின் அனைத்து மாவட்டத்திலிருந்தும் போராளிகளும் கலந்து கொண்டிருந்தார்கள் அதில் மங்கை படகு கட்டுமானப் போராளிகளின் கலைநிகழ்வு ஒத்திகை கடற்கரும்புலி லெப். கேணல் அன்பு தலைமையிலான போராளிகளால் அரங்கேறிய தருணம் “தந்தனா பாடலாம் தாளம் போட்டு ஆடலாம்” எனும் பாடல் ஒலித்த போது இவன் நீண்ட நாள் கனவு சிறப்புத் தளபதி சூசை அண்ணா, லெப். கேணல் கடாபி அண்ணா, அப்போதைய கடற்கரும்புலி மேஜர் புகழரசன் கடற்கரும்புலிகள் அணிகளின் பொறுப்பாளர் மேஜர் கலைமாறன் (2006ம் ஆண்டு சர்வதேசக் கடற்பரப்பில் வீரச்சாவு) அவர்களும் கூடி கதைத்த போதும் கடாபி அண்ணா வியந்தார்; அவரின் புருவங்கள் உயர அவரின் வியப்பு அவரை அகலாத நேரத்திலும் யாவற்றையும் அடக்கி இயலை அழைத்தார் அப்போது அவனின் நீண்ட நாள் காத்திருப்புக்கு பதில் கிடைத்தது. சிறப்புத் தளபதி மூலம் கிடைத்தது. என்னதான் செய்யமுடியும்? அவன் உள்ளம் அடைந்த ஆனந்தம் யார்தான் உரைப்பார்? யாரிடமும் கூறும் விடயமும் இல்லை தனக்குள் சந்தோசத்தை அடக்கிக்கொண்டான். ஆயினும் சதீஸ் இயந்திரவியல் பாசறையில் அவன் சிறிது காலந்தான் வாழ்வான் என அப்போது அவனின் சில செயற்பாடுகள் அனைவருக்கும் தெளிவூட்டியது.
ஓர் முறை கடற்புலிகளின் சிறிய ரக சண்டைப்படகு (போராளிகளின் இழப்பைக் கடலில் சந்திகளில் குறைப்பதற்கும், இலக்கின் தன்மையை குறைப்பதற்கும் உருவாக்கப்பட்ட “வின்னர்” படகு) ஒன்று அறிமுகம் செய்யப்பட்டு அதை ஒத்திகைக்கு விட்டு பாவனைக்கு உட்படுத்த ஏற்பாடு செய்யப்பட்டது. ஆனால் அதற்கு படகு வடிவமைப்புக்கு இரவும் பகலும் மங்கை படகு கட்டுமானப் போராளிகளும், புதிய இயந்திரங்களை ஒருநிலைபடுத்து இயக்குவதிலும் சதீஸ் இயர்ந்திரவியல் போராளிகளும் உழைத்தார்கள். ஆனால் அனைத்தும் முடிவூற்றது இரவு முழுவதும் இயந்திரத்தை மெதுமெதுவாக அதன் வலுத்திறனை நிலைப்படுத்த வேண்டும். (படியவிட வேண்டும்) அவற்றையும் சீர்நிலைப்படுத்தி முடிக்கும் தருணம் காலை புலர்ந்தது.
இயல் உட்பட நாங்கள் அனைவரும் ஒவ்வொரு படகிலும் நின்றோம். ஆனால் அப்போது தீடிரென கரையில் போராளிகள் வந்து கூடினர். ஒரு போராளி காட்டிய திசையின் என்ன மச்சான் தீடிரென இப்படி கணக்க போராளிகள் என்றோம். அப்போது சற்று கரையால் படகை விட்டு பார்த்தோம். மங்கை படகு கட்டுமானப் போராளிகள் உட்பட ஏனைய படைப்பிரிவுப் போராளிகள் நின்றனர். எல்லாம் பார்த்த முகம்தான் என்றான் இயல். ஆயினும் மறுபக்கத்தில் சண்டைப்படகுகள் கடலிற்குள் இறக்கப்பட்டு பாதுகாப்பிற்கு சற்று உயர்வாக உலாவந்தது.
தொலைத் தொடர்பில்…………… “யாவற்றையும் சரி செய்யுங்கள் சற்று படகுகளை நிறுத்தி வையுங்கள் கொஞ்ச நேரம் கழித்து வெள்ளோட்டத்தை ஆரம்பியுங்கள்……………….” சிறிது நேரம் கழித்து,,,, தமிழீழம் அப்போது புலர்ந்திருந்தாலும் உண்மையான சூரியன் அப்போது கரையில் உதயமானது.
அதற்காகவே படகு வடிவமைத்தை அதன் கட்டுமானத்திற்க்காக உழைத்த கரங்களுடன் அந்த சாலை மணலின் நின்றவண்ணம் கடலை நோக்கி பார்த்தது அந்த கூரிய விழிகள்…………..
அப்போது தொலைத்தொடர்பில் ஒவ்வோர் படகிற்கும் கட்டளை பிறந்தது இன்ன வேகத்தில் இப்படி போய்விட்டு இப்படி வரவும் என அனைத்து படகின் வெள்ளோட்டமும் ஆரம்பமானது. உயர்வாக சென்றுவிட்டு கரைநோக்கி வந்து கரை மணல் இயந்திர வாலில் பட்டும் படாமலும் திருப்பப்பட்டது கடற்புலிகளின் பரிபாசையில் கூறினால் (ஒ போடுவது) அப்போது அனைவரின் விழியும் கரையில் போராளிகளுக்கு மத்தியில் இருந்த அந்தக் கம்பீர உருவத்தையே பார்த்தது.
பின்பு இயல் உட்பட ஏனைய போராளிகள்………
மச்சான்…… அது…………. அது………………
என்னால்………….. என்னால் நம்ப முடியவில்லை என்றனர்.
ஆம்……………….
தலைவர்……………….
ஆம் தேசியத் தலைவர் அவர்களடா…………….
ஆம் தமிழினத்தின் ஒப்பற்ற தலைவனை, இயல்போல் பல போராளிகள் நாளும் தினமும் நித்தமும் போற்றிக் காதலிக்கும் தமிழீழத் தேசியத் தலைவர் அவர்களை சந்திக்கும் பாக்கியம் வரம் முதலில் கடற்கரும்புலி கப்டன் இயல்வளவனுக்கு இப்படியாக அமைந்தது.
இயல் பங்கு பற்றிய கடற்சண்டைகள் மிக அரிதும், குறைவும் ஆனால் கடமை ஏற்று இவன் தமிழீழத்தின் அனைத்து மாவட்டமும் சென்று உழைத்த உழைப்பின் பெறுமதி கனவளவு அதிகம். சண்டை கூடிவரும் போது வேறு மாவட்டத்துக்கு அவன் செல்லவேண்டிய தேவை அவசியமும் அவசரமுமாக இருக்கும். தொட்டதெல்லாம் பொன்னாகும் போல் இவன் கைவண்ணம் பட்ட இயந்திரத்தை ஆழகடலில் எவ்வளவு தூரமும் நம்பி இயக்கிச் செல்லலாம் அப்படியாக தூரித அறிவுக்கு கூர்மையான செயற்பாட்டால் அனைவர் மனதிலிலும் நம்பிக்கையை விதைத்து இடம் தரிப்பான்.
சண்டைக்கு இவன் செல்லாததற்கு இன்னுமோர் காரணம் விநியோம் ஓர் கலந்துரையாடலில் தமிழீழத் தேசியத் தலைவர் அவர்கள் சிறப்புத் தளபதி, பொறுப்பாளர்கள் மற்றும் கடற்புலிகளின் தாக்குதல் அணிகள், விநியோக அணிகள் என அனைவரும் கூடியிருந்தோம்.
அப்போது தேசியத் தலைவர் அவர்கள் அனைவரின் தேவைகள் நலன்கள் விசாரித்தார் அப்போது விநியோக அணி ஓர் வேண்டுகோள் விடுத்தார்கள் “நாங்கள் எப்போது சண்டைக்கு செல்வது…? எமக்கு ஓர் சிங்கள கடற்படைக் கலம் அழிக்கும் சர்ந்தப்பம் வழங்கப்பட வேண்டும் என்று……………..”
அப்போது தேசியத் தலைவர் அவர்கள் கூறிய பதில்…..
நிச்சயமாக நிறைய சர்ந்தப்பம் வழங்கப்படும், ஆனால், நீங்கள் இப்போது செய்யும் பணி {விநியோகம்} அதி உன்னதமானது, ஓர் சண்டைக்கு நிகரான பணிதான் ஆகையால் திறம்பட இதை செய்யுங்கள் என வாழ்த்துக்களையும் கூறி ஆசி வழங்கினார்.
இதுவே பலரது மனங்களை நிறைத்து அவர்களுக்கு வழங்கப்பட்ட பணியில் கண்ணும் கருத்துமாக செயற்பட்டார்கள் ஆகையினால் சண்டைக்கு செல்லும் சர்ந்தப்பம் விநியோகத்தில்………..
2009ம் ஆண்டின் பின் தேவிபுரத்தில் சிங்கள இனவெறிப் படைகள் கண்டுபிடித்த நீச்சல் தடாகத்தை வைத்து எம் தலைமை மீது பொய்யான பிரச்சாரம் மேற்கொண்டது. அது தேசியத் தலைவரின் உல்லாச வாழ்க்கைக்கு கட்டப்பட்டது. உலாசமகா இருந்தார் என அது உண்மை இல்லை.
அந்த நீச்சல் தடாகம் 2005ம் ஆண்டு கட்டப்பட்டது போராளிகளின் பாவனைக்கும் மற்றும் போராளிகளின் சில பயிற்சிக்காகவும் அது கடற்கரும்புலி லெப். கேணல் சிலம்பரசன் (றஞ்சன்) அவர்களின் நினைவாக கட்டப்பட்டது. அந்த நீச்சல் தடாகத்தை பராமரிக்கும் பொறுப்பு சதீஸ் இயந்திரவியளையும் சார்ந்து இருந்தது. அது சதீஸ் இயந்திரவியலில் இருந்து சிறு தூரவளாகம்தான். அதில் சில உள்ளக வேலைகளுக்கும் – தேவைகளுக்கு சில போராளிகளை கடாபி அண்ணா சிறப்புத் தளபதியின் அனுமதியில் நியமித்தார் அதில் இயல்வளவன் ஒருவனாக இருந்தான் என்பதும் குறிப்பிடத் தக்கது.
2004ம் ஆண்டு உலகில் சில தேசத்தை தாக்கிய ஆழிப்பேரலை அனர்த்தம் ஈழத்தின் கரையோரங்களையும் தாக்கி பல குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரையிலான வயது வேறுபாடுகள் இன்றி பல உயிர்களை காவுகொண்டு சோகத்தில் மூழ்கியிருந்தது. அப்போது தமிழீழ விடுதலைப்புலிகளின் அனைத்து வகையான படையணிகளும் தூரிதமாக மீட்புப்பணியில் ஈடுபட்டு உரிய நடவடிக்கைகளை மேற்கொண்டனர். அதல் கடற்புலிகளின் ஏனைய உள்ளக பிரிவுகளின் எங்களின் அணியும் சென்று மீட்புப்பணியை மேற்கொண்டோம் அதில் இயலும் ஒருவனாக இருந்தான்.
ஆழிப்பேரலையில் பாதிக்கப்பட்ட பிரதேசத்தை மீள்கட்டுமானம் செய்து மக்களின் அத்தியாவசிய தேவைகளை நிவர்த்தி செய்ய தமிழீழத் தேசியத் தலைவர் அவர்களால் ஒவ்வோர் படையணிகளுக்கும், அணிகளுக்கும் பாரிய பொறுப்புக்கள் வழங்கப்பட்டன.
சதீஸ் இயந்திரவியல் கல்லூரிப் போராளிகளுக்கும், மங்கை படகு கட்டுமானப் போராளிகளுக்கும் சில முக்கிய பொறுப்புக்களான மீனவர்களின் கடல்தொழில் சார் படகுகள் – இயந்திரங்கள் சரிசெய்யும் வேலைகள் போராளிகளுக்கு வழங்கப்பட்டன.
லெப். கேணல் கடாபி அவர்களின் தலைமையில் பன்னிரண்டு இயந்திரவியல் போராளிகள் உள்ளடக்கி வடமராட்சி கிழக்கு, முல்லைத்தீவு, முள்ளியவளை என மாறி மாறி மக்களின் பாதிக்கப்பட்ட மீனவர்கள் இயந்திரங்களை சரி செய்து அதின் பதிவுகள் எடுக்கப்பட்டன. அதில் இயல்வளவனும் ஒருவனாக திறம்பட செய்தான். அதேபோன்று மங்கை படகு கட்டுமானப் போராளிகளும் தங்கள் பணியை தொரம்பட செய்து தமிழீழத் தேசியத்தலைவர் அவர்களினதும் தமிழீழ மக்களினதும் வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் பெற்றனர்.
ஓர் முறை கடற்புலிகளின் உள்ளக விளையாட்டுப் போட்டி முல்லைத்தீவில் நடைபெற்றது.அதில் பல மாவட்டபோ போராளிகளும் அனைத்து கடற்புலி படையணி பிரிவுகளும் பங்குபற்றினர். அதில் வங்கக்கடலில் மற்றும் சர்வதேசக் கடற்பரப்பில் வரலாறாகிய போராளிகள் பயணித்த கப்பல்களின் பெயர்களில் பிரிக்கப்பட்டு நடைபெற்றது.
எம்.வி.அகத், எம்.ரி.கொய், எம்.ரி.சொய் என்னும் பெயர்களை நடைபெற்றது. ஆனால் அதில் இயலுக்கு மறக்க முடியாத சம்பவம் மற்றும் வருந்திய செயலும் நடைபெற்றது. விளையாட்டுப் போட்டியில் ஒவ்வோர் போராளிகளும் தங்கள் கப்பல்கள் சார்பில் ஒரு விளையாட்டிலும் பங்குபற்ற வேண்டும். சிறப்பு விருந்தினராக தமிழீழ தேசியத் தலைவர் அவர்கள் வருவார்கள் எனவும் அறிவிக்கப்பட்டது. ஆனால் இயல் தான் ஒரு விளையாட்டில் கலந்து தன் திறமையை வெளிக்காட்ட வேண்டும் எனவும் மற்றும் தேசியத் தலைவர் கலந்து கொல்லும் போராளிகள் நிகழ்வு சென்றதால் அவனின் எதிர்பார்ப்பும், ஆர்வமும் பலமடங்கு அதிகரித்து இருந்தது. அப்போது மன்னாருக்கு அவசரம் செல்லவேண்டும் ஓர் நடவடிக்கைக்கு தேவையான படகு வழிப்பாட்டில் பழுதடைந்து இருந்தது அதை அங்கிருந்த சரி செய்து கிராச்சிக்கு கொண்டுவரவேண்டும். அதற்கு லெப். கேணல் கடாபியண்ணா தெரிவு செய்த இரு போராளிகளில் இயலும் ஒருவனாக இருந்தான். சென்றோம்………….. மீண்டும் மன்னாரில் இருந்து முல்லைத்தீவு நோக்கி வந்து நிகழ்வில் நடந்த சுவாரஸ்யமான செய்திகளை நண்பர்கள் சொன்னபோதும் ஏக்கமும் ஏமாற்றமும் கவலையும் இருந்ததது; தலைவரைப் பார்க்க முடியவில்லை என்று. ஆனால் சதீஸ் இயந்திரவியல் சார்பில் கப்டன் ஈழப்பதி மற்றும் சாரங்கன் பரிசில்களைப் பெற்றனர் மற்றைய போராளிகள் ஆறுதல் பரிசில்களையும் பெற்றனர்.
வேறு ஒரு நாள் மன்னார் மாவட்டம் கிராச்சியில் அந்த கடற்புலிகளின் தளபதி லெப். கேணல் கங்கைஅமரன் நினைவு மண்டபம் அமைந்திருக்கும் கானகத்தில் ஓர் பயிற்சிக்காகவும் நடவடிகைக்காகவும் கடற்கரும்புலிகள் கடற்புலிகள் கூடினர். சில இணைபிரியா முகங்கள் கடமைகள் வெவ்வேறாக இருந்த போதும் நீண்ட நாட்கள் சந்தித்த ஓர் உவகையில் தோழமைகளின் நலன்கள் விசாரிப்பு ஒன்று கூடித் திரியும் நாள் எத்தனைநாள் நிலைக்குமோ என்ற நினைப்பு இருந்தாலும் அந்த முகாமின் கானகத்தை தோழமைகளுடன் உலாவந்தோம் அப்போது ஓர் துயர் சம்பவம் அந்த கானகத்தில்…………………………..
கடற்கரும்புலி நீராடி நீச்சல் பயற்சி தீவிரமாக இடம்பெற்றது ஆனாலும் மன்னார் சமுத்திரக் கடல் சற்று சீரற்று மூசிக்கொண்டு இருந்தது அவற்றைப் பொருட்படுத்தாமல் பயிற்சியில் போராளிகள் ஈடுபட்டனர். ஆனால் இயற்கையின் சீற்றத்திலும் இயற்கையின் கடல் வகைப் பிராணி அதாவது (கடல் சொறி) அடையல்களுடன் கலந்து மிதந்து போராளிகளின் தேகங்களைப் பதம்பார்த்தது. பயிற்சியில் ஈடுபட்ட போராளிகள் கடல் சொறியின் வருகையை அறிந்து அதற்குள் லாபகமாக தப்பித்து பயிற்சியைத் தொடர்ந்தார்கள் ஆனால் சில போராளிகளின் தேகம் பதம் பார்க்கப்பட்டமையால் கடியின் எரிவின் வேதனை தாங்காமல் குச்சல் போட்டு, கத்திக்கொண்டு இருந்தார்கள் ஆனால் ஒரு போராளியை நெருப்புச் சொறி பதம் பார்த்தது இதன் தாக்கம் சற்று வித்தியாசமானது. உடம்பில் பட்டால் மூச்சு அடைக்கும் உடலில் பயங்கர வேதனை விக்கம் எரிவு என கொடுமையாக இருக்கும். அப்படியாக அந்த வீரனை சில நெருப்புச் சொறிகள் மாறி மாறி பதம் பார்க்க கரை நோக்கி அனுப்பப்பட்டு செல்கிறான் ஆனால் அதன் வேதனை எப்படி இருக்கும் என்பது வார்த்தைகளால் கூறமுடியவில்ல.
நாம் வாழ்வில் காணும் நியதிபோன்று இயற்கையின் சீற்றம் தகர்க்க முடியாத பெரும் மலையைப் பிளந்து ஊற்றெடுக்கும் எரிமலையின் அக்கினி நாவுகள் போன்று அந்த வீரனையும் அதன் தாக்கம் பாதித்தது வேதனையால் துடித்தவன்……………. கடலில் இருந்த போராளிகளுக்கு ஓர் வெடியோசை மட்டும் கேட்டது அந்த வீரன் எம்மைவிட்டு சென்றான் அவன் பாசறை வீட்டில் இயலின் கீழ் உற்ற தோழனாகி இறுதிவரை இயலின் எங்கள் தோழனாக உலாவந்தவன் அந்த கானகத்தில் இடைநடுவே எம்மைப் பிரிந்து வரலாறாகினான். கண்ணெதிரே பல தோழர் – தோழியர்களின் பிரிவுகளை கண்டு கலங்கி நின்றான் இயல்வளவன்.
செம்மலை மக்கள் மத்தியில் இவன் அவர்கள் வீட்டுப் பிள்ளையாகவே உலாவந்தான். ஓர் நாள் சாலைத் தளத்திலிருந்து குறிப்பிட்டசதீஸ் இயந்திரவியல் போராளிகள் அமுதசுரவி கட்டளைப் படகை பொறுப்பெடுத்து அதிலிருந்த இயந்திர சீரமைப்புக்காக கடலில் இறக்கி நீண்ட நேரம் ஓர் இடத்தில் தரித்து நின்றுவிட்டு ஓட்டத்தை ஆரம்பித்து உயர்வான பகுதியால் சென்று நாயாற்றில் இருந்து செம்மலை நோக்கி பதிவாகவும், முழு இயந்திர வலுவையும் பாவித்து படகைச் செலுத்தினான் இயல். ஆனால் கரையோர மக்கள் சற்றும் திகைப்படைந்து இருந்தனர் அது வந்த திசை மற்றும் படகின் தோற்றம் மக்களுக்கு எதிரிப் படகு என்று தாக்குதலுக்கு வருவதாகவும் சித்தரித்தனர். பின்னர் மிக கரையைப் படகை விட்டதும். எங்கள் கொடிகளையும், முகங்களையும் மக்கள் பார்த்து நிம்மதி அடைந்து பின்னர் அன்று மதியம் மக்கள் அனைவரும் இணைத்து ஓர் சுவையான சமையல் செய்து விருந்து வைத்தனர்.
அப்போது அங்கே ஓர் வீட்டில் எதோ ஓர் விசேஷத்தில் கூடியிருந்த எம் பல நடவடிக்கைகள், போராட்ட வளர்ச்சிக்கு உதவிய மக்களின் வற்புறுத்தலான வேண்டுகைக்கு இணங்க பொறுப்பாளரின் அனுமதிகளுடன் அவர்கள் செய்த ஓர் கலைநிகழ்வில் நாங்கள் கடலில் இருந்தபடி ஓர் பாடலுக்கு ஆடிப் பாடி மகிழ்ந்தனர் அதில் இயலும் கரையில் விளையாடிய சிறுவர்களை படகில் ஏற்றி வெற்றிக் கப்பலையும் வட்டமிட்டு அன்றைய பொழுதுகள் கழிந்தன.
ஓர் முறை முல்லைமாவட்டத்தில் பிரசித்தி பெற்ற கோவில் திருவிழா அங்கு வாழும் மக்கள் சிறப்புத் தளபதியிடம் அனைத்து போராளிகளும் திருவிழாவிற்கு கலந்து கொள்ள அனுமதிக்குமாறு வேண்டுகோள் விடுத்தனர். ஒவ்வொரு போராளிகளுக்கும் சிறு குறைந்த தொகை பணமும் வழங்கப்பட்டது ஏதும் திண்பண்டங்கள் வாங்கிச் சாப்பிடும்படி. ஆனால் அந்த திருவிழாவில் ஒரு புதினம் நடைபெற்றது.
எங்கள் போராட்ட வாழ்வில் இரு ஆண் – பெண் காதலித்து போராட்டத்தில் இணைந்து குறிப்பிட்ட வயது வந்தவுடன் திருமணம் செய்து போராட்டத்துக்கு உழைந்தவர்கள் பலர் வரலாற்றில்…. அப்படியாக பாரதி மூடிய காதல் தீ இங்கே இயல் மீது காதல் தொடுத்தாள் ஒரு தமிழீழக் கன்னியவள் எம் அனைவருக்கும் சிரிப்பு சிரிப்பாக வந்தது. இயல் வெட்க்கிப்போனான். ஆனால் அவன் மனம் காதலை ஏற்கும் நிலை இல்லை. என்னதான் செய்யமுயியும்?
அனைவருக்கும் காதல் உண்டு ஆனால் கடமையே பெரிதாகி சுயங்களை திறந்து திரிந்தவர்கள் அல்லவா இவர்கள்? ஆயினும் எங்களின் தோழமை அன்பின் அறுவைகள் அவ்வப்போது இயலைத் தாக்கும். கடாபி அண்ணா கூட சிரிப்பார் இயலைப் பார்த்து அப்படியாக கலகலப்பான நாட்களுக்கு முற்றுப்புள்ளி கிடைத்தது.
கடாபி அண்ணா மன்னார் மாவட்டம் இழுப்பக்கடவைக்கு செங்கதிர் எனும் போராளியுடன் இணைந்து அணைத்து விதமான இயந்திரங்களையும் பராமரிக்கும் பொறுப்பினை ஒப்படைத்து லெப். கேணல் எழில்கண்ணன் அவர்களிடம் அனுப்பிவைத்தார். பின்பு அங்கிருந்து கடினமாக உழைத்து பல நடவடிககிகளுக்கு உறுதுணையாக இருந்தான். சில காலத்தில் அப்படியே விநியோகத்தில் சில கடற்கரும்புலிகளுடன் ஆழ்கடல் விநியோகத்தில் இறங்கி செயற்படுகிறான். அங்கும் அவனது ஆதிக்கம் நன்கு பேசப்படுகின்றது. தமிழீழத்தின் கிழக்கு மாகாணம் (மட்டக்களப்பு, திருமலை, அம்பாறை) மற்றும் மன்னார் மாவட்டத்தின் ஊடாக வன்னிக்கு உரிய விநியோக நடவடிக்கையையும் செய்து தமிழீழ தேசத்தின் வளங்களை சேகரித்து பல வெளித்தெரியாது பின் தளத்தில் இருந்து உழைத்த கடலோடிகள் (கப்பல் பிரிவு, கடற்கரும்புலிகள், கடற்புலிகள் ஏனைய பிரிவுப்) போராளிகளுடன் இரவு பகல் பாரது இயற்கை கடல் சீற்றத்துக்கும் முகம்கொடுத்தும் தூரம் எல்லை தாண்டி பறந்து சென்று ஆழக்கடலின் ஆழங்கள் அளந்தும் பல காவியமான கடலோடிகள், கடற்கரும்புலிகள், கடற்புலி மாவீரர்களுடன் உழைத்தான்.
தமிழீழத்திற்கு வளங்களை சேகரிக்க தமிழீழத்தை மற்றும் சிங்கள தேசத்தை பல தடவை சுற்றி வந்தவர்களின் இவனும் ஒருவன். இவனுக்கு சற்று சிங்களம் தெரியம் ஓர் முறை மன்னார் ஊடாக மேற்கொண்ட விநியோக நடவடிக்கை (அப்போது எதிரி எங்கள் நகர்வுகளை அவ்வளவாக அறிந்திருக்க வில்லை பின்னைய நாட்களின் நடந்த செயற்பாடுகளால் அவ்வழிகளை எதிரி முடுக்கினான் தடைகளையும் மீறி சாதனை படைத்தார்கள்) சரவதேச கடற்பரப்பில் இருந்து கொண்டுவந்த வளங்களை ஓர் சிங்கள இராணுவக் கட்டுப்பாட்டு பிரதேசத்தில் தரவிறக்கம் செய்துவிட்டு விநியோகப் படகு திருத்த வேலைக்காக எங்கள் கட்டுப்பாட்டு கிராஞ்சி தளம் நோக்கி விரைந்தது விநோயோகப் படகு. விடியச் சாமம் ஆனால் குறுகிய நேரத்தில் எதிரியின் பிரதேசத்தைக் கடக்க வேண்டும் ஆனால் நேரம் அவ்வளவாக இல்லை. இலுப்பக்கடவை நோக்கி திருப்பிவிட்டு பின்பு கரையூடாக கிராஞ்சி நோக்கி செல்ல தீர்மானிக்கப்பட்டது. அப்போது சிங்களக் கடற்படைக்கு அருகாமையில் மன்னார் மந்திட்டியில் எங்கள் விநியோகப் படகு ஏறிவிட்டது எவ்வளவு முயற்சித்தும் பலனளிக்கவில்லை. நன்றாக விடிந்து விட்டது கடல் வற்று காரணமாக ஆழம் குறைவாக இருந்ததே காரணம். படகில் கடற்கரும்புலிகள் லெப். கேணல் வளவன் உட்பட ஏனையோர் இருந்தோம் படகில் அப்போது சிறிலங்கா கடற்படையின் வோட்டர்ஜெற் ரோந்து வந்து கொண்டிருந்தான்.
எதிரி சீண்டினால் முடிவு கட்டுவது என தீர்மானிக்கப்பட்டது கையில் ஆயுதங்கள் ஏதும் இல்லை ஆனால் படகில் வெடிமருந்து இணைக்கப்பட்டிருந்தது. ஆனால் பொறுமை காக்க வேண்டியும் இருந்தது காரணம் எதிரி அறியிவில்லை முன்பு நாங்கள் அந்த வழியால் செய்த நடவடிக்கையை அதுவே முதல் காரணம். அப்போது எதிரியின் வோட்டர்ஜெற் எங்கள் படகில் அருகில் வந்தபோது அவனுக்கும் சந்தேகம் வரவில்லை அது மீன்பிடி வள்ளம் என்பதனால் பின்பு அவன் கேள்வி தொடுத்தபோதும் இயலின் பதில் சிங்களத்தில் அமைந்தது நாம் எம் காணாமல் தொடர்பு அற்றுப்போன மற்ற மீன்பிடி வள்ளத்தைத் தேடி வந்தோம் இது எமக்கு புதிய இடம் இப்படி ஆழம் குறைவு என்று தெரியாது என்றான். பின்பு கடற்படை தனது வோட்டர் ஜெற்றால் கட்டி இழுத்து எம்மை வழியனுப்பி வைத்தது. அனைவருக்கும் சிரிப்புத் தாங்க முடியவில்லை. இயலின் மனமும் ஏனையவரின் மனமும் பகையே இன்று எதோ ஓர் சர்ந்தப்பத்தில் தம்பிவிட்டாய் ஆயினும் வேறு சர்ந்தப்பமாக இருந்தால் நிச்சயம் உனக்கு மரணம்தான் என நினைத்தது.
ஆயினும் பின்னைய நிகழ்வுகளில் பல கடற்கரும்புலிகள், கடற்புலிகள், நாட்டுப்பற்றாளர்களின் உயிர்கள் அந்த கடலிடை காவியமாக அந்த அலைகளோடு மௌனித்தே குமுறிக்கொண்டே இருக்கின்றது.
வெடியாய் அதிரும் ஒவ்வொரு வெடிக்கும்
வரலாறு இருக்கிறது – கடல் மடியினில்
புதிய காவியம் படைத்தே வீரச்சாவு திகழ்கின்றது
வெளியினில் சொல்ல முடிவதில்லை
வீரச்சாவுகள் முழுதும் தெரிவதில்லை
இப்படியாக நீண்ட இவனது தேசத்திற்கு உழைப்பு இன்னோர் தடத்தையும் பதிவு செய்தது.
விடுதலைக்கு பலம் சேர்க்கும் கனரக ஆயுதங்களை பீரங்கிகளை கொண்டுவந்து கரை சேர்ப்பது என்பது இலகுவான காரியம் இல்லை யாவற்றையும் கடந்து எங்கள் வீரர்கள் வெற்றி கண்டார்கள். ஆட்லறி பீரங்கியின் அளவு, அதன் கனவளவு அறிந்து அதைத் தாங்கும் அளவில் வித்தியாசமாக போராளிகளால் படகு வடிவமைக்கப்பட்டு இயந்திரவியலால் வலுக்கூடிய டிசல் இயந்திரமும் பூட்டப்பட்டு கடற்புலி லெப். கேணல் புரட்சி அவர்களின் தலைமையில் ஆட்லறி பீரங்கி வன்னிக்கு மன்னார் ஊடாகவும், தென் தமிழீழ கிழக்கு மாவட்டங்களுக்கும் மட்டக்களப்பில், திருமலையில் தரவிறக்கப்படுகின்றது அதில் இயலின் மற்றும் ஏனைய கடற்கரும்புலிகள், கடற்புலி மாவீரர்கள் உட்பட பங்கும் கணிசமானதாக உள்ளது இன்றும் பலர் உள்ளமையால் ஓர் நாள் வெளித் தெரியாமலே என்ற நம்பிக்கையில் தவிர்க்கின்றேன்.
பீரங்கி மோட்டர்கள் பேசிடும் பொழுதினில்
இவர்களின் ஈகங்கள் தெரிந்திடும் – அதை
தூரங்கள் தாண்டியே கடலில் தந்தவர்
தோழமை உணர்வுகள் புரிந்திடும்.
உதிரிப்பூக்கள் எல்லாம் மாலையான பின்னே உள்ளே இருக்கும் நாரை கண்கள் அறிவதில்லையே இப்படியாக இவனது உழைப்பு பயன்பட்ட போது அன்றும் விநியோகத்துக்கு உரிய நடவடிக்கையின் பயணம் தொடர்ந்தது.
இனி……………………
சர்வதேசக் கடற்பரப்பில் இருந்து விடுமுறையில் சென்று மீண்டும் ஆழக்கடலில் ஆழத்தை அளவிடத் தயாராக மீண்டும் கடற்புலி லெப். கேணல் ஸ்ரிபன் தலைமையிலான போராளிகள் தயார் நிலையில் வருகையை எதிர்பார்த்து காத்திருந்தார்கள். அப்போது நேரம் நெருங்கியது தமக்குரியவற்றை செய்தார்கள்.
அங்கே தமது விநியோகத்துக்கான ஆரம்ப நடவடிக்கைகளுக்கு செல்வதற்காக ஒவ்வொரு தயார் படுத்தலை ஒவ்வோர் முனையிலும் இருந்து செயற்படுத்தத் தொடங்கினார்கள்.
ஆனால், அன்று இராணுவ நெருக்கடிகள், துரோகத்தின் கொலை வெறிபிடித்த பார்வைக்கும் மத்தியில் ஓரளவு சீராக தம் போரியல் திரவியங்களை (வழங்களை) தென் தமிழீழத்தின் ஓர் பகுதியில் தரவிறக்கம் செய்துவிட்டு கடற்புலி லெப். கேணல் குகன் (குன்றலினியன்) தலைமையில், கடற்கரும்புலி கப்டன் இயல்வளவன், கடற்கரும்புலி கப்டன் இசையரசன் ஆகிய விநியோகப்பிரிவுப் போராளிகள் வன்னி நோக்கி தமக்கு உரிய இடத்திற்கு செல்ல தொலைத்தொடர்பின் மூலம் வருகையை அறிவித்து விட்டு புறப்படத் தயாரானார்கள்.
ஏனைய விடை கொடுத்த விழிகள் கடலைப் பார்ப்பதும் வருவதுமாய் இவர்களின் பயணத்தின் திசையைப் பார்த்தவண்ணம் இருந்தது அந்த சீரற்ற காலத்தில் பல ஏக்கங்களுடன்…… ஆனால், அங்கே குறிப்பிட்ட மணித்தியாலத்தில் சேரும் இடத்தைத் தாண்டவுமில்லை, நேரம் வழமையை விட அதிகரித்து சென்றது தொடர்பை எதிர்பார்த்த மனங்கள் பலதை எண்ணி ஏங்கித் தவித்த வண்ணம் இருந்தன.
அவர்களின் பயணத்தின் போது………………………
தமிழீழ விடுதலைப் புலிகளின் நடவடிக்கையை – நகர்வுகளை 2004ம் ஆண்டிற்கு பின்னர் சிறிலங்கா அரசுகளுடன் இணைந்து துரோக சக்திகளும் (துரோகி கருணா குழு) முடக்கி வந்தன என்பது குறிப்பிடத்தக்கது. பல முடக்க வேலைகளையும் – மூட்டுகட்டைகளையும் தரைவழியாக கடமைகளை மேற்கொண்ட போராளிகளுக்கு செய்து வந்த துரோக சக்திகள் அன்று கடற்புலிகளின் வரலாற்றில் மாபெரும் துரோகத்தை விதைத்து பல விழுதின் வேர்களை அந்த கரை மணலில் சாய்த்தார்கள்.
அப்போது அந்த போராளிகளின் படகை துரோகிகள் (துரோகி கருணா குழு) சூழ்ந்து, போராளிகளை நிராயுத பாணிகளாக கைது செய்து கரையில் கொண்டு சென்றார்கள். அதிலும் சில பழகிய முகங்கள் அங்கு துரோக சக்தியாக மனம் தாங்குமா? ஆயினும் அனைத்தையும் கடந்து அவர்கள் துரோகிகள் எம் விடுதலைக்கு எதிராகவே அவர்கள் கரங்களில் ஆயுதங்கள் ஆயினும் போராளிகள் அடிபணிவதாக இல்லை. அப்போது மறு திசையில் இவர்களின் வரவை அவதானித்தும் காத்திருந்த குரல்கள் தொடர்பலை இவர்களின் தொலைபேசியில் கூவிய வண்ணம் இருந்தது.
இங்கே துரோகிகள் புடைசூழ போராளிகளின் கைகள், கால்கள் கட்டபப்ட்டு விசாரணை ஆரம்பமாகியது.
எங்கிருந்து வருகின்றீர்கள்?
எங்கே செல்கின்றீர்கள்?
எங்கே எத்தனைபேர் என புதிய திட்டங்கள் மாற்றங்கள் விபரங்கள் போன்றவற்றை அறியும் முனைப்புடன் தொடுத்தார்கள் விசாரணையை….
ஆயினும் போராளிகளின் வாய்கள் மௌனம் காத்தன.
பொறுமையிழந்த துரோகிகள் கோழைத்தனமான (சித்திரவதை) தாக்குதலை தொடுத்தார்கள். (அதை இங்கே எழுத்துருவில் வடிக்கும்போது என் கண்களே பனிக்கின்றது) குருதி தொய்ந்து வலிகள் தொடர்ந்தாலும்…., முன்னைய காலத்தில் ஒன்றாக ஓர் அணியில் இருந்து ஓர் தட்டில் உணவுண்டு பழகிய நட்புகள் இளைத்த துரோகம் இன்னும் வேதனையை கூட்டியது அப்போது…………
தங்கள் உயிர் போனாலும் பரவாயில்லை மற்றவர்கள் உயிர் காக்கப்பட வேண்டும் அவர்கள் மூலம் தொடர்ந்து தங்களின் பணி தொடரவேண்டும் என்ற மனநிலையில் அங்கும் அவர்கள் போராட்ட மரபைக் கடைப்பிடித்து மெல்ல மெல்ல உயிரும் விட்டு பிரியும் நேரம் நெருங்கிக்கொண்டு இருந்தது………..
ஒரு தட்டில் உண்டு மகிழ்ந்த சக தோழர்கள் – சகோதரன் சாவதைப் பார்ப்பது எவ்வளவு கொடுமை அதுவே அங்கே…………. துரோகியால் கட்டையால் அடித்து அடித்தே ஓர் வீரனை சாகடித்தனர் அவனது உயிரும் அந்த அலைவந்து தாலாட்டும் கரை மண்ணில் கடலைப் பார்த்தவண்ணம் உயிர் பிரிந்து அவன் சாய்த்து சருகாகி விழுந்து போனான். எந்த ஒரு வைர நெஞ்சமும் கலங்கும் படி அங்கே நடந்த சம்பவம் ஏனையவன் மேல் துரோகிகளின் கோழைத்தனம் பாய்வதற்கு கைது செய்யப்பட்ட போராளிகளின் படகின் கட்டளை அதிகாரியின் முன் தொலைத்தொடர்பை வைத்து யாரையாவது இங்கு அழை என கூறினார்கள்.
அப்போது, கட்டளை அதிகாரி தன்னுடன் விடுதலைக்காக வேண்டி உழைத்தவன் இந்த கோழைகளினால் மற்றைய தோழன்போல் சாகடிகக்ப்படுவதா? என சற்று காலநிலை மாற்றத்துடன் கூடிய அந்த கடற்காற்றுடன் கலந்து இவரின் குரலும் மறுதிசையில் ஒலித்தது. ஆயினும் சில பின்னணி சத்தங்களை வைத்து ஊகிப்பார்கள் என அவர் நினைத்தார். ஆனால் அங்கு இயற்கையும் அவர்களுக்கு இசைவாகவே இருந்தது. ஆதலால் காத்திருந்தவர்களால் ஊகிக்க முடியவில்லை. துரோகிகள் அவர்களை படகின் இயந்திரம் பழுதடைந்தது விட்ட ஓர் மாயத்தை தோற்றுவித்து கதைக்கக் வைத்தார்கள். நாம் அன்றைய காலநிலையில் கடமைகள் செய்யும் பிரதேசம் எமக்கு சாதகம் அற்ற பிரதேசம். ஆதலால் சற்று வேகமாகவும் துரிதமாகமும் முடிக்க வேண்டும் என்ற காரணத்தால் குறிப்பிட்ட இடத்திலிருந்து இவர்கள் கூறிய இடத்துக்கு செல்ல சற்று வேகம் கூடிய படகே தேவை ஆதலால் அப்போது கரும்புலிப் படகு மட்டுமே புறப்படுவதற்கு தயார் செய்தார்கள். கரும்புலிப் படகு கடலின் குறுகிய பரப்பில் எதிரியின் அவதானிப்பு இல்லை என்று உறுதிப்படுத்திவிட்டு படகின் வழமையான திசைக்கு கருவிமூலம் அறிந்து அங்கே விரைந்தார்கள் அங்கே…………….
கரையில் எமது படகு இருப்பதை அறிந்து கரும்புலிப் படகு கரைநோக்கி தொலைத்தொடர்பில் அறிவித்த படி மெல்ல மெல்ல நகர்ந்து சென்றது. ஆயினும் படகின் அமைதி ஓர் சந்தேகத்தை அவர்களுக்கு ஏற்படுத்தியது. துரோகிகள் தங்கள் கைவரிசையைக் காட்ட தயாரானார்கள். யாரும் எதிர்பார்க்காத வண்ணம் மறுகணம் ஓர் புத்தரின் (பற்றைக்குள்) மறைவில் இருந்து கரும்புலிப் படகை நோக்கி R.P.G ஆர்.பி.ஜி உந்துகணை செலுத்தி கூவிவந்தது. உடனே லாபகமாக திருப்பி நிலையை உடனே உணர்ந்து வேகம் கூட்டி உயரப் பறந்தது கரும்புலிப் படகு. ஆயினும் அதிலிருந்தவர்கள் விழிகள் ஓர் திசையில் எம் வீரர்கள் கைது செய்யப்பட்டும், ஓர் உடல் சாய்த்தும் கிடப்பதை அவதானித்து நிலைமையை அறிவித்துக் கொண்டு சென்றது.
அப்போது கரும்புலிப் படகில் இருந்து அறிவிக்கப்பட்டது………….
நாங்க…………… நாங்கள் உயர நல்லா இழுக்கிறோம்……………….
இழுக்கிறோம் ஆக்களை நீங்க…………………. வந்தால் சாத்தலாம்…….
உடனே துரோகிகளின் சில படகுகள் எங்கிருந்தோ வந்து அவர்களை தொடர்ந்தது அப்போது கரும்புலிப் படகு உயரப்பறந்ததின் காரணம் அவர்களை உயர இழுத்து செல்ல மறு முனையின் இருந்து எம்மவர்களின் படகு வந்து ஓர் களம் விளையாடும் திட்டத்தில்………..
இல்லை…………… இல்லை………….. இப்ப வேண்டாம்………………
நிலைமை சரியில்லை………………. சற்று விளங்கும் தானே நிலைமை………………
சண்டைக்கு ஓர் அனுமதியும், ஓர் களத்தித் திறக்கவும் உத்தரவை வேண்டிக் காத்திருந்தார்கள்.
ஆனால் அது எமக்கு சாதகமற்ற சூழ்நிலையும் – இடமும் அந்நேரம் என்னதான் செய்வது……………………….?
அவர்களின் இறுதித் தருணத்தில் கூட பதில் கூற முடியாதவர்களாய் நாங்கள் அன்று இருந்தோம்.
பின்பு கரும்புலிப்படகு கடலில் திசைமாற்றி சென்று அவர்களின் கண்ணில் இருந்து மறைந்து சற்று மணித்தியாலம் கழித்தே தளம் வந்து சேர்ந்தது.
ஆத்திரமும் – குரோதமும் நிறைந்து அவர்களை இப்படியாக அடித்தே அந்த அலைகடல் மணலில் சாய்த்தனர் துரோகிகள். அதில் இதுநாள் வரையில் அருகாய் இருந்த எங்கள் கடற்புலி லெப். கேணல் குகன் (குன்றலியன்), கடற்கரும்புலி கப்டன் இயல் வளவன், கடற்கரும்புலி கப்டன் இசையரசன் ஆகிய விலைமதிப்பற்ற செல்வங்கள் ஆயிரம் கனவுகளுடன் பூவின் வாழ்வுபோல் உதிர்ந்து போனார்கள்.
இன்னலுறும் ஈழத்தமிழர்களின் வாழ்விற்காய் நீ வரித்துக்கொண்ட கருமை வரியின் வாழ்வை தினம் தினம் காதலித்த தேசியத் தலைவனை, தமிழீழ மண்ணை – மக்களை, சக தோழ தோழியரை சோகத்தில் தகிக்கவிட்டு எட்டாத உயரத்துக்கு சென்றாய்.
வெடி சுமந்து பகை களம் அழைக்கும்
ஆசைக் கனவை மலர வைப்பதற்காய்
வெண்மணல் மேனியை – உன்
உதிரத்தால் சிவப்பாக்கி சென்ற
துரோகங்கள் இன்று நீ நேசித்த மண்ணில்
இது நீள்வதில்லை என் ஆருயிர் தோழனே!!!
தினமும் உதயமாகும் அந்த செங்கதிர் உருவத்தில் எங்களின் கடலன்னை மடியிலிருந்து பிரசவமாகும் பல ஆயிரம் மாவீரர்களின் ஈகங்களும் – தியாகங்களுடன் நீயும் கலந்திருந்து என்றும் எம்மை வழினடத்துவாய் தோழனே!!!!
அலைகடல் மணலில் நீ – நடந்த
ஈரம் காயவில்லை
வாழ்வில் நீ காட்டிய – நட்பின்
உருவும் இன்னும் மாறவில்லை.
உன் இழப்பின் வலியோ – நெஞ்சில்
கனமாக இன்றும் வலிக்கிறது
உன்னை அழித்த துரோகத்தை – இன்னும்
நாம் அழிக்கவும் இல்லை.
உன் போன்ற வீரனைப் பெற்ற அந்த வீரத்தாயவள் நிச்சயம் அறிந்திருப்பாள்; உன் மரணத்தை என்னதான் செய்வோம் ஓர் முள்ளுக் உத்தினால் துவண்டு துடித்துப்போகும் தாய் மற்றும் உறவுகள் என்பாயே என்னை அடித்து அடித்து குற்றுயிராக போட்டார்கள் துரோகிகள் என்றால் என்ன பதைபதைக்கும் அவள் உள்ளம்?
ஐயோ! எம்மால் நினைத்துப் பார்க்கவே முடியவில்லை; உன் தாய்க்கு ஆறுதல் கூறும் நிலை எமக்கு இல்லை. தோழர்கள் நாம் என்ன செய்வோம். எம்மை மறுகணம் மறுதிசையில் கடமை அழைக்கிறது சென்றோம். ஈரக்காற்றின் அலை அவனது மேனி தடவி உன் நினைவுகளை மீட்டிச் செல்ல நீ விட்ட பணி முடிப்பதற்கு விரைகின்றோம்.
ஆயினும், தமிழீழ தேசத்திலும், தேசம் தாண்டியும் நீளும் கடற்கரும்புலிகள் காவியத்தில் கடற்கரும்புலி மேஜர் புகழரசன் கடற்கரும்புலிகள் அணிக்குள் கடற்கரும்புலி கப்டன் இயல்வலவனின் காவியமும் சற்று வித்தியாசமானதே.
பல உயிராயுதங்களின் உள்ளடக்கத்தில் இவன் நினைவுமாக கடற்கரும்புலிகள் பாகம் 11ம் நீள்கின்றது.
வெற்றிச் செய்தியுடன் வர காத்திருந்த தருணம் காலம் கொடுத்த படிப்பினை ஏற்று நீங்கள் நாளும் நேசித்த அந்த சூரிய தேவனின் வரவை எதிர்பார்த்து காத்திருக்கின்றோம்,.
நிச்சயம் உங்கள் கனவை நனவாக்கி ஈழத்தை மீட்க கடலிலே காவியம் தொடர்வோம்!
நினைவுப்பகிர்வு:- தோழமை உணர்வுடன் அ.ம.இசைவழுதி.
“புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்”